- சீஷர்கள் உக்கிராணக்காரர்கள்
வாசிக்க : லூக்கா. 16:1-13
அநீதியுள்ள உக்கிராணக்காரனைப்பற்றிய உவமை சீஷர்களுக்குத்தான் சொல்லப்பட்டது. எல்லாக் கால சீஷர்களுக்கும் பொருத்தமான ஆதாரங்களை இரட்சகர் அதில் எடுத்துக்காட்டியுள்ளார். கிறிஸ்துவின் சீஷர்கள் உக்கிராணக்காரர்தான். இவ்வுலகத்திலுள்ள அவருடைய உடைமைகளும் உரிமைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த உவமையில் சில சிக்கல்கள் காணப்படுகின்றன. நேர்மையற்ற தன்மையும் ஏமாற்றும் பண்பும் இங்கு பாராட்டப்பட்டிருப்பதுபோலக் காணப்படுகிறது. ஆனால் தக்க ஒளியில் இதன் பொருளை உணர்ந்தால் இது மிக முக்கிய அறிவுரைகளைச் சுமந்து நிற்பதைக் காணலாம்.
அக்கதையின் சுருக்கம் இதுதான். செல்வந்தன் ஒருவன் தன் உடைமைகளைக் கவனித்துக் கொள்ளுமாறு ஓர் ஆளை வேலையில் அமர்த்தியிருந்தான். நாளடைவில் அவ்வேலைக்காரன் தன் பணத்தை வீணாக்குவதை அம்முதலாளி கேள்விப்பட்டான். உடனே அவன் கணக்கு ஏடுகளைத் தணிக்கை செய்ய உத்தரவிட்டான். அந்த மனிதனும் வேலையிலிருந்து நீங்கவேண்டும் என்று கட்டளையிட்டான்.
அந்த வேலைக்காரனுக்கு அவனுடைய எதிர்கால வாழ்க்கை இருண்டதாகக் காணப்பட்டது. அவனுக்கு வயதாகி விட்டது. எனவே கடின உடலுழைப்பில் அவன் ஈடுபட முடியாது. பிச்சை எடுக்கவும் அவன் வெட்கப்பட்டான். எனவே வருகிற நாள்களில் எனக்குத் துணைவரைப் பெற அவன் ஒரு திட்டமிட்டான். தன் தலைவனின் வாடிக்கைக்காரர்களில் ஒருவனிடம் அவன் சென்று என் முதலாளிக்கு நீ எவ்வளவு கொடுக்க வேண்டும்? என்று கேட்டான்.
நூறு குடம் எண்ணெய், என்றான் கடன்பட்டவன். அதில் பாதிக்குரிய தொகையை மட்டும் செலுத்தி கணக்கை முடித்து விடுவோம்.
புpன்பு முதலாளியிடம் கடன்பட்ட இன்னெருவனிடம் அவன் சென்று நீ பட்ட கடன் எவ்வளவு? என்று கேட்டான்.
எண்ணூறு மரக்கால் கோதுமை.
அப்படியா? சரி, அறுநூற்று நாற்பது மரக்கால் மட்டும் கொடு போதும்.
நேர்மையற்ற அந்த மனிதன் நடந்துகொண்டவிதத்தைக் காட்டிலும் கதையில் முடிவில் தரப்பட்டுள்ள குறிப்பு அதிக அதிர்ச்சியைத் தருகிறது.
அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்;டு, அவனை மெச்சிக் கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப் பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள் (வச.9).
இத்ததைய நேர்மையற்ற நடத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளப்படுவதுபோலக் காணப்படுகிறதே, இதை எங்ஙனம் புரிந்து கொள்வது?
