நில்
கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்…… ஆகையால், தீங்கு நாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள்…… கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும்…… மார்க்கவசத்தை தரித்தவர்களாயும்….. பாதரட்சையைக் கால்களில் தொடுத்தவர்களாயும் நில்லுங்கள்…… தலைச்சீராவையும்…. பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்….. ஜெபம் பண்ணி….. விழித்துக்கொண்டிருங்கள் (எபேசி.6:10,11,13-18).
கிறிஸ்தவ அனுபவம் உட்காருவதில் ஆரம்பித்து, நடப்பதிலே தொடருகிறது. ஆனால் நடப்பதில் முற்றுப்பெறுவதில்லை. கிறிஸ்தவன் ஒவ்வொருவனும் நிற்பதற்கும் கற்றுக் கொள்ளவேண்டும். நாம் எல்லாரும் எதிர்த்துப் போராடவும் ஆயத்தமாயிருக்கவேண்டும். நாம் உன்னதங்களில் கிறிஸ்துவுடனேகூட உட்காரவும் அவருடைய தகுதிக்கேற்றபடி இந்த உலகில் நடக்கவும் அறிந்திருக்கிறதுமட்டுமல்லாமல், எதிரியோடு எதிர்த்துநிற்கவும் தெரிந்திருக்கவேண்டும். இந்தப் போராட்டத்துக்கடுத்த காரியங்களைப்பற்றி, இப்பொழுது நாம் பார்க்கப்போகும் மூன்றாம் பகுதியிலே (6:10-20) சொல்லியிருக்கிறது. அதையே பவுலும் பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு நமக்குப் போராட்டம் உண்டு என்று கூறுகிறார்.
முதலில் இவைகளை எபேசியர் நிருபம் நமக்குமுன் வைக்கும் கிரமத்தை முறைபடியும் ஞாபகப்படுத்திக்கொள்ளுவோமாக. அதாவது உட்காரு, நட, நில் என்பதே. ஏனெனில் கிறிஸ்துவிலும் அவர் செய்து முடித்திருக்கிறவைகளிலும் முற்றுமாய் சார்ந்து, பின் உள்ளான மனிதனில் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நிறைந்திருந்து, இவ்வுலகில் அனுபவபூர்வமான பரிசுத்த ஜீவியத்தை நடத்தி அவரைப் பின்தொடராத கிறிஸ்தவன் எவனும் இந்தப் போராட்டத்திற்குள் பிரவேசிக்கும்படி நினைப்பது முடியாத காரியமே. இவைகள் ஏதாவதொன்றில் அவன் குறைவுள்ளவனாக இருந்தால், அவன் போராட்டத்தில் ஒரு பொருளெனக் கருதப்படான். சாத்தான் அவனைச் சட்டை செய்யவேண்டியதில்லை.
ஆனால் அவன் கர்த்தரிலும் அவர் சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுவதற்கு கிறிஸ்து உன்னதங்களிலே உயர்த்தப்பட்டதின் மேன்மையையும், பிறகு அவர் நம்மில் வாசம்பண்ணும் இரகசியத்தையும் அறிந்துகொள்ளவேண்டும் (6:10 வசனத்துடன் 1:19யும் 3:16யும் ஒப்பிடுக). இந்த இரண்டு சத்தியங்களைப் பூரணமாகவும் தெளிவாகவும் கற்றறிந்த பிறகே நில் என்ற பதத்தில் அடங்கியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் மூன்றாம்படியை அவன் தெரிந்துகொள்ள ஏதுவாகும்.
தன்னுடைய ஆளுகைக்குள்ளடங்கிய எண்ணற்ற பிசாசுகளையும், வீழ்ந்துபோன தூதர்களையும் உடைய பிரதான விரோதி தேவனுக்கு உணடு. இவைகள் உலகத்தை பொல்லாப்பினால் நிறைத்து, அதிலிருந்து தேவனைத் தள்ளும்படி முயற்சிக்கின்றன. 12ம் வசனத்தின் பொருள் இதுவே. அது நம்மைச் சுற்றி நடைபெற்று வருகிற காரியங்களின் விமர்சனம். நமக்கு விரோதமாகவும் மாம்சமும் இரத்தமும் எழும்புகிறதை அதாவது இராஜாக்கள், அதிபதிகள், பாவிகள், பொல்லாதவர்களடங்கிய உலக சமுதாயம் எழும்புகிறதை மட்டும் நாம் பார்க்கிறோம். துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப் பிரபஞ்சத்தின் அந்தகாரலோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்கு போராட்டம் உண்டு என்று கூறுகிறார். சுருங்கச் சொன்னால், சாத்தானுடைய தந்திரங்களுடனே நமக்குப் போராட்டமுண்டு. இரண்டு சிங்காசனஙகள் யுத்தத்தில் இறங்குகின்றன. தேவன் இந்தப் பூமியைத் தம்முடைய ஆளுகைக்குரியதென்கிறார். சாத்தானோ அவருடைய அதிகாரத்தைக் கவிழ்த்துப்போட முற்படுகிறான். இப்பொழுது சாத்தான் தன் வசப்படுத்திய இராஜ்யத்திலிருந்து அவனை அகற்றி, எல்லாவற்றிற்கும் கிறிஸ்துவையே தலையாக்கும்படியாக சபை அழைக்கப்பட்டிருக்கிறது. இதைக் குறித்து நாம் செய்கிறதென்ன?
முதலில், பொதுவாகத் தனி கிறிஸ்தவனின் ஜீவியத்துக்கடுத்த போராட்டங்களைக் குறித்தும், பின்பு குறிப்பாக, நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டிருக்கிற கர்த்தருடைய ஊழியத்திற்கடுத்த போராட்டங்களைக் குறித்தும் பார்ப்போம். தேவனுடைய நியாயங்களை மீறுகிறதினால் நமக்கு உண்டாகும் கஷ்டங்களைப் பிசாசினுடைய தாக்குதல்கள் என்று நாம் சொல்லக்கூடாது. அப்படிப்பட்டவைகளை எப்படிச் சரிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதை இதற்குள்ளாக அறிந்துகொண்டிருக்கவேண்டும். ஆனால் பரிசுத்தவான்களின்மீது மாம்சத்துக்கடுத்த தாக்குதல்களை அவர்கள் சரீரத்திலும் மனதிலும் சாத்தான் கொண்டுவரும் அநேக தாக்குதல்களை நாம் இலேசாக விட்டுவிடுகிறதில்லை. அதோடுகூட, நம்முடைய ஆத்மீக ஜீவியத்தி;ல், விரோதியானவன் கொண்டுவரும் தாக்குதல்களைப்பற்றி நாம் யாவரும் அறிவோமாமே. இவைகளை நாம் எதிர்க்காமலே விட்டுவிடுவோமோ?
நம்முடைய வாழ்க்கை, ஆண்டவரோடுகூட உன்னதங்களிலே இருக்கிறது. இவ்வுலகத்திலும் நாம் அவரோடுகூட நடக்கவேண்டிய விதத்தைக் கற்றுக்கொண்டு வருகிறோம். ஆனால், நமக்கும் தேவனுக்கும் எதிராளியாயிருக்கிறவனுக்கும் முன்பாக நாம் எப்படி இருக்கவேண்டும்? இதற்கு நில் என்பதே கர்த்தருயைட வார்த்தை. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத்திராணியுள்ளவர்களாகும்படி தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக்கொள்ளுங்கள். இந்த வசனத்தில் வரும் நில் என்ற வினைச்சொல்லும் அதனோடு சேர்ந்துவரும் எதிர்த்து என்ற இடைச்சொல்லும், மூலபாஷையாகிய கிரேக்க மொழியில் உன் ஸ்தானத்தில் தரித்திரு என்று பொருள் கொள்ளும்படியாகவேயிருக்கிறது. தேவனுடைய இந்தக் கட்டளையில் ஓர் உன்னத சத்தியம் அடங்கியிருக்கிறது. அதாவது விரோதியானவன் போராடித் தாக்குகிற ஸ்தானம் உண்மையில் தேவனுடையதே. அவருடையதேயானால் அது நம்முடையதுமாகும். அப்படியில்லையென்றால் அதை நம்முடையதாக்கிக் கொள்ளும்படி நாம் போராடி ஜெயிக்கவேண்டியிருக்கும்.
