அதிகாரம் 9
உடன்படிக்கை பண்ணப்படுதல்
வசனம் 9:1-3
அந்த மாதம் இருபத்துநாலாந்தேதியிலே இஸ்ரவேல் புத்திரர் உபவாசம்பண்ணி, இரட்டுடுத்தி, தங்கள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவர்களாய்க் கூடிவந்தார்கள். இஸ்ரவேல் சந்ததியார் மறுஜாதியாரையெல்லாம் விட்டுப்பிரிந்து வந்து நின்று, தங்கள் பாவங்களையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டார்கள். அவர்கள் எழுந்திருந்து, தங்கள் நிலையில் நின்றார்கள். அப்பொழுது ஒரு ஜாமமட்டும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது. பின்பு ஒரு ஜாமமட்டும் அவர்கள் பாவ அறிக்கை பண்ணி, தங்கள் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.
நியாயப்பிரமாண வசனங்கள் இஸ்ரவேலர்மீது கிரியைசெய்ய ஆரம்பித்தது. கூடாரப்பண்டிகையின் நாட்கள் முடிந்தவுடன் அவர்கள் ஒன்றுசேர்ந்து உபவாசிக்கக் கூடினர். அவர்கள் அனைவரும் இரட்டுடுத்தி தங்கள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவர்களாகக் கூடினார்கள். தேவனுக்கு முன்பாக தங்கள் எண்ணங்களிலும், வார்த்தைகளிலும், ஆடைகளிலும்கூடத் தங்களைத் தாழ்தி நின்றார்கள். பண்டிகைகளைச் சந்தோஷமாய் ஆசரித்து, தங்கள் முன்னோர்களளைத் தேவன் பராமரித்து நடத்திவந்ததை நினைவுகூர்ந்து தேவவசனங்களைக் கேட்டு மகிழ்ந்த அனைத்தும் மிகவும் வல்லமையுள்ளவைகளாக இருந்தன. ஆனால் அதுவே அதன் முடிவல்ல. ஏசாயா தீர்க்கதரிசி எழுதியுள்ளபடி தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலிலும் படுத்துக்கொள்ளுகிறதும்…. இதையா…. உபவாசம்…. என்று சொல்லுவது (ஏசா.58:5-7). ஆகவே அந்த யூதர்கள் தாங்கள் கற்றதை நடைமுறைப்படுத்த முற்பட்டனர்.
இந்த முயற்சி தங்களைத் தாழ்த்தும் முயற்சியில் ஆரம்பித்தது. அடுத்து அவர்கள் மறுஜாதியாரையெல்லாம் விட்டுப் பிரிந்துவந்து நின்றனர். தேவன் அவர்களை அவ்வாறு பிரிந்து இருக்கக் கட்டளையிட்டார் (லேவி.20:26). மூன்றாவதாக அவர்கள் தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டார்கள். அடுத்து அவர்கள் அந்த இடத்திலே எழுந்து நின்றார்கள். நியாயப்பிரமாண புத்தகம், ஒரு ஜாமம் மட்டும் (மூன்று மணி நேரம்) வாசிக்கப்பட்டது. நாம் தேவனுடைய புத்தகத்தை, வேதத்தை, வாசிக்கவோ, அல்லது வாசிக்கப்படுவதைக் கேட்கவோ எப்போதாவது மூன்று மணிநேரம் நின்றுகொண்டிருந்திருப்போமா? அல்லது உண்மையில் அத்தனை நேரம், அதைச் செய்ய உட்கார்ந்தவாறு பொறுமையாய் இருந்ததுண்டா? அதுமட்டுமல்ல, அடுத்த மூன்று மணிநேரம் அவர்கள் பாவங்களை அறிக்கையிட்டு, தங்கள் தேவனாகிய கர்த்தரைத் துதித்துகொண்டிருந்தனர். நமது உபவாசங்களிலும் அஞ்ஞானிகளிடமிருந்து பிரிந்திருத்தலும், அறிக்கையிடுதலும் இருக்கவேண்டுமன்றோ? அவ்வாறில்லையெனில் பிரிதான நமது செயல்கள், நமது பெருமை குணத்தையும் தன்னலமான பண்புகளையும் மட்மேயுடையதாக இருக்கும் (லூக்.18:10-14).