ஒன்று தெளிவு. இந்த உண்மையற்ற நடத்தையை அந்த மனிதனின் தலைவனோ, அல்லது நமது ஆண்டவரோ பாராட்டவில்லை. அவன் வேலையினின்று நீக்கப்படுவதற்குக் காரணமாயிருந்ததே அதுதான். நீதி உணர்வுடைய ஒருவரும் அப்படிப்பட்ட ஏமாற்றத்தையும் உண்மையின்மையையும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். கள்ளத்தனமாகப் பணத்தைக் கையாடுவதை இந்த உவமை சரி என்று சொல்வதே இல்லை.
அதே நேர்மையற்ற உக்கிராணக்காரனைப் பாராட்டுதற்குக் காரணமான ஒன்றுண்டு. வருங்காலத்திற்காகத் திட்டமிட்டான் என்பதுதான் அது. தான் வேலையை இழந்த பிறகும் தனக்கு நண்பர் இருக்கும்படி அவன் சிலவற்றைச் செய்தான். நிகழ்காலத்தையல்ல வருங்காலத்தைக் கருதி அவன் செயலாற்றினான். இது தான் இக்கதையின் முக்கிய கருத்து. வருகிற நாள்களுக்குத் தேவையானவற்றை ஈட்டி வைக்க உலக மக்கள் வெகு பாடு படுகின்றார்கள். வேலையிலிருந்து ஓய்வு பெறுகிற முதுமைப் பருவந்தான் அவர்கள் கவலைப்படுகிற ஒரே எதிர்காலம். பலன் தரும் பணியில் ஈடுபடமுடியாத காலத்தில் வசதியாய் வாழுவதற்கு அவர்கள் ஊக்கமாக உழைக்கின்றனர். சமுதாயத்தில் அசைவற்ற ஓர் இடத்தைத் தங்களுடையதாக்கிக்கொள்ள அவர்கள் எதையும் செய்யத்தவறுவதில்லை.
இந்தச் செயலில் கிறிஸ்தவர்களைவிட இரட்சிக்கப்படாதோர் ஞானமுள்ளவர்கள். ஆயினும், இதன் காரணத்தை அறிய, கிறிஸதவனின் எதிர்காலம் இந்தப்பூமியைச் சார்ந்ததல்ல. அது பரலோகத்தைச் சார்ந்தது என்பதை நாம் உணரவேண்டும் இதுதான் முடிவான மரணம் வரை உள்ள காலத்தையே ஓர் அவிசுவாசி தன் எதிர் காலமாகக் கொள்கிறான். ஆனால் கடவுளுடைய பிள்ளை ஒருவனோ தான் கிறிஸ்துவோடு வாழும் நித்தியத்தையே தன் வருங்காலமாகக் கொள்ளுகிறான்.
அப்படியானால் இச்சிறு கதையின் அறிவுரை யாது? விண்ணுலகில் தாங்கள் அநுபவிக்கப் போகும் காலத்திற்காகக் கிறிஸ்தவர்கள் செய்யும் ஆயத்தத்தைக் காட்டிலும் புதுப்பிறப்படையாதவர்கள் பூமியைச் சார்ந்த தங்கள் எதிர்காலத்திற்காக அதிக ஞானத்தோடு உறுதியோடும் ஆயத்தம் செய்கின்றனர்.
இந்தச் சிந்தனைகளோடு ஆண்டவராகிய இயேசு இக்கதை வலியுறுத்தும் நல்லுரையை வழங்குகிறார்.
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும் போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப் பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள் (லூக்கா. 16:9).
அநீதியான உலகப்பொருள் என்பது பணம் அல்லது பிற உடமைகள் ஆகும். கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த இவற்றை நாம் பயன்படுத்தக் கூடும்.
பணத்தை உண்மையாகப் பயன்படுத்தி நாம் ஆதாயப்படுத்தின மக்கள் இங்கே சிநேகிதர் என்றழைக்கப்படுகின்றனர். நாம் மாளும் நாள் ஒன்று வருகிறது. (நாம் மரிப்போம், அல்லது கிறிஸ்துவினால் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவோம்). நம் பொருள் ஞானமாகப் பயன் பயன்படுத்தப்பட்டமையால் ஆதாயப்படுத்தப்பெற்ற சிநேகிதர் நம்மை நித்திய இல்லங்களுக்கு வரவேற்போராக அமைவர்.
