உட்காரு
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவன்…………… கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி…………… எல்லா துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும் வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல, மறுமையிலும் பேர் பெற்றிருக்கும் எல்லா நமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, அவரை உன்னதங்களில் தம்முடைய வலது பாரிசத்தில் உட்காரும்படி செய்தார் (1:17-21).
கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார். கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினாலே உண்டானதல்ல (2:7-9).
தேவன்…… அவரை உன்னதங்களில்………. உட்காரும்படி செய்தார். நம்மை உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார். முதலாவதாக உட்காரு என்ற இந்தப் பதம் வெளிப்படுத்தும் உட்கருத்துக்களை நாம் பார்ப்போம். நான் முன்னே கூறினதுபோல அது பரலோக ஜீவியத்திற்கடுத்த இரகசியங்களை வெளிப்படுத்துகிறது. கிறிஸ்தவ ஜீவியம் நடப்பதில் துவங்குகிறதில்லை. அது உட்காருதலிலேயே ஆரம்பிக்கிறது. உன்னதங்களிலே கிறிஸ்துவானவர் உட்கார்ந்தபொழுதே கிறிஸ்தவ யுகம் ஆரம்பமானது. விசுவாசத்தின் மூலமாக நாம் கிறிஸ்துவுடன்கூட உட்கார்ந்திருக்கிறதைக் காணும்பொழுதே தனிப்பட்டவிதமாய் நமது கிறிஸ்தவ ஜீவியமும் ஆரம்பிக்கிறது. கிறிஸ்தவர்களில் அநேகர் உட்காருகிறேன் என்று சொல்லி நடக்கமுயலுகிற தப்பிதத்தைச் செய்கிறார்கள். இது மெய்யான ஒழுங்கிற்கு மாறானதே. நாம் நடந்து முன்னேறாவிட்டால் இலக்கைக் கண்டடையும் வகைதான் எது என்று நமது மனித அறிவு கேட்கிறது. முயற்சியில்லாமல் நாம் எதைப் பெற்றக்கொள்ளமுடியும்? நாம் அசையாமலிருந்தால் ஓர் இடத்தை எப்பொழுதேனும் போய்ச் சேர முடியுமா? ஆனால் கிறிஸ்தவ போதனையோ மனித போக்குக்கு வேறுபட்டது. துவக்கத்திலேயே நாம் எதையாவது செய்ய முயலுவோமானால், அதனால் நாம் பெறுவது ஒன்றுமிராது. கொஞ்சகாலத்தை அடையவேண்டுமென்று பிரயாசப்பட்டோமாகில், எல்லாவற்றையும் இழந்துபோவோம். ஏனெனில் செய் என்பதில் கிறிஸ்தவ அனுபவம் துவங்காமல், செய்தாயிற்று என்பதிலேயே அது ஆரம்பிக்கிறது. ஆகையினாலேயே, தேவன் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே, ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்து இருக்கிறார் (1:3) என்ற சத்தியத்துடன் எபேசியா நிருபம் துவங்குகிறது. முயற்சியில் இறங்கி, நமக்கானதைப் பெற்றுக்கொள்ளுவோம் என்பதாயிராமல் தேவன் நமக்காக செய்து முடித்திருக்கிறவைகளை அனுபவிக்கும்படிக்கு, எடுத்த எடுப்பிலேயே உட்காரும்படியாக நாம் அழைக்கப்படுகிறோம்.
நடப்பது ஒரு முயற்சியைக் குறிக்கிறது. ஆனால், நாம், கிரியைகளினாலல்ல, கிருபையினாலேதான் விசுவாசத்தைக் கொண்டு (2:8) இரட்சிக்கப்பட்டோம் என்று தேவன் கூறுகிறார். விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டோம் என்னும் சொற்றொடரை நாம் அடிக்கடி உபயோகிக்கிறோம். இதனால் நாம் கொள்ளும் அர்த்தம் என்ன? ஆண்டவராகிய இயேசுவின்மேல் பொறுப்பைச் சுமத்திவிட்டு இளைப்பாறுகிறதினாலேயே நாம் இரட்சிக்கப்படுகிறோம் என்பதே. நாம் நம்மை இரட்சித்துக் கொள்வதற்காக நாம் செய்துகொண்டது ஒன்றுமே இல்லை. பாவநோய் கொண்ட நம்முடைய ஆத்துமத்தின் பாரத்தை அவர்மேல் வைத்துவிட்டோம். நம்முடைய செய்கைகளின்மேல் நம்பிக்கை வைக்காமல், அவர் செய்தவைகளின் மேலேயே சார்ந்து, நம்முடைய கிறிஸ்தவ ஜீவியத்தை ஆரம்பித்தோமே. கிறிஸ்தவ ஜீவியம், துவக்க முதல் முடிவுவரை முற்றுமாய் ஆண்டவராகிய இயேசுவின்மேல் சார்ந்திருத்தலையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. நம்மேல் தேவன் பொழிய இருக்கும் கிருபையின் பெருக்கத்துக்கு எல்லையே இல்லை. எல்லாவற்றையும் நமக்குக் கொடுக்க அவர் சித்தமாயிருக்கிறார். ஆனால் நாம் அவரில் தரித்திருத்தாலன்றி, இவைகளிலொன்றையும் பெறப்போவதில்லை. இது நமது அறிவுக்கு ஒவ்வாததாகக் காணப்படினும் உட்காரக் கற்றுக் கொள்வதினாலன்றி கிறிஸ்த ஜீவியத்தில் நாம் முன்னேற்றம் காணமுடியாது என்பது உண்மையே.
