பாட்டுப்பாடிக்கொண்டு, மகிழ்ச்சியோடு நடந்து சென்றான் கிறிஸ்தியான். அவன் சென்ற பாதையின் இருபுறத்திலும் இரட்சிப்பு என்ற சுவர்கள் இருப்பதை நான் என் கனவில் கண்டேன். உற்சாகமடைந்தவனாக முதுகுச் சுமையோடு ஓடத் துவங்கினான் கிறிஸ்தியான். ஓர் உயரமான இடத்தை அடைந்தான் அவன். அங்கே மரத்தாலான ஒரு சிலுவை நிறுத்தப்பட்டிருந்தது! அதனருகே காலியான ஒரு கல்லறை!
கிறிஸ்தியான் சிலுவையின் அருகே வந்தவுடன் அவன் முதுகிலிருந்த சுமை படாரென அறுந்து கீழே விழுந்தது! உருண்டுபோய் திறந்திருந்த கல்லறைக்குள் சென்று மறைந்துவிட்டது அதன் பிறகு நான் அந்தச் சுமையையே பார்க்கவில்லை.
அவரது பாடுகளினால் எனக்கு விடுதலை கிடைத்தது! அவரது மரணத்தினால் எனக்கு வாழ்வு கிடைத்தது! என்று கூறி மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்தான் கிறிஸ்தியான். வியப்போடு சிலுவையைப் பார்த்தவனாக அங்கையே நின்றுகொண்டிருந்தான் அவன். அவன் கண்களிலிருந்து நீர் வழிந்தது.
அப்போது பிரகாசமான ஆடையணிந்த மூவர் வந்து, உனக்கு சமாதானமுண்டாகட்டும் என்று கிறிஸ்தியானை வாழ்த்தினார்கள். முதலாமவர் உன் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டன என்றார். இரண்டாமவர் அவனது கந்தையாடைகளைக் களைந்து புதிய வெண்ணங்கியை அவனுக்கு அணிவித்தார். மூன்றாமவர் அவன் நெற்றியில் ஓர் அடையாளத்தைப் பதித்து, அவன் கையில் முத்திரையிடப்பட்ட சுருள் ஒன்றைக் கொடுத்தார். நீ செல்லும் பாதையில் இதைப் படித்துப்பார். நீ மோட்ச வாயிலை அடையும்போது இந்தச் சுருளைக் கண்டிப்பாகக் கொடுக்கவேண்டும் என்றும் கட்டளையிட்டார்.
மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தபடி, எந்தவிதமான முதுகுச் சுமையும் இல்லாதவனாகத் தன் பயணத்தைத் தொடர்ந்தான் கிறிஸ்தியான். அந்த இடுக்கமான பாதையின் இடதுபக்கச் சுவற்றில் ஏறிக்குதித்து, கிறிஸ்தியானை நெருங்கும் இருவரை என் கனவில் கண்டேன். சம்பிரதாயன், வெளிவேசக்காரன் என்ற இருவருமே அவர்கள்.
அவர்களைக் கண்டவுடன் கிறிஸ்தியான், ஐயா நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கே போகிறீர்கள்? என்று கேட்டான். வீண்பெருமை என்ற ஊரிலிருந்து வருகிறோம். மோட்சத்துக்குச் சென்று பேரும் புகழும் பெற ஆசைப்படுகிறோம் என்றார்கள் அவர்கள்.
ஐயாமார்களே, நீங்கள் மோட்சத்துக்குப் போக வேண்டுமென்று கூறுகிறீர்கள். ஆனால் இடுக்கமான வாசல் வழியே வராமல் குறுக்குப் பாதையில் வருகிறீர்கள். ஒழுங்கை மீறிய உங்களை ஆண்டவர் மோட்சத்துக்குள் நுழைய அனுமதிப்பாரா? என்று தாழ்மையுடன் சந்தேகம் கிளம்பினான் கிறிஸ்தியான்.
எங்களுடைய வழி குறுக்குவழிதான். இவ்வாறு வருவதுதான் எங்கள் ஊர் மனிதர்களின் பழக்கம். நீயோ இடுக்கமான வாசல் வழியே வந்தாய்! நாங்களோ சுவர் ஏறி வந்தோம்! ஆனால் இருவரும் ஓரே பாதையில்தானே செல்கிறோம் என்று கூறினார்கள் அந்த இருவரும்.
நானோ ஆண்டவரின் கட்டளைப்படி நடக்கிறேன். நீங்களோ உங்கள் சுய விருப்பத்தின்படி நடக்கிறீர்கள். ஆண்டவர் ஏற்கனவே உங்களைக் கள்வர்கள் என்று தீர்ப்பளித்திருப்பார் என்று உறுதியாகக் கூறினான் கிறிஸ்தியான். நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம். நீ உன் வழியைப் பார்த்து நட என்று கூறிவிட்டார்கள் அந்த இருவரும்.
மூவருமாக அந்தப் பாதையில் தொடர்ந்து நடந்து சென்றார்கள். அவர்கள் இருவரும் மீண்டும் கிறிஸ்தியானோடு விவாதத்திற்கு வந்தார்கள். நாங்களும் விதிகளைக் கடைப்பிடித்து நடப்பவர்கள்தான். எங்களுக்கும் உனக்கும் ஓரே வித்தியாசம் தான். நீ வெண்ணங்கி அணிந்திருக்கிறாய். எங்களுக்கு இல்லை அவ்வளவுதான் என்றார்கள்.
ஆண்டவர் அளித்த அங்கி இது! நான் மோட்ச வாசலை அடையும்போது இந்த அங்கியின் மூலம் அவர் என்னை அடையாளம் கண்டுகொள்வார். என் நெற்றியில் ஓர் அடையாளம் போடப்பட்டுள்ளது. இதோ இந்த முத்திரையிடப்பட்டுள்ள சுருளை நான் வாசலண்டை வராதபடியால் உங்களுக்கு இவைகள் கொடுக்கப்படவில்லை என்றான் கிறிஸ்தியான். ஒன்றுமே பதில் கூறாத அவர்கள் கிறிஸ்தியானைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தார்கள்.