வசனம் 9:4-5
யெசுவா, பானி, கத்மியேல், செப்பனியா, புன்னி, செரெபியா, பானி, கெனானி என்பவர்கள் லேவியருடைய படிகளின்மேல் நின்று, தங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி மகா சத்தமாய் ஓலமிட்டார்கள். பின்பு லேவியரான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா என்பவர்கள் ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எழுந்திருந்து, அநாதியாய் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்று சொல்லி, கர்த்தரை நோக்கி: எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
பின்பு கூட்டமாக சிலர், எஸ்றா இருந்த படிகளின்மேல் ஏறி நின்று, (1) உரத்தசத்தமாய் அறிக்கையிட்டு (2) தேவைனத் துதித்து நின்றார்கள். இவர்கள் லேவியர். இவர்களில் பலருடைய பெயர்கள் இந்த வசனங்களில் இரண்டுமுறை குறிக்கப்பட்டிருப்பது, அவர்கள் அங்குமிங்கும் நடந்து பலரைக் கடந்து, சந்தித்து இருக்கலாம். கூட்டம் அதிகமாக இருந்தபடியால் அனைவருக்கும் கேட்கத்தக்கதாய், அவர்கள் உரத்தகுரலில் ஓலமிட்டார்கள் என வாசிக்கிறோம்.
இங்கே நாம் வாசிக்கிற ஜெபமும், ஸ்தோத்திரமும் எல்லாரும் சேர்ந்து சொன்னதாக இருக்கக்கூடும். அல்லது எல்லாரும் சேர்ந்து மகா சத்தமாய் செய்த ஸ்தோத்திரத்தின் மொத்த கருத்தாக இருக்கலாம். அவர்கள் ஜனங்களைப் பார்த்து, நீங்கள் எழுந்திருந்து, அநாதியாய் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்றார்கள். அவர்கள் தேவனைத் தங்கள் கர்த்தராக மகிமைப்படுத்தினார்கள். அவர்கள் அநாதியாய் என்றென்றைக்கும் இருக்கிறவர் என்று சொன்னார்கள். மேலும் அவர்கள், கர்த்தரை நோக்கி: எந்த ஸ்துதி தோத்திரத்திற்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்திற்கு ஸ்தோத்திரம் என்று ஸ்தோத்தரித்தார்கள். இது மிகவும் மேன்மையான ஜெபத்தின் ஆரம்பம். நாமும் நமது தொழுகையை எவ்வாறு ஸ்தோத்திரத்தோடே ஆரம்பிக்கவேண்டும் என்று இது விளக்குகிறது. அவரே தேவன். அவருடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. கனமும் மகிமையும் அவருக்கே உண்டாவதாக.
வசனம் 9:6
நீர் ஒருவரே கர்த்தர். நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர். அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர். வானசேனைகள் உம்மைப் பணிந்துகொள்ளுகிறது.
அவர்கள் தேவனை, அவர்கள் சர்வத்தையும் படைத்தவர் என்று அவருடைய படைப்புக்களை, ஆதியாகமம் 1ம் அதிகாரத்தில் கூறியுள்ளபடி வரிசைப்படுத்திக் கூறிப்போற்றுகின்றனர். வானங்களையும் வானாதி வானங்களையும் அவைகளுடை சர்வசேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர் என்று தேவனைப் போற்றுகின்றனர். அவைகளை உண்டாக்கினது மட்டுமின்றி அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர் என்றும் துதிக்கின்றனர். சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய் என்று வேதம் கூறுகிறது (எபி. 1:3). ஆயிரமாயிரமாகவும், பதினாயிரம் பதினாயிரமாகவும் தூதர்களுக்கு அவரைத் தெரியும். அவர்கள் அவரைத் துதிக்கிறன்றனர். அவர் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவர் (வெளி 5:11-14).
வசனம் 9:7-8
ஆபிராமைத் தெரிந்துகொண்டு, அவனை ஓர் என்னும் கல்தேயரின் பட்டணத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவனுக்கு ஆபிரகாம் என்னும் பேரிட்ட தேவனாகிய கர்த்தர் நீர். அவன் இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக்கண்டு, கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியருடைய தேசத்தை அவன் சந்ததிக்குக் கொடுக்கும்படி, அவனோடு உடன்படிக்கைபண்ணி, உம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினீர். நீர் நீதியுள்ளவர்.