உட்காருதல் என்பதின் உண்மையான கருத்துதான் என்ன? நாம் நிற்கும்போதும் நடக்கும்போதும் நமது கால்களே சரீரத்தின் பாரத்தை தாங்குகிறது. உட்காரும் பொழுதோ, நமது சரீரத்தின் முழுப்பாரத்தையும் நாம் உட்காரும் நாற்காலியோ அல்லது ஆசனமோ தாங்குகிறது. நாம் நிற்கையிலும் நடக்கையிலும் களைப்படைகிறோம். ஆனால் சிறிதுநேரம் உட்காரும்பொழுதோ, ஓய்வுபெறுகிறோம். ஏனெனில், நம்முடைய முழுப் பாரமும் நம் தசைநார்களின்மேலும் நரம்புகளின்மேலும் விழாமல், நமக்கு வெளியேயுள்ள வேறொன்றின்மேல் விழுவதே காரணம். இவ்வாறே ஆவிக்குரிய காரியங்களிலும் உட்காருதல் என்பது ஆண்டவர்மேல் நம்முடைய முழு பாரத்தையும் சுமத்துவதேயாகும். அது எல்லாப் பொறுப்புகளையும் நாம் சுமப்பதை விட்டு ஓய்ந்து, அவரையே சுமக்க விடுதலாகும்.
ஆதிமுதற்கொண்டு தேவனுடைய சட்டம் இதுவே. சிருஷ்டிப்பிலே தேவன் முதல் நாளிலிருந்து, ஆறாம் நாள்வரை வேலைசெய்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். ஏழாம் நாள் தேவனின் ஓய்வுநாள். அது தேவனுக்கு ஓய்வுநாள். ஆனால், ஆதாமின் காரியமென்ன? தேவனின் ஒய்வுக்கடுத்த விஷயத்தில் அவன் நிலை என்ன? ஆதாம் ஆறாம் நாளில் சிருஷ்டிக்கப்பட்டான் என்று எழுதியிருக்கிறது. ஆகையினால் தேவனுடைய ஏழாம் நாள் ஆதாமுக்கு முதல் நாளாகிறது. தேவன் ஆறுநாளும் வேலைசெய்து, பின் ஏழாம் நாளில் ஓய்வை அனுபவிக்க , ஆதாம் தன்னுடைய ஜீவியத்தை ஓய்வுநாளில் துவக்கினான். தேவனுடைய கிரியை முடிவுபெற்றபடியினாலேயே ஆதாம் தன் ஜீவியத்தை ஓய்விலே ஆரம்பிக்கமுடிந்தது. இதுவே சுவிசேஷம். இரட்சிப்பின் கிரியையைத் தேவன் பூர்த்தியாக்கிவிட்டார். அதை நாம் பெறும்படியாக எதையும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. அவர் செய்துமுடித்த கிரியையைப் பூரணமாய் அனுபவிக்கும்படி நாம் உடனே பிரவேசிக்கக்கூடும்.
சிருஷ்டிப்பிலே தேவன் கொண்ட ஓய்வுக்கும், மீட்பின் கிரியைக்குப்பின் தேவன் கொண்ட ஒய்வுக்கும் இடையே எவ்வளவோ நடைபெற்றது என்று நாம் அறிவோம். ஆதாம் செய்த பாவம், அவன் பெற்ற தண்டனை, மோட்சமடையும்படி மனுமக்களின் முடிவுபெறாத பிரயோஜனமற்ற பிரயாசம், இழந்துபோனதை இரட்சிக்குமளவு தேவகுமாரன் பட்டபாடுகள் ஆகிய இவைகள் எல்லாம் இடையில் நடந்தன. மனிதரின் மீட்புக்காக அவர் உழைக்கும்போது, என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்தவராகிறார். நானும் கிரியை செய்து வருகிறேன் என்று அவர் சொன்ன வார்த்தைகள் கடைசியில் மீட்பின் கிரியை பூர்த்தியானவுடனே முடிந்தது என்ற ஜெயதொனியாக மாறினதே.
