கடவுளை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. அவர் ஒருவராலும் காணக்கூடாதவர் என்று திருமறை சொன்னபோதிலும் கடவுளை மனிதர் அறியக்கூடும். அறிந்து கொள்ளவேண்டியதே அவனுடைய தலையாயக் கடன் என்று சொல்லுகிறது. கடவுளை அறிவது என்பது ஒன்று. அவரைப்பற்றி அறிந்திருப்பது என்பது வெறொன்று. உதாரணமாக நம் நாட்டுப் பிரதமரைப் பற்றி நான் செய்திகளின் மூலம் அறிந்திருக்கலாம். நேராகப் பார்த்துமிருக்கலாம். அனால் அது அவரை அறிந்ததாகாது. அவருடைய நட்புறவு கொண்டு அளவளாவி இருக்கும்போதுமட்டும், எனக்கு அவரைத் தெரியும் என்று ஒருவன் சொல்லக்கூடும். அவ்வண்ணமாகவே பலர் இறைவனைப் பற்றி நூல்களிலோ, விவிலியத்திலோ படித்துப் பல விஷயங்களை அறிந்திருக்கலாம். உபந்நியாசங்கள்கூட செய்யலாம். இருந்தாலும் அவரை அறியாதிருக்கலாம்.
சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் சீலோவாம் என்ற இடத்தில் ஆலயப்பணி செய்துகொண்டு ஏலி என்ற ஆசாரியனின் பாதுகாப்பில் இருந்து வந்தான். இருந்தாலும் தேவன் அவனைப் பெயர் சொல்லி அழைத்தபோது அவன் அவரை அறியாதவனாய் ஏலி தன்னைக் கூப்பிட்டார் என்று எண்ணிக்கொண்டான். சாமுவேல் இன்னும் கர்த்தரை அறியாதிருந்தான் (1.சாமு.3:7) என்று வசனம் கூறுகிறது. நாமும்கூட வேதத்தைக் கையிலேந்தி ஆலய வழிபாடுகளில் கலந்துகொண்டு, காணிக்கைகளைப் படைத்து, துதிப்பாடல்கள் பாடி பலவித பணிகளைச் செய்தும், இன்னும் இளைஞன் சாமுவேலைப்போல கர்த்தரை அறியாதிருந்தவர்களாயிருந்துவிடலாம் என்பது நமக்கு ஓர் எச்சரிப்பு. நிக்கேதேமு என்பவன் ஆலயப் பிரமுகர்களில் ஒருவன். இஸ்ரவேலருக்குள் ஒரு போதகன். இயேசுவினிடம் ஓர் இரவு வந்து உரையாடினான். இயேசு ஒருவன் மறுபிறப்படையவேண்டும் என்று சொன்னதை அவன் அறிந்துகொள்ளமுடியவில்லை. ஆண்டவர் அவனை நோக்கி, நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியவில்லையா? என்று கேட்டார் (யோ.3:10). அவருடன் நேரடியாகத் தொடர்புகொண்டு அவரிடம் பேசக்கூடியவராகவும், அவர் பேசுவதை அறிந்துகொள்ளக்கூடியவராகவும் அவருடன் பழுகுவதே அவரை அறிந்திருப்பதன் அறிகுறி.
இங்கு ஓர் எச்சரிக்கை. மனிதன் அளவினாலும், முயற்சிகளாலும், தேவனை அறிந்து கொள்ளக்கூடாதவன். தேவனே தம்மை அவனுக்கு வெளிப்படுத்துவதால் மட்டுமே தேவனை அறிந்துகொள்ளமுடியும். ஏனெனில் தேவன் முதலும் முடிவுமற்றவர். நாமோ காலப்பிறவிகள், அழிவுக்குரியவர்கள். அவர் பரிசுத்தர், நாம் பாவிகள். அவர் எல்லையற்ற ஞானமுடையவர், நாம் அறிவிலிகள். அவருக்கும் நமக்கும் இடையே உள்ள பிளப்பு அளக்கமுடியா அகலமுள்ளது. அப்படியானால் அவர் தம்மை வெளிப்படுத்தியுள்ளாரா? இக்கேள்விக்கு எபிரெய நிருப ஆக்கியோன் இவ்வாறு பதிலளிக்கிறார். முற்காலங்களில் பலப்பல வகைகளில் தீர்க்கதரிசிகள் மூலமாய் திருவுளம் பற்றின தேவன் இந்த கடைசி நாட்களில் குமாரன் (இயேசு கிறிஸ்து) மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார் (எபி.1:12). இதையொட்டி யோவான், பிதாவின் மடியிலிருக்கிற ஒரே பேறான குமாரனே (இயேசு) அவரை வெளிப்படுத்தினார் (யோ.1:8) என்றார்.
கர்த்தரும் தமது சீஷர்களை நோக்கி, என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள், என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்றார் (யோ.14:7,9). ஆக இந்தக் கிறிஸ்தவ யுகத்தில், ஒன்றான மெய்ததேவனையும் அவர் அனுப்பின இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் (யோ.17:3). குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர வேறொருவனும் பிதாவை அறியான், என்று இயேசு சொல்லியிருப்பதை மத்தேயு 11:27ல் காண்கிறோம். தேவனை அறிந்துகொள்ள ஒரே வழி இயேசு கிறிஸ்து மாத்திரமே. நானே சத்திய வழி என்று அவர் இயம்பினார். அவரைப் புரிந்து கொள்வதே தேவனை அறிவதாகும். கடவுளைக் கண்டுகொள்ள பலவழிகள் உண்டு என்று பலபேர் கூறுவதெல்லாம் வெறும் பேச்சு.
