கிறிஸ்தியான் தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது அவனை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்ற ஆவலோடு குறுக்கு வழியாக வேகமாக விரைந்துவரும் ஒருவனை என் கனவில் கண்டேன். அவன் பெயர் உலகஞானி. அவன் கிறிஸ்தியானின் ஊருக்குப் பக்கத்திலிருந்த உலகஞானம் என்ற ஊரைச் சேர்ந்தவன். கிறிஸ்தியான் சுமையைத் தூக்கிக்கொண்டு தள்ளாடியபடியே நடந்து செல்லவதைக் கண்ட உலகஞானி ஏனப்பா, இந்தப் பெரிய சுமையைத் தூக்கிக்கொண்டு எங்கே போகிறாய்? என்று அக்கறையுடன் கேட்பதுபோல விசாரித்தான். ஆமாம் பெரிய சுமைதான். உலகில் வேறு யாருக்குமே இவ்வளவு பெரிய சுமை இருக்காது என்று தான் தோன்றுகிறது. அதோ தொலைவில் இருக்கிற இடுக்கமான வாசலை நோக்கிச் செல்கிறேன். அங்கே சென்றால் என்னுடைய சுமையைத் தொலைக்கும் வழி சொல்லப்படுமாம் என்றான் கிறிஸ்தியான்.
ஏனப்பா, உனக்கு மனைவி பிள்ளைகள் இருக்கிறார்களா? என்று கேட்டான் உலகஞானி. இருக்கிறார்கள். ஆனால் இந்தச் சுமை என்னை அழுத்துவதால் அவர்களைப் பற்றி என்னால் அக்கறைப்பட முடியவில்லை என்று அங்கலாய்த்தான் கிறிஸ்தியான். நான் உனக்கு ஒரு ஆலோசனை கூறுகின்றேன். நீ அதைக்கேட்பாயா? என்று கேட்டான் உலகஞானி. சொல்லும் ஐயா, நல்ல யோசனை என்றால் அதன்படி செய்யலாமே என்றான் கிறிஸ்தியான் ஆவலுடன். முதலில் நீ இந்தச் சுமையைத் தூக்கி எறிய வேண்டும். அப்போதுதான் ஆண்டவர் அளிக்கும் ஆசீர்வாதங்களை உன்னால் அனுபவிக்க முடியும் என்றான் உலகஞானி. அது சரிதான் ஐயா. அதை ஒழிக்கத்தானே நான் இவ்வாறு பயணம் செய்து கொண்டிருக்கிறேன் என்றான் கிறிஸ்தியான். அதுசரி, உனக்கு இந்தப் பாதையைச் சுட்டிக்காட்டியது யார்? என்று கேட்டான் உலக ஞானி. நற்செய்தியாளர் என்ற ஒருவர் தான் வழிகாட்டினார் என்றான் கிறிஸ்தியான்.
அடடா! அவர் உன்னை ஏமாற்றியிருக்கிறார்! இதைவிட அபாயகரமான பாதையை வேறு எங்குமே காண முடியாது! ஏற்கனவே நீ பல வேதனைகளை அனுபவித்திருக்கிறாய் போலிருக்கிறதே! ஆதே உன் ஆடையெல்லாம் சேறு! அவநம்பிக்கை குட்டையின் சேறுதானே இது? இதுதான் உன் சோதனைகளின் ஆரம்பம். நான் சொல்வதைக் கேள். நீ இன்னும் தொடர்ந்து இதே பாதையில் சென்றால் சோர்வு, வலி, பசி, கடுங்குளிர், காட்டு மிருகங்களின்அபாயம், காரிருள் போன்ற அபாயங்களைச் சந்திப்பதோடு உயிரையும்கூட இழக்க வேண்டியிருக்கும்! ஏன் யாரோ ஒருவருடைய பேச்சைக் கேட்டு உன் வாழ்க்கையைப் பாழாக்கிக்கொள்கிறாய்? என்று அனுதாபத்துடன் கேட்டான் உலகஞானி.