வெற்றியுள்ள இந்த அறைகூவலே மேற்கண்ட ஒப்பனை உண்மையென்று விளக்குகிறது. தேவன் கிறிஸ்துவில் எல்லாவற்றையும் செய்து முடித்தார் என்பதும், நாம் அதை அனுபவிக்கும்படி விசுவாசத்தின்மூலமாய்ப் பிரவேசிக்கிறோம் என்பதுமே கிறிஸ்தவத்தின் உண்மையான அர்த்தம். ஆகையால் இச்சந்தர்ப்பத்திற்கேற்றபடி, நாம் பிரதானமாகக் கொண்ட வார்த்தை உட்காரு என்ற கட்டளையாயிராமல், கிறிஸ்துவில் வீற்றிருக்கிறவர்கள் ஆக நம்மைக் காணுதலே ஆகும். தேவன் தமது பலத்த சத்துவத்தின்படியே, கிறிஸ்துவை உட்காரும்படி செய்தார் என்றதும் கிருபையினாலே நம்மை அவரோடே உட்காரவும் செய்தார் என்றதுமான இந்த இரண்டு சத்தியங்களில் அடங்கியுள்ள எல்லாவற்றையும் அறியும்படிக்கு நமக்குப் பிரகாசமான மனக்கண்களைத் தந்தருளவேண்டுமென்று பவுல் வேண்டிக்கொள்கிறார் (1:19). இந்தக் கிரியை நம் மூலமாயுண்டாயிராமல், அவருடையதாகவே இருக்கிறதென்பதே, நாம் கற்றுக்கொள்ளவேண்டிய முதல் பாடம். கிரியா பிரமாணத்திலல்ல, தேவனே எல்லாவற்றையும் நமக்காகச் செய்து முடித்தார் என்பதை நாம் கண்டறிகிறதினாலேயே நாம் கிறிஸ்தவ ஜீவியத்தை துவக்குகிறோம்.
நம்முடைய கிரியையின் பிரமாணத்தினாலல்ல, வேறொருவர் செய்து முடித்த பூர்த்தியான வேலையிலிருந்தே கிறிஸ்தவ அனுபவம் ஆரம்பிக்கிறதுபோலவே, கிறிஸ்தவ ஜீவியமும் இந்தத் தத்துவத்தை ஒட்டியே தொடரவேண்டியதாகவும் இருக்கிறது. தேவன் செய்து முடித்ததை நாம் விசுவாசத்தினால் பற்றிக்கொள்வதினாலேயே ஆவிக்குரிய ஒவ்வொரு புதிய அனுபவமும் ஆரம்பிக்கிறது. ஆரம்ப முதல் முடிவு பரியந்தம் கிறிஸ்தவ ஜீவியத்தின் ஒவ்வொரு படியும் இந்தச் சத்தியத்திலிருந்தே பிறக்கிறது.
ஊழியத்திற்காக ஆவியின் வல்லமையை நான் எவ்விதமாய்ப் பெற்றுக்கொள்ள முடியும்? அதற்காக நான் உழைக்கவேண்டுமா? தேவனோடு அதற்காக போராடவேண்டுமா? உபவாசங்களினாலும் சுய வெறுப்புகளினாலும், என் ஆத்துமாவை வருத்தி, தகுதியுள்ளவனாக என்னைக் காண்பிக்க வேண்டுமா? வேண்டியதே இல்லை. வேதாகமத்தின் போதனை அப்படியல்ல. மறுபடியும் சிந்தித்துப் பாருங்கள். பாவமன்னிப்பை நாம் எவ்வண்ணமாகப் பெற்றோம்? அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியேயும் பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் படியுமே என்று எபேசியர் 1:5-7 ல் எழுதியிருக்கிறது. பாவமன்னிப்புக்காக நம்மைத் தகுதியாக்கிக் கொள்ளும்படி நாம் செய்தது ஒன்றுமில்லை. நம்முடைய மீட்பைக் கிறிஸ்துவுக்குள் அவருடைய இரத்தத்தின்மூலமாய் பெற்றோம். அவர் செய்து முடித்தவைகளின் காரணமாய் நாம் அதைப் பெற்றோம். இதுவே நம்முடைய இரட்சிப்பின் சுவிசேஷம் (1:13).
