- சீஷத்துவத்தைப் தடுப்பன
கிறிஸ்துவைப் பின்பற்றத் தொடங்கும் ஒருவன் தன்னை, நயங்காட்டி அழைக்கும் வேறுபல வழிகளையும் தன்முன் காண்கிறான். அவன் பின்வாங்கி விடுவதற்கான பல வாய்ப்புகள் அவனுக்குக் கொடுக்கப்படுகின்றன. சிலுவையின் பாதையை இலகுவாக்க முன்வருகிற வேறு குரல்கள் அவனுக்குக் கேட்கின்றன. தன்னைத்தான் வெறுத்துத் தியாகத்தின் பாதையில் நடக்கும் அவனை அவ்வழியினின்று விடுவிக்கக் காத்திருப்பவை பல உள.
அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி ஆண்டவரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்க வேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும்: நீ போய் தேவனுடைய இராஜ்சியத்தைக் குறித்துப் பிரசங்கி என்றார். பின்பு வேறோருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக் கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கிற எவனும் தேவனுடைய இராச்சியத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார் (லூக்கா. 9:57,62).
பெயர் சொல்லப்படாத மூன்று மனிதர் இயேசு கிறிஸ்துவை முகமுகமாகச் சந்தித்தித்தனர். அவன் பின்னே செல்ல வேண்டும் என்ற வலிய உள்ளுணர்வு அவர்களுக்கு உண்டாயிற்று. ஆனால் தங்கள் ஆன்மாவுக்கும் அவருக்குத் தங்களை முழுவதும் ஒப்புக்கொடுப்பதற்கும் இடையே வேறு ஏதோ ஒன்றை அவர்கள் அனுமதித்து விட்டார்கள்.
மிகத் துரிதமானவன்.
முதல் ஆள் மிகத் துரிதமானவன் என்றழைக்கப்படுகிறான். கர்த்தர் எங்கே சென்றாலும் அவர் பின்னே செல்ல உற்சாகமாக அவன் முன்வந்தான். நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன். எந்தக் கிரயமும் பெரியதாயிராது. எந்தச் சிலுவையும் பளுவாயிராது. எந்த வழியும் கடுமையாயிராது.
இரட்சகரின் மறுமொழி, மிகத்துரிதமானவன் மனமுவந்து பேசியதோடு தொடர்புடையதாக முதலாவது காணப்படுவதில்லை. நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷ குமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை. கர்த்தர் கூறியது மிகப் பொருத்தமானதே. நான் எங்கே போனாலும் என் பின்னே வருவதாகக் கூறுகிறாயே, வசதியான உலகப் பொருள்கள் இல்லாமல் நீ வாழ முடியுமா? என்னைக் காட்டிலும் நரிகளுக்கு அதிக வசதிகளுண்டு. பறவைகளுக்குச் சொந்தமான கூடுகள் உள்ளன. நானோ, என் கரங்கள் படைத்த இவ்வுலகத்தில் வீடற்று அலைகிறவன். என்னைப் பின்பற்றி வருவதற்காக வீடுதரும் பாதுகாப்பை நீ விட்டுவிட முடியுமா? எனக்காக வாஞ்சையாய் உழைக்க வாழ்க்கையின் நியாயமான வசதிகளையும் விட்டுக்கொடுக்க உனக்கு மனதுண்டா?
அந்த மனிதன் அவ்வாறு செய்ய முன்வரவில்லை என்பது தெளிவு. ஏனெனில் அதன் பின்னர் திருமறையில் அவனை நாம் காண்பதில்லை. கிறிஸ்துவுக்குத் தன்னைச் சமர்ப்பிப்பதைக் காட்டிலும் அதிகமாக அவன் உலகத்தின் வசதிகளை நாடினான்.
மிகத் தாமதமானவன்.
இரண்டாம் ஆள் மிகத் தாமதமானவன் என்றழைக்கப்படுகிறான். முதல் மனிதனைப் போல இவன் தானே முன்வரவில்லை. தம்மைப் பின்பற்றும்படி இரட்சகர் அவனை அழைத்தார். முடியாது என்று ஒரேயடியாக அவன் மறுத்துவிடவில்லை. கர்த்தரில் பற்றுதல் கொஞ்சமும் இல்லாதவன் அல்ல இவன். ஆனால் முந்தி ஏதோ ஒன்றைச் செய்ய விரும்பினான் இது தான் அவனுடைய பெரிய பாவம். கிறிஸ்துவின் உரிமைகளைக் காட்டிலும் தன் உரிமைகள் முக்கியமானவைகள் என்று அவன் கருதினான். அவன் சொன்னதைப் பாருங்கள் ஆண்டவரே முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம் பண்ண எனக்கு உத்தரவு கொடுக்க வேண்டும்.