இந்த எல்லா வேதனைகளைக் காட்டிலும் என் சுமையே எனக்குப் பெரிய வேதனையாக இருக்கிறது ஐயா! என்றான் கிறிஸ்தியான் கவலையுடன். எல்லாம் சரிதான், ஆனால் இந்தச் சுமை எப்படி உன் முதுகில் வந்தது? என்று கேட்டான் உலகஞானி. இதோ என் கையிலிருக்கும் இந்தப் புத்தகத்தைப் படித்தபிறகுதான் என்றான் கிறிஸ்தியான். நினைத்தேன். இவ்வாறுதான் உன்னைப்போலப் பலரும் இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு வேண்டாத பாதைகளில் சென்று சொல்லிமுடியாத துன்பங்களைப் பெற்றிருக்கிறார்கள். நீயாவது நான் சொல்வதைக்கேள். உன்னுடைய சுமையை மிக எளிதாகப் போக்குவதற்கான வழியை நான் கூறுகிறேன். இது மிகச் சுலபமான வழி. மிகவும் பாதுகாப்பானது! வழியெங்கும் மகிழ்ச்சிதான்! என்று ஆசைகாட்டினான் உலக ஞானி.
அப்படியா? அந்த வழியை எனக்குச் சொல்லுங்கள், ஐயா! என்று ஆவலுடன் கேட்டான் கிறிஸ்தியான். சொல்கிறேன் கேள். சற்றுத் தொலைவில் நல்லொழுக்கம் என்ற நகரம் உள்ளது. அங்கே நீதிமான் என்ற அறிஞர் வசிக்கிறார். உன்னைப்போல அநேகருடைய சுமைகளை அகற்ற அவர் வழிகாட்டியிருக்கிறார். உன்னுடைய மனக்குழப்பத்தையும் அவர் தீர்த்துவைப்பார். அவர் வீட்டில் இல்லாவிட்டால் அவரைப்போலவே புத்திசாலியான அவர் மகன் மரியாதை உனது பிரச்சனையைத் தீர்த்துவைப்பான். நீ திரும்ப ஊருக்குப் போக வேண்டியதில்லை. உனது மனைவியையும் பிள்ளைகளையும் வரவழைத்து அந்த நகரத்திலேயே மகிழ்ச்சியாக வாழலாம். அங்கே குறைந்க வருமானத்திலேயே காலம்தள்ள முடியும். மேலும் அங்குள்ளவர்கள் எல்லாருமே உத்தமர்களாயிருப்பதால் உனக்கு எந்தத் துன்பமும் வராது என்று விளக்கினான் உலக ஞானி.
இந்தப் பெரியவர் கூறுவதுதான் சரியான வழி போலத் தெரிகிறது என்று நினைத்த கிறிஸ்தியான், ஐயா, அந்த நீதிமானின் வீட்டுக்கு எப்படிச் செல்வது? என்று உற்சாகமாகக் கேட்டான். அதோ தெரிகிறதே ஒரு மலைச் சிகரம். அதன் அடிவாரத்திலுள்ள வீடுகளில் முதல் வீடுதான் அவர் வீடு என்று சுட்டிக் காட்டினான் உலக ஞானி. கிறிஸ்தியான் அவனிடம் விடைபெற்று, மலைச்சிகரத்துக்குத் திரும்பிச் செல்வதை நான் என் கனவில் கண்டேன். அவன் அந்த அடிவாரத்தை நெருங்கியபோது மலைச்சிகரத்தை நிமிர்ந்து பார்த்தேன். சிகரம் சரிந்துபோய் அவன்மீது விழுந்துவிடுவதுபோலத் தோன்றியது! பயந்து நடுங்கினான் கிறிஸ்தியான்! அவனுடைய முதுகிலிருந்த சுமையின் எடை அதிகமாகி அவனை அப்படியே அழுத்தியது! மலையிலிருந்து அடிக்கடி புறப்பட்ட அக்கினி சுவாலைகள் அவன் பயத்தை அதிகரித்தன! அவன் உடல் நடுங்கியது! வியர்வை ஆறாகப் பெருகியது! ஐயோ, உலக ஞானியின் யோசனையைக்கேட்டு மோசம் போனேனே! என்று கதறி அழுதான்.










