நீ தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷனுக்கேற்றவைகளைச் சிந்திக்கிறாய் (மத்.16:23).
கர்த்தராகிய இயேசு சீமோனைப் பார்த்துக் கூறிய வார்த்தைகள் இவை. நமது சி;ந்தனை இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றின் வழியாகச் செல்லக்கூடும் என்பதை இவ்வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. ஒன்று லௌகீக சிந்தை – மனுஷீக சிந்தை, அல்லது மாம்சசிந்தை. மற்றது தெய்வீக சிந்தை அல்லது ஆவிக்குரிய சிந்தை அல்லது பரத்துக்கடுத்த சிந்தை.
இரட்சிப்பின் தேவ கிருபையை இயேசு கிறிஸ்துவுக்குள் ருசிக்காத மக்கள் முந்தின சிந்தையுடையவர்களாகவே இருப்பர். மறுபிறப்படைந்தவர்கள் மாத்திரமே தங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாக்கப்படுகிறார்கள் (ரோ.12:2). மனந்திரும்பாதவர்களோ தேவனை அறிந்தும் அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தி ஸ்தோத்திரியாதபடியினால் தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள். அவர்கள் இருதயம் இருளடைந்தது (ரோ.1:21). அவர்கள் ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவைகள் அவர்களுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகளை அறியவுமாட்டார்கள் (1.கொரி.2:14).
இரட்சிக்கப்படுகிறவர்களோ, தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றிருக்கிறபடியினால் தேவனுக்குரியவைகளை அறிந்துகொள்ளும்படி அந்த ஆவியானவர் அவர்களை வெளிப்படுத்துகிறார் (1.கொரி.10:12). இயேசுவின் அடியார்கள் இந்தப் பெரிய சிலாக்கியத்தைப் பெற்றிருந்தாலும் அவர்களும் இந்த உடலில் தரித்து இந்தப் பொல்லாத பிரபஞ்சத்தின் நடுவில் வசித்திருப்பதால் மாம்ச மற்றும் லௌகீக எண்ணங்களுக்கும் அவ்வப்போது இடமளிக்கக்கூடிய ஆபத்து இல்லாமல் இல்லை.
இயேசுவின் சீஷர்களின் வாழ்க்கையில் இதை நாம் காண்கிறோம். சமாரியா நாட்டின் ஒரு கிராமத்தார் இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் ஏற்றுக்கொள்ளாதபடியினால், யாக்கோபும் யோவானும் அவர்கள்மேல் சீற்றங்கொண்டு வானிலிருந்து நெருப்பு விழுந்து அக்கிரமக்காரரை அழித்துவிடவேண்டும் என ஆசைப்பட்டார்கள். நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்கள் என்பதை அறியீர்களா என்று ஆண்டவரே அவர்களை அதட்டினார் (லூக்.9:54). அவர்கள் தங்கள் தாயுடன் வந்து இயேசுவின் இராஜ்யத்தில் தங்கள் இருவருக்கும் முதல் ஆசனங்கள் அளிக்கப்படவேண்டும் என வேண்டினபோது மற்றப் பத்துப்பேரும் அவர்கள் இருவர் பேரிலும் எரிச்சலானார்கள் (மத்.20:24). ஆனால் இயேசுவோ அவர்களைக் கிட்டிவரச் செய்து அவர்கள் தாழ்மையுள்ள சிந்தையுடையவர்களாயிருக்க வேண்டும் என்று அவர்களுக்குக் கற்பித்தார்.
மனுஷீக எண்ணங்கள் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை. எந்தவிதங்களில் தான் உயர்வடையலாம். புகழ், கனம் பெறலாம், பொருளைப் பெருக்கிக் கொள்ளலாம், தனது விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம், தான் திருப்தி அல்லது மகிழ்ச்சி அடையலாம் என்பதே மனிதனுடைய இயல்பெண்ணங்கள். மனித அறிவின்படி இவை நியாயமானவையாகவும், நன்மையானவையாகவும் தோன்றும். இவற்றின் முடிவோ, மரணவழிகள். (நீதி.14:12). ஆண்டவர் தாம் பாடுபடவேண்டியதையும், சிலுவையில் அறையப்படுவதையும் குறித்துச் சொன்னபோது, சீமோனுக்கு அது பெரிய அநீதியாகவே தோன்றிற்று. அவ்விதம் ஆண்டவருக்கு நேரிடக்கூடாதே என்று எண்ணி அவரைக் கடிந்து கொண்டான். தன் குருவின்மேல் அவனுக்கு எவ்வளவு பக்தி! எவ்வளவு பரிவு! அவரில் நலத்திற்காக எவ்வளவு கரிசனை! அவனைப் பாராட்டவேண்டுமல்லவா? அனால் அதற்கு மாறாக எனக்குப் பின்னாகப்போ சாத்தானே! என்ற கடுமையான கடிந்துரையைப் பெற்றான் இந்தச் சீமோன் (மத்.16:22-23).