பெற்றோரைப் பிள்ளை கனம் பண்ணுவது முற்றிலும் நியாயமே. ஒரு தகப்பனார் இறந்தால் அவரை மரியாதையாக அடக்கம் பண்ணுவது கிறிஸ்தவ விசுவாசத்திற்குட்பட்டதே. ஆனால் வாழ்க்கையில் நியாயமானவையென்று கருதப்படுகிறவைகளும்கூட கர்த்தராகிய இயேசுவின் உரிமைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடம் பெற முயன்றால் அவை திட்டமாகவே பாவமுள்ளவையாகின்றன. ஆண்டவரே, முன்பு நான்…….. என்று அவன் கூறுவதே அவன் வாழ்க்கையின், உண்மையான நாட்டத்தை வெளிப்படுத்திவிடுகிறது. அவன் உள்ளத்தில் ஆழ்ந்து கிடந்த அந்த ஆசையைத் திரைபோல் மறைப்பனவே தவிர வேறல்ல.
ஆண்டவரே, முன்பு நான் என்று அவன் கூறியது தவறானது. அவ்வாறு இருக்க முடியாது என்பதை அவன் உணரவில்லை என்பது தெளிவு. கிறிஸ்து ஆண்டவர் என்றால் அவர் தான் முதலிடம் பெறவேண்டும். நான் சிங்காசனத்தில் அமர்ந்திருந்தால் கிறிஸ்து ஆளுகை செய்கிறவர் அல்லவே.
மிகத் தாமதமானவன் செய்து முடிக்க வேண்டிய வேலை ஒன்று இருந்தது. அந்த வேலைக்கு அவன் முதல் இடம் கொடுத்துவிட்டான். எனவே, மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும். நீ போய் தேவனுடைய இராச்சியத்தைக் குறித்துப் பிரசங்கி, என்று இயேசுவானவர் உரைத்தது பொருத்தமானதே. அவர் கூறிய பொருளை இவ்வாறு கூறலாம். ஆவிக்குரிய நிலையில் உயிரற்றவர்கள் விசுவாசிகளைப் போலவே நிறைவேற்றக்கூடியவை சில இருக்கின்றன. ஆனால் வாழ்க்கையில் வேறுசில காரியங்கள் இருக்கின்றன. அவற்றை விசுவாசிகள் மட்டுமே செய்யக்கூடும். குணப்படாத ஒருவன் செய்யக்கூடிய ஒன்றைச் செய்வதில் உன் வாழ்க்கையைச் செலவிடாதபடி கவனமாயிரு. ஆவியில் உயிரற்றவர்கள் உடலில் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும். ஆனால் நீயோ இன்றியமையாததைச் செய்வதில் ஈடுபடு. எனக்கடுத்தவற்றை முன்னேறச் செய்வதே வாழ்க்கையில் உன் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கட்டும்.
மிகத் தாமதமானவனுக்கு இந்தக் கிரயம் மிகப்பெரியதாகக் காணப்பட்டதாகத் தோன்றுகிறது. காலத்தின் மேடையினின்று பெயர் தெரியாத ஒரு நிசப்தத்தினுள் மறைந்து விடுகிறான் இம்மனிதன்.
சுPஷத்துவத்திற்குத் தடையாக அமைகின்றவைகளில் ஒன்று பொருள் வசதியை நாடுதல். இதற்கு முதல் மனிதன் எடுத்துக்காட்டு. கிறிஸ்தவன் உலகில் வைக்கப்பட்டிருக்கும் முக்கிய நோக்கம் நிறைவேறா வண்ணம் தடுக்கும் ஒரு வேலை அல்லது தொழில் இன்னொரு தடை. இரண்டாம் மனிதன் இதற்கு உதாரணமாக அமைகின்றான். உலகத்தொடர்புள்ள வேலை தவறானது என்று நாம் கூறவில்லை. தன் தேவைகளையும், தன் குடும்பத்தாரின் தேவைகளையும் நிறைவாக்க ஒருவன் வேலைசெய்ய வேண்டுமென்பது தேவனுடைய சித்தம். ஆனால் சீஷத்துவத்தை உண்மையாகக் கடைப்பிடிக்கும் வாழ்க்கை தேவனுடைய இராச்சியத்தையும் அவருடைய நீதியையும் முதலாவது தேடவேண்டும் என்கிறது. அன்றாடத் தேவைகளை நிறைவாக்குவதே ஒரு வேலையில் அமர்வதின் நோக்கம். ஆனால் கிறிஸ்தவனின் பிரதான வேலை தேவனுடைய இராச்சியத்தைப் பிரசங்கிப்பதே.
மிகச் சுலபமானவன்.