இயேசுவைப் புரிந்துகொள்ள விவிலிய நூலை, சிறப்பாக அதில் அடங்கியுள்ள நற்செய்தி அல்லது சுவிசேஷங்களைப் படிக்கவேண்டும். சத்திய வேதத்தை அசட்டைபண்ணுவோர் தேவனை அறிந்துகொள்ளுவதற்கு எடுக்கும் முயற்சிகளெல்லாம் தோல்வியிலேயே முடியும். அவை மேலும் மேலும் மக்களைக் குழப்பத்திற்குள்ளாக்குகின்றன. வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவைகளில் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு. என்னைக் குறித்துச் சாட்சியிடுகிறவைகளும் அவைகளே என்று நமதாண்டவர் சொன்னார் (யோ.5:39). சின்ன சாமுவேலுடன் அன்று பேச முயன்ற அதே தேவன் நம்மொவ்வொருவருடனும் நேரடியாகத் தொடர்புகொள்ள விரும்புகிறார். ஒருவேளை அவனை இரவில் கூப்பிட்டதுபோல நம்மைக் கூப்பிட்டிருக்கமாட்டார். ஆனால் வேறு பல வசனங்களில் நம்மோடு இடைப்படுவார். வேதவசனத்தின்மூலமாய், அல்லது ஒரு ஊழியர் அளிக்கும் செய்தியின் மூலமாய், ஒரு புத்தகம் அல்லது ஒரு பாடல்மூலமாய், அவர் சத்தம் தொனிக்கலாம். நமது உள்ளங்கள் அவர் தொனிக்கு இசைவாய் அமைத்தால் நாம் அதைக் கேட்கமுடியும்.
ஒருவன் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவில் தன் நம்பிக்கையை வைத்து, அவரைத் தன், இரட்சகரும் ஆண்டவருமாக ஏற்கும்போது, தேவனுக்குரியவைகளை அறியும்படி தேவனிடமிருந்து புறப்படுகிற ஆவியை அவர் அவனுக்கு அளிக்கிறார் (1.கொரி.2:12). சுய ஞானத்திலே ஒருவனும் தேவனை அறியமுடியாது (1.கொரி.1:21). மனந்திரும்பி சிறுபிள்ளையைப்போல, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு அவர் தேவபெலனும் தேவஞானமுமாய் இருக்கிறார் (1.கொரி.1:23). நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவகுமாரன் வந்து நமக்குப் புத்தியதை; தந்திருக்கிறார் (1.யோ.5:20).
பழைய ஏற்பாட்டுக்கால பக்தர்கள் ஒவ்வொருவரும் தேவனை அறிந்திருந்தார்கள். தேவனே அவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தியிருந்தார். யோபு என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றறிவேன் (யோபு 19:25) என்றார். பிற சமயத்தினருக்குள்ளும் தேவனைக்குறித்து அறியப்படுவது படைப்புக்கள் வாயிலாகவும், தங்களிலுள்ள மனசாட்சியின் வாயிலாகவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த அறிவினிமித்தம் அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், அந்த அறிவைப்பற்றிக்கொண்டிருக்க மனதில்லாமலும் இருக்கிறபடியால் அவர்கள் இருதயம் இருளடைந்திருக்கிறது. தங்களை ஞானிகளென்று சொல்லியும் பைத்தியக்காராயிருக்கிறார்கள் (ரோ.1:19-22,28).
கர்த்தரை அறிந்திருப்பவர்கள் அடைவது என்ன? கர்த்தரை அறியும்போது ஒருவன் முதற்கண் தன்னைப் பாவி என்று அறிந்துகொள்கிறான். இந்த முதற்படியில் அடிவைக்காதவன் அவரை இன்னும் அறியவில்லை. அவன் இயேசுவைத் தன் இரட்சகரும் ஆண்டவருமாக அறிந்துகொள்கிறான். பின்னர் கர்த்தர் அவனைத் தெரிந்து கொண்டதின் நோக்கத்தை அவனுக்கு வெளிப்படுத்துகிறார். அவன் வாழ்க்கை இலக்குடையதாகிறது. என் ஆடுகள் என்னை அறிந்திருக்கின்றன, என்றுரைத்தார் நல்ல மேய்ப்பன் இயேசு (யோ.10:15). அவைகளுக்குக் குறைவில்லை. நல்ல உணவு, நீர் இளைப்பாறுதல் கிடைக்கிறது. மேய்ப்பன் அவர்களை வழிநடத்துகிறார். ஆபத்துகளினின்று காப்பாற்றுகிறார். மகிழ்ச்சியால் நிரப்பி நித்தியவீடு சேர்க்கிறார் (சங்.23). என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்தில் வைப்பேன் (சங்.19:14), என்பது அவருடைய வாக்குத்தத்தம். தம்மை அழைத்தவரை அறிகிற அறிவினால் ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும் அவருடைய திவ்விய வல்லமை நமக்குத் தந்தருளினது (2.பேது.1:3). இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவினால் உலகத்தின் அசுத்தங்களுக்கு நாம் தப்புகிறோம் (2.பேது.2:20). சிறுமையும் எளிமையுமானவனின் நியாயத்தை விசாரிப்பதே கர்த்தரை அறிகிற அறிவு (எரேமி.22:16). தேவனை அறிந்தவர்கள் அவருடைய ஊழியக்காரரின் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கிறார்கள். சகோதரரிடத்தில் அன்புள்ளவர்களாயிருப்பர் (1.யோ.4:6-8). இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவால் வளரவேண்டும் (2.பேது.3:18). மேன்மை பாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மை பாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி.9:24). பவுல் அப்போஸ்தலனும் கூட என் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்றெண்ணிக்கொண்டிருக்கிறேன் என்கிறார் (பிலி.3:8). நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன் (2.தீமோ.1:12) என்று பவுலைப்போல நான் சொல்லக்கூடுமா?