எபேசியர் நிருபத்தில் விவரிக்கப்பட்டுள்ள போராயுதங்கள் எல்லாம் பாதுக்காப்புக்குரியவைகளே. பட்டயமும்கூட பாதுகாப்புக்குரியதாகவும், தாக்குதற்குரியதாகவும், உபயோகிக்கப்படலாம். பாதுகாத்தல், தாக்குதல் என்பவைகளில் வித்தியாசமுண்டு. பாதுகாத்தல் என்பது, நான் வெற்றிபெற்றவன் என்றும், அந்த வெற்றியைக் காத்துக்கொள்ளுவதே நான் செய்யவேண்டியது என்றும் பொருள்படும். ஆனால் தாக்குதல் என்றால், எனக்கு உரிமையானதொன்றும் இல்லாதிருக்க, அதை சொந்தமாக்கிக்கொள்ளும்படி நான் போராடவேண்டும் என்பதைக் குறிக்கும். இவைகளுள்ள பேதமேதான், ஆண்டவராகிய இயேசு இறங்கின போராட்டத்திற்கும், நாம் இறங்குகிற போராட்டத்திற்கும் உள்ள வித்தியாசமாகும். தாக்குதல் அவருடையது. நம்முடையதோ, உண்மையில் பாதுகாத்தலாம். நமதாண்டவர் வெற்றி பெறும்படியாகவே சாத்தானோடு எதிர்த்துப்போராடினார். அவர் ஏற்கெனவே சம்பாதித்து முடித்த அந்த வெற்றியில் நிலைகொண்டிருக்கவும், அதை உறுதிப்படுத்திக்கொள்ளவுமே, நாம் அவனுடன் போராடுகிறோம். உயிர்த்தெழுதலின் காரணமாய், அந்தகாரலோகாதிபத்தியம் முழுமைக்கும் தம்முடைய குமாரனை தேவன் வெற்றிவேந்தராக்கி, அவர் வென்ற அந்த வெற்றியைத் தேவன் நமக்குத் தந்தருளியிருக்கிறார். அதைப் பெற்றுக்கொள்ளும்படியாக நாம் இனிப் போராடவேண்டியதில்லை. நமக்கு விரோதிகளாய், எதிர்த்து நிற்கிறவர்களுக்கு முன்பாக, அதைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டியது. இப்படியாக நாம் நாம் வெற்றிபெறும் பொருட்டு இன்று போராடுகிறதில்லை. நம் யுத்தமோ, வெற்றியின் காரணமாய் வருகிறதாகும். ஜெயம்கொள்ளும்படி நாம் போராடுகிறதில்லை. கிறிஸ்துவில் எற்கெனவே வெற்றி பெற்றவர்களானபடியினாலே, நாம் அப்படிச் செய்கிறோம்.
வெற்றி பெறும்படி நீ போராட்டத்தில் இறங்குவாயானால், ஆரம்பத்திலேயே நீ தோல்வி அடைந்தாய். உன் வீட்டிலோ அல்லது உன் உத்தியோக ஸ்தலத்திலோ, விரோதியாகிய சாத்தான் உன்னைத் தாக்க முற்படுவதாகக் கொள்ளுவோம். உன்னால் ஒருபோதும் மேற்கொள்ளக்கூடாத சூழ்நிலையை உண்டாக்குகிறான். நீ செய்வது என்ன? நன்றாய்ப் போராடும்படி உன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டு, பின் அப்போராட்டத்தில் வெற்றியைத் தரும்படி ஜெபிக்கும்படியாகவே நீ முதலில் ஏவப்படுகிறாய். நீ இதைச் செய்வாயானால் உனக்குத் தோல்வி நிச்சயம். ஏனெனில் கிறிஸ்துவில் உனக்குள் உன் ஸ்தானத்தை நீ இழந்துவிடுவாய். நீ எடுத்துக்கொண்ட நடவடிக்கையின்மூலமாய் உன் ஸ்தானத்தை எதிராளி வசம் விட்டுக்கொடுத்தாயே! அப்படியானால், நீ செய்யவேண்டியதுதான் என்ன? உன் கண்களை ஏறெடுத்து, ஆண்டவரைப் பார்த்துத் துதிக்கவேண்டியதே, ஆண்டவரே, எதிர்த்துப் போராடக்கூடாத சந்தர்ப்பத்திற்குமுன் நான் கொண்டுவரப்பட்டிருக்கிறேன். உம்முடைய விரோதியாகிய சாத்தான், என்னுடன் வீழச்சியைக் காணும்படியாகவே இதை என் முன் வைத்திருக்கிறான். ஆயினும் நீர் வென்ற வெற்றி எல்லா வெற்றிகளிலும் மேம்பட்டதாயிருப்பதால், நான் உம்மைத் துதிக்கிறேன். உம்முடைய வெற்றி இந்தக் காரியத்திலும் பூரண வெற்றிபெற்றவனாகவே நான் இருக்கிறபடியால் உம்மைத் துதிக்கிறேன்.
நம்மைப் பாவத்தில் வீழ்த்துவது, சாத்தானின் முதல் கருத்தல்ல. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் தம்முடைய வெற்றியுள்ள ஸ்தானத்திலிருந்து நம்மைத் தள்ளிவிடுகிறதினால் நாம் எளிதாய்ப் பாவத்தில் விழும்படி செய்வதே அவனுடைய பிரயாசம். நாம் கிறிஸ்துவுடன் உட்கார்ந்ததானால் உண்டாயிருக்கிற இளைப்பாறுதலையும், ஆவியிலே நடத்தும் ஜீவியத்தையும், நம் சிந்தனையின்மூலமாகவோ அல்லது இருதயத்தின்மூலமாகவோ, நம் புத்தியின்மூலமாகவோ அல்லது உணர்ச்சிகளின்மூலமாகவோ தாக்குவதே அவன் வேலை. ஆனால் அவன் தாக்கும் முறை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தற்காப்பு ஆயுதம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தலைச்சீரா, மார்க்கவசம், கச்சை, பாதரட்சை, இவைகளெல்லாவற்றிற்கும் மேலாக பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாக, விசுவாசமென்னும் கேடகமும் உள்ளது. விசுவாசமானது கிறிஸ்துமேலானவராக உயர்ந்திருக்கிறார் என்றும் விசுவாசமானது நாம் கிருபையினால் இரட்சிக்கப்பட்டோம் என்றும், விசுவாசமானது நாம் தேவனிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவராலே பெற்றோம் என்றும், விசுவாசமானது கிறிஸ்து நம்முடைய இருதயத்தில் அவருடைய ஆவியினாலே வாசமாய் இருக்கிறார் என்றும் கூறியே பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களை எல்லாம் அவித்துப்போடுகிறது (1:20, 2:8, 3:12,17).
வெற்றி கர்த்தருடையதாகையால் அது நம்முடையதும் ஆகும். வெற்றி அடையும்படி முயற்சி செய்யாமல், அதைக் காத்துக்கொள்ளுகிறதில் மட்டும் தரித்திருப்போமானால், விரோதி முற்றிலும் முறியடிக்கப்படுவதைக் காண்போம். விரோதியை நாம் மேற்கொள்ளும்படியான பலத்தை ஆண்டவரிடம் கேளாமலும் அல்லது அவர் மேற்கொள்ளும்படி அவரை நோக்கிப் பாராமலும் முன்னதாகவே அவர் அவனை மேற்கொண்டுவிட்டபடியால் அவர் வெற்றி சிறந்தவராதலால் துதித்தலே நாம் செய்யவேண்டியது. கிறிஸ்துவில் நாம் வைக்கும் விசுவாசமே காரியம்.
இத்துடன் இவைகள் முடிவடைகிறதில்லை. எபேசியர் 6ம் அதிகாரத்தில் தனிப்பட்டவனுடைய போராட்டத்தைக் குறித்து மட்டும் சொல்லப்படவில்லை. கர்த்தருடைய ஊழியத்திற்கடுத்த போராட்டத்தைக் குறித்தும் அதில் எழுதயிருக்கிறது. சுவிசேஷத்தின் மகா இரகசியத்தை அறிவிக்கிறதான இந்த ஊழியத்தைக் குறித்துப் பவுல் 3:1-13ல் விரிவாக எழுதியிருக்கிறார். இதன் பொருட்டே தேவ வசனமாகிய ஆவியின் பட்டயமும், அதனோடே ஜெபம் என்ற ஆயுதமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். எந்தச் சமயத்திலும் வேண்டுதலோடும் விண்ணபத்தோடும் ஆவியினாலே ஜெபம்பணணி அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடு சகல பரிசுத்தவான்களுக்காகவும்பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாதிபதியாகிய நான் அதைப்பற்றி பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக, நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம் பண்ணுங்கள் (7:17-20).
கர்த்தருடைய ஊழியத்தின் சம்பந்தமாய் நமக்குள் இந்தப் போராட்டத்தைக் குறித்து இன்னுமொரு காரியத்தைச் சொல்ல நான் விரும்புகிறேன். ஏனெனில் இதில் நாம் சில இடஞ்சல்களைச் சந்திக்க ஏதுவாகலாம். ஆண்டவராகிய இயேசு எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும் இம்மையில் மாத்திரமல்ல, மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் உயர்ந்திருக்கத்தக்கதாக (1:20) வீற்றிருக்கிறதும், எல்லாம் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒருவகையில் உண்மையே. இப்படிப்பட்ட இந்த முடிவு பெற்ற வெற்றியினிமித்தமாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரிக்க (5:20) வேண்டியவர்களாயிருக்கிறோம். ஆயினும் ஒரு வகையில் பார்ப்போமானால், சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறதை நாம் இன்னும் காணாதிருக்கிறதை ஒத்துக்கொள்ள வேண்டியதாகவே இருக்கிறது. பவுல் கூறும் வண்ணமாகவே, வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளும் இவ்வுலகத்தனங்களுக்குப் பின்னாக மறைந்து நிற்கிற பொல்லாத தீய அதிகாரங்களும், கிறிஸ்துவுக்கே உரியதான ஆளுகைகளை மேற்கொண்டிருக்கிறதை நாம் பார்க்கிறோம். நாம் இதைப் பாதுகாப்புக்கான போராட்டம் என்று சொல்லுகிறது சரியானதா? தப்பான எண்ணமுடையவர்களாய் நாம் இருக்கக்கூடாது. சாத்தானுக்குரியதாக வெளியரங்கமாய்க் காணப்படுகிறவைகளை நம்முடையவைகளாகப் பாவித்து, அதை கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் பிடித்துக்கொண்டிருப்பது எப்பொழுது நியாயமாய்க் காணப்படும்?