ஆறிவுள்ள உக்கிராணக்காரர் இவ்வாறுதான் எதிர்காலத்தைத் திட்டமிடுகின்றார். உலகத்தில் உறுதியான ஓர் இடத்தைப் பெறும் வீணான நாட்டத்தில் தங்கள் சிறு வாழ்க்கையைச் செலவிடுவதில்லை. தங்கள் பணத்தால் கிறிஸ்துவுக்கு ஆதாயப்படுத்தப்பெற்ற நண்பர் தங்களைப் பரலோகத்தில் சூழ்ந்திருக்கவேண்டும் என்ற உணர்ச்சியால் உந்தப்படுகின்றனர். பணம் வேதாகமங்களாக, புதிய ஏற்பாடுகளாக, திருமறைப்பகுதிகளாக, நற்செய்தித் தாள்களாக, கிறிஸ்தவ நூல்களாக மாற்றப்படுகிறது. கிறிஸ்தவஊழியர்களை ஆதரிப்பதில் செலவிடப்படுகிறது. கிறிஸ்தவ வானெலி நிகழ்ச்சிகளுக்கும் பிற உயர்ந்த கிறிஸ்தவ ஊழியங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கும் வழி இதுவே.
விலையேறப்பெற்ற ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காகத் தன் பொருள் செல்லவம் பயன்படக்கூடும் என்பதை ஒரு கிறிஸ்தவன் காணும்போது பொருட்கள் மீது கொள்ளும் பற்றினை அவன் இழக்கின்றான். ஆடம்பர வாழ்வு, செல்வச் சிறப்பு இவை அவனுக்கு வெறுப்பாகின்றன. அநீதியான உலகப் பொருள் ஆட்டுக்குட்டியானவரை என்றென்றும் தொழுதுகொள்ளும் மக்களாக மாற்றப்பட வேண்டும் என அவன் வாஞ்சிக்கிறான். கடவுளுக்கு நித்திய மகிமையையும், மக்களுக்கு நித்திய ஆசீர்வாதத்தையும் உண்டாக்கக் கூடிய ஒரு செயலை மக்களின் வாழ்க்கையில் நிறைவேற்றககூடும் என்ற உண்மை அவனைக் கவருகிறது.
அவனுக்கு வைரமும், கொம்பும், முத்துக்களும், வங்கியில் உள்ள பணமும், ஆயுள்காப்பு நிதி சேமிப்பும், மாளிகைகளும், உல்லாவப் படகுகளும், கண்ணைக் கவரும் கார்களும் அநீதியான உலகப்பொருளேயன்றி வேறல்ல. ஒருவன் தனக்காகவே அவைகளைப் பயன்படுத்தினால் அவை அவனோடு அழிந்து ஒழியும். ஆனால் கிறிஸ்துவுக்காக அவை பயன்பட்டால் நித்தியமெல்லாம் அவை பயன்தரும்.
பொருள் செல்வத்தினை நாம் பயன்படுத்தும் விதமும், நமக்கென்று பொருட்களை வைத்துக்கொள்ளும் அளவும், நம் குணநலனைச் சோதிக்கும் பரீட்சையாகும். பத்தாம் வசனத்தில் ஆண்டவர் இதை வலியுறுத்துகிறார்.
மிகச் சிறிய ஒன்றில் நம்பப்படக்கூடிய ஒருவன் மிகப் பெரிய ஒன்றிலும் நம்பப்படக்கூடியவனாயிருப்பான். மிகச் சிறிய ஒன்றில் நம்பப்படக்கூடாதவனை மிகப் பெரிய ஒன்றிலும் நம்பமுடியாது.