அப்படியானால் பரிசுத்த ஆவி பொழிந்தருளப்படுவதற்கான வேத ஆதாரம் என்ன? அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயர்த்தப்படுவதினாலேயாம். ஆண்டவராகிய இயேசு எனக்காக சிலுவையில் மரித்தபடியினாலே நான் பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்ளுகிறேன். அவரே சிங்காசன மட்டும் உயர்த்தப்பட்டபடியினாலே ஆவியின் வல்லமையைப் பெற்றுக்கொள்கிறேன் (அப்.2:33 பார்க்கவும்). ஆண்டவராகிய இயேசு மகிமைப்பட்டதின் காரணமாய் பரிசுத்த ஆவி அருளப்பட்டபடியினாலே, இந்த ஈவு என்னுடைய எந்தத் தகுதியையும், கிரியையும் சார்ந்ததல்ல. ஏதோ ஒன்றைச் செய்கிறதினால், பரிசுத்த ஆவியைப் பெறுகிறதில்லை. நான் நடப்பதினால் அல்ல, உட்காருகிறதினாலேயே எல்லாவற்றையும் பெற்றுக்கொள்கிறேன். அதாவது, ஆண்டவரில் தரித்திருக்கிறதினாலேயே பெற்றுக்கொள்கிறேன். இரட்சிப்பின் முதல் அனுபவத்திற்குக் காத்திருத்தல் எவ்விதம் தேவையற்றதோ அவ்விதமே பரிசுத்த ஆவியின் பொழிவுக்கும் காத்திருத்தல் அவசியமற்றதாகிறது. இந்த ஈவுக்காக நீங்கள் தேவனிடத்தில் மன்றாடவோ, வேதனைப்படவோ, காத்திருப்புக் கூட்டங்கள் வைக்கவோ வேண்டிய தேவை இல்லை என்று நான் உங்களுக்கு உறுதிகூறுகிறேன். உன்னுடைய பிரயாசங்களினாலும், கிரியைகளினாலுமல்ல, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மகிமைக்குள்ளானதினிமித்தமே நீ பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறாய். நீங்கள் விசுவாசிகளானபோது வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள் (1:13). இதுவும் இரட்சிப்பின் சுவிசேஷத்தில் அடங்கினதே.
பாவமன்னிப்பைக் குறித்தும், பரிசுத்த ஆவியின் ஈவைக் குறித்தும் நாம் கூறினவைகள் உண்மையானால், முற்றும் பரிசுத்தமாகுதலைக் குறித்த காரியம் என்ன? பாவத்தின் வல்லமையினின்று நாம் விடுதலையாகுதலை அறிவதெப்படி? நமது பழைய மனிதன் அறையப்பட்டவிதம் எப்படி? இதன் இரகசியமும் நடப்பதில் அல்ல, உட்காருதலிலேயே உள்ளது. ஏதோ ஒரு காரியத்தைச் செய்கிறதிலல்ல, முடிவு பெற்ற ஒன்றில் தரித்திருத்தலிலேயே உள்ளது. பாவத்திற்கு மரித்த நாம் அவருடைய மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றோம். கிறிஸ்துவுடனேகூட அடக்கம் பண்ணப்பட்டோம். தேவன் நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார் (ரோ.6:2-4, எபேசி.2:5). இந்த வினைச் சொற்களெல்லாம் இறந்த காலத்தில் உள்ளன. அது ஏன்? ஏனெனில், ஆண்டவராகிய இயேசு, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எருசலேமுக்குப் புறம்பே சிலுவையிலறையப்பட்டார். அவருடனேகூட நானும் சிலுவையிலறையப்பட்டேன். இது சரித்திரபூர்வமான ஒரு நிகழ்ச்சி. இதனாலேயே அவருடைய அனுபவங்கள் என் ஆவிக்குரிய சரித்திரமாகிறது. அவருக்குள் நான் எல்லாவற்றையும் உடையவனாக தேவன் என்னைக் குறித்துப் பேசக்கூடும். நான் இப்பொழுது பெற்றிருக்கிறவைகளெல்லாவற்றையும் கிறிஸ்துவுக்குள் பெற்றேன். வேதவாக்கியங்கள் இவைகளுக்கடுத்த காரியங்களை நிகழ்காலத்தில ஆசீக்கத்தக்கவைகளாகவோ, அல்லது வருங்காலத்தில் பெறக்கூடியவைகளாகவோ பேசவில்லை. விசுவாசிக்கிற நாம் அனைவரும் பெற்று அனுபவிக்கிற கிறிஸ்துவுக்குரிய சரித்திரபூர்வமான உண்மைகளே இவைகள்.
நான் கிறிஸ்துவுக்குள் அறையப்பட்டேன், உயிர்ப்பிக்கப்பட்டேன், எழுப்பப்பட்டேன், உன்னதங்களில் உட்கார (இருத்தி) வைக்கப்பட்டேன். யோவான் 3:3ல் உள்ள இயேசுவின் வார்த்தைகள் எவ்வளவு புதிருள்ளவைகளாக விளங்குகின்றனவோ, அவ்வாறே மனுஷீக அறிவுக்கு இச் சத்தியங்களும் விளங்குகின்றன. அதுவோ, மறுபடியும் பிறப்பது எப்படி என்பதைப்பற்றிய காரியம். இதுவோ, அதைவிட அதிகமாக நம்பக்கூடாததாய்க் காணப்படுகிறது. இது மறுபிறப்பைப்போல நமக்குள்ளாக நடைபெறவேண்டிய ஒரு காரியமாக மட்டுமல்லாமல், அநேக நாட்களுக்கு முன்னே மற்றவர் ஒருவருக்குள்ளாக நடந்து நிறைவேற்றப்பட்ட காரியமானதால், நாம் கண்டதும் ஏற்றுக்கொண்டதுமான அனுபவமாக நம்மில் விளங்கவேண்டியதாகவும் இருக்கிறது. இது எப்படி ஆகும்? இதை விளக்கிக்காட்ட இயலாது. தேவன் செய்து முடித்த ஒரு காரியமாக நாம் அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளவேண்டியதே. கிறிஸ்துவுடனேகூட நாம் சிலுவையில் அறையப்பட்டோம் (கலா.2:20). அவரோடு நமக்குள்ள ஐக்கியம் அவருடைய மரணத்தில்தானே ஆரம்பமாகிறது. நம்மை மரணத்தில் அவரோடேகூட இணைத்தார். நாம் அவரில் இருந்தபடியினாலே அவருக்குள் இருக்கிறவர்களாகிறோம்.