இவ்விஷயத்தில் நமக்கு உதவியளிக்கும்படியாக நாம் தேவவசனத்தை எடுத்துக்கொள்ளுவோம். இயேசுவின் நாமத்தில் ஏறெடுக்கும் ஜெபத்தையும் குறித்து வசனம் சொல்லுகிறதென்ன? கீழ்க்கண்ட வேத வசனங்களைப் பார்ப்போம்.
பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ, அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ, அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும், பூமியில் ஒருமனப்பட்டிருந்தால்,…. அது உங்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில் இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்திலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே, அவர்கள் நடுவிலே இருக்கிறேன் (மத்.18:18-20).
பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து, ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் கீழ்ப்படிகிறது என்றார்கள் (லூக்.10:17).
அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றும் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே, பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ, அதை அவர் உங்களுக்குத் தருவார். இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள் (யோ.16:23-24).
நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொன்னான் (அப்.3:6).
பவுல்…. திரும்பிப் பார்த்து, நீ இவனைவிட்டுப் புறம்படும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று, அந்த ஆவியுடனே சொன்னான். அந்நேரமே அது புறப்பட்டுப் போயிற்று (அப்.16:18).
மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து, பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின் பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்…. பொல்லாத ஆவி அவர்களை நோக்கி இயேசுவையும் அறிவேன், பவுலையும் அறிவேன். நீங்கள் யார் என்று சொல்லிற்று (அப்.19:13,15).
முதலாவதாக, அலங்கார வாசலண்டையில் இருந்த சப்பாணியைக் குணமாக்கும் பேதுருவின் செய்கையைக் கவனிப்போம். அவன் முழங்கால்படியிட்டு ஜெபித்துக் கர்த்துருடைய சித்தத்தை முதலவாது கேட்கவில்லை. உடனே எழுந்து நட என்று கட்டளையிட்டான். பிலிப்பி பட்டணத்தில் பவுல் செய்தது இவ்விதமானதே. அவன் கட்டளையிட அந்தப் பொல்லாத ஆவி, அந்நேரமே புறப்பட்டுப்போயிற்று. இது என்ன? தேவன் தமது திவ்விய அதிகாரம் மனிதனிடம் வைத்திருக்கிறார் என்பதற்கு இது ஓர் உதாரணம் என்று நான் சொல்லுவேன். தம்முடைய ஊழியக்காரர்கள் கிறிஸ்துவின் நாமத்தில் செயல்படும்போது, அவர்கள்மூலமாய் கிரியை நடப்பிக்க அவர் தமது வல்லமையை வெளிப்படுத்துகிறார். அவர்கள் தாங்களாகச் செய்கிறது என்ன? அவர்கள் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை என்பது வெளிப்படை. கிறிஸ்துவின் நாமத்தை அவர்கள் உபயோகிக்கிறார்கள். வேறு எந்த நாமத்தையோ, அல்லது தங்களுடைய நாமத்தையோ, மற்ற அப்போஸ்தலருடைய நாமத்தையோ உபயோகிப்பதால் இந்தப் பலனைக் கொடுப்பதில்லை என்பதும் வெளிப்படை. ஆண்டவராகிய இயேசுவின் நாம வல்லமையே இந்த விதமான விளைவுகளை உண்டுபண்ணினது. அந்த நாமத்தை உபயோகிக்கும் அதிகாரம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
எதில் தேவன் தமது அதிகாரத்தை வெளிப்படுத்தாதிருக்கிறாரோ, அது கர்த்தருடைய ஊழியம் என்று அழைக்கும் தகுதியைப் பெறாது. அவருடைய நாமத்தைப் பிரயோகிக்கும்படியான அதிகாரம் பெற்றிருத்தலே காரியம். நாம் எதிர்த்து நின்று, அவர் நாமத்தில் பேசும்படியான திராணியுடையவர்களாயிருக்கவேண்டும். அப்படியில்லையென்றால் நம்முடைய ஊழியத்தின் ஆவியின் அச்சாரம் காணப்படாது. இது அந்த, நேரத்தில் நாம் சாதித்துச் சரிப்படுத்திக்கொள்ளக்கூடிய ஒரு காரியம் அல்ல என்பதை நான் உங்களுக்கு வலியுறுத்தட்டும். இது தேவனுக்குக் கீழ்ப்படிகிறதலுண்டாகும் கனி. நாம் அறிந்தும், அனுபவிக்கிறதுமான நம்முடைய ஆவிக்குரிய நிலையின் பலன். தேவையான நேரத்தில் நாம் உபயோகிக்க ஆயத்தமாயிருக்கும்படி, இது முன்னதாகவே ஆயத்தமாய்ப் பெற்றிருக்கவேண்டியது.
இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன். தேவனுக்கு ஸ்தோத்திரம். பொல்லாத ஆவிகள் குமாரனை அறிந்திருக்கின்றன. இதற்குச் சுவிசேஷங்களில் அநேக சான்றுகள் இருக்கின்றன. சாத்தான் பயந்து நடுங்கும்படியாகக் குமாரனோடு ஒருமைப்பாடுள்ள மற்ற அநேகரும் உண்டு. பாதாளத்தில் அவர்களைக் குறித்து நடுக்கமுண்டு. இவ்வண்ணமாகத் தமது வல்லமையைத் தேவன் உனக்கு ஒப்படைப்பாரா என்பதே கேள்வி. இது முதலில் தீர்மானமாகவேண்டும். அதன் பிறகே, இவர் நாமத்தை நாம் எளிதாக உபயோகிக்க ஏதுவாகும். அப்பொழுதே பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ, அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். அவர் நமக்குத் தமது அதிகாரத்தை ஒப்புக்கொடுத்திருக்கிறதின் நிச்சயமே, நாம் அவருடைய உண்மையான ஸ்தானாதிபதிகளாய் இவ்வுலகில் உலாவக் காரணமாகும். அது நாம் அவரோடு கொண்டிருக்கும் ஐக்கியத்தின் விளைவாகும்.
இவ்விதமாக நாம் செய்யும் வேளைகளில் அவர் தம்மை வெளிப்படுத்தும்படி நாம் ஆண்டவரோடு அப்படிப்பட்ட ஐக்கியமுடையவர்களாக இருக்கிறோமா? தேவனுடைய வாக்குத்ததத்தங்களை மட்டும் நம்பிச் சார்ந்து காரியத்தில் முன்னேறுவது அநேகம் முறை அபாயகரமாய்த் தோன்றுகிறது. காரியம் என்னவெனில் தேவன் நம்மைக் கைவிடாதிருப்பாரா? அவர் தம் சித்தப்படி செய்யும் வேலைக்கு மட்டும் வெளிப்படுத்தவார் அல்லவா? எந்த மாதிரி வேலையில் தேவன் தமது வல்லமையை வெளிப்படுத்துவார் என்றால், பின்வரும் நான்கு இலட்சணங்களையுடைய ஒரு வேலையில்தான்.
அத்தியாவசியமான முதல் தேவை என்னவெனில், தேவனுடைய நித்திய திட்டத்துக்கடுத்த பூரண வெளிப்பாட்டை, தெளிவான தரிசனமாய் இருதயத்தில் பெற்றிருத்தலேயாகும். இத்தகைய வெளிப்பாடில்லாமல் நாம் ஒன்றும் செய்கிறதில்லை. நான் ஒரு கட்டட வேலையில் ஈடுபட்டிருக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுவோம்.
நான் சாதாரணமாக ஒரு தொழிலாளியாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பினும், கட்டுவது ஒரு மாளிகையா, கடையா எதுவென்று நான் அறிந்திருக்க வேண்டுமல்வா? அது கட்டுவதற்கான திட்ட யோசனைகள் இவை இவை என்று நான் அறிந்திராவிட்டால் திறமையாக வேலைசெய்து முடிக்க என்னால் இயலாதே. இன்று சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுவது ஒன்றே கர்த்தருடைய ஊழியம் என்று அநேக கிறிஸ்தவர்களால் கருதப்படுகிறது. ஆனால் சுவிசேஷ பிரபல்யம் சார்பற்ற ஒன்றாக இருக்கிறதற்கில்லை, அது தேவனுடைய முழு திட்டத்தின் ஒரு பாகமாக பிணைக்கப்பட்டிருக்கவேண்டும். ஏனெனில், உண்மையில் அதுவே முடிவான இலக்காக அமையாமல், அந்த முடிவை ஏதுவாக்குகிறதாயிருக்கிறது. தேவகுமாரன் எல்லாவற்றிற்கும் மேலாக முதல்வராகத் திகழ்வதே அந்த முடிவு. தங்களுக்குள்ளே கிறிஸ்துவே முதன்மையாக விளங்குகிற அநேக குமாரர்கள் மந்தைக்குள் கொண்டுவருதலே சுவிசேஷ ஊழியமாம்.
