- மெய்யான சீஷத்துவத்தால் நாம் அடையும் பயன்
ஆண்டவராகிய இயேசுவுக்குக் காணிக்கையாக்கப்பட்ட வாழ்க்கை மிகக் பயனைப் பெறுகிறது. கிறிஸ்துவைப் பின்பற்றுதலில் ஒரு மகிழ்ச்சியும் இன்பமும் உண்டு. உண்மையான பொருள்படி இதுவே வாழ்க்கை.
என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான் என்று இரட்சகர் மீண்டும் மீண்டும் கூறினார். உண்மையில், அவர் கூறிய பிறவற்றைக்காட்டிலும் இச்சொல் நான்கு சுவிசேஷங்களிலும் அடிக்கடி கூறப்பட்டுள்ளது. (மத்.10:39, 16:25, மாற்கு,8:35, லூக்கா, 9:24, 17:33, யோவான், 12:25 இவற்றைக் காண்க) ஏன் இது திரும்பத்திரும்பக் கூறப்பட்டுள்ளது? சுயத்திற்காகக் கட்டித் தழுவப் பெற்ற வாழ்க்கை காணாமற்போகும். ஆனால் கர்த்தருக்காக ஊற்றப்பட்ட வாழ்க்கை கண்டுபிடிக்கப்பட்ட, இரட்சிக்கப்பட்ட, நன்கு அநுபவிக்கப்பெற்ற, நித்தியத்திற்காகக் காக்கப்பட்டதொன்று. இது கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை நெறிகளுள் ஒன்றாகும். இதனை எடுத்துக்காட்டவே இச்சொல் மீண்டும் மீண்டும் உரைக்கப்பட்டுள்ளது.
அரைகுறை மனங்கொண்ட கிறிஸ்தவனாயிருப்பது ஒரு நிர்ப்பந்தமான உயிர்வாழ்க்கையே ஆகும். கர்த்தருடைய உயர்ந்த நன்மைகளைப் பெற்றநுபவிக்க நிச்சயமான வழி அவர்க்கு அனைத்தையும் ஒப்படைத்து வாழ்தலே.
இயேசு கிறிஸ்துவுக்கு அடிமையாக இருந்து அவருக்குப் பணிவிடை செய்தலை விடுதலையாகக் கண்டடைவதே மெய்யான சீஷனாயிருப்பதாகும். என் எஜமானை நேசிக்கிறேன். நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை. என்று சொல்லக் கூடிய எல்லாருடைய நடையிலும் சுயாதீனம் உண்டு.
அற்பமான விவகாரங்களிலோ அல்லது கடந்து போகிற காரியங்களிலோ சீஷன் சிக்கிக் கொள்ளமாட்டான். நித்தியமானவற்றைப்பற்றித்தான் அவன் கவலைப்படுகிறான்.
அவன் பிறருக்குத் தெரியாதவனாக இருந்தாலும் உறுதியாக உயிரோடிருக்கிறவனே. அவன் தண்டிக்கப்படுகிறான். ஆனால் கொல்லப்படுவதில்லை. துக்கத்திலும் கூட அவன் மகிழ்ச்சியாயிருக்கிறான். தான் வறியவனாயிருந்தாலும் பிறரைச் செல்வந்தனாக்குகிறான். ஓன்றும் இல்லாதவனாயிருந்தாலும் எல்லாவற்றையும் உடையவனாயிருக்கிறான். (2கொரி. 6:9,10).
இவ்வுலகில் மிகுந்த மனநிறைவைத் தருவது மெய்யான சீஷத்துவ வாழ்க்கையே என்;று சொல்லக்கூடுமானால், அதே நிச்சயத்தோடு வரப்போகும் உலகில் அதிக பயன்தரப் போகிறதும் அதுவே என்று கூறமுடியும். மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார். அப்பொழுது, அவனவன் கிரியைக்குத் தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
எனவே, போர்டன் என்பவரோடு சேர்ந்து, கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்க்கையைப் பிடித்துவைத்துக்கொள்ளாதபடி என் கைகளை எடுத்துவிடுகிறேன். இருதயத்தின் அரியணையை உமக்குக் கொடுக்கிறேன். உம் விருப்பப்படி என்னை மாற்றும். சுத்திகரியும், உபயோகியும் என்று சொல்லும் மனிதனே எக்காலத்திலும் நித்தியத்திலும் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்டவன்.