அடுத்து, அவர்கள் தேவனாகிய கர்த்தர், ஆபிரகாமின் காலமுதல் அவர்களுக்குச் செய்துள்ள நன்மை யாவற்றையும் நினைவுகூருகிறார்கள். ஆபிரகாமைக் கர்ததர் தெரிந்துகொண்டு அவனை ஊர் என்னும் கல்தேயரின் பட்டணத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவனுக்கு ஆபிரகாம் என்னும் பேரிட்டு, அவனோடு ஓர் உடன்படிக்கை பண்ணினார். ஆபிரகாம் விசுவாசமுள்ளவன் என்று தேவன் அறிந்திருந்தார். ஆதியாகமப் புத்தகத்திலே அவன் கர்த்தரை விசுவாசித்தான். அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார் (ஆதி.15:6) என்று கூறப்பட்டுள்ளது. ஆபிரகாமின் வாழ்க்கை முழுவதும் மூன்று வார்த்தைகளிலே அடங்கும். அவன் தேவனை விசுவாசித்தான். பவுல் அப்போஸ்தலனும் இதையே கூறுகிறார். நான் தேவனிடத்தில் நம்பிக்கையாயிக்கிறேன் (அப்.27:25). மேலும் வேதத்தில் அந்த மனுஷன் இயேசு சொன்ன வார்த்தையே நம்பிப்போனான் என்று நாம் வாசிக்கிறோம் (யோ.4:50). நாம் அவ்வாறு இயேசுவை நம்பி வாழ்கிறோமா?
தேவன் ஆபிரகாமோடு செய்துகொண்டு உடன்படிக்கையின்படி, அவனுக்கும் அவன் சந்ததிக்கும் அவா வாக்குத்தத்தம்பண்ணின தேசத்தைக் கொடுத்தாh. வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே (எபேசி.10:23). அவர் நீதியுள்ளவர்.
வசனம் 9:9-11
எகிப்திலே எங்கள் பிதாக்கள் அநுபவித்த சிறுமையை நீர் கண்டு, சிவந்த சமுத்திரத்தில் அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டீர். பார்வோனிடத்திலும், அவனுடைய எல்லா ஊழியக்காரரிடத்திலும் அவன் தேசத்தின் சகல ஜனத்தினிடத்திலும், அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தீர். அவர்கள் உமது ஜனங்களை அகந்தையாய் நடத்தினார்கள் என்பதை அறிந்திருந்தீர். இப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி உமக்குக் கீர்த்தியை உண்டாக்கினீர். நீர் அவர்களுக்கு முன்பாகச் சமுத்திரத்தைப் பிரித்ததினால், கடலின் நடுவாகக் கால்நனையாமல் நடந்தார்கள். வலுவான தண்ணீர்களிலே கல்லைப்போடுகிறதுபோல, அவர்களைத் தொடர்ந்தவர்களை ஆழங்களிலே போட்டுவிட்டீர்.
எகிப்திலே அவர்கள் பிதாக்கள் அனுபவித்த சிறுமையைக் கூறுகிறார்கள். சிவந்த சமுத்திரத்தில் அவர்களின் கூப்பிடுதலை அவர் கேட்டார். அந்தக் கடலையே அவர்கள் எகிப்திலிருந்து தப்பிச்செல்ல அவர்களுக்கு வழியாகப் பயன்படுத்தினார். கர்த்தர் மோசேயினடத்திலும் ஆரோனிடத்திலும் அன்று எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்தில் சென்று வனாந்தரத்தில் தேவனுக்குப் பண்டிகை கொண்டாட போகவிடும்படி கேட்கச் சொன்னார் (யாத்.5:1-14). மறுபடியும் தேவன் மோசேயின்மூலம் அநேக அற்புத அடையாளங்களைக் காண்பித்தும், பார்வோன் அவர்களைப் போகவிட மறுத்துவிட்டான். கடைசியாக, தலைச்சன் பிள்ளைகள் யாவரும் சங்காரம் செய்யப்பட்டபின், பார்வோன், மோசேயும் இஸ்ரவேலரான அவனுடைய மனுஷரும் உடனே எகிப்தைவிட்டுச் செல்லவேண்டும் என்று வருந்திக் கேட்டுக்கொண்டான் (யாத்.12:31). அப்போது தேவனாகிய கர்த்தர், பெருந்திரளான இஸ்ரவேலர் அனைவரும் கடந்து போகத்தக்கதாக, இரவு முழுவதும் கீழ்க்காற்றை வீசப்பண்ணி, கடலின் தண்ணீர்களைக் கரையாக ஒதுங்கச்செய்து, கட்டாந்தரையிலே நடந்துபோகும்படி சிவந்த சமுத்திரத்தைப் பிளக்கப்பண்ணினார் (யாத்.14:21). அடுத்த நாளிலே பார்வோன் தனது சேனைகளை அனுப்பி இஸ்ரவேலரைப் பின் தொடரச்செய்தபோது, சமுத்திரம் பலமாய்த் திரும்பிவந்து அவர்களை அமிழ்த்திப்போட்டது (யாத்.14:28).
