எனது கனவில் அவன் அந்த ஒளியை நோக்கி வேகமாக ஓடுவதைக் கண்டேன். அவன் மனைவியும், பிள்ளைகளும் அவன் பின்னால் ஓடி அவனை வீடு திரும்பும்படி கெஞ்சினார்கள், கதறினார்கள்! ஆனால் அவனோ தன் காதுகளைப் பொத்திக்கொண்டு நித்திய வாழ்வு, நித்திய வாழ்வு என்று கத்தயபடி அந்த ஒளியை நோக்கி ஓடினான். திரும்பியே பார்க்கவில்லை.
அந்த நகரத்தில் உள்ளவர்கள் அவன் ஓடுவதை வியப்போடு பார்த்தார்கள்.சிலர் அவனைக் கேலி செய்தார்ர்கள்.சிலர் அவனைத் திரும்பி வரும்படி கூப்பிட்டார்கள்.அவர்களில் கடின நெஞ்சன், இளகிய நெஞ்சன் என்ற இருவர் மட்டும் அவனை எப்படியாவது கூட்டி வருவோம் என்று சபதம் செய்துவிட்டு அவன் பின்னே ஓடினார்கள்.
அவர்கள் இருவரும் கிறிஸ்தியானுக்கு முன்பாக ஓடிச் சென்று அவனை வழிமறித்தார்கள். ஏன் என்னை வழிமறிக்கிறீர்கள்? என்று கேட்டான் கிறிஸ்தியான்.
நீ கண்டிப்பாக எங்களுடன் நகரத்திற்குத் திரும்பி வரவேண்டும் என்று வற்புறுத்தினார்கள் இருவரும்.
அது ஒருக்காலும் முடியாது. இந்த நகரம் கண்டிப்பாக ஒரு நாள் நெருப்பினால் அழிக்கப்பட்டு விடும். நீங்கள் அதில் இருந்தால் அதோடு அழிந்து போவீர்கள் நீங்களும் என்னுடன் வந்து அழிவிற்குத் தப்பிக்கொள்ளுங்கள் என்றான் கிறிஸ்தியான். எங்கள் நண்பர்களையும் எல்லா வசதிகளையும் விட்டுவிட்டு எவ்வாறு வரமுடியும்? என்று கேட்டான் கடின நெஞ்சன்.
ஆமாம், கண்டிப்பாக நண்பர்களையும், வசதிகளையும் விட்டுவிட்டுத்தான் வர வேண்டும். ஏனென்றால் நான் போகிற இடத்திலே இதைவிட மேலான நிரந்திர மகிழ்ச்சி கிடைக்கும். நீங்களும் என்னுடன் வந்தால் அதை அனுபவிக்கலாம் என்றான் கிறிஸ்தியான். இந்த உலகத்தை விட்டுவிட்டு நீ வேறு எதைத்தேடி ஓடுகிறாய்? என்று எரிச்சலுடன் கேட்டான் கடின நெஞ்சன்.
அழியாததும், மாசற்றதும், வாடாததுமான (1 பேதுரு 1:4 ) சுதந்திரத்தைத் தேடிச் செல்கிறேன். மோட்சத்தில் இந்த விடுதலை நமக்குக் கிடைக்கும். அதைத் தேடுகிற யாவரும் அதைக் கண்டடைவார்கள். இதோ இந்த புத்தகத்தைப் படித்துப் பார். உனக்கு எல்லாம் புரியும் என்று புத்தகத்தை நீட்டினான் கிறிஸ்தியான்.
உன்னுடைய புத்தகம் யாருக்கு வேண்டும்? நீ எங்களுடன் திரும்பி வரப்போகிறாயா இல்லையா? அதைச் சொல் முதலில் என்று அலட்சியமாகக் கேட்டான் கடின நெஞ்சன். வரமாட்டேன். நான் கலப்பையின்மீது கை வைத்து விட்டேன். இனிமேல் திரும்பிப் பார்க்க மாட்டேன் என்று மறுத்துவிட்டான் கிறிஸ்தியான். இளகிய நெஞ்சனே, வா, போவோம். இவனிடம் பேசி ஒரு பயனுமில்லை. இவன் தான்தான் புத்திசாலி என்று நினைத்துப் பேசிக் கொண்டிருக்கிறான் என்று இளகிய நெஞ்சனை அழைத்தான் கடின நெஞ்சன்.
அப்படிச் சொல்லாதே. கிறிஸ்தியான் ஒரு நல்ல மனிதன் என்பதை நான் அறிவேன். அவன் சொல்வது உண்மையென்றால் நானும் அவனுடன் போக விரும்புகிறேன் என்றான் இளகிய நெஞ்சன். என்னது? முட்டாள்தனமாகப் பேசாதே. அவன் உன்னை எங்கே கூட்டிக்கொண்டு போவான் என்று உனக்குத் தெரியாதே. பேசாமல் என்னுடன் வந்துவிடு என்று அதட்டினான் கடின நெஞ்சன்.
ஐயா, தயவுசெய்து திரும்பிப் போகாதீர்கள். இரண்டு பேரும் என்னுடன் வாருங்கள். நான் சொல்லும் நித்திய மகிழ்ச்சி உண்மையானதே. நீங்கள் என்னை நம்பாவிட்டால் இந்தப் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். இதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமானதே. இந்த நூலை எழுதியவர் நமக்காகத் தன்னுடைய இரத்தத்தையே சிந்தியிருக்கிறார் என்று கூறிய கிறிஸ்தியானின் கண்கள் கலங்கின. இளகிய நெஞ்சன் கடின நெஞ்சனை நோக்கி, நான் இந்த நல்ல மனிதரோடு போவதே நல்லது என்று நினைக்கிறேன் என்று முடிவாககக் கூறினான்.
புpறகு அவன் கிறிஸ்தியானைப் பார்த்து, நீ போகும் இடத்திற்கு வழி தெரியுமா? என்று கேட்டான். அதோ அந்தப் பிரகாசமாக ஒளி தெரிகிறதே! அதற்கு அருகே இடுக்கமான வாசல் ஒன்று இருக்கிறது என்று நற்சேய்தியாளர் கூறியுள்ளார். அங்கு நாம் போகும்போது அடுத்த நாம் செய்ய வேண்டியது என்னவென்று அங்கே கூறப்படுமாம் என்றான் கிறிஸ்தியான். நல்லது. அப்படியென்றால் நானும் உன் கூடவே வருகிறேன் என்று கூறிய இளகிய நெஞ்சன் கிறிஸ்தியானுடன் சேர்ந்து நடக்கத் துவங்கினான். இதைக் கண்ட கடின நெஞ்சன் முட்டாள்களே, நான் உங்களுடன் வரப்போவதில்லை என்று கூறியபடியே நகரத்தை நோக்கித் திரும்பிவிட்டான்.