ஆனால் கிறிஸ்துவில் இருக்கிறேன் என்ற உறுதியை நான் எப்படி பெற்றுக்கொள்ளுகிறது? அவரில் என்னை வைத்தது தேவனே என்று வேதம் உறுதி கூறுகிறபடியால் நான் நிச்சயமாய் நம்பக்கூடும். நீங்கள் அவராலே (தேவனாலே) கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள் (1.கொரி.1:30). உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி அபிஷேகம்பண்ணினவர் தேவனே (2.கொரி.1:21). இது தேவன் தமது சர்வ ஞானத்தினாலே நடப்பித்து, நிறைவேற்றினதும், நாம் கண்டு, விசுவாசித்துச் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ளவேண்டியதுமான ஒரு காரியமே.
நான் ரூபாய் நோட்டு ஒன்றை ஒரு புத்தகத்திற்குள் வைக்கிறேன். பின்பு அந்தப் புத்தகத்திற்கு நேரிடுகிறவைகளெல்லாம், அதனுள்ள இருக்கும் ரூபாய் நோட்டுக்கும் நேரிடுமல்லவா? புத்தகத்தை நான் எங்கெல்லாம் எடுத்துச்செல்கிறேனோ, அங்கெல்லாம் ரூபாய் நோட்டும் வரும். இவைகளுக்கு நடக்கும் சம்பவங்கள் யாவும் ஒன்றே. தேவன் நம்மை கிறிஸ்துவுக்குள் வைத்ததும் இதைப்போன்றதே. ஆகையால் அவருக்கு நேரிட்டவை எவைகளோ, அவைகளே நமக்கும் நேரிட்டன. அவர் அடைந்த அனுபவங்கள் யாவற்றையும், அவருக்குள் நாமும் அடைந்தாயிற்று. நாம் இனிப் பாவத்துக்கு ஊழியம் செய்யாதபடிக்கு, பாவ சரீரம் ஒழிந்துபோகும் பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம் (ரோ.6:6). இது சரித்திரம். நாம் பிறக்கும்முன்னதாகவே நம்முடைய சரித்திரம் எழுதியாகிவிட்டது. இதை நீ விசுவாசிக்கிறாயா? ஆம்! இது உண்மையே. நாம் கிறிஸ்துவுடனேகூட அறையப்பட்டது ஒரு மகிமையான சரித்திர உண்மை. பாவ சுபாவத்திற்கு அடிமைகளாயிராமல் விடுதலையடைவதென்பது, நாம் செய்யக்கூடிய ஒரு காரியத்தையல்ல, தேவன் நமக்காக முன்னதாகவே கிறிஸ்துவில் செய்து முடித்ததையே பொறுத்திருக்கிறது. இந்த சத்தியம் நமக்கு வெளிச்சமாகி, நாம் நம்மை அதிலே சார்ந்திருக்கும்படி செய்வோமாகில் (ரோ.6:11) பரிசுத்த ஜீவியத்திற்கடுத்த இரகசியத்தை நாம் தெரிந்து கொண்டவர்களாவோம்.
ஆனாலும் அனுபவலாயிலாக இதைக் குறித்து மிகக் குறைவாகவே நாம் அறிந்திருக்கிறோம் என்பது உண்மையே. ஓர் உதாரணம் எடுத்துக்கொள்ளுவோம். உங்கள் முன்னிலையில் ஒருவன் உங்களைக் குறித்துத் தீமையாக பேசினால், அதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்? உங்கள் உதடுகளைப் பிதுக்கி பற்களைக் கடித்து, விழுங்கக்கூடாமல் விழுங்கி, மிகுந்த பிரயாசத்தைக் கையாளுவீர்கள். இப்படிப்பட்ட முயற்சிகளினாலே உங்கள் உணர்ச்சிகள் வெளியாகதபடி அடக்குவதிலும் தீதாகப் பேசினவருக்குமுன் மரியாதையாக நடந்துகொள்ளுவதிலும் சித்திபெறுவீர்களாகில், நீங்கள் பெரிய வெற்றியைக் கண்டுவிட்டதாக எண்ணுகிறீர்கள். ஆயினும் உள்ளக்கொதிப்பு இருதயத்தில் இல்லாமலில்லை. அது வெளிக்கு மூடப்பட்டிருந்தது. சில சமயங்களில் இவ்வாறாக மூடி வைப்பதிலும் வெற்றி பெறுகிறதில்லை. ஏன்? காரியம் என்னவெனில் நீ உட்காரும் முன்னதாக நடக்க முயல்கிறாய். அது தோல்விக்கு நிச்சயமான வழி. நான் இதை திரும்பவும் சொல்லுகிறேன். கிறிஸ்தவ அனுபவங்கள் ஒன்றும் நடப்பதில் ஆரம்பிக்கிறதில்லை. உட்கார்ந்து அமருகிறதினாலேயே அவை எப்பொழுதும் துவங்குகின்றன. எவையேனும் செய்தாகவேண்டும் என்பதிலல்ல. தேவன் செய்து முடித்தவைகளில் தரித்திருப்பதிலேயே, பாவ சுபாவங்களிலிருந்து விடுதலையாவதின் இரகசியம் உள்ளது.