வசனம் 9:12-13
நீர் பகலிலே மேகஸ்தம்பத்தினாலும், அவர்கள் நடக்கவேண்டியவழியை அவர்களுக்கு வெளிச்சமாக்க இரவிலே அக்கினிஸ்தம்பத்தினாலும், அவர்களை வழிநடத்தினீர். நீர் சீனாய்மலையிறங்கி, வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.
கர்த்தர் இஸ்ரவேலர்களை அப்படியே விட்டுவிடவில்லை. பகலிலே மேகஸ்தம்பத்தினாலும் அவர்கள் நடக்கவேண்டிய வழியை அவர்களுக்கு வெளிச்சமாக்க இரவிலே அக்கினிஸ்தம்பத்தினாலும் அவர்கள் வழிநடத்தினார். அங்கிருந்த இஸ்ரவேலர் அனைவரும் அதை எந்த நேரத்திலும் பார்க்கமுடிந்தது. அந்த மேகம் அவர்களின் கூடாரங்களின்மேல் நின்றபோது அவர்கள் தங்கியிருந்தனர். அந்த மேகங்கள் நகர்ந்துசெல்ல ஆரம்பித்தபோது அவர்களும் பயணத்தைத் தொடர்ந்தனர் (யாத்.40:34-38). தேவனாகிய கர்த்தர்தாமே அவர்களின் வழிகாட்டியாக அவர்களோடே தங்கியிருந்தனர். ஒவ்வொரு பகல்பொழுதிலும் ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு இஸ்ரலேவரும் தங்களின் கூடாரத்தைப் பார்த்து அதன்மீது மேகஸ்தம்பம் இருந்தத்தைக் காணமுடிந்தது. தேவன் அவர்கள் நடுவில் இருந்தார். நமது நடுவில் தேவன் வாசம்செய்கிறாரா? அவருடைய சமுகத்தை எந்நாளும் உன்னால் உணரமுடிகிறதா? அவர் அசைந்து செல்லும்போது நீயும் உடன் செல்ல ஆயத்தமாயிருக்கிறாயா? அல்லது உன்னுடைய இருப்பிடத்தில் தேவனோடு சேர்ந்து நீ வாழ்கிறதை உணரமுடிகிறதா?
தேவனாகிய கர்த்தர் சீனாய்மலையின்மீது இறங்கி வந்து மோசேயின்மூலம் அவர்களோடு பேசினார் (யாத்.19:20, 20:17). அவர் அங்கே மோசேக்கு நியயாப்பிரமாணங்களைக் கொடுத்தார். நீதி நியாயங்களான கட்டளைகளையும், அவைகளுக்குக் கீழ்ப்படியாமற்போனால் கொடுக்கப்படவேண்டிய தண்டனைகளையும் அந்த பிரமாணங்கள் போதித்தன. வாழ்க்கையின் எல்லா வகைகளிலும், ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கற்பனைகளையெல்லாம் அது போதித்தது. தற்போதுள்ள எல்லா முன்னேற்றம் அடைந்த நாடுகளின் சட்டங்களுக்கும் அந்தக் கற்பனைகளே முன்னோடிகளாக அமைந்துள்ளன. அவை நேர்மையானதும் சத்தியமானதுமான கட்டளைகள் ஆகும்.
வசனம் 9:14-17
உமது பரிசுத்த ஓய்வுநாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது தாசனாகிய மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாப்பிரமாணங்களையும் கற்பித்தீர். அவர்கள் பசிக்கு வானத்திலிருந்த அப்பம் கொடுத்து, அவர்கள் தாகத்துக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, நீர் அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப் பிரவேசியுங்கள் என்று அவர்களுக்குச் சொன்னீர். எங்கள் பிதாக்களாகிய அவர்களோ அகங்காரமாய் நடந்து, தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாதே போனார்கள். அவர்கள் செவிகொடுக்க மனதில்லாமலும், அவர்களிடத்திலே நீர் செய்த உம்முடைய அற்புதங்களை நினையாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் அடிமைத்தனத்துக்குத் திரும்பும்படிக்கு அவர்கள் கலகம்பண்ணி, ஒரு தலைவனை ஏற்படுத்தினார்கள். ஆகிலும் வெகுவாய் மன்னிக்கிறவரும், இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் கைவிடவில்லை.
