ஏன் ஜயா, என்னை இழுத்தீர்கள்? என்று வியப்புடன் கேட்டான் கிறிஸ்தியான்.
இந்த வாசலுக்குச் சற்றுத் தொலைவிலதான் சாத்தானின் கோட்டை இருக்கிறது. அவன் இங்கே நுழைபவர்களைக் கண்காணித்து, அம்பெய்து கொல்லத்தயாராக இருக்கிறான். சிலர் அவ்வாறு அவன் அம்பால் குத்தப்பட்டு இந்த வாசலினுள் நுழையுமுன்பே இறந்து போயிருக்கிறார்கள். அதனால்தான் உன்னை அவசரமாக உள்ளே இழுத்தேன் என்று விளக்கிய தயாளன், அதுசரி உனக்கு இந்த வழியைக் காட்டியது யார்? என்று கேட்டார்.
நற்செய்தியாளர் என்று கூறிய கிறிஸ்தியான் மிகவும் மகிழ்ச்சியோடு இதுவரை நடந்ததையெல்லாம் அவருக்கு எடுத்துக் கூறினான்.
நல்லது என்னுடன் வா. அடுத்து நீ செல்ல வேண்டிய பாதையை உனக்குக் காண்பிக்கிறேன் என்று கூறிய தயாளன் கிறிஸ்தியானை அழைத்துச் சென்று இடுக்கமும், நேரானதுமான வழியைக் காட்டினார்.
இதோ நேரே தெரிகிறதே, குறுகலான நேர்ப்பாதை. இந்த வழியாகத்தான் நீ செல்லவேண்டும்.பழங்காலத்திய தீர்க்கதரிசிகளாலும், கிறிஸ்துவானவராலும், அவருடைய சீடர்களாலும் இந்தப் பாதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இருபறமும் பல வளைந்த ஆனால் அகலமான பாதைகள் உண்டு. ஆனால் நீ பாதை மாறிவிடாதே! நேரான ஆனால் இடுக்கமான பாதை தான் சரியான பாதை! நீ இதே பாதையில் சென்றால் பொருள்கூறுபவர் என்பவரின் வீட்டை அடைவாய். அவர் பல அற்புதமான காரியங்களைப்பற்றி உனக்குக் கூறுவார் என்றார் தயாளன்.
கிறிஸ்தியான் அவரிடம் விடைபெற்று குறுகலான பாதையில் நடந்து சென்றான்.