மேற்கு தேசத்தின் பெரிய பட்டணம் ஒன்றில் வசித்து வந்த ஒரு பொறியில் இயக்குனர் உத்தியோகக் காரணமாய்க் கீழ் நாடுகளுக்குச் செல்லவேண்டியிருந்தது. அவர் பிரிந்திருந்த இரண்டு மூன்று ஆண்டுகளில், அவருடைய மனைவி உண்மையற்றவளாகி அவர் சிநேகிதர் ஒருவருடன் ஓடிவிட்டாள். அவர் தன் தாய் நாட்டுக்குத் திரும்பியபோது மனைவி மக்களின் உறவையும் தன் நெருங்கிய நண்பனுடைய சிநேகத்தையும் இழந்ததைக் கண்டார். நான் நடத்திக் கொண்டிருந்த ஒரு கூட்டம் முடிந்தபிறகு, துயரமிகுந்த இந்த மனிதர் தன் இருயத்தை என்னிடம் திறந்து இரண்டு ஆண்டுகளாக இரவும் பகலும் என் உள்ளம் பகையினால் நிறைந்திருக்கிறது என்று கூறினார். நான் ஒரு கிறிஸ்தவன். என் மனைவியையும் என் சிநேகிதனையும் மன்னிக்கவேண்டுமென்று எனக்குத் தெரியும். பலமுறை நான் முயன்றும் இது என்னால் இயலாததாக இருக்கிறது. தினந்தோறும் அவர்களை நேசிக்கும்படி தீர்மானிக்கிறேன். ஆனால் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதென்பதோ முடிகிறதில்லை. இதைக் குறித்து நான் என்ன செய்யக்கூடும்? என்று கேட்டார். நீர் ஒன்றுமே செய்யவேண்டியதில்லை என்று நான் பதிலளித்தேன். மிகவும் மலைத்தவராக, நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? நான் அவர்களைத் தொடர்ந்து பகைக்கவேண்டுமா? என்று கேட்டார். நான் விவரமாக, கர்த்தராகிய இயேசு சிலுவையில் மரித்தபொழுது, உம்முடைய பாவங்களை மாத்திரமல்ல உம்மையுங்கூட சுமந்து தீர்த்தார் என்ற சத்தியத்தில் உங்களுடைய பிரச்சனைக்குப் பதில் இருக்கிறது. தேவன் தம்முடைய குமாரனைச் சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். உங்களுடைய பழைய மனிதனையும் அவரோடு சிலுவையில் அறைந்து தீர்த்தார். அதினாலே உங்களிலிருக்கும் அந்த நீ மன்னிக்க இயலாத நீ – தனக்குத் தீது செய்தவர்களை நேசித்து அரவணைக்கமுடியாத நீ – அறையப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டாயிற்று. தேவன் சிக்கலான சூழ்நிலை அனைத்தையும் சிலுவையிலே தீர்த்துவிட்டார். ஆகையால், நீர் செய்யத்தக்க எந்தக் காரியமும் விட்டுவைக்கப்படவில்லை. கர்த்தாவே, மன்னிக்க என்னால் முடியவில்லை. இதற்காக நான் இனி ஒன்றும் பிரயாசப்படப்போகிறதுமில்லை. ஆனால், எனக்காக அதை நீரே செய்வீர் என்று உம்மில் நம்பிக்கை வைக்கிறேன். என்னால் மன்னிக்கவும் முடியவில்லை. அன்புகூரவும் இயலவில்லை. நீரே எனக்காக மன்னிப்பீர் என்றும் அன்புகூருவீர் என்றும் இவைகளை என்னிலேயும் நிறைவேற்றுவீர் என்றும் நம்பி உம்மையே சார்ந்திருக்கிறேன் என்று மட்டும் ஆண்டவரிடம் சொல்லுங்கள் என்றேன்.
