- முதலாம் பேறு
‘ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்: பரலோகராஜ்யம் அவர்களுடையது” மத் 5:3
இம்மலைப் பிரசங்கமானது எவ்வாறு தொடங்குகிறது என்பதனை நோக்குவதும் மெய்யாகவே ஓர் ஆசீர்வாதமாயிருக்கிறது. கொடியவர்கள் மீதுள்ள சாபங்களை அறிவிக்காமல் கிறிஸ்துவானவர் தம்முடைய மக்கள் மீதுள்ள அரும்பேறுகளை அறிவிக்கும் வாயிலாக இம்மலைப்பிரசங்கத்தைத் தொடங்குகிறார். கிறிஸ்து இயேசுவைப்போன்றே அவருடைய சொற்பொழிவும் இருந்தது. ஆக்கினைத்தீர்ப்பானது அவருக்கு ஓர் அந்நிய காரியமாயிருக்கிறது (ஏசா.28:21-22, யோவான் 1:17 வசனத்தோடு ஒப்புநோக்குக). ‘எளிமையுள்ளவர்கள்- ஆவியில் எளிமையுள்ளவர்கள்- பாக்கியவான்கள்” என்னும் இயேசுவின் வாய்மொழி உலக வழக்கினையும் மீறிய ஒரு விசித்திரமான வாய்மொழியாயிருக்கிறது. ஏழை மக்களைத் தேவனுடைய திருவருட்பேறுடையவர்களாகக் கடந்த காலத்தில் மதித்தவர்கள் எவரேனும் உண்டோ? விசுவாசிகளேயன்றி அவர்களை மதிப்பவர்கள் இன்றும் யாருண்டு? தொடர்ந்து வருகிற கிறிஸ்துவின் போதனைகளுக்கெல்லாம் முகவுரையாகிய இவ்வாய்மொழியே ஒரு மூலச்சொற்றொடாக அமைந்துள்ளது. ஒரு மனிதன் என்ன செய்கிறான் என்பதன்று, அவன் எப்படி இருக்கிறான் என்பதே அதிமுக்கியமானது.
‘ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்” ஆவியின் எளிமை என்றால் என்ன? உலகமானது வெகுவாய்ப் புகழ்ந்து பாராட்டுகிற மேட்டிமையும் தன்கொள்கையை நிலைநாட்டுவதுடன் மட்டற்ற தன்னிறைவும் நம்பிக்கையுமுடைய மனப்பான்மைக்கு எதிரிடையாயிருப்பதுவே ஆவியின் எளிமையாகும். தேவனுக்கு தலைவணங்க மறுக்கிற சுயாதீனத்துடன் கூடிய எதிர்ப்பு மனப்பான்மைக்கு இது முற்றிலும் மறுதலையானது. இவ்விதமான எதிர்ப்பு மனப்பான்மையானது துணிகரங்கொள்வதுடன் பார்வோனோடு சேர்ந்துகொண்டு, ‘கர்த்தருடைய வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? (யாத் 5:2)” என்று சொல்லுகிறது. நான் ஒன்றுமில்லை. என்னுடையது ஒன்றுமில்லை. என்லால் ஆவதும் ஒன்றுமில்லை. என்றுணர்கிற உணர்வு நிலையே ஆவியில் எளிமையுடைமையாகும். தன்னுடைய முழுமையான உதவியற்ற நிலைமயை அறிக்கைபண்ணும் வாயிலாக ஒரு மனிதன் தேவனுடைய சந்நிதியில் புழுதிமட்டும் தாழ்த்துகிற நிலைக்கு வரும்பொழுது ஆவியின் எளிமை தெற்றென விளங்கும். ஓர் ஆத்துமாவிற்குள் நடைபெறுகிற கிருபையின் தெய்வீகமான கிரியையின் முதலாவது அனுபவ அடையாளம் இதுவே. தூரதேசத்தில் குறைபடத்தொடங்கினபோது கெட்டகுமாரனுக்கு நேரிட்ட விழிப்புணர்வு (லூக்கா 15:14) இதற்கு ஒப்பனையாயிருக்கிறது.










