இருவரும் மறுகரையை அடைந்தார்கள். அங்கே ஒளிவீசும் ஆடை தரித்த இருவரும் வர்களுக்காகக் காத்திருந்தார்கள். பயணிகளை அன்போடு வரவேற்றார்கள்.
மோட்சம் ஒரு மேன்மையான குன்றின்மீது இருப்பதை நான் என் கனவில் கண்டேன். பயணிகள் ஒளிவீசும் ஆடை தரித்தவர்களுடன் சேர்ந்து மோட்சத்தை நோக்கி நடந்தார்கள். வாசலை நெருங்கியவுடன் மோட்சத்தின் தூதர்கள் அவர்களை எதிர்கொண்டு வந்தார்கள்.
இவர்கள் இருவரும் பூமியில் வாழும்போது ஆண்டவரை நேசித்தவர்கள். எல்லாவற்றையும் அவருடைய நாமத்திற்கென்று விட்டுவிட்டவர்கள் என்று கிறிஸ்தியானும் நம்பிக்கையும் அறிமுகம் செய்யப்பட்டார்கள்.
எக்காளம் வாசிப்பவர்கள் எக்காள தொனியோடு அவர்களை வரவேற்றார்கள். பயணிகள் இருவரும் வாசலை அடைந்தார்கள். அங்கேதான் இரணடாவது சோதனை இருந்தது!
அடையாளச் சுருள் எங்கே! என்ற கேள்வி கேட்கப்பட்டது.
உடனே அவர்களிடம் கொடுக்கப்பட்டிருந்த சுருளை எடுத்துக் கொடுத்தார்கள். அவை இராஜாதிராஜாவிடம் கொண்டுபோகப்பட்டன.
அவற்றைச் சோதித்த அவர் இந்தச் சுருள்களைக் கொண்டு வந்தவர்கள் எங்கே? என்று கேட்டார்.
அவர்களை உள்ளே அழைத்து வாருங்கள் அவர்கள் உள்ளே நுழையத் தகுதியுள்ளவர்களே என்று தீர்ப்பளித்தார் இராஜாதிராஜா.
கதவு திறக்கப்பட்டது. கிறிஸ்தியான், நம்பிக்கை இருவரும் மோட்சத்தினுள் நுழைவதை நான் என் கனவில் கண்டேன்.
இதோ அவர்கள் நுழைந்தவுடன் அவர்கள் உருவம் மாறியது! அவர்கள் முகம் பிரகாசித்தது! அவர்கள் பொன்போல ஒளிவீசும் ஆடையணிந்தவர்களாகக் காணப்பட்டார்கள்! அவர்கள் தலையில் பொன்முடி சூடப்பட்டது! ஆண்டவரைத் துதித்துபாட கின்னரம் கொடுக்கப்பட்டது!
மோட்சத்திலுள்ள மணிகள் எல்லாம் ஒலியெழுப்பின! எங்கும் பாடல் தொனி! ஆண்டவருடைய மகிழ்ச்சிக்குள் பிரவேசியுங்கள் என்ற குரல் எழும்பியது!
சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக (வெளி.5:13) என்ற பாடலைப் பாடி அனைவருமாக ஆண்டவரைத் துதித்தனர்!