அந்த மனிதன் ஆச்சரியமுற்றவனாக இவைகள் எல்லாம் எனக்கு முற்றும் புதிய காரியங்களாயிருக்கின்றன. இதைக் குறித்து நான் செய்யவேண்டியது என்ன? என்றார். பின்பு சிறிது சிந்தித்து, நான் செய்யக்கூடியது ஒன்றும் இல்லையே! என்று கூறினார். அதற்கு நான் நீர் செய்கிறவர்களை எல்லாம் எப்பொழுது நிறுத்துவீர் என்று தேவன் காத்துக்கொண்டிருக்கிறார் என்றேன். உம் பிரயாசங்களை நீர் நிறுத்தும்பொழுது தேவன் தம் கிரியைகளை ஆரம்பிக்கிறார். தண்ணீரில் அமிழ்ந்து போகிற ஒருவனை எப்பொழுதாவது நீங்கள் தூக்கிவிட்டிருக்கிறீர்களா? அதை செய்யத்தக்கதான இரண்டு வழிகள் உண்டு. ஒன்று முழ்கிறவனைப் பிரக்கினை அற்றுப்போகும்படி செய்து, பின்பு அவனைக் கரைக்கு இழுக்கவேண்டும். அல்லது முற்றும் களைத்துப்போகுமளவும் அவனை அவதிப்படவிட்டுத் தன் முயற்சிகளை நிறுத்தி, ஓய்ந்து களைத்துப்போன பின்பு தூக்கிவிடவேண்டும். அவனுக்குப் பெலன் இருக்கும்பொழுது அவனைத் தூக்கமுயன்றால், அவன் தனக்குள்ள பயத்தினால் உம்மையும் சேர்த்து மூழ்கடித்துவிடுவான். அப்பொழுது இருவரும் மரிக்க நேரிடும். தேவன் உம்மை விடுவிக்கும் முன்னதாக நீர் உம்முடைய பெலனத்தனையும் செலவழித்து தீர்த்து விடும்படியாகக் காத்துக்கொண்டிருக்கிறார். நீர் எதையும் செய்துவிட்டு ஓய்ந்த பின்பு அவர் எல்லாவற்றையும் செய்வார். நீர் களைத்து ஓயுமட்டாக, ஆண்டவர் காத்துக்கொண்டிருக்கிறார் என்றேன்.
இதை கேட்ட என் நண்பர் குதித்தெழுந்தார். இப்பொழுது எனக்கு விளங்குகிறது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம், எல்லாம் சரியாயிற்று. நான் செய்யக்கூடியது ஒன்றுமேயில்லை. அவர் எல்லாவற்றையும் செய்துமுடித்தார் என்று சொல்லி பிரகாசமான முகத்துடன் மகிழ்ச்சியுள்ளவறாக திரும்பிச் சென்றார்.
சுவிசேஷங்களில் உள்ள எல்லா உவமைகளிலும் கெட்ட குமாரன் கதையே நாம் தேவனை பிரியப்படுத்தும் முறையைச் சிறந்தவிதமாய் எடுத்துக்காட்டுகிறது. லூக்.15:432ல் நாம் சந்தோஷங்கொண்டாடி மனமகிழ வேண்டுமே என்று அந்தத் தகப்பன் உரைத்த வார்த்தைகள் மூலமாய் மீட்பைப் பொறுத்தமட்டில் பரமபிதாவின் இருதயத்தை மிகுதியும் மகிழ்விக்கிற காரியம் இன்னதென்று இயேசு வெளிப்படுத்துகிறார். தகப்பனுக்காக இடைவிடாமல் உழைக்கிற மூத்த குமாரன் அல்ல, தகப்பனுக்காக ஒன்றும் செய்யாது, தனக்கான எல்லாவற்றையும் தகப்பனையே செய்யும்படி விட்டுவிடுகிற இளைய குமாரனே அவரை மகிழ்விக்கிறவன் ஆவான். எப்பொழுதும் உழைத்துக் கொடுக்கிறவனாகக் காணப்படுகிற மூத்த சகோதரன் அல்ல, எப்பொழுதும் பெற்றுக்கொள்கிறவனாகவே இருக்கிற இளைய சகோதரனே. கெட்ட குமாரன் தன் ஆஸ்திகளைத் தீய வழிகளில் அழித்துப்போட்டுத் தகப்பன் வீடுதிரும்பியபொழுது, ஆஸ்தியைப் பற்றிய கேள்வியோ, தீயசெலவைப் பற்றிய கடிந்துகொள்ளும் சொற்களோ, தகப்பன் வாயிலிருந்து வரவில்லை. அழிக்கப்பட்ட சொத்தைக் குறித்து தகப்பன் வருத்தப்படவுமில்லை. மகன் திரும்பி வந்ததினால், தான் இன்னும் அதிகமாகச் செலவழிக்கச் சந்தர்ப்பம் கிடைத்ததற்காகவே தகப்பன் சந்தோஷப்பட்டான்.
