நடந்து சென்ற கிறிஸ்தியான் சுருளில் கூறப்பட்டிருக்கும் ஆறுதலான வார்த்தைகளைப் படிக்கலாம் என்ற எண்ணத்துடன் பையினுள் கையைவிட்டான்! திடுக்கிட்டு நின்றான்! சுருளைக் காணாது கலவரமடைந்தான்! தான் உறங்கும்போதுதான் அதைக் கீழே விட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். முழங்காற்படியிட்டு ஆண்டவரிடம் தனது கவனக் குறைவுக்காக மன்னிப்புக் கேட்டான்.
கண்ணீர்விட்டபடியே சுருளைத் தேடி ஓடினான் கிறிஸ்தியான். ஆண்டவர் அந்த இளைப்பாறும் தலத்தைக் கட்டியிருந்தது சற்று அமர்ந்திருக்கத்தானே! ஆனால் கடமையை மறந்து உறங்கிவிட்டது என்னுடை தவறுதானே என்று எண்ணி வருந்தினான்.
இளைப்பாறும் தலத்தை அடைந்தவுடன் சுற்றிலும் தேடினான். சுருளைக் கண்டவுடன் அதை எடுத்துப் பத்திரமாக பையினுள் வைத்துக்கொண்டான். அப்போது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.
வேகவேகமாக மீண்டும் மலைமீது ஏறினான் கிறிஸ்தியான். அனால் அவன் மலையுச்சியை அடைவதற்குள் இருட்டிவிட்டது! கோழையும், அவநம்பிக்கையும் சிங்கங்களைப் பற்றிக் கூறியிருந்தது அவன் நினைவில் எழுந்தது.
இந்த இருட்டு வேளையில் அந்தச் சிங்கங்கள் என் மீது பாய்ந்து என்னைக் கொன்றுபோடுமே! என்று பயந்தான் கிறிஸ்தியான். உடன்தானே தனது தவறை உணர்ந்தான் அவன். தனது அவநம்பிக்கைக்காக ஆண்டவரை நோக்கி மன்னிப்புக் கேட்டான்.
அலங்கார மாளிகை
விசுவாசத்தோடு முன்னேறிச் சென்ற கிறிஸ்தியான் அலங்கார மாளிகை என்ற அழகான அரண்மனையைக் கண்டான். இரவு அங்கே தங்கச் செல்லலாம் என்ற நம்பிக்கையோடு மாளிகையை அடைந்தான்.
அருகே செல்லச்செல்ல பாதை மிகவும் குறுகலாகியது! வாசலின் அருகே இரண்டு சிங்கங்கள் படுத்திருப்பதைக்கண்டு தயங்கினான்!
கோழையும் அவநம்பிக்கையும் இந்தச் சிங்கங்களைக் கண்டுதான் பயந்து ஓடினார்கள்போலும்! என்று நினைத்தான் கிறிஸ்தியான்.
கிறிஸ்தியான் தயங்கி நிற்பதைக் கண்டு விழித்திருப்போன் என்ற பெயருடைய அரண்மனைக் காவல்காரன், ஏன் கோழைபோல அங்கேயே நின்றுவிட்டாய்? சிங்கங்களைப்பற்றிப் பயப்படாதே! அவை சங்கிலியால் கட்டப்பட்டிருக்கின்றன! உன்னுடைய விசுவாசத்தைச் சோதிக்கவே அவை இங்கே இருக்கின்றன. நீ பாதையின் நடுவே நடந்து வந்தால் அவை உன்னை ஒன்றும் செய்யாது என்று அவனை நோக்கிக் கூறினான்;.
நடுக்கத்துடனே கிறிஸ்தியான் மெதுவாக முன்னேறிச் செல்வதை நான் என் கனவில் கண்டேன். சிங்கங்கள் கெர்ஜித்தன! ஆனால் கிறிஸ்தியானை ஒன்றுமே செய்யவில்லை!
காவல்காரனிடம் சென்று கிறிஸ்தியான் ஜயா, நான் இன்றிரவு இங்கே தங்கலாமா? என்று கேட்டான்.
பயணிகள் பாதுகாப்பாகத் தங்குவதற்காகத்தான் இந்த மலையின் எஐமானர் இந்த மாளிகையைக் கட்டியுள்ளார். நீ எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டான் காவல்காரன்.
அழிநகரத்திலிருந்து வருகிறேன். நித்திய நகரமான மோட்சத்தை நோக்கிச் செல்கிறேன் என்றான் கிறிஸ்தியான்.
உன் பெயர் என்ன? ஏன் இவ்வளவு இருட்டிய பிறகு வருகிறாய்? என்று கேட்டான் காவல்க்காரன்.
முன்பு என் பெயர் கிருபையற்றோன், ஜயா. இப்பபோதோ என் பெயர் கிறிஸ்தியான் என்று கூறி அவன் தான் இளைப்பாறும் தலத்தில் சுருளைத் தொலைத்து விட்டதுபற்றியும், அதைத் தேடி வருவதற்காக இவ்வளவு தாமதமாகிவிட்டது என்பதையும் எடுத்துரைத்தான்.
இதைக் கேட்டவுடன் விழித்திருப்போன் ஒரு மணியை அடித்தான். மணியோசை கேட்டவுடன் விவேகம் என்ற பெயருடைய ஒரு அழகிய பெண்மணி கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
காவல்காரன் கிறிஸ்தியானை அவளுக்கு அறிமுகம் செய்துவிட்டு, இவன் இங்கே இரவு தங்க அனுமதி கிடைக்குமா? என்று கேட்டான்.