மனித எண்ணங்கள் தேவனுடைய எண்ணங்களுக்கு எவ்வளவு மாறுபட்டவை என்பதைத்தான் இந்நிகழ்ச்சி நமக்குக் காட்டுகிறது. ஏசாயா 55:9 ல் நாம் இப்படி வாசிக்கிறோம். பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ அப்படியே உங்கள் நினைவுகளும் உயர்ந்திருக்கின்றன, என்று கர்த்தர் சொல்லுகிறார். சற்று முன்புதான் சீமோன் பேதுரு, பிற சீஷர்களுக்கு முன்பாக நீ பாக்கியவான். பரலோக இராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன் என்றெல்லாம் பாராட்டப்பட்டான் (மத்.16:17-19). ஏனெனில் இயேசு யார் என்ற கேள்விக்கு மனுஷீக முறையில் அவன் பதிலளிக்க முயற்சிக்காமல் பிதாவாகிய தேவன் தனக்கு வெளிப்படுத்தின உண்மையை வெளியரங்கமாக அறிக்கையிட்டான் (மத்.16:15-17). ஆனால் பிற்பாடோ தனது பரிவுணர்ச்சிகளுக்கும், உலக பாசத்துக்கும், மனுஷீக சிந்தனைகளுக்கும் இடங்கொடுத்தபடியால் இயேசுவை அவ்வாறு கடிந்துகொண்டான். தேவ ஆவியானவரின் வெளிப்பாட்டிற்கும், ஆலோசனைக்கும், தூண்டுதலுக்கும் நாம் காத்திராமல், மாம்ச உணர்ச்சிகளின் தூண்டுதலுக்கும், பாசத்திற்கும் இசைவோமானால், நமது சிந்தனைகளும் செயல்களும் தேவனுக்கு ஏற்காதவையாகக்கூடும், என்ற உண்மையை நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.
இயேசு பேதுருவை இப்படிக் கடிந்துரைத்தது, அவர் பேதுருவை நேசி;ததினாலேயன்றி அவனை வெறுத்ததினாலல்ல என்பதையும் நாம் நினைவிலிருத்திக்கொள்ளவேண்டும். மறைவான சிநேகத்தைப் பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது. சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள் (நீதி.27:5-6). அவர் நம்மைத் திருத்துவது நம்மையும் தம்மைப்போல ஆக்குவதற்கன்றோ? தேவனே வேதனையுண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும், என்று மன்றாடுவோமா? (சங்.139:24).
சீஷர்களை அவ்வப்போது திருத்துவதற்கு இயேசு நாதர் அவர்களோடிருந்தார். ஆனால் அவர் பிரிந்த பிறகோ அவர் வாக்குப்பண்ணின பரிசுத்த ஆவியானவராகிய சகாயரை அவர் பிள்ளைகளாகிய நமக்கு அருளியிருக்கிறார். ஆகையால் நமக்கும் இயேசுவின் போதனைகளை ஆவியானவர் எடுத்துரைத்து நம்மையும் நாம் செல்லவேண்டிய வழியில் நடத்துகிறார். அவருக்கேற்காத சிந்தனைகளுக்கு நாம் இடங்கொடுக்கும்போது அவர் நம்மை எச்சரித்து கண்டித்துரைத்துகிறார் (யோ.16:7-8,13). நீங்கள் வலது புறமாய்ச் சாயும்போதும் இடதுபுறமாய்ச் சாயும்போதும் வழி இதுவே இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும் (ஏசா.30:21).
தேவ பிள்ளைகள் இந்த ஆவியானவரின் நடத்துதலுக்குக் கீழமையாமல் சொந்தவழியில் செல்லமுற்படுவார்களானால் அவர்களுக்கு எச்சரிப்பு ஊதல் ஒலிக்கும். அதென்னவெனில் தங்கள் இருதயத்தில் கிறிஸ்து அளித்துள்ள சமாதானம் கலக்கமடையும். தேவனிடத்தில் கிட்டிச் சேர்கையில் அவர் சமுகம் விலகிப்போனது போன்ற அனுபவம் அடைவர். கொலோசெயர் 3:15ல் கிறிஸ்து அளிக்கும் சமாதானம் உங்கள் இருயதங்களில் நடுவராகத் தொடர்ந்து செயல்பட்டு, உங்கள் மனதில் எழும்பும் அனைத்து கேள்விகளுக்கும் முடிவான தீர்ப்பை அளிப்பாராக என்று வாசிக்கிறோம். எச்சரிப்பை ஏற்று நாம் திரும்பி அவர் வழிக்கு வரும்போது மட்டும், நாம் இழந்த சமாதானத்தையும் அவருடைய சமுக இன்பத்தையும் பெறுவோம்.
