அதன்பிறகு கிறிஸ்தியான் மரண இருளின் பள்ளத்தாக்கை அடைவதை நான் என் கனவில் கண்டேன். அப்போது இருவர் அவனுக்கு எதிராக ஓடிவந்தார்கள்.
ஜயா, நேரே போகாதீர்கள். இந்தப்பள்ளத்தாக்கு முழுவதும் ஓரே இருளாக இருக்கிறது. கொடிய மிருகங்களையும், விகாரமான ஜந்துக்களையும் அங்கே கண்டோம். எங்கும் வேதனையில் துடிப்பவர்களின் கூக்குரல்தான் கேட்கிறது என்று கூறி அவனைத் தடுத்தார்கள்.
ஆனால் கிறிஸ்தியானோ, நான் செல்லவேண்டிய வழி இதுதான். எனவே திடமனதோடு இதில்தான் செல்வேன் என்று கூறியபடி நேரே சென்றான்.
மரண இருளின் பள்ளத்தாக்கின் நடுவே சென்ற பாதை மிகவும் குறுகலாக இருந்தது. அதன் இடதுபுறம் ஆழமான குழி காணப்பட்டது. வலதுபுறம் ஓரே சதுப்பு நிலக் காடாகக் காட்சியளித்தது! இரண்டு புறமும் சறுக்கி விழுந்துவிடாமல் நடுவில் நடந்துசெல்வது கடினமாகவேயிருந்தது!
பள்ளத்தாக்கின் மையப் பகுதியில் நரகத்தின் வாசல் இருந்தது. அதிலிருந்து நெருப்பும், புகையும் புறப்பட்டு வந்தது. கர்ணகடுரமான சத்தங்களும் கேட்டன!
கிறிஸ்தியான் தனது பட்டயத்தை உறையில் போட்டு விட்டு ஒரு புதிய ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டான். ஜெபமே (எபே.6:18) அந்தப் புதிய ஆயுதம்! ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும் என்று தொடர்ந்து ஜெபம் செய்தான்.
துஸ்ட மிருகங்கள் அவனை நெருங்கி வந்தன. ஆண்டவருடைய வல்லமையால் நான் தொடர்ந்து நடப்பேன் என்று விசுவாசத்தோடு சத்தமிட்டான். அந்த மிருகங்கள் விலகி ஓடிப்போயின!
இருள் விலகி காலையில் வெளிச்சம் வந்தவுடன் கிறிஸ்தியான் தான் வந்த பாதையைத் திரும்பிப்பார்த்தான். ஆபத்துக்களுக்கு மத்தியில் மிகவும் குறுகலான பாதையில் தன்னைப் பத்திரமாக வழிநடத்திய ஆண்டவரைத் துதித்தான்!
பள்ளத்தாக்கிலிருந்த ஒரு குன்றுப் பகுதியை அடைந்தான் கிறிஸ்தியான். மேடான இடத்திலிருந்து சுற்றிலும் பார்த்தான். அப்போது சற்றுத் தொலைவில் உண்மையானவன் நடந்துசெல்வதைக் கண்டான்.
உண்மையானவனே கொஞ்சம் நில். நானும் உன் கூட வருகிறேன் என்று குரல்கொடுத்தான் கிறிஸ்தியான்.
என்னால் நிற்க முடியாது பழிவாங்குபவர்கள் என்னைத் தொடர்ந்து வருகிறார்கள் என்று கூறிய உண்மையானவன் நிற்காமல் சென்றான்.
இதைக் கண்ட கிறிஸ்தியான் அவனை எப்படியாவது பிடித்துவிடவேண்டுமென்ற எண்ணத்தோடு அவன் பின்னே ஓடினான். ஓடிச் சென்ற அவன் உண்மையானவனை மிகச் சுலபமாக தாண்டி விட்டான். தன்னுடைய வேகத்தை எண்ணி பெருமைப்பட்டான் பாதையைக் கவனிக்கவில்லை! கால் தடுக்கி கீழே விழுந்துவிட்டான்! உண்மையானவன் ஓடிவந்து அவனைத் தூக்கி விட்டான். இருவருமாகப் பேசிக்கொண்டே நடந்து சென்றார்கள். கிறிஸ்தியான் வழியில் தான் பெற்ற அனுபவங்களையெல்லாம் விவரித்துக் கூறினான்.