அடுத்து தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குப் பரிசுத்த ஓய்வுநாளைத் தெரியப்படுத்தியிருந்தார். மேலும் அவர்களுக்கு வானத்திலிருந்து அப்பத்தையும் (யாத்.16:15), கன்மலையிலிருந்து தண்ணீரையும் (யாத்.17:6) கொடுத்தார். பின்னும் அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ள பிரவேசியுங்கள் என்று சொல்லியிருந்தார். ஆனால் அந்த இஸ்ரவேலரோ கீழ்ப்படியாமற்போனார்கள். அவர்கள் தேவன் அவர்களுக்குச் செய்த எல்லா நன்மைகளையும் மறந்துபோனார்கள். தங்களின் பழைய அடிமைத்தனத்திற்கே திரும்ப விரும்பி தங்களுக்குள்ளே ஒரு தலைவனையும் ஏற்படுத்திக்கொண்டார்கள். தேவன் செய்த நன்மைகளை மறந்து, பழைய அடிமைத்தனத்திற்காக, புதிய சுதந்திரத்தை இழக்க ஆயத்தமாயிருந்தார்கள். ஆனால் தேவனாகிய கர்த்தர் அவர்களைக் கைவிடவில்லை. தேவனாகிய கர்த்தர் மன்னிக்கிறவரும், இரக்கமும் மனஉருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவராய் இருந்து அவர்களை மன்னித்தார். அவர் இன்னும் மாறாதவராய் இருக்கிறாரே.
வசனம் 9:18-21
அவர்கள் வார்ப்பிக்கப்பட்ட ஒரு கன்றுக்குட்டியைத் தங்களுக்கு உண்டாக்கி, இது உன்னை எகிப்திலிருந்து கொண்டுவந்த உன் தெய்வம் என்று சொல்லி, கோபமூட்டத்தக்க பெரிய அக்கிரமங்களைச் செய்திருந்தாலும், நீர் உம்முடைய மிகுந்த மனஉருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை. அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும், அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினிஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை. அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல் ஆவியைக் கட்டளையிட்டீர். அவர்கள் வாய்க்கு உம்முடைய மன்னாவை அருளி, அவர்கள் தாகத்துக்குத் தண்ணீரைக் கொடுத்தீர். இப்படி நாற்பது வருஷகாலமாக வனாந்தரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாதபடிக்கு, அவர்களைப் பராமரித்துவந்தீர். அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப்போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை.
ஆனால் இஸ்ரவேலர் மேலும் அதிகமாய்ப் பாவம் செய்தனர் (யாத்.32). அவர்கள் பொன்னால் வார்ப்பிக்கப்பட்ட ஒரு கன்றுக்குட்டியைத் தங்களுக்கு உண்டாக்கி இது உன்னை எகிப்திலிருந்து கொண்டுவந்த உன் தெய்வம் என்று சொல்லி கோபமூட்டத்தக்க பெரிய அக்கிரமத்தைச் செய்தார்கள். ஆனாலும் இந்த அக்கிரமங்கள்கூட வேதத்தில் நிலைபெற தேவன் சித்தங்கொண்டுள்ளார். ஏன்? நாம் மறுபடியும் அதுபோன்ற செயல்களைச் செய்யக்கூடாது என்பதற்காகவே. நாம் எச்சரிக்கையாய் இருக்கக்கடவோம். நான் அதுபோல முட்டாள்தனமாகச் செய்யமாட்டேன் என்று ஒருவேளை நாம் சொல்லலாம். ஆனால் அதுபோல அக்கிரமங்கள் நடந்த செயல்களை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். நாமும்கூட ஒருவேளை வஞ்சிக்கப்பட்டுப் போகலாமன்றோ? (1.கொரி.10:6-12)?
என்றபோதிலும் அந்நிலையிலேயே தேவன் அவர்களை விட்டுவிடவில்லை. நம்மையும் தேவன் நிச்சயமாய்க் கைவிடமாட்டார். அவர்களுக்குத் தொடர்ந்து உணவளித்தார். கன்மலையைப் பிளந்து தண்ணீர் அளித்தார். அக்கினிஸ்தம்பத்தினாலும் மேகஸ்தம்பத்தினாலும் வழி நடத்தினார். அவர்களின் பாவங்களும், பாதரட்சைகளும் நாற்பது அண்டு பயணத்தில் என்ன ஆவது? அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப்போகவுமில்லை. கால்கள் வீங்கவுமில்லை. (உபா.8:4). அவர்கள் காலிலிருந்து பாதரட்சை பழையதாய்ப்போகவுமில்லை (உபா.29:5). நம்முடைய தேவனே தேவன்.