தேவனுக்கேற்ற சிந்தையோ சுயத்தை அல்லது ஊனியல்பைச் சிலுவையில் அறைவதையோ இலக்காகக் கொண்டுள்ளது. அதுவே கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தை. அந்தச் சிந்தையே உங்களிலுமிருக்கக்கடவது என்று விசுவாசிகளுக்குப் போதிக்கிறார் (பிலி.2:5). அச் சிந்தையானது என்ன என்பதைப் பின்னர் விளக்குகிறார்.
அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்குச் சமமாயிருப்பதைப் பற்றிக்கொண்டிராமல், தம்மைத் தாம் வெறுமையாக்கி (தனது உரிமைகளையெல்லாம் துறந்து) வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து, மனுஷ சாயலானார். தம்மைத் தாழ்த்தினார். சிலுவையின் மரணபரியந்தம் கீழ்ப்படிந்தார் (பிலி.2:6-8). அவர் செல்வந்தராயிருந்தும், நம்மை செல்வந்தர்களாக்கும்படி நம் நிமித்தம் தரித்திரரானார் (2.கொரி.8:9).
ஆனால் உலகின் போங்கு இச்சிந்தைக்கு முற்றிலும் மாறானது. ஆகவே இயேசுவும் தம் சீஷர்களின் வழி உலகத்தின் வழிக்கு வேறுபட்டதாயிருக்கவேண்டுமென்று வற்புறுத்தினார். அதிகாரிகள் உலக மக்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள். பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ்செலுத்துகிறார்கள். ஆனால் உங்களுக்குள்ளே அப்படியிருக்கலாகாது. உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்கவிரும்பினால் அவன் உங்களுக்குப் பணி விடைக்காரனாயிருக்கக்கடவன் (மத்.20:25-28) என்றார். தன்னைத்தான் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான் (மத்.16:25).
தன்னைத்தானே பெருமைப்படுத்தவும், உயர்த்தவும், விரும்புவது உலகத்தாரின் இயல்பு மட்டுமன்று. இதுவே சாத்தானின் குணம். இதை நமதாண்டவர் நன்கறிவார். ஆகையால்தான் அவர் சீமோனைப் பார்த்து, என் பின்னாகப் போ சாத்தானே என்றார். ஏனெனில் கிறிஸ்து பாடுபட்டு மரிக்காதபடி சாத்தான் அவரைத் தடுத்தால் தேவனுடைய இரட்சிப்பின் திட்டம் நிறைவேறாது போகும். மனிதர்கள் யாவரும் தன்னுடன் அழிவுக்கு வருவார்கள் என்பது அவனுடைய நோக்கம். சீமோனைத் தன் கருவியாகக் கொண்டு கிறிஸ்துவுக்குத் தூராலோசனை கொடுக்கத் துணிந்தான் சாத்தான். இதையறிந்த அருள்நாதர், சீமோனப் பயன்படுத்திக்கொண்டிருந்த சாத்தனைக் கடிந்து துரத்திவிடுகிறார்.
அதிகாலையின் மகனாக, விடிவெள்ளியாக, தேவனின் சேவையிலிருந்த கேரூப், நான் உன்னதங்களுக்கு ஏறுவேன். உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்று மேட்டிமை கொண்டபடியினால் பாதாளத்தில் தள்ளப்பட்டுப் போனான். அவனே இந்தப் பிசாசு (ஏசா.14:12-14).
கிறிஸ்தவ திருச்சபைகளுக்குள்ளும் கடவுளுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷனுக்கேற்றபடி சிந்திப்பதால் பல குழப்பங்கள் பல பிரச்சனைகள் கிளம்புவதுண்டு, நடப்பதுண்டு, நடந்தும் வருகின்றன. பரிசுத்த பவுலின் காலந்தொடங்கி இக்குறை இருந்து வந்திருந்தது என்பது இக்காலத் திருச்சபைக்கு ஓர் இளக்காரமல்ல. அது ஓர் எச்சரிப்பே. கொரிந்து சபையிலுள்ள இக் குறையை பவுல் அவர்களுக்கு எடுத்துரைக்கையில் இவ்வாறு எழுதுகிறார். பொறாமையும் வாக்கவாதமும் பேதங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா? ஒருவன் நான் பவுலைச் சேந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களல்லவா? (1.கொரி.3:3-4). மேலும் விரோதங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள் யாவும் மாம்சத்தின் கிரியைகள் என்றுதான் அழைக்கப்படுகின்றன (கலா.5:20). எனவே திருச்சபைகளில் கட்சிப்பிரிவினைகளும், விரோதங்களும், வழக்குகளும் காணப்படுமாயின் அவையனைத்தும் தேவனுக்கு ஏற்காதவை என்பது தௌ;ளத்தெளிவு. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்களே (கலா.5:25). அப்படியிருக்க நாம் இன்னும் மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள் (ரோ.8:13) என்றும் வசனம் கூறுகிறது.