பவுலின் நாட்களில் விசுவாசிகள் எல்லாரும் தேவனுடைய நித்திய திட்டத்தைக் குறித்த பங்குடனே, குறிப்பிட்ட ஒரு சம்பந்தம் கொண்டிருந்தனர் (விசேஷமாக 4:11-16 வரை பார்க்க.). இன்று நம்மிலும் அதுவே உண்மையாயிருக்கவேண்டும். தேவனுடைய கண்கள் வரப்போகிற அவருடைய இராஜ்யத்தை நோக்கினவண்ணமாக இருக்கின்றன. கிறிஸ்தவ சமயம் என்று விளங்கும் இன்றைய கிறிஸ்தவம் கிறிஸ்துவின் சர்வாதிகாரமுள்ள ஏகாதிபத்திய ஆளுகைக்கு வழிவிட்டுக்கொடுத்தாக வேண்டும். ஆயினும், சாலோமோனின் இராஜ்யப் பாரத்திற்கிருந்ததுபோல, இப்பொழுதும் ஆவியின் போராட்டமுள்ள தாவீதின் இராஜ்ய பாரத்திற்கு ஒத்த காலம் முன்னதாக ஒன்று உண்டு. இந்தப் போராட்டத்தில் தம்முடனேகூட உடன் ஊழியக்காரர்களாயிருக்கும்படியான ஆட்களைத் தேவன் இன்று தேடிக்கொண்டிருக்கிறார்.
நம் நோக்கத்தைத் தேவனுடைய நித்திய தீர்மானங்களோடு ஏக இசைவாயிரும்கும்படி விளங்கச்செய்வதே இப்பொழுதுள்ள காரியம். இத்தகைய ஒருமைப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத எந்தக் கிறிஸ்தவ ஊழியமும் அற்பமானதும், சார்பற்றதும், ஒரு முடிவையும் விளைவிக்காததுமாய் இருக்கிறது. நம் இருதயத்தில் பரிசுத்தஆவியினாலே தமது சித்தத்தின் ஆலோசனையின் வெளிப்பாட்டைப் பெற நாம் தேவனைத் தேடவும் (1:19-12 பார்க்க) பின்பு, நாம் எடுத்துக்கொண்ட வேலையைக் குறித்து அதனோடு இது நேரிடையான சம்பந்தமுடையதாக இருக்கிறதா? என்று நம்மையே கேட்டுக்கொள்ளவும் வேண்டியவர்களாயிருக்கிறோம். இவைகளைச் சரியானபடி நாம் தீர்மானித்துக்கொண்டோமானால், அன்றாட வேலைகளில் எதிர்ப்படும் சிறிய காரியங்களுக்கடுத்த தேவவழிநடத்துதல் எளிதில் கிடைக்கும்.
இரண்டாவதாக, தேவதிட்டத்தில் பிரயோஜனமுள்ளதாய் விளங்கும் எல்லா ஊழியமும், தேவனால் உற்பத்தியாகவேண்டும். நாம் ஒரு திட்டத்தை வகுத்து, பின்பு தேவன் அதை ஆசிர்வதிக்கும்படி கேட்போமாகில், அதில் தேவனுடைய நேரடி நடத்துதலை எதிர்பார்ப்பது புத்தியீனம். அப்படிப்பட்டவைகளில் ஆசீர்வாதங்களை எதிர்ப்பினும், அவைகள் நிறைவானதாயிராமல் குறைவானவைகளாகவே இருக்கும். அவைகள் கிறிஸ்துவின் நாமத்தில் நடைபெறுகிறவர்களாயிராது. நம்முடைய நாமங்களே அவைகளில் விளங்கும்.
குமாரன்…. ஒன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார். எத்தனையோ முறை அப்போஸ்தல நடபடிகளில் பரிசுத்த ஆவியானவர் தடை செய்கிறதை நாம் படிக்கிறோம். 16ம் அதிகாரத்தில் பவுலும், அவர்களோடிருந்தவர்களும், ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்தஆவியினாலே தடைபண்ணப்பட்டதாகப் பார்க்கிறோம். மறுபடியும் 7ம் வசனத்தில் ஆவியானவரோ, அவர்களைப் போகவொட்டாதிருந்தார் என்று படிக்கிறோம். ஆகவே, இது பரிசுத்த ஆவியானவருடைய நடபடிகளைப் பற்றிய புத்தகம் என்றாலும், அவர் தடை செய்த நடவடிக்கைகளைக் குறித்தும் வாசிக்கிறோமே! நாம் உள்ளபடி செய்யும் வேலைகளே பெரிய காரியம் என்று அடிக்கடி எண்ணுகிறோம். ஒரு வேலையிலும் ஈடுபடாதிருந்து தேவனுக்கு அமைதியாக காத்திருக்கும் பாடத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. தேவன் ஏவிவிடாதிருப்பாரானால், நாம் வேலையில் ஈடுபடத் துணியாது இருப்பது நல்லது. இதை நாம் கற்றறிந்து கொண்ட பிறகே, அவர் நம்மை, தம் காரியமாய்த் தாராளமாக உலகத்தில் அனுப்ப இயலும்.
ஆகையால், எனக்களிக்கப்பட்டிருக்கும் ஊழியத்தில், தேவனுடைய சித்தம் இன்னதென்று நான் குறிப்பாக அறிய வேண்டும். அந்த அறிவின்மூலமாய் மட்டும் வேலை துவக்கவேண்டும். ஆதியிலே தேவன்…. என்பதே உண்மையான எல்லா கிறிஸ்தவ ஊழியத்திற்கும், அடிப்படைத் தத்துவமாம்.
மூன்றாவதாக, எல்லா ஊழியமும், காரிய சித்தியடைய, அதன் தொடர்ச்சிக்காக, ஒவ்வொரு நிலையியும் தேவவல்லமையிலேயே சார்ந்திருக்கவேண்டும். வல்லமை என்றால் என்ன? நாம் இந்த வார்த்தைகளை அடிக்கடி தவறாக உபயோகிக்கிறோம். ஒருவரைக் குறித்து, அவர் வல்லமையான பேச்சாளர் என்று நாம் சொல்கிறோம். ஆயினும் அவர் எந்த வல்லமையை உபயோகிக்கிறார் என்று நாம் கேட்டுக்கொள்ளவேண்டியவர்களாயிருக்கிறோம். அது, ஆவியின் வல்லமையா அல்லது மனுஷீக வல்லமையா? இக்காலங்களில் மனித வல்லமைக்குத் தேவனுடைய ஊழியங்களில் மிதமிஞ்சிய மேன்மை அளிக்கப்பட்டு வருகிறது. தேவன் ஆரம்பித்த ஊழியமாகவே இருப்பினும், நம் சுயபலத்தில் அதை நடத்தும்படி முயற்சிக்கிறவர்களாயிருப்போமானால், அதில் தேவன் தம்மை இணைத்துக்கொள்ளமாட்டாரென்பத நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
நான் மனித பலம் என்று சொல்லும்போது எதைக் குறிக்கிறது என்று கேட்கிறீர்களா? சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், தேவ உதவியில்லாமல் நாம் செய்யக்கூடியதெல்லாம் மனித பலமாகும். ஒரு சுவிசேஷக்கூட்டத்தையே, அல்லது ஒரு கிறிஸ்தவ வேலையையோ ஒழுங்குபடுத்தும்படி நாம் ஒருவனை ஏற்படுத்துகிறோம். ஏன்? அவன் இயற்கையாகவே அந்தக் காரியத்தில் தேறினவனாக இருப்பதினாலேயே அப்படிச் செய்கிறோம். அவ்வாறாகில் அவன் எவ்வளவு ஊக்கமாக ஜெபம் செய்வான்? தனக்கு இயற்கையாய் அமைந்துள்ள தாலந்துகளில் நம்பிக்கைகொள்ளும் பழக்கமுடையவனாயிருப்பானானால், தேவனை நோக்கி உதவி கேட்கும் அவசியத்தை அவன் உணராதிருப்பானே! நம்மெல்லாருக்கும் இருக்கிற பலவீனம் என்னவெனில், தேவனைச் சாராமல், நாமாகவே செய்து முடிக்கக்கூடிய காரியங்கள் மிகுந்திருப்பதே ஆகும். தேவனையே நாம் தொடர்ந்து சார்ந்திருந்து அவருடைய பிரசன்னத்தை உணர்ந்தாலொழிய பேசத் துணியவும், செய்கையில் இறங்கவும் கூடாத ஒரு நிலைக்கு நாம் கொண்டுவரப்படவேண்டும்.