வசனம் 9:23-25
அவர்கள் பிள்ளைகளை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, சுதந்தரித்துக்கொள்ளும்படி நீர் அவர்கள் பிதாக்களுக்குச் சொன்ன தேசத்திலே அவர்களை அழைத்துவந்தீர். அப்படியே பிள்ளைகள் உட்பிரவேசித்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். நீர் அவர்களுக்கு முன்பாகத் தேசத்தின் குடிகளாகிய கானானியரைத் தாழ்த்தி, அவர்களையும் அவர்கள் ராஜாக்களையும், தேசத்தின் ஜனங்களையும், தங்கள் இஷ்டப்படி செய்ய, அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தீர். அவர்கள் அரணான பட்டணங்களையும், செழுமையான பூமியையும் கட்டிக்கொண்டு, சகலவித உடமைகள் நிறைந்த வீடுகளையும், வெட்டப்பட்ட துரவுகளையும், ஏராளமான திராட்சத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், கனிகொடுக்கும் விருட்சங்களையும் சுதந்தரித்துக்கொண்டு, புசித்துத் திருப்தியாகிக் கொழுத்து, உம்முடைய பெரிய தயையினால் செல்வமாய் வாழ்ந்தார்கள்.
தேவனாகிய கர்த்தர் அவர்களுடனே இருந்து அவர்களுக்கு கொடுப்பேன் என்று வாக்கருளியிருந்த தேசத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றார். பகைவர்களை வெல்லச்செய்தார். வெட்டப்பட்ட துரவுகளையும், கனி கொடுக்கும் விருட்சங்களையும் அவர்களுக்கு அளித்தார். அங்கு குடியிருந்தவர்களே அவைகளைச் செய்து வைத்திருந்தனர். இஸ்ரவேலர் பலுகிப் பெருகி, நன்றாக உண்டு கொழுத்திருந்தனர்.
வசனம் 9:26
ஆனாலும் அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகி, உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உம்முடைய நியாயப்பிரமாணத்தைத் தங்களுக்குப் புறம்பே எறிந்துவிட்டு, தங்களை உம்மிடத்தில் திரும்பும்படி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்ட உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோட்டு, கோபமூட்டுகிற பெரிய அக்கிரமங்களைச் செய்தார்கள்.
ஆனால் அவர்கள் தேவனுக்கு முன்பாக மறுபடியும் பொல்லாப்புச் செய்யத் தொடங்கினார்கள். நியாயப்பிரமாணத்தை, தங்களுக்குப் புறம்பே எறிந்துபோட்டார்கள். உம்மிடத்தில் திரும்பும்படி திடசாட்சியாய்க் கடிந்துகொண்ட உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோட்டார்கள் என்று வேதம் கூறுகிறது. இது மிகவும் அக்கிரமம் அன்றோ? நாமும் ஒருவேளை இதுபோலத்தான் உள்ளோமோ?
வசனம் 9:27-31
ஆகையால் அவர்களை நெருக்குகிற அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தீர். அவர்கள் நெருக்கம் அநுபவிக்கிற காலத்தில் அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, உம்முடைய மிகுந்த இரக்கத்தினால் அவர்களை அவர்கள் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கிவிடுகிற இரட்சகர்களை அவர்களுக்குக் கொடுத்தீர். அவர்களுக்கு இளைப்பாறுதல் உண்டானபோதோ, உமக்கு முன்பாக மறுபடியும் பொல்லாப்புச் செய்யத் தொடங்கினார்கள். ஆகையால் அவர்கள் சத்துருக்கள் அவர்களை ஆளும்படிக்கு, அவர்கள் கையிலே ஒப்புவித்தீர். அவர்கள் மனந்திரும்பி, உம்மை நோக்கிக் கூப்பிட்டபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, அவர்களை உம்முடைய இரக்கங்களின்படியே அநேகந்தரம் விடுதலையாக்கிவிட்டீர். அவர்களை உம்முடைய நியாயப்பிரமாணத்துக்குத் திருப்ப அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டீர். அனாலும் அவர்கள் அகங்காரங்கொண்டு, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாமல், கீழ்ப்படிந்து நடக்கிற மனுஷன் செய்து பிழைக்கிற உம்முடைய நீதி நியாயங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, தங்கள் தோளை முரட்டுத்தனமாய் விலக்கி, செவிகொடாமல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்திக்கொண்டார்கள். நீர் அநேக வருஷமாக அவர்கள்மேல் பொறுமையாயிருந்து, உம்முடைய ஆவியினால் பேசின உம்முடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டாலும், அவர்கள் செவிகொடாதபடியினாலே, அவர்கள் அந்நிய தேசஜனங்களின் கையில் ஒப்புக்கொடுத்தீர். ஆகிலும் உம்முடைய மிகுந்த இரக்கங்களின்படியே, அவர்களை நிர்மூலமாக்காமலும் அவர்களைக் கைவிடாமலும் இருந்தீர். நீர் கிருபையும் இரக்கமுமுள்ள தேவன்.