தேவனுடைய ஆவியை அளவில்லாமல் பெற்றிருந்த இயேசு, சீமோனின் தவறான சிந்தையை உடனே அறிந்து அதை அவனுக்குச் சுட்டிக்காட்டினார். அப்படியே யாக்கோபு, யோவான் இவர்களின் எண்ணங்கள் தவறானவை என்பதை அவர்களுக்க எடுத்துக்காட்டத் தயங்கவில்லை (லூக்.9:54). இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுந்தான் இப்படி ஆவிகளைப் பகுத்தறியும் திறன் அளிக்கப்பட்டிருந்தது என்று நாம் எண்ணிக்கொள்ளக்கூடாது. அவருடைய அடியாராகிய நாமும் நாம் பெற்றிருக்கும் பரிசுத்த ஆவியானவரின் அளவுக்குத்தக்கதாக, பொல்லாத சிந்தைகளும், தவறான எண்ணங்களும், நம்மிலாவது, பிறரிலாவது தோன்றுமானால், அவற்றைக் கண்டுகொள்ளக்கூடும். பவுல் அப்போஸ்தலனும் இந்தத் திறனைப் பயன்படுத்தியதை நாம் அப்போஸ்தலர் 13:8-11 இலும் 16:17-18லும் காண்கிறோம். பேதுருவும் இந்த வரமுடையவராய் அனனியாவையும், சப்பீராளையும் கடிந்து கொள்வதைப் பார்க்கிறோம்.
நமது எண்ணங்கள் தேவனுக்கு ஏற்றவைதானா என்று நாம் அறிந்து கொள்வது அவ்வளவு சிரமமானதல்ல. நம்மில் உன்ன ஆவியானவர் அதை நமக்குத் தெளிவாக்குவார். தன்னைக் குறித்து தானே மேன்மை பாராட்டல் எந்தவிதத்திலும் தேவனுக்கு ஏற்றதல்ல என்பதைப் பவுல் தன்னிருதயத்தில் நன்குணர்ந்தபடியால் அப்படிப்பட்ட நிர்ப்பந்தம் தனக்கு நேரிட்டிருக்கிறது என்று ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லுகிறார்.
நான் சொல்லுவது கர்த்தருக்கேற்றபடி சொல்லவில்லை. மாம்சத்திற்கேற்றபடி மேன்மை பாராட்டுகிறேன். புத்தியீனனைப் போலச் சொல்லுகிறேன் (2.கொரி.11:17-18), என்று அறிக்கையிடுவதைக் காண்கிறோம். தேவனுக்கேற்றகாத தீய எண்ணங்களினின்று விடுபட நாம் நம் மனதை நல்ல எண்ணங்களால் நிறைத்துக்கொள்ள வேண்டும் என்று பவுல் ஆலோசனை தருகிறார். கடைசியாக சகோதரரே, உண்மையுள்ளவைகள், ஒழுக்கமுள்ளவைகள், நீதியுள்ளவைகள், கற்புள்ளவைகள், அன்புள்ளவைகள், நற்கீர்த்தியுள்ளவைகள், புண்ணியம், புகழ் ஆகியவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள் (பிலி.4:8).
என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று கவலைப்படாதிருங்கள், இவைகளெல்லாம் அஞ்ஞானிகள் நாடித் தேடுகிறார்கள் என்று நமதாண்டவர் கூறினார். கவலைப்படுதல் தேவனை அவமானப்படுத்துவாகும். அதை தேவன் விரும்புவதில்லை. பேதுரு மற்றும் பவுல் சொல்லுகிறபடி நம் கவலைகளை அவர்மேல் வைத்துவிட்டு நமது வேண்டுதல்களை ஸ்தோத்திரத்தோடுகூடிய ஜெபத்தில் அவருக்குத் தெரியப்படுத்தவேண்டும். அப்பொழுது புத்திக்கெட்டாத தேவசமாதானம் நம் இருதயங்களையும் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள் காத்துக்கொள்ளும் (1.பேது.5:7). ஜெபக்குறைவு உலக சிந்தையை அதிகரிக்கும். தேவனுக்கேற்காத கவலைக்குட்படுத்தும்.
மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். ஆவியின்படி நடக்கிறவர்களோ ஆவிக்குரியவைகளைச் (தேவனுக்கேற்றவைகளை) சிந்திக்கிறார்கள். மாம்சசிந்தை மரணம். ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமமாம். மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால் நீங்கள் மாம்சத்திற்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். நாம் ஆவியினால் பிழைத்திருந்து ஆவிக்கேற்றபடி நடக்கக்கடவோம் (ரோ.8:5-9, கலா.5:25).