மிகச்சுலபமானவன் என்றழைக்கப்படுகிறான் மூன்றாம் ஆள். கர்த்தரைப் பின்பற்ற விரும்புவதில் இவன் முதல் ஆளைப்போன்றவன். ஆண்டவரே……… முன்பு நான் என்ற ஒன்றுக்கொன்று ஒவ்வாத சொற்களை இவன் பயன்படுத்தியது இவனை இரண்டாம் ஆளைப் போன்றவனாக்குகின்றது. ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன். ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக் கொண்டு வரும்படி எனக்கு உத்தரவு கொடுக்க வேண்டும் என்றான்.
இந்த வேண்டுகோளை அப்படியே எடுத்துக்கொண்டால் இதில் அடிப்படையான தவறு ஒன்றும் இல்லை. என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். ஒருவன் தன் உறவினர்பால் அன்பான அக்கறை காட்டுதலும், அவர்களை விட்டுப் பிரியுங்கால் மரியாதை காட்டி நீங்குதலும் கடவுளின் கட்டளைக்கு முரண்பட்டவையல்ல. அப்படியானால் அவன் எங்கே தவறினான்? இயற்கையின் இனிய கட்டுகளுக்குக் கிறிஸ்துவின் இடத்தை அவன் கொடுத்துவிட்டான். அங்கேதான் அவன் தவறினான்.
எனவே, ஊடுருவி நோக்கும் உட்பார்வையுடன், கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கிற எவனும் தேவனுடைய இராச்சியத்திற்குத் தகுதியுள்ளவன் அல்ல. எனக் கர்த்தராகிய இயேசு மொழிந்தார். ஏன் சீஷர் உன்னைப்போல் சுயத்தை நடுவில்வைத்து திடனற்றுத் தளர்ந்து நிற்போர் அல்லர். குடும்பத் தடைகளைத் தகர்த்து, மனவெழுச்சிகளைக் கிளப்பிவிடும் உறவினரால் வழிதவறாமல், தங்கள் வாழ்க்கையில் என்னை எல்லாருக்கும் மேலானவராகக் கொள்வோரே எனக்கு வேண்டும் என்பதே ஆண்டவராகிய இயேசுவின் சொற்களின் விளக்கம்.
மிகச் சுலபமானவன் இயேசுவை விட்டுத் துக்கத்துடன் பிரிந்து சென்றான் என்று நாம் முடிவு கட்டவேண்டும். தான் சீஷன் ஆகமுடியும் என்ற அளவுக்கு மிஞ்சிய அவன் நாட்டமும் நம்பிக்கையும் இன்பகரமான குடும்பக் கட்டுகள் என்ற பாறையில் மோதி நொறுங்கின. ஓரு வேளை அது கண்ணீர் விட்டுத் தடுத்த ஒரு தாயாக இருந்திருக்கலாம். என்னைப் பிரிந்து ஊழியம் செய்ய தூர இடத்திற்கு நீ சென்றால் உன்னைப் பெற்றவளின் உள்ளம் உடையச் செய்வாய் என்று சொல்லி அவள் அழுதிருக்கலாம். நமக்குத் தெரியாது. திடனற்ற உள்ளங்கொண்ட இம்மனிதன் திரும்பிச் சென்றுவிட்டதால் தன் வாழ்க்கையில் மாபெரும் வாய்ப்பு ஒன்றை இழந்து தேவனுடைய இராச்சியத்திற்குத் தகுதியுடையவனல்ல என்ற கல்லறைக் குறிப்பினை அடைந்து விட்டான். இம்மனிதனின் பெயரைத் திருமறை இரக்கமாகக் குறிப்பிடாமல் விட்டுவிட்டது.
தொகுப்புரை
உண்மையான சீஷத்துவத்துக்கு தடையாக அமைகிற மூன்று முக்கிய தடைகள் இவைதான். இம்மூன்றிற்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய மூன்று பேரைக் கண்டோம். அவர்கள் கர்த்தராகிய இயேசுவோடு முடிவுவரை செல்ல மறுத்துவிட்டனர்.
மிகத் துரிதமானவன் – உலக வழிகள் மேல் நாட்டம்.
மிகத் தாமதமானவன் – ஒரு வேலை அல்லது தொழிலுக்கு முதல் இடம் கொடுத்தல்.
மிகச் சுலபமானவன் – இனிய குடும்பக் கட்டுகளுக்கு முதலிடம் அளித்தல்.
வீரத்தோடும் தியாக உணர்வோடும் தம்மைப் பின்பற்ற கர்த்தராகிய இயேசு அன்றுபோல இன்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அழைப்பு விடுக்கிறார்.
அதிகக் கஷ்டப்படாதே, இது உனக்கு நேரிடக்கூடாதே என்று அக்கறையோடு சொல்லி தப்பியோட வழி காட்டும் பாதைகள் இன்றும் உள.












