முகவுரை
பவுல் அப்போஸ்தலனுடைய அநேக நிருபங்கள், போதனைகள் சத்தியங்கள், நடைமுறைக்கான அனுபவ ஆலோசனைகள் ஆகிய இரு பகுதிகளாகப் பிரித்திருப்பதுபோலவே, எபேசியருக்கு எழுதின நிருபமும் அமைந்திருக்கிறது. போதனைகள் – உபதேசக் கொள்ளைகள் அடங்கிய முதல் பாகம் (முதல் மூன்று அதிகாரங்கள்) தேவன் கிறிஸ்துவின் மூலம் நமக்கென்று உண்டுபண்ணின மீட்பின் மூல சத்தியங்களையே பெரும்பாலும் கொண்டிருக்கிறது. அன்றாட நடைமுறைக்கேற்ற ஆலோசனைகளாக அமைந்துள்ள அடுத்த பாகமானது (கடைசி மூன்று அதிகாரங்கள்) நாம் பெற்ற அந்த மீட்பினிமித்தம், தேவன் நம்மிடத்திலிருந்து எதிர்நோக்குகிற கிறிஸ்த நடத்தை, வைராக்கியம் ஆகியவற்றை விவரிக்கிறது. இந்த இரண்டு பகுதிகளும் நெருங்கிய சம்பந்தமுடையவைகள். ஆயினும் அவைகளின் நோக்கத்திலே வித்தியாசமுண்டென்பதை தெளிவாகக் காணலாம்.
பின்னும் அனுபவத்திற்கேற்ற ஆலோசனைகளாக அமைந்துள்ள பிந்திய பாகத்தை, அவைகளில் பொருளுக்கேற்றபடி அனுகூலமான இரு சிறிய பகுதிகளாகப் பிரிக்க முடியும். இதில் சற்று விரிவாக உள்ள முதல் பகுதி (4:1-6,9). இவ்வுலகத்தில் இரண்டாம் பகுதி (6:10-6:24) சாத்தானுடன் நமக்குள்ள போராட்டத்தைப்பற்றியும் சொல்லுகிறது.
இவ்விதமாக எபேசியர் நிருபம் கிறிஸ்துவுக்குள் விசுவாசியின் நிலை (1:1 – 3:21), இவ்வுலகத்தில் அவன் ஜீவியம் (4:1 – 6:9), விரோதியான சாத்தானுக்கு அவன் காட்ட வேண்டிய பாங்கு (6:10 – 6:24) ஆகிய மூன்று பகுதிகளாகப் பிரிந்திருக்கிற. கீழ்க்காணும் விதமாக நாம் இதைப் பிரித்துக் காண்பிக்கக்கூடும்.
எபேசியர் நிருபம்
முதல் பகுதி: போதனைகள்
(அதிகாரம் 1 முதல் 3 முடிய)
(1) கிறிஸ்துவில் நம் நிலை (1:1-3:21)
இரண்டாம் பகுதி: அனுபவ ஆலோசனைகள்
(அதிகாரம் 4 முதல் 6 முடிய)
(1) இவ்வுலகிலுள்ள நமது ஜீவியம் (4:1-5:9).
(2) விரோதியானவனுடன் நமக்குள்ள நடத்தை (5:10-6:24).
பவுலின் நிருபங்கள் யாவற்றைக்காட்டிலும் எபேசியர் நிருபத்தில்தான் கிறிஸ்த ஜீவியத்திற்கடுத்த ஆழமான ஆவிக்குரிய சத்தியங்களைப் பார்க்கிறோம், ஆவிக்குரிய ஐசுவரியங்களினாலே இந்த நிருபம் நிரப்பப்பட்டிருந்தாலும், அவைகள் முற்றும் அனுபவ சாத்தியமானவைகளே. இந் நிருபத்தில் முதல் பகுதி, பரலோகத்தின் உன்னதங்களிலே கிறிஸ்துவுடன்கூட ஐக்கியப்பட்டுள்ள நம்முடைய ஜீவியத்தை வெளிப்படுத்துகிறது. பிந்தின பாகம், அவ்வகை பரலோக ஜீவியத்தை இப்பூலோகத்திலேயும் ஜீவிப்பது எவ்வாறு என்று அனுபவரீதியாகக் காண்பிக்கிறது. இந்த நிருபத்தை விரிவாகப் படிப்பது என்பது எமது கருத்து அல்ல. இந்நிருபத்தில் ஆதாரமாக அமைந்துள்ள சில முக்கிய கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டுமென்பதே எமது எண்ணம். இந்தப் படிப்பினை எதுவாக மேற்கூறிய பகுதிகள் ஒவ்வொன்றிலுமிருந்து, மூலக் கருத்தை வெளிப்படுத்துமென்று எண்ணுகிற ஒவ்வொரு வார்த்தையைத் தெரிந்தெடுத்துக் கொள்ளுவோம்.
நிருபத்தின் முதல் பகுதியில் அப்பகுதிக்கு திறவுகோல்போல் அமைந்ததும், உண்மையான கிறிஸ்தவ அனுபவத்தின் இரகசியமுமான வார்த்தை உட்காரு (2:7) என்பதே. தேவன் நம்மை கிறிஸ்துவுடன்கூட உன்னதங்களில் உட்காரும்படி செய்திருக்கிறார். கிறிஸ்துவுடன் வீற்றிருத்தலாகிய இளைப்பாறுதல் என்ற இடத்திலிருந்தே ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன் ஆவிக்குரிய ஜீவியத்தை ஆரம்பிக்கவேண்டும். அடுத்தபடியாக இரண்டாம் பகுதியின் மூலக் கருத்தாக அமைந்த நட (4:1) என்ற பதத்தை தெரிந்துகொள்வோம். நட என்ற இந்தச் சொல்லே, இவ்வுலகத்திலுள்ள நமது ஜீவிய ஓட்டத்தை வெளிப்படுத்துகிறது. இதிலே நாம், நம்முடைய உன்னத அழைப்பின் தகுதிகேற்ற கிறிஸ்தவ நடத்தையை வெளிப்படுத்தும்படியான சவாலைப் பெறுகிறோம். கடைசியாக மூன்றாம் பகுதியில் சத்துருவாகிய சாத்தானிடம் நாம் நடந்துகொள்ளவேண்டிய முறையை வெளிப்படுத்துகிற நில் (6:11) என்ற பதத்தைத் தெரிந்துகொள்ளலாம். இப்பதமே இறுதியில் நமக்குள்ள வெற்றியின் ஸ்தானத்தைக் குறிக்கிறது. இவ்விதமாக நாம் காண்கிறதாவது:
(1) கிறிஸ்துவில் நம்முடைய நிலை – உட்காரு (2:7)
(2) உலகத்தில் நம்முடைய ஜீவியம் – நட (4:1)
(3) விரோதிக்கு நாம் காட்டவேண்டிய நிலை – நில் (6:11)
ஆதலால் உட்காரு, நட, நில் என்ற இந்த மூன்று பதங்களையும், இந்நிருபத்தில் அடங்கிய போதனைகளுக்கு ஆதாரமாக நாம் எடுத்துக்கொள்வோம். இவ்வார்த்தைகள் வரும் கிரமத்தையும் அவைகளுக்குள்ள சம்பந்தத்தையும் ஊன்றி கவனிப்பது நமக்கு மிகுந்த பலனை விளைவிக்கும்.
கிறிஸ்துவில் நம்முடைய நிலை – உட்காரு
உலகத்தில் நம்முடைய ஜீவியம் – நட
சாத்தானுக்கு நாம் காட்ட வேண்டிய நிலை – நில்