மோசேயைக் குறித்து, அவன் எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு வாக்கிலும், செய்கையிலும் வல்லவனானான் என்று ஸ்தேவான் கூறுகிறான். ஆயினும் தேவன் அவனைச் சந்தித்துப் பேசின பிறகு ஆண்டவரே, இதற்கு முன்னாவது தேவரீர் உமது அடியானோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல. நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்று அறிக்கையிட வேண்டியதாயிருந்தது. வாக்கில் சாதுரியான ஒரு பிரசங்கி நான் பேசி அறியேன் என்று சொல்லும்படியான நிலைக்கு வருவானேயாகில், அடிப்படையான பாடத்தைக் கற்றுத்தான் தேவனால், வல்லமையாய் உபயோகிக்கப்படக்கூடிய ஸ்திதிக்கு வந்திருக்கிறான் எனலாம். இந்த வெளிப்பாடு குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் ஆரம்பமாகி ஜீவகாலமெல்லாம்தொடர்ந்து நடந்தேறும் உன்னத அனுபவமாக இருக்கும். அடிப்படையாக நாம் நமது சுயபலத்தை நம்பாதபடிக்குத் தேவன் முதலாவது தமது திவ்விய கரம் நம்மேல் வைக்கிறார். அதன் பிறகு அந்த அனுபவம் பெருகி அதன் வியாபகம் நம் ஜீவியத்தில் வளர, வளர நம் சுயம் தலைகாட்டும் காரியங்களை எல்லாம் ஒவ்வொன்றாகச் சிலுவையினடியில் கொண்டுவரவேண்டும். இது கடினமானதும், வேதனையுள்ளதுமான ஒரு பாதையாக இருப்பினும், இதுவே ஜீவியத்திலும் ஊழியத்திலும் மிகுந்த கனிகொடுக்கக்கூடிய தேவனுடைய திட்டமான வழி.
இந்நாட்களில் தேவஊழிய முறைகள் அநேகமாக தேவனைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லாத வகையாக வகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அப்படிப்பட்ட வேலைகளுக்கெல்லாம் என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது என்பதே ஆண்டவருடைய திட்டமான தீர்ப்பு. தேவனில்லாமல் மனிதனாகச் செய்யும் இப்படிப்பட்ட எல்லா வேலைகளும் மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளால் கட்டப்பட்டவை. இவை அக்கினியால் பரிசோதனைக்குட்படும்போது, ஒன்றுமில்லாதவை என்று நிரூபிக்கப்படும். ஏனெனில் தெய்வீக ஊழியம், தெய்வீக வல்லமையாலேயே செய்யமுடியும். அந்தத் தெய்வீக வல்லமை ஆண்டவராகிய இயேசுவிலன்றி வேறெங்கும் காணமுடியாது. சிலுவைக்குப் பின் வரும் உயிர்த்தெழுதலிலே, அவருக்குள் வழிவகை நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது பேச அறியேன் என்று உள்ளத்தின் ஆழத்திலிருந்து மெய்யாய்க் கதறும்படியான நிலைக்கு நாம் வந்த பிறகே, தேவன் பேசுகிறதைக் கண்டுபிடிக்கிறோம். நாம் நம் கிரியைகளைவிட்டு ஓய்ந்து ஒரு முற்றுப்புள்ளியிடும்பொழுதே, கர்த்தர் தம்முடைய கிரியைகளைச் செய்ய ஆரம்பிக்கிறார். பின் ஒருநாளில் சோதிக்கும் அக்கினியும், இன்றைய சிலுவையின் அனுபவமும் ஒரே விளைவையே விளைவிக்கின்றன. இன்றைக்குச் சிலுவைக்குமுன் நிற்கக்கூடாதது, அந்நாளின் அக்கினிச் சோதனைக்கு நில்லாதே. என் சுயபெலத்தில் செய்யப்படும் என் ஊழியமானது மரணத்திற்குள்ளாக்கப்படுமானால், கல்லறையிலிருந்து வெளிப்படக்கூடியது எம்மாத்திரம்? ஒன்றுமே இராது. கிறிஸ்துவுக்குள்ளாக முழுவதும் தேவனாலுண்டானவைகளேயல்லாமல், சிலுவையிலிருந்து மீளக்கூடியது ஒன்றும் இல்லை.
நாம் செய்துமுடிக்க இயலும் எந்தக் காரியத்தையும் செய்யும்படியாகத் தேவன் நம்மைக் கேட்கிறதில்லை. அவர் நம்மில் எதிர்பார்ப்பது, நாம் ஜீவிக்க இயலாத முறைகளில் ஜீவிப்பதும், நாம் செய்ய இயலாத காரியங்களைச் செய்வதும் ஆகும். ஆயினும் அவருடைய கிருபையால் அந்தப்படியே ஜீவிக்கிறோம். அந்தப்படியே செய்கிறோம். நாம் ஜீவிக்கும் ஜீவியம், தேவவல்லமையிலே ஜீவிக்கும் கிறிஸ்துவின் ஜீவியம். நாம் செய்யும் ஊழியம், நாம் கீழ்ப்படிகிற பரிசுத்த ஆவியானவரால் நம்மூலமாக நடந்தேறும் கிறிஸ்துவினுடைய கிரியைகளே. இப்படிப்பட்ட ஜீவியத்திற்கும் ஊழியத்திற்கும் தடையாக உள்ளது நான் என்பதே. (தன்னலமே) நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரே, என்னில் கிரியை நடப்பியும் என்று இருதய ஆழத்திலிருந்து எழும் ஜெபத்தை ஏறெடுப்போமாக.
கடைசியாகத் தேவன் தம்மையே ஒப்புவிக்கக்கூடியதான எல்லா ஊழியத்தின் எண்ணமும், கருத்தும் இலக்கும் கர்த்தருடைய மகிமையாகவே இருக்கவேண்டும். அதாவது இப்படிப்பட்ட ஊழியத்தின் விளைவாக நாம் முடிவில் ஒன்றையும் பெறுகிறதில்லை. நாம் இத்தகைய ஊழியத்தின்மூலமாய் எவ்வளவுக்கவ்வளவு குறைவாகச் சுயநல உபகாரங்களைப் பெற்றுக்கொள்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அதிகமாய் அது மெய்யான தேவமகிமையைப் பெற்றதாயிருக்கும் என்பதே தெய்வீக சட்டம். தெய்வீக ஊழியத்தில் மனிதன் கனத்தைப் பெறும்படியான இடம் ஒன்றுமேயில்லை. தேவனுக்குப் பிரீதியாக இருக்கும் எந்த ஊழியத்திலும் நிறைந்தோடும் மெய்யான சந்தோஷம் உண்டென்பது உண்மையே. தேவன் கிரியை செய்வதற்கே அத அதிகமாய் இடமளிக்கிறது. ஆயினும், மனிதனல்ல, தேவனே மகிமைப்படுகிறார் என்பதே அந்தச் சந்தோஷம் உண்டாவதின் காரணமாம். சகலமும் தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக (1:5,11,14) அமைந்துள்ளது.
நமக்கும் தேவனுக்கும் முன்பாக இந்தக் காரியங்களையெல்லாம் மெய்யாகச் சரிப்படுத்திக்கொண்டபிறகே, அவர் தம்மை நமக்கு ஒப்புக்கொடுப்பார். அச்சந்தர்ப்பங்களில் அவர் தம்மை தமக்கு ஒப்புக்கொடுத்தாக வேண்டுமென்று நாம் சொல்லவும் இடம் கொடுப்பார் என நினைக்கிறேன். சீனாவில் நாங்கள் செய்த ஊழியங்களில் இதையே கற்றுக்கொண்டோம். இது தேவனால், அவருடைய சித்தத்தின்படி ஆனதோ இல்லையோ என்று சந்தேகிக்க ஏது உண்டான வேலைகள் சம்பந்தமாய் செய்த ஜெபங்களுக்கு, அவர், பதிலளிக்க முற்படவில்லை என்று கண்டோம். ஆனால், முழுவதும் அவராலானவைகளில், ஆச்சரியமான முறைகளில் அவா தம்மை கட்டுப்படுத்திக்கொள்ளுவார். அப்பொழுதுதான், அவருக்கு முற்றும் கீழ்ப்படிந்தவர்களாய் அவர் நாமத்தை உபயோகிக்க, பாதாளமும்கூட நம்முடைய அதிகாரத்திற்கு அடங்கி நடந்தாகவேண்டும். தேவன் ஒரு காரியத்தில் தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்வாரானால், தாமே அதற்குக் கர்த்தர் என்றும், தாமே அதை நடப்பிக்கிறவர் என்றும் நிரூபணமாகும் பொருட்டாக, சர்வ வல்லமையுடன் எழுந்தருளுகிறார்.
முடிவாக, என்னுடைய அனுபவங்களில் ஒன்றை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளட்டும். நாங்கள் ஊழியத்தைத் தொடங்கின சில வருடங்களுக்குப்பின், கடுமையான சோதனைக் காலம் கடந்து செல்ல நேரிட்டது. அந்தநாள் மனமடிவின் நாள்களாகவும், நம்பிக்கையிழந்த நாட்களாயும் இருக்கக் கண்டோம். நாங்கள் எடுத்துக்கொண்ட உறுதியான நிலைமையினிமித்தமாகப் பலவிதமான அவமதிப்புக்கும் தூஷண பேச்சுக்கும் ஆளானோம். இதினிமித்தம் நாங்கள் விலக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டுக் கர்த்தருடைய மெய்யான பிள்ளைகளாலும் தள்ளிவிடப்பட்டோம். எங்களுக்கு விரோதமாகச் சொல்லப்பட்ட காரியங்களைக் குறித்து நாங்கள் எங்களை நல்மனச்சாட்சியுடனே ஆராய்ந்து பார்த்தோம். ஏனெனில் என்னைத்தான் தூஷிப்பதே அவனுக்கு வேலை என்று அசட்டையாகச் சொல்லித் தள்ளிவிட்டுவிடாமல் நமக்கு விரோதமாய்க் கூறப்பட்டவைகளை எடுத்துக்கொண்டு, நம்மை ஆராய்ந்து பார்ப்பது நன்மையை விளைவிக்கும் அல்லவா? ஆயினும், தேவன் எங்களுடனே இருக்கிறார் என்று சொல்லத்தக்க போதுமான காரணங்கள் இருக்கக்கண்டோம். ஏனெனில், விசேஷமாய் மிகுந்த கடினமான அந்த ஆண்டு கடந்துபோகும் முன்னே மெய்யாய் மனந்திரும்பின நூற்றுக்கணக்கான ஆத்துமாக்களை ஆண்டவர் எங்களுக்குக் கொடுத்திருக்கிறார் என்று எங்களால் நிச்சயமாகச்சொல்ல ஏது இருந்தது. ஆண்டின் முடிவிலோ சோதனையின் உச்சநிலையை அடைந்தோம் என்று சொல்லும் வண்ணமாகக் காரியங்கள் நடந்தேறின.