ஆகையால் தேவன் அவர்கi நெருக்குகிற அவர்களின் சத்துருக்களின் கையில் ஒப்புக்கொடுத்தார். ஆனால் அவர்கள் மறுபடியும் தேவனை நோக்கிக் கூப்பிட்டார்கள். கர்த்தர் அவர்களின் கூக்குரலைக்கேட்டு, சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி விடுவித்தார்.
அவர்களுக்கு இளைப்பாறுதல் உண்டானபோது கர்த்தரிடம் திரும்பியிருக்கத் தீர்மானித்தார்களாவென்றால், அதுதான் இல்லை. மறுபடியும் பொல்லாப்புச் செய்ய தொடங்கினாhகள். மறுபடியுமாக அவர்களுடைய சத்துருக்களின் கையிலே ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள். அவர்கள் மனந்திரும்பி மறுபடியும் கூக்குரலிட்டபோது, பரலோகத்pலிருந்து அவர்களின் கூக்குரலைக்கேட்டு அநகேந்தரம் அவர்களை விடுதலையாக்கிவிட்டார். கடைசியாக அவர்கள் தேவனைவிட்டு விலகிச் சென்றது வேதத்தில் தங்கள் தோளை முரட்டுத்தனமாய் விலக்கி செவிகொடாமல் தங்கள் கழுத்தைக் கடினப்படுத்திக்கொண்டார்கள் என்று விளக்கப்பட்டுள்ளது. நாம் நமது வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்க எப்போதாவது மறுத்துவிடுவதுண்டோ? அப்படியிருந்தும் தேவன் அவர்களைப் புறக்கணித்து, அழிவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. விரோதிகள் கையில் ஒப்புக்கொடுத்து இருந்தார்.
வசனம் 9:32-35
இப்பொழுதும் உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற வல்லமையும் பயங்கரமுமுள்ள மகா தேவனாகிய எங்கள் தேவனே, அசீரியா ராஜாக்களின் நாட்கள் முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் எங்களுக்கும், எங்கள் ராஜாக்களுக்கும், எங்கள் பிரபுக்களுக்கும், எங்கள் ஆசாரியர்களுக்கும், எங்கள் தீர்க்கதரிசிகளுக்கும், எங்கள் பிதாக்களுக்கும், உம்முடைய ஜனங்கள் அனைவருக்கும் நேரிட்ட சகல வருத்தமும் உமக்கு முன்பாக அற்பமாய்க் காணப்படாதிருப்பதாக. எங்களுக்கு நேரிடப்பண்ணின எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர். நீர் உண்மையாய் நடப்பித்தீர். நாங்களோ ஆகாமியம்பண்ணினோம். எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், எங்கள் ஆசாரியர்களும், எங்கள் பிதாக்களும், உம்முடைய நியாயப்பிரமாணத்தின்படி செய்யாமலும், உம்முடைய கற்பனைகளையும், நீர் அவர்களைக் கடிந்துகொண்ட உம்முடைய சாட்சிகளையும் கவனியாமலும் போனார்கள். அவர்கள் தங்கள் ராஜ்யத்திலும், நீர் அவர்களுக்குக் கொடுத்த உம்முடைய பெரிய தயையிலும், நீர் அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்த விசாலமும் செழிப்புமான தேசத்திலும் உமக்கு ஊழியஞ்செய்யாமலும், தங்கள் துர்க்கருமங்களை விட்டுத் திரும்பாமலும் போனார்கள்.