தேவன் மிகுந்த செல்வந்தராயிருக்கிறபடியினால், ஈகைதான் அவருடைய பிரதான மகிழ்ச்சி. அவருடைய பொக்கிஷசாலைகள் மிகுந்து நிறைந்திருக்கிறபடியால், அத்திரட்சிகளை நம்மீது அள்ளித் தூவுவதற்கான சந்தர்ப்பத்தை அவருக்கு நாம் அளிக்காதிருப்பதே அவருக்கு வருத்தத்தைத் தருகிறது. மனந்திரும்பிய குமாரன்மூலமாய், தாம் அடைந்த சந்தோஷத்தின் மிகுதியே உயர்ந்த வஸ்திரம், மோதிரம், பாதரட்சைகள், பெரிய விருந்து ஆகியவற்றை வைக்கும்படி ஏவிற்று. மூத்த குமாரன் மூலமாய் தாம் கொண்ட வருத்தம் இத்தகைய ஏவுதலுக்கு வழியில்லையே என்பது. தேவனுக்குப் பணம் கொடுக்கும்படி நாம் முயல்வது அவருக்கு வருத்தத்தை விளைவிக்கிறது. மிகுந்த செல்வந்தராய் உள்ளார் நம் தேவன். திரும்ப திரும்ப அவர் நமக்கு வழங்கும்படி நாம் இடம் கொடுப்பதே அவருக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருகிறது. மிகுந்த செல்வந்தராய் உள்ளார் நம் தேவன். திரும்பத் திரும்ப நமக்கு வழங்கும்படி நாம் இடம் கொடுப்பதே அவருக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருகிறது. அவருக்காகக் காரியங்களைச் செய்ய முற்படுவதோ அவருக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. ஏனெனில் அவர் மிகுதியும் வல்லவராய் இருக்கிறார். தேவன் தமது கிரியையை இடைவிடாது மென்மேலும் செய்ய நாம் வழிவகுத்துவிடுவதையே அவர் பெரிதும் ஆசிக்கிறார். நித்திய கொடையாளியாகவும் நிலையான கிரியை செய்கிறவராகவுமே இருக்க விரும்புகிறார் தேவன். அவர் எவ்வளவு பெரிய ஐசுவரிய சம்பன்னரென்றும், எத்தனை மகத்துவ வல்லமையுள்ளவரென்றுமட்டும் நாம் கண்டு கொள்வோமானால் எல்லாச் செயல்களையும் ஈகைகளையும் அவருக்கே விட்டுவிடுவோம்.
தேவனைத் திருப்திசெய்யும் முயற்சிகளினின்று நீ ஓய்ந்திருந்தாயானால், உன் நல்நடத்தையும் நின்றுவிடும் என்று நினைக்கிறாயா? தேவனுக்கான உன் வேலைகளையும் உன் ஈகைகளையும் நிறுத்திவிடுவாயானால், அவைகளைச் செய்வதினால் உண்டாகும் நன்மையைவிடக் குறைந்த நன்மையே உண்டாகும் என்று எண்ணுகிறாயா? நம்மாலே காரியங்கள் சாதிக்கப்பட வேண்டும் என்று நாம் முயலும்பொழுதுதான் மறுபடியும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழாக நம்மைக் கொண்டுவருகிறோம். ஆனால் நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் அதாவது நம்முடைய நல்ல செய்கைகள் தேவன் வெறுக்கும் செத்த கிரியைகள்தான். இந்த உவமையில் மூத்த குமாரனும், மனந்திரும்பிய குமாரனுமாகிய இருவரும் தகப்பன்வீட்டு மகிழ்ச்சிக்குத் தூரமானவர்களாகவே இருந்தனர். மூத்த சகோதரன் தகப்பன் வீட்டிலிருந்தபோதிலும் தூரதேசத்தில் தரித்திருக்கிற நிலையிலேயே இருந்தான். அவன் தன் தகப்பனுக்குக் காட்டின நியாயங்கள் மனந்திரும்பிய குமாரனுடையதைப்போல நடைமுறைக்கு ஒவ்வாததாக இருந்தது. ஏனெனில், அவன் தன்னுடைய சொந்த நற்கிரியைகளை விட்டுவிட மறுத்துவிட்டான்.
கொடுப்பதை நீ நிறுத்து. தேவன் எவ்வளவு பெரிய கொடைவள்ளல் என்பதை அறிந்துகொள்வாய். நீ உன் கிரியைகளை நிறுத்து. தேவன் எவ்வளவு பெரிய கிரியை செய்கிறவர் என்பதை காண்பாய். இளையகுமாரன் முற்றும் தவறினவனாயினும், அவன் வீடு திரும்பி இளைப்பாறுதலைக் கண்டடைந்தான். இங்கேயே கிறிஸ்தவ ஜீவியம் துவங்குகிறது. தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே….. கிறிஸ்து இயேசுவுக்குள்……. உன்னதங்களிலே அவரோடகூட (நம்மை) உட்காரவும் செய்தார் (எபேசி.2:4,7). நாம் சந்தோஷம் கொண்டாடி மனமகிழ வேண்டுமே.