இங்கே, கொஞ்சம் அல்லது மிகச் சிறிய ஒன்று, என்று சொல்லப்பட்டிருப்பது உலகப் பொருள்களுக்கு உக்கிராணக் காரனாயிருப்பதே. தேவனுடைய மகிமைக்காகவும், தன்னோடு வாழும் மக்களின் நன்மைக்காகவும் இந்தப் பொருள்களைப் பயன்படுத்துவோரே நம்பப்படத்தக்கவர்கள். வசதிக்காக, ஆடம்பர வாழ்க்கைக்காக, சுயநல நுகற்சிக்காகத் தங்கள் உடமைகளைப் பயன்படுத்துவோர் உண்மையில்லாதவர்கள். ஓரு சிறு காரியத்தில் (உலகப் பொருள்களில்) ஒருவன் நம்பமுடியாவிட்டால் பெரிய காரியத்தில் (ஆவிக்குரிய உக்கிராணத்துவத்தில்) அவனை எப்படி நம்பமுடியும்? அநீதியான உலகப் பொருள்களைப்பற்றி ஒருவன் உண்மையற்றவனாயிருந்தால் அவன் எப்படிக் கிறிஸ்துவின் ஊழியக்காரனாகவும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரனாகவும் உண்மையுள்ளவனாயிருக்கக்கூடும்? (1கொரி. 4:1).
எனவே இரட்சகர் இதைச் சற்று அதிகமாக வற்புறுத்திப் பேசுகிறார். அநீதியான உலகப் பொருள்களைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள் (வச.11).
பூமியின் பொக்கிஷங்கள் உண்மைச் செல்வங்கள் அல்ல. அவை வரையறைக்குட்பட்டவை. இன்மைக்குரிய நிலையற்றவை. ஆவிக்குரிய கருவூலங்கள் மெய்ச் செல்வங்கள், அவற்றின் மதிப்பு அளவிடப்படாதவை. அவை முடிவற்றவை. உலகப் பொருட்களைக் கையாளுகிற செயலில் ஒருவன் நம்பக்கூடியவனாயிருந்தால் தான் இம்மையில் ஆவிக்குரிய செழிப்பையோ, விண்ணுலகில் பொக்கிஷத்தையோ, தேவன் அவனை நம்பி அருள முடியும். கர்த்தர் தொடர்ந்து கூறுகிறார்.
வேறோருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்? (வச.12).
உலகப் பொருள்கள் நமக்குச் சொந்தமானவை அல்ல. அவை கடவுளுக்கு உரியவை. நம் உடமைகள் ஒவ்வொன்றும் நமக்கு கடவுளால் அருளப்பட்டுள்ள புனிதமான பொறுப்பாகும். நமக்கு உரியவை எனக் கருதப்படக்கூடியன எல்லாம் இன்மையில் நமது ஊக்கமான படிப்பு, உழைப்பு இவற்றின் பலனாகவும் அமைகின்றவே. தேவனுடைய உடமைகளைக் கையாளுவதில் இருக்கும்போது தேவனுடைய வார்த்தையின் ஆழ்ந்த உண்மைகளுக்குள் நுழையவோ, அல்லது விண்ணுலக வாழ்வின் கைம்மாறு பெறவோ முடியாது.
ஆண்டவர் இந்த முழு உவமையின் போதனையையும் சுருங்கக் கூறுகிறார்.
எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்யக்கூடாது. ஓருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டை பண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது என்றார் (வச.13).
உண்மையைப் பற்றி பிரிக்கப்பட்டிருத்;தல் முடியாது. இரு உலகங்களுக்காகச் சீஷன் ஒருவன் வாழமுடியாது. ஊக்கிராணக்காரன் ஒன்று தேவனில் அன்புகூருகிறான். அல்லது உலகப்பொருளில் நேசத்தைச் செலுத்துகிறான். அவன் உலகப் பொருளில் அன்பு கொண்டால் இறைவனைப் பகைக்கிறவன் ஆவான்.
இது இரட்சிக்கப்படாதோருக்கு அல்ல, சீடருக்கே எழுதப்பட்டது என்பதை மறந்துவிட வேண்டாம்.