விவேகம் கிறிஸ்தியானைப் பற்றிப் பல கேள்விகளைக் கேட்டாள். கிறிஸ்தியான் தான் பயணம் புறப்பட்டதின் காரணத்தையும், வழியில் தான் அனுபவித்த சோதனைகளும் எடுத்துக் கூறினான்.
இதைக் கேட்ட விவேகம் கண்ணீர்விட்டாள். இங்கே வருவதற்குள் எவ்வளவு துன்பங்களைச் சகித்திருக்கிறீர்! வாரும், வீட்டிலுள்ள மற்றவர்களை அறிமுகம் செய்துவைக்கிறேன் என்று கூறி விவேகம் கிறிஸ்தியானை உள்ளே அழைத்துச் செனறாள்.
முன்யோசனை, பக்தி, கருணை என்ற தன்னுடைய சகோதரிகளையும் மற்றவர்களையும் அவள் கிறிஸ்தியானுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அவர்கள் அனைவரும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, வாரும்! என்று வாழ்த்துக்கூறி அவனை வரவேற்றார்கள்!
விவேகமும் அவளுடைய சகோதரிகளும் நீண்ட நேரம் கிறிஸ்தியானோடு ஆண்டவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். உணவருந்திய பின்பு அவரவர் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றார்கள். சமாதானம் என்ற மேலறை கிறிஸ்தியானுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. விடியும்வரை மன அமைதியுடன் உறங்கினான் கிறிஸ்தியான்.
மறுநாள் அந்தச் சகோதரிகள் மீண்டும் அவனுக்கு ஆண்டவரைப்பற்றி எடுத்துக் கூறினார்கள். அவர் தேவனுடைய ஓரே பேறான குமாரன் என்றும், அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்பவர்களை அவர் மன்னிக்கச் சித்தமாயிருக்கிறார் என்றும், அவரைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேறின என்றும் விளக்கமாகச் சொன்னார்கள். கிறிஸ்தியான் அனைத்தையும் ஆவலோடு கேட்டு மனதில் பதிய வைத்துக்கொண்டான்.
அதன்பின்பு அந்த மாளிகையின் ஆயுதசாலைக்கு அவனை அழைத்துச் சென்றார்கள். கச்சைகள், மார்க்கவசம், கேடகம், தலைச்சீரா, பட்டயம் (எபே.6:11-18) இவையனைத்தையும் கண்டு மகிழ்ச்சியடைந்தான் கிறிஸ்தியான்.
நீர் போகும் வழியில் பல விரோதிகளையும், ஆபத்துக்களையும் சந்திக்க வேண்டியிருகக்கும். எனவே நீர் இந்த ஆயுதங்களை எடுத்துக் கொள்ளும் என்று சகோதரிகள் கேட்டுக் கொண்டார்கள்.
உற்சாகத்தோடு கச்சை, மார்க்கவசம், தலைச்சீரா, காலில் போடும் பாதரட்சை இவற்றை அணிந்துகொண்டான் கிறிஸ்தியான். பட்டயத்தையும், கேடகத்தையும் கையில் பிடித்துக்கொண்டான்!
இவ்வாறு கவசம் அணிந்தவனாக அவர்களுடன் புறப்பட்டு, மீண்டும் வாசலண்டை வந்தான்.
ஜயா, யாராவது இந்த வழியே சென்றார்களா ? என்று காவல்க்காரனிடம் கேட்டான்.
ஆமாம் உண்மையானவன் என்பவர் இந்த வழியே சென்றார். இதற்குள் மலையின் மறுபுறம் இறங்கி விட்டிருப்பார் என்றான் காவல்க்காரன்.
ஊண்மையானவனா? என்னுடைய வீட்டிற்கு அருகில் வசித்தவன் தான் அவன். நான் துரிதமாகச் சென்றால் அவனைப் பிடித்துவிடலாம் என்று கூறிய கிறிஸ்தியான் உடனே புறப்பட்டான்.
சகோதரிகள் நால்வரும் மலையடிவாரம் வரை அவனோடு வருவதாகக் கூறி உடன் வந்தார்கள். மீட்பரைப் பற்றிப் பேசிக்கொண்டே சென்றார்கள்.
என்ன இது ? மலையின்மீது ஏறுவதுதான் கடினமாக இருந்ததென்றால், இறங்குவது இன்னும் அபாயமாக இருக்கும் போலிருக்கிறதே என்றான் கிறிஸ்தியான்.
ஆமாம், ஏனென்றால் இந்த மலைச்சரிவு தாழ்மையின் பள்ளத்தாக்கை நோக்கிச் செல்கிறது. வழியில் ஏதேனும் அபாயங்கள் நேரிட வாய்ப்புண்டு. அதனால் தான் நாங்கள் உன்னுடன் வருகிறோம் என்றாள் விவேகம்.
அனைவருமாக மலையடிவாரத்தை அடைந்தார்கள். சகோதரிகள் கிறிஸ்தியானிடம் ஒரு திராட்சை இரசப்புட்டி, ஓரு ரொட்டி, உலர்ந்த திராட்சை இவற்றை உணவுக்காகக் கொடுத்துவிட்டு விடைபெற்றார்கள்.
நன்றியோடு இவற்றைப் பெற்றுக்கொண்ட கிறிஸ்தியான் தன்னந்தனியாக தாழ்மையின் பள்ளத்தாக்கில் நடக்கத் துவங்கினான்.