கடந்த சில வருடங்களாகச் புது வருட விடுமுறை நாட்களில் மாகாணம் முழுவதிலும் சிதறியிருக்கிற பற்பல விசுவாசிகளுக்காக ஆண்டுதோறும் பட்டணத்திலே கூட்டங்களை நடத்துவது எங்களுக்கு வழக்கமாக இருந்து வந்தது. அந்தக் கூட்டங்ளை ஒழுங்கு செய்பவர் இந்த வருடம் என்னைக் கூட்டங்களுக்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். எங்களுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியை உண்டுபண்ணியது. இது என்னையும் என் உடன் சகோதரர்களையும் கிறிஸ்துவுக்குள் நாங்கள் உட்கார்ந்திருக்கும் நிலையிலிருந்து புரட்டிப்போடவேண்டுமென்று சாத்தான் செய்த சூழ்ச்சி என்று நான் இப்பொழுது உணருகிறேன். இந்தச் சந்தர்ப்பத்தில் நாங்கள் நடந்து கொள்ளவேண்டிய முறை என்ன என்பதே எங்களுக்கு முன்பாக இருந்த காரியம்.
புது வருடத்திற்கென்று விடும் விடுமுறை பதினைந்து நாட்கள் நீடித்திருக்கும். இவை கூட்டங்களுக்கு மிகவும் வசதியான நாட்களாய் அமைந்திருக்கிறது மட்டுமல்லாமல், சுவிசேஷ பிரபல்யத்திற்கு ஏற்ற காலமாகவும் உள்ளது. கர்த்தருடைய சித்தத்திற்குக் காத்திருந்த எங்களுக்கு இந்த நாட்களைச் சுவிசேஷ பிரசங்கத்திற்குச் செலவிடுவதே அவருடைய விருப்பம் என்று தெளிவாகப்பட்டதால் ஐந்து சகோதரர்களைக் கூட்டிக்கொண்டு கடற்கரையோரத்திலுள்ள ஒரு தீவில் சுவிசேஷ ஊழியத்தில் அந்த நாட்களைச் செலவிடும்படி நான் யோசித்தேன். கடைசி நேரத்தில் வாலிபனான மற்றொரு சகோதரனும் எங்களுடன் சேர்ந்துகொண்டான். அவனை சகோதரன் வியு என்று அழைப்போம். பதினாறு வயதுடையவனான அவன் பள்ளிக்கூடத்திலிருந்து தள்ளப்பட்டவன். ஆனால் இரட்சிக்கப்பட்டுச் சில நாட்களே ஆன அவனிடத்தில் ஒரு பெரிதான மாறுதல் காணப்பட்டது. அவன் எங்களுடனேகூட வருவதற்கு மிகுந்த வாஞ்சையுடையவனாக இருந்ததினால், சிறிது நேரம் யோசித்து பிறகு, அவனையும் அழைத்துப்போகச் சம்மதித்தேன். இப்படி எல்லாருமாக நாங்கள் ஏழுபேர் புறப்பட்டோம்.
அந்தத் தீவு பெரிதாகவே இருந்தது. அங்கேயிருந்த கிராமத்தில் சுமார் ஆறாயிரம் வீடுகள் இருக்கும். என்னுடனே பள்ளியில் படித்த ஒருவர் அந்தக் கிராமப் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்தார். நாங்கள் அங்கே செலவிடப்போகும் அந்தப் பதினைந்து நாட்களும் தங்குவதற்கென்று சிறிய ஓர் இடம் கொடுக்கும்படி முன்னதாகவே அவருக்கு எழுதியிருந்தேன். நாங்கள் அந்த ஊர் வந்து சேர்ந்தபொழுது நன்றாக இருட்டி விட்டது. சுவிசேஷ பிரபல்யத்திற்காக வந்திருக்கிறோம் என்பதை அவர் அறிந்தபொழுது, எங்களுக்கு இடம் கொடுக்க மறுத்துவிட்டார். ஆகையால், வேறு இடம் பார்க்கும் நோக்கத்துடன் கிராமத்தில் சுற்றிக்கொண்டேயிருந்தோம். கடைசியான ஒரு சீனர் எங்கள்மேல் இரக்கங்கொண்டு, தன் வீட்டின் மாடியிலே இடங்கொடுத்து வைக்கோல், பலகை இவைகளில் நாங்கள் சௌகரியமாகப் படுத்துத் தங்கும்படி செய்தார்.
சில தினங்களுக்குள்ளாக, முதலில் அந்தச் சீனரே மனந்திரும்பினார். ஆனாலும் நாங்கள் ஒழுக்கமாய் ஊக்கத்துடனே பாடுபட்டு உழைத்தும், அவ்வூர் மக்கள் மிக மரியாதையுள்ளவர்களாய் இருக்க நாங்கள் கண்டும், அத்தீவில் எங்கள் ஊழியத்தின் பலன் மிகவும் குறைவானதாகவே இருந்தது. இதன் காரணம் என்னவாயிருக்கும் என்று திகைக்கலானோம்.
ஜனவரி 9ம் தேதியன்று பிரசங்கிப்பதற்காக நாங்கள் வெளியே போயிருந்தோம். சகோதரன் வியுவும் மற்றும் சிலரும் கிராமத்தின் ஒரு பாகத்தில் இருந்தார்கள். பிரசங்கத்தின் நடுவே அவன் திடீரென்று சூழ்ந்திருந்த ஜனங்களைப் பார்த்து, ஏன் உங்களில் ஒருவனும் விசுவாசியாமலிருக்கிறீர்கள்? என்று கேட்டான். உடனே கூட்டத்திலிருந்த ஒருவன் எங்களுக்கு மகா இராஜா என்று அர்த்தங்கொள்ளும் டா வங் என்ற ஒரே தேவன் உண்டு. இதுவரை அவர் ஒருபோதும் எங்களை ஏமாற்றினதேயில்லை. அவர் பலமுள்ள தேவன் என்றான்.
நீங்கள் அவரை நம்பலாம் என்று உங்களுக்கு எப்படித் தெரியும் என்று வியு மறுமொழியாககக் கேட்டான்.
நாங்கள் கடந்த 286 வருடங்களாக ஜனவரி மாதத்திலே அவருடைய ஊர்வல திருவிழாவைக் கொண்டாடி வருகிறோம். அதற்கான நாள் சகுனம் பார்த்து முன்னதாகவே குறிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாறுதலில்லாமல் அந்த நாள் மப்பும் மந்தாரமும் அற்று பிரகாசமான நாளாக இருந்து வருகிறது என்று பதில் வந்தது.
இந்த ஆண்டு ஊர்வலத்திற்கு குறிக்கப்பட்டுள்ள நாள் எது?
ஜனவரி 11ம் தேதி காலை 8 மணிக்கு அது குறிக்கப்பட்டிருக்கிறது.
அப்படியானால் வியு உக்கிரத்துடன் 11ம் தேதி கண்டிப்பாக மழை பெய்யும் என்றான்.
உடனடியாக கூட்டத்திலிருந்து கூக்குரல்கள் எழும்பின இது எங்களுக்குப் போதும்! இனி உங்கள் பிரசங்கங்களை நாங்கள் கேட்கவேண்டியதில்லை. 11ம் தேதி மழை பெய்யுமானால் உங்கள் தேவனே தேவன் என்றார்கள்.
இது நடக்கும்போது நான் கிராமத்தின் மற்றொரு பாகத்தில் இருந்தேன். இந்தச் செத்தியைக் கேட்டவுடனே, இது மிகவும் ஆபத்தான ஒரு நிலைமை என்று உணர்ந்தேன். இதற்குள்ளாக, இச்செய்தி காட்டுத் தீயைப்போலப் பரவி இருபது ஆயிரம் மக்களும் இதைப் பற்றித் தெரிந்துகொண்டிருந்தனர். இப்பொழுது நாங்கள் செய்யக்கூடியது என்ன? உடனடியாகப் பிரசங்கங்களை நிறுத்தி ஜெபத்திற்கென்று எங்களை ஒப்புக்கொடுத்தோம். எங்களுக்கு மீறின காரியத்தில் இறங்கியிருப்போமானால் மன்னிக்கும்படியாக ஆண்டவரைக் கேட்டோம். மெய்யாகவே நாங்கள் ஊக்கமுடையவர்களாக இருந்தோம் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. நாங்கள் செய்த காரியம் என்ன? ஒரு பெரிய தப்பிதத்தைச் செய்துவிட்டோமா அல்லது அதிசயம் நடப்பிக்கும்படி தேவனைக் கேட்டகத் துணிவோமா?
