கிறிஸ்தியானும், நம்பிக்கையும் நடந்து செல்லும் வழியில் ஒரு அழகான ஆற்றின் அருகே வந்து சேர்ந்தார்கள். அளவுகடந்த மகிழ்ச்சியுடன் ஆற்றின் தெளிந்த நீரைப் பருகினார்கள். கரையிலிருந்து மரங்களிலிருந்து பழங்களைப் பறித்து உண்டார்கள். பச்சைப்பசேலென்ற புல்வெளியில் படுத்து உங்கினார்கள்.
விழித்து எழுந்தவுடன் கற்கள் நிறைந்த பாதையில் பயணத்தைத் தொடர்ந்தார்கள். நீண்ட தூரம் நடந்து வந்ததால் கால்கள் வலியெடுத்தது! கற்பாதையில் நடப்பது கடினமாக இருந்தது! அப்போது அவர்கள் செல்லவேண்டிய பாதைக்கு அருகில் புல்வெளிப் பாதை என்ற பசும்புற்களால் நிறைந்த பாதையைக் கண்டார்கள். வெகுதூரம் வரை அந்த பாதை கற்ப்பாறைக்கு இணையாகவே செல்வதுபோலத் தென்பட்டது!
புல்வெளிப் பாதையில் கால் வைத்து நடந்தார்கள். மெத்தைமீது நடப்பதுபோன்று கால்களுக்கு இதமாக இருந்தது! தாங்கள் செல்லவேண்டிய கற்பாதையைப் பற்றி நினைக்கவேயில்லை!
அந்தப் பாதையில் நடந்து செல்லும்போது அசட்டு நம்பிக்கை என்ற பெயருடைய ஒருவனைச் சந்தித்தார்கள்.
இந்தப்பாதை மோட்சத்துக்குத்தான் செல்கிறது. பயப்படாமல் என்பின்னே வாருங்கள் என்றான் அவன். பயணிகள் இருவரும் கவலை நீங்கப்பெற்றவர்களாக அவனைப் பின்தொடர்ந்தார்கள்!
இரவு வந்தது. இருளில் பாதை கண்ணுக்குத் தெரியவில்லை!
அப்போது கால்தவறி கிடுகிடு பாதளத்திற்குள் விழுந்துவிட்டான் அசட்டு நம்பிக்கை! அவனுடைய கூக்குரலைக் கேட்டு திடுக்கிட்டு நின்றுவிட்டார்கள் பின்னால் வந்த இருவரும்! அவனைக் குரல்கொடுத்துக் கூப்பிட்டு பார்த்தார்கள். ஆனால் பதிலே வரவில்லை! தீடிரென்று இடி, மின்னலோடு பெரிய மழை பெய்தது! புல்வெளிப் பாதையெங்கும் வெள்ளம் நிரம்பி விட்டது! தங்கள் தவறை உணர்ந்த கிறிஸ்தியானும், நம்பிக்கையும் மீண்டும் சரியான பாதைக்குத் திரும்ப முயன்றார்கள். ஆனால் வழி தெரியவில்லை!
மழையிலிருந்து தப்புவதற்காக ஒரு பாறை இடுக்கினுள் சென்று அமர்ந்தார்கள். களைப்பு மிகுதியால் அப்படியே உறங்கிவிட்டார்கள்! அவர்கள் தங்கிய இடத்துக்குச் சற்றுத் தொலைவில் தான் சந்தேகக் கோட்டை என்ற கோட்டை இருந்தது. நம்பிக்கையற்றவன் என்ற அரக்கன் தனது மனைவியோடு அங்கே வசித்து வந்தான்.
மறுநாள் காலை. தனது நிலத்தைச் சுற்றிப் பார்க்க வந்த அரக்கன் தூங்கிக்கொண்டிருக்கும் இருவரையும் கண்டு கடும் கோபம் கொண்டான். யாரது, எனது நிலத்தில் படுத்து உறங்குவது? என்று கர்ணகடுரமான குரலில் கேட்டான். திடுக்கிட்டு விழித்த இருவரும் அரக்கனைக் கண்டு பயந்து நடுநடுங்கினார்கள்.