இங்கே தேவனைப்பற்றி அறிக்கை பண்ணப்படுவதையும், அதே நேரத்தில் தங்களின் வருத்தங்களையும் தேவனுக்கு தெரிவிப்பதையும் வாசிக்கிறோம். தேவனைப்பற்றி முதலில் உடன்படிக்கையும் கிருபையையும் காக்கிற வல்லமையும் பயங்கரமுமுள்ள மகாதேவனாகிய எங்கள் தேவனே என்று கூறுகிறார்கள். தேவன் எப்படிப்பட்டவர் என்பது அவர்களுக்குத் தெரியும். அதுமட்டுமன்றி அவர்களுக்கும் அவர்களின் இராஜாக்களுக்கும் அவர்களின் பிரபுக்களுக்கும், அவர்களின் ஆசாரியர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும், அவர்களின் பிதாக்களுக்கும், அசீரியா இராஜாக்களின் நாட்கள் முதற்கொண்டு, அவர்களுக்கு நேரிட்டதனைத்தையும் அவர்கள் அறிந்திருந்தனர். அந்நாட்களில் அசீரியா இராஜாவின் நாட்கள் முதற்கொண்டு தேவன் அவர்களுக்கு இரக்கம் செய்திருந்தார். ஆனால் அவர்களோ தேவனுக்கு விரோதமாக ஆகாமியம் பண்ணினார்கள்.
அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி செய்யாமலும், தேவனுடைய கற்பனைகளையும் தேவன் அவர்களைக் கடிந்துகொண்ட அவருடைய சாட்சிகளையும் கவனியாமற்போனார்கள். அவர்கள் தங்களின் இராஜ்ஜத்திலும், தேவன் அவர்களுக்கு முன்பாகத் திறந்து வைத்த விசாலமும் செழிப்புமான தேசத்திலும் அவருக்கு ஊழியஞ்செய்யாமற் போனார்கள். தேவன் செய்த சகல நன்மைகளையும் எண்ணிப் பார்க்கும்போது அவர்கள் செய்தது எவ்வளவு துரோகம் ஆகும் என்பது தெரியும். நிச்சயமான இரண்டு செய்திகளை நாம் இங்கு காணமுடிகிறது. ஒன்று, தேவன் நீதிபரராயிருக்கிறார். மற்றது அவர்களோ தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்தனர் என்பதாகும்.
வசனம் 9:36-38
இதோ, இன்றையதினம் நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம். இதோ, பலனையும் நன்மையையும் அனுபவிக்கும்படி நீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த இந்தத் தேசத்தில்தானே நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம். அதின் வருமானம் எங்கள் பாவங்களினிமித்தம் நீர் எங்கள்மேல் வைத்த ராஜாக்களுக்குத் திரளாகப்போகிறது. அவர்கள் தங்களுக்கு இஷ்டமானபடியே எங்கள் சரீரங்களையும் எங்கள் மிருகஜீவன்களையும் ஆளுகிறார்கள். நாங்கள் மகா இக்கட்டில் அகப்பட்டிருக்கிறோம். இவையெல்லாம் இப்படி இருக்கிறபடியால், நாங்கள் உறுதியான உடன்படிக்கைபண்ணி அதை எழுதிவைக்கிறோம். எங்கள் பிரபுக்களும், எங்கள் லேவியரும், எங்கள் ஆசாரியரும் அதற்கு முத்திரைபோடுவார்கள் என்றார்கள்.
அவர்கள் ஜெபத்திலே அன்றைய, அவர்களின் நிலையைக்குறித்து ஜெபித்தனர். நாங்கள் வேறு நாட்டு இராஜாக்களின்கீழ் அடிமைகளாக இருக்கிறோம் என்று புலம்புகிறார்கள். நாடு பலனும் நன்மையும் நிறைந்ததாகத்தான் உள்ளது. ஆனால் அந்த நன்மைகளும் பலன்களும் அன்னிய இராஜாக்களிடம்தானே உள்ளது. அவர்களுக்கு அதில் உரிமை ஒன்றும் இல்லை. அவர்களின்மீதும் அவர்களின் மிருகஜீவன்கள்மீதும் இராஜாக்களுக்குத்தான் பூரண அதிகாரம் இருந்தது. அந்த இராஜா, அந்த யூதர்களுக்கு யாதுவேண்டுமானாலும் செய்ய அதிகாரம் பெற்றிருந்தான். இவைகளை நினைத்து அந்த யூதர்கள் மிகவும் சஞ்சலப்பட்டனர்.
அந்த ஜனங்கள் தங்கள் ஜெபத்தின்மூலம் தங்களின் தேவனாகிய கர்த்தருக்கு முழுவதும் உண்மையாயிருந்தார்கள். ஆகையால் அவர்கள் உறுதியாய் உடன்படிக்கை பண்ணி எழுதிவைக்கிறோம் என்று ஜெபிக்கிறார்கள். அவர்களின் பிரபுக்களும், அவர்களின் லேவியரும், அவர்களின் ஆசாரியரும் அதற்கு முத்திரைபோடுவர் என்று சொன்னார்கள்.