நம் ஜெபத்திற்கும் தேவனிடமிருந்த எவ்வளவாக ஆவலுடன் பதில் பார்க்கிறோமோ அவ்வளவாக அவருக்கு முன் தெளிந்த மனச்சாட்சியுடையவர்களாக இருக்க விரும்புவோம். அவருக்கும் நமக்கும் உள்ள ஐக்கியத்தில் எந்தவிதமான சந்தேகமோ தடையான காரியமோ
எதுவும் இல்லாதிருக்கவேண்டும். நாங்கள் தப்பிதமான காரியம் செய்திருப்போமானால் எங்;கள் நிலையை இழந்து போவதைக் குறித்து வருத்தப்பட மாட்டோம். தேவனை நாம் பலவந்தம்பண்ண முடியாதே. ஆனால்
சிந்திதுப் பார்க்கையில் இது இந்தத் தீவின் சவிசேஷ சாட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளியாகவல்லவோ முடியும். டாவங் அல்லவா சதா ஆட்சி செயகிறவனாயிருப்பான்? இந்நிலையில் நாம் விட்டுவிடலாமா?
இப்படி நாங்கள் சிந்திக்கும்வரை மழைக்காக ஜெபிக்கப் பயந்துகொண்டிருந்தோம். பி;ன்பு மின்னல்போல எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே? என்ற வசனம் எனக்கு வந்தது. மிகுந்த தெளிவாக வல்லமையுடனே அது எனக்கு வந்தபடியால், அது தேவனிடத்திலிருந்தே வந்ததென்று நிச்சயித்தேன். நம்பிக்கையுடனே, சகோதரர்களைப் பார்த்து எனக்கு பதில் கிடைத்துவிட்டது. ஆண்டவர் 11ம் தேதி மழையை அனுப்புவார் என்று அறிவித்தேன். எல்லாருமாகச் சேர்ந்து ஆண்டவரைத் துதித்தோம். பின், கிராமவாசிகளுக்கு அறிவிக்கும்படியாக நாங்கள் ஏழு பேரும் ஸ்தோத்திரம் நிறைந்தவர்களாகப் புறப்பட்டோம். சாத்தானுடைய சவாலை ஆண்டவருடைய நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளவும், அப்படி ஏற்றுக்கொண்டதை எல்லாருக்கும் தெரிவிக்கவும், அப்படி ஏற்றுக்கொண்டதை எல்லாருக்கும் தெரிவிக்கவும் நமக்கு முடிந்ததே.
அன்று மாலை எங்களுக்கு இடம் கொடுத்த சீனர் இரண்டு குறிப்பான காரியங்களைச் சொன்னார். ஒன்று, சந்தேகமில்லாமல் டா – வங் வல்லமையுள்ள விக்கிரகம். சாத்தான் அந்தச் சொரூபத்துடனேகூட இருக்கிறான். அதன்மேல் கொண்டுள்ள அவர்களுடைய நம்பிக்கைக்கு ஆதாரமில்லாமலில்லை. அடுத்தது, மனிதர் பிரகாரமாகப் பேசுவோமானால், இந்த முழு கிராமமும் மீன்பிடிப்பவர்கள் வசிக்கும் இடம். இரண்டு மூன்று மாதகாலம் தொடர்ந்து கடலில் செலவிடுபவர்கள். மறுபடியும் 15ம் தேதி, அவர்கள் கடலுக்குத் திரும்புவார்கள். தங்கள் நீண்ட அனுபவத்தின் பயனாய் இரண்டு மூன்று நாட்களுக்குமுன் மழை பெய்யாது என்று பிறரைக்காட்டிலும் அவர்கள் நிச்சயமாய் அறிவிக்கிறார்கள்.
இது எங்களைச் சோர்ந்துபோகும்படி செய்தது. நாங்கள் மாலை ஜெபத்திற்குக் கூட்டிவந்தபொழுது திரும்பவும் மழைபெய்ய வேண்டுமென்று உடனடியாக பெய்ய வேண்டுமென்று ஜெபித்தோம். அப்பொழுதும் எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே? என்பதே மறுபடியும் ஆண்டவரிடமிருந்துவந்த திட்டமும் தெளிவுமான வார்த்தைகள். இந்த யுத்தத்திலே நேரிடையாக நாமே போராடப்போகிறோமா அல்லது கிறிஸ்து கண்ட வெற்றியில் நாம் அமர்ந்து நிலைத்திருக்கப்போகிறோமா? இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, எலிசா செய்ததென்ன? பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தன் ஆண்டவனாகிய எலியா நடத்தின அதிசயம் தன்னுடைய அனுபவத்திலும் நடைபெறவேண்டும் என்று சார்ந்திருந்தான். புதிய ஏற்பாட்டு முறைப்படி சொல்லுவோமானால், முன்பே நடந்து முடிவுபெற்ற கிரியையில் விசுவாசமுடையவனாய், அதில் நிலைத்திருந்தான்.
மறுபடியுமாக எங்கள் பாவங்களை அறிக்கையிட்டோம். ஆண்டவரே, 11ம் தேதி காலை வரை எங்களுக்கு மழைவேண்டாம் என்று கூறினோம். அடுத்த நாள் காலையில் (10ம் தேதி) அருகாமையிலிருந்த வேறொரு தீவுக்கு ஒருநாள் ஊழியத்திற்கென்று சென்றோம். ஆண்டவருடைய மிகுந்த கிருபையால், அந்த நாளின் ஊழியத்தினால் மூன்று குடும்பங்கள் அவரண்டடை திரும்பின. தங்களுடைய விக்கிரகங்களையெல்லாம் எரித்துப் பகிரங்கமாக ஆண்டவரை அறிக்கையிட்டனர். களைப்புற்றவர்களாக நேரம் கழித்துத் திரும்பினும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருந்தோம்.
மறுநாள் காலை 11ம் தேதி நான் விழித்தெழுந்தேன். காலை சூரிய ஒளி ஜன்னல் வழியாக நாங்கள் தங்கியிருந்த மேல் அறையில் வீசிக்கொண்டிருந்தது. இது மழையின் அறிகுறியல்லவே என்று நினைக்கலானேன். மணி ஏழுக்கு மேலாகியிருந்தது. நான் எழுந்து முழங்காற்படியிட்டு ஆண்டவரே, மழையை அனுப்புவீராக என்று ஜெபித்தேன். ஆனாலும் எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே? என்ற கண்டிப்பான வார்த்தைகளே மறுபடியும் என் காதுகளில் தொனித்தன. தேவனுக்கு முன் தாழ்த்தப்பட்டவனாக தேவபிரசன்னத்தில் மாடியைவிட்டு இறங்கினேன். எட்டுப்பேரும் அந்த சீனர் உட்பட உட்கார்ந்தபோது நாங்கள் மௌனமாய் இருந்தோம். வானத்திலெங்கும் ஒரு மேகமும் இல்லை. ஆனால் தேவன் நம்மை இந்தக் காரியத்தில் கட்டுப்படுத்தியிருக்கிறார் என்று மட்டும் அறிவோம். எங்களுக்கு முன் வைக்கப்பட்ட ஆகாரத்திற்காக ஸ்தோத்திரம் செய்யக் குனியும்பொழுது குறித்தநேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். இப்பொழுது மழை பெய்யவேண்டியது, இதை ஆண்டவருடைய நினைவுக்குக் கொண்டுவரலாம் என்றேன். மௌனமாக அப்படியே செய்தோம். இந்தமுறை எங்களுக்கு வந்த பதிலில் கண்டிப்பின் அறிகுறி சிறிதும் கிடையாது.
எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே? நாங்கள் ஆமென் என்று சொல்லி முடிக்கு முன்பாகவே மழைத்தூரல் ஓடுகளின்மேல் விழும் சத்தம் கேட்டது. எங்களுக்குப் பரிமாறப்பட்ட முதல் கோப்பை சாதத்தை சாப்பிட்டுமுடிக்கும்வரை தொடர்ந்து தூறிக்கொண்டேயிருந்தது. அடுத்தபடியாக, இரண்டாவது கோப்பை பரிமாறினபோது, மீண்டும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம் என்றேன். இப்பொழுது கனத்தமழையை அனுப்பும்படியாக ஆண்டவரைக் கேட்டுக்கொண்டோம். இரண்டாவதாக, எங்களுக்குப் பரிமாறப்பட்டதைச் சாப்பிட ஆரம்பிக்கையில் மழை கனத்துக் கொட்டியது. சாப்பிட்டு முடிக்கும்போதோ தெருக்களில் தண்ணீர் பெருகி, வெள்ளம் பெருக்கெடுத்துக்கொண்டிருந்தது. வாசல்படிகளில் மூன்றுபடிகள் நீரில் மூழ்கியிருந்தன. சீக்கிரத்தில் கிராமத்தில் நடந்த சம்பவங்களைக் குறித்து நாங்கள் கேள்விப்பட்டோம். சில துளிகள் விழுவதற்குள்ளாகவே வாலிப மக்களில் சிலர் அவரே தேவன், இனி டா-வங் தேவன் அல்ல. மழையினிமித்தம் டா-வங் வெளியேற முடியாதே என்று வெளிப்படையாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். வேறு சிலர் அப்படியல்ல, அவர் தேவனாயிருக்கிறதிற்கில்லை என்றார்கள். ஆனால், மழையோ கனத்தது. பத்து அல்லது பன்னிரண்டு ஜெகதூரம் வருவதற்குள்ளாக வாகனத்தைச் சுமந்துகொண்டு வந்த மூன்றுபேர் வழுக்கி விழுந்தனர். வாகனம் கீழே விழுந்தது. வாகனத்துடன் டா-வங் சொரூபமும்கூட விழுந்தது. அதன் இடது கையும் கன்னமும் உடைந்து போயிற்று. ஆனாலும், அவர்கள் உறுதியுடையவர்களாக உடைந்தவைகளை அவசரமாகச் சரிசெய்து விக்கிரகத்தை வாகனத்தில் மறுபடியும் ஏற்றினர். தட்டுத்தடுமாறினவனாக இழுத்துக்கொண்டும், தூக்கிக்கொண்டும் பாதி தூரம் வந்தார்கள். ஆனால் திரண்ட வெள்ளம் அவர்களைத் தடுத்துத் தோல்வியுறும்படி செய்தது. கிராம மூப்பர்களில் சிலர் 60 முதல் 80 வயதுள்ள வயோதிபர்கள் தாங்கள் டா-வங்கின்மேல் கொண்ட நம்பிக்கையால் குடையில்லாமல் புறப்பட்டுத் தங்கள் தலையை மூடாத நிலையில் இருந்து மிகவும் நனைந்துகொண்டிருந்தார்கள். இன்னது செய்வதென்று அறியாது திகைத்தனர். ஊர்வலம் நிறுத்தப்பட்டு விக்கிரகம் ஒரு வீட்டிற்குள் கொண்டுபோகப்பட்டது. மறுபடியும் சகுனம் பார்த்தனர். இன்று தப்பான நாள் என்று முடிவு செய்தனர். திருவிழா 14ம் தேதி என்றும், மாலை 6 மணிக்கு ஊhவலம் என்றும் அறிவித்தார்கள்.
இதைக் கேட்டவுடனே, ஆண்டவர் 14ம் தேதியிலும் மழையை அனுப்புவார் என்ற நிச்சயம் எங்கள் இருதயங்களில் உண்டாயிற்று. ஜெபத்திற்காகக் கூடினோம். ஆண்டவரே, 14ம் தேதி மாலை 6 மணிக்கு மழையை அனுப்பும். இடையிலிருக்கும் நான்கு நாட்களும் மழையில்லாமல் இருக்கட்டும் என்று ஜெபித்தோம். அன்று பிற்பகல் மேகங்கள் அகன்று வானம் தெளிவாயிற்று. எல்லாரும் சுவிசேஷத்தை வாஞ்சையுடன் கேட்டனர். இந்த மூன்று நாட்களில் கிராமத்திலும் தீவிலுமிருந்து ஆண்டவர் முப்பதுக்கு மேலான பேர்களை எல்லாரும் மெய்யாய் மனந்திரும்பியவர்களை இரட்சித்தார். 14ம் தேதி வந்தது. மீண்டும் துவக்கத்திலே மேகங்களில்லை, ஆசீர்வாதமான கூட்டங்களை நடத்தினோம். மாலை நேரம் நெருங்கியபோது நாங்கள் எல்லாருமாகக் கூடினோம். குறிப்பிட்ட நேரம் சமீபித்து வந்தவுடனே மறுபடியும் காரியங்களைக் கர்த்தருடைய சந்நிதானத்துக்கு முன் கொண்டுவந்தோம். ஒரு நிமிடமும் பிந்தாமல், முன்போலவே கனத்த மழையும், வெள்ளப் பெருக்குமாகத் தேவ பதிலைப் பெற்றோம்.
அடுத்த நாள் நாங்கள் திரும்பவேண்டிய நாள். இதுவரை நாங்கள் அந்தத் தீவுக்குத் திரும்பிப்போகவேயில்லை. வேறு சில ஊழியர் அந்த தீவுகளில் ஊழியம் செய்யும்படி எங்களிடம் அனுமதி கேட்டார்கள். எந்தப் பிராந்தியமும், பகுதியும் ஒருவருடைய ஆதிக்கத்திற்கு உரிமையானவை அல்லவே. எங்களுக்கோவெனில், அந்த விக்கிரகத்தின்மூலம் சாத்தான் கொண்டிருந்த வல்லமை முறிக்கப்பட்டதென்பதே முக்கிய காரியம். டா-வங் மகா இராஜா, சக்தி வாய்ந்த தெய்வம் அல்ல. இனி அத்தீவில் ஆத்துமாக்களின் இரட்சிப்புத் தொடரும். சாத்தான் தோற்கடிக்கப்பட்டான் என்ற இந்த மாற்றக்கூடாத சத்தியமே இனிவரும் இரட்சிப்பின் கிரியைகளுக்கெல்லாம் ஆதாரம்.
இந்தச் சம்பவம் எங்கள் எல்லாருடைய உள்ளத்திலும் மிக ஆழமாகப் பதிந்தது. தேவன் இந்தக் காரியத்தில் தம்மையே கட்டுப்படுத்தியிருந்தார். தேவனுடைய பரிபூரண சித்தத்திற்குள் அமைவது என்னவென்று நாங்கள் செலவிட்ட அந்த சில நாட்களில் திட்டமாக அறிந்தோம். தேவனுடைய பரிபூரண சித்தத்திற்குள்ளிருப்பது என்பது இனி எங்களுக்கு ஒரு புதுமையான காரியமோ, அல்லது விளங்காத ஒரு காரியமோ அல்ல, அது நாங்கள் அனுபவித்தவைகளையே விவரிக்கக்கூடியது. தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியம் (1:10, 3:11) அதன் ஒரு சிறு பகுதியை நாங்கள் ஒருவாறு காணுமாறு எங்களுக்குத் தேவன் அனுக்கிரகம் பண்ணினார். எங்கள் ஜீவிய காலங்களிலெல்லாம் இந்த நம்பிக்கையுடனே முன்னேறிச் செல்லலாம்.
பல வருடங்கள் கழித்து, சகோதரன் வியுவை நான் சந்தித்தேன். இடையில் எனக்கும், அவனுக்கும் தொடர்பு இல்லாமற்போயிற்று. அந்த நாட்களில் அவன் ஒரு விமான மாலுமியாகியிருந்தான். இன்றும் ஆண்டவரைத் தொடர்ந்து செல்லுகிறாயா? என்று நான் அவனைக் கேட்டபொழுது ஐயா நாம் கடந்து சென்ற அந்த அனுபவங்களுக்குப் பிறகு என்னால் அவரைப் புறக்கணிக்க இயலுமா? என்று உணர்ச்சி மேலிடக் கூறினான்.
நில் என்ற பதத்தின் அர்த்தம் இன்னதென்று இப்பொழுது நீங்கள் அறிகிறீர்களல்லவா? அது நாம் வெற்றி கொள்ளும்படி பிரயாசப்படுவதில்லை. ஆண்டவராகிய இயேசு நமக்காக வென்ற வெற்றியின்மேல் நிற்பதும் அந்த வெற்றியினின்று விலக மறுத்து உறுதிகொண்டு நிற்பதுமே நில் என்பதாம். வெற்றி சிறந்த ஆண்டவராயிருக்கிற கிறிஸ்துவைப் பார்க்கும்படியாக நம் கண்கள் மெய்யாகவே திறக்கப்படுமானால், நம்முடைய துதி தடையில்லாமல் மேலெழும், நம்முடைய இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம் பண்ணி, அவருடைய நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் தேவனை ஸ்தோத்தரிப்போம் (5:19-20). முயற்சி பிரயாசம், இவைகளின் விளைவாக வரும் துதி பாராமாயும் இனிமையற்றதாயும் இருக்கும். ஆனால் ஆண்டவரைச் சார்ந்திருப்பதின் விளைவாக இருதயத்தில் உண்டாகும் சமாதானத்தின் காரணமாய், இயல்லபாக ஊற்றெடுக்கும் துதியோ எப்பொழுதும் தூய்மையும் இன்பமும் கலந்ததாயிருக்கும்.
கிறிஸ்தவ ஜீவியம், கிறஸ்துவுடன் உடகார்ந்து, அவருடன் நடந்து, அவரில் நிற்பதாம். நம் ஆத்மீக ஜீவியத்தை ஆண்டவராகிய இயேசு செய்து முடித்த கிரியையைச் சார்வதினாலேயே துவங்குகிறோம். அதனாலுண்டாகும் இளைப்பாறுதலே இந்த உலகத்தில் தொடர்ந்து தட்டுப்படாமல், நாம் நடப்பதற்கு வேண்டிய பலத்திற்கான ஊற்றாக விளங்குகிறது. பொல்லாத ஆவிகளின் சேனைகளுடன் நமக்குள்ள கடினமான போராட்டத்தின் முடிவிலோ கிறிஸ்துவுடனேகூட நாம் நிற்கிறவர்களாகி, இறுதியில், முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம்.
அவருக்கு…. சதா காலங்களிலும் மகிமையுண்டாவதாக (3:21).