ஐயா, நாங்கள் மோட்சத்துக்குச் செல்லும் பயணிகள். வழிதவறி இங்கு வந்துவிட்டோம். தயவு செய்து எங்களை விட்டுவிடுங்கள், என்று கெஞ்சினான் கிறிஸ்தியான். ஆனால் அரக்கனோ அவர்களைப் பிடித்திழுத்துக் கொண்டுபோய் கோட்டையிலுள்ள பாதாளச் சிறையில் அடைத்துவிட்டான்! மூன்று நாட்கள் இரவும், பகலும் அவர்களைத் திரும்பியே பார்க்கவில்லை! உண்ண உணவு கிடையாது! குடிக்கத் தண்ணீர்கூடக் கொடுக்கவில்லை! பாறாங்கல் தரையில், பாதாள அறையின் துர்நாற்றத்தைச் சகித்துக்கொண்டு, சோர்வோடு கிடந்தார்கள் இருவரும்!
அரக்கன் தனது மனைவியிடம் இவர்களைப் பற்றிக் கூறினான். அவிசுவாசம் என்ற அவனது மனைவி மிகவும் கொடூரமானவள். கொஞ்சம்கூட இரக்கம் காட்டாமல் அவர்களை நன்றாக அடிக்கும்படி ஆலோசனை கூறினாள் அவள்.
பாதாளச் சிறைக்குச் சென்ற அரக்கன் தனது குறுந்தடியைக் கொண்டு அவர்களை நையப் புடைந்தான்! ஆனால் அசையாமல் விழுந்துகிடந்த இருவரும் ஒன்றுமே பதில் பேசவில்லை! மறுநாள் இரவு அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை அறிந்த அவிசுவாசம் தனது கணவனிடம் அவர்களைத் தற்கொலை செய்யத் தூண்டுமாறு யோசனை கூறினாள். பாதாளச் சிறைக்குச் சென்ற அரக்கன், நீங்கள் இனித் தப்பிச் செல்ல முடியாது. உங்களை நீங்களே மாய்த்துக் கொள்வதுதான் ஓரே வழி என்று பயங்காட்டினான்! ஆனால் கிறிஸ்தியானும், நம்பிக்கையும் மனம் தளர்ந்துவிடவில்லை! ஒருவரையொருவர் தேற்றிக்கொண்டு மேலும் ஒரு நாளைக் கழித்தார்கள்.
இதைக் கேள்விப்பட்ட அவிசுவாசம் தனது கணவனை அழைத்து, நீர் இதற்குமுன் இங்கு கொல்லப்பட்டவர்களின் எலும்புகளைக் காட்டிப் பயயமுறுத்தும் என்று கேட்டுக்கொண்டாள். அரக்கன் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று ஏற்கனவே அங்கே கொல்லப்பட்டவர்களின் மண்டை ஓடுகளையும், எலும்புகளையும் காட்டினான். அந்தக் கொடூரமான காட்சியைக் கண்டு பயந்தாலும், இருவரும் தற்கொலை செய்துகொள்ள மறுத்துவிட்டார்கள். அரக்கன் அவர்களை மீண்டும் பாதாளச் சிறையில் அடைத்தான்.
அப்போது கிறிஸ்தியான், அடடா, என்னிடம் ஒரு சாவி இருக்கிறதே என்று கூறியபடி ஆண்டவரின் வாக்குத்தத்தம் என்ற சாவியை வெளியே எடுத்தான். இதோ இந்தச் சாவியைக் கொண்டு எந்தப் பூட்டையும் திறந்துவிடலாம் என்றான் உற்சாகத்துடன். சரி, வா போகலாம் என்று எழுந்தான் நம்பிக்கை.
இருவருமாக பாதாளச் சிறையின் கதவண்டை வந்தார்கள். கிறிஸ்தியான் வாக்குத்தத்தம் என்ற சாவியைக் கொண்டு பூட்டை மிக எளிதாகத் திறந்து விட்டான்! ஆனால் பெரிய இரும்புக் கதவை அசைப்பது தான் கடினமாக இருந்தது. முழுமுயற்சியோடு கதவைத் திறந்துவிட்டார்கள்! அந்தச் சத்தம் கேட்டு உறங்கிக் கொண்டிருந்த அரக்கன் விழித்துவிட்டான்.
கிறிஸ்தியானும், நம்பிக்கையும் தப்பி ஓடுவதைக் கண்ட அரக்கன் அவர்களை விரட்டினான். ஆனாலும் அவனுக்குத் திடீரென மூட்டுவலி வந்துவிட்டது! ஓட முடியாமல் கீழே விழுந்துவிட்டான்! பயணிகள் இருவரும் மீண்டும் சரியான பாதைக்கு வந்து சேர்ந்தார்கள்.










