- வைராக்கியம் ஒரு சீஷன் மிக்க அறிவு நுட்பம் படைத்தவனாக இல்லாவிட்டால் பரவாயில்லை. புகழ்ப்படக்கூடிய உடல்வன்னையும் வீரமும் அவனிடம் காணப்படாமற்போனாலும் பரவாயில்லை. ஆனால் அவன் வைராக்கியமற்றவனாக இருந்தால் அவனை மன்னிக்க முடியாது. தன் இரட்சகர்பால் கொழுந்து விட்டு எரியும் வாஞ்சை அவனிடம் இல்லாவிட்டால் அவன் குற்றமுள்ளவனே.
உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது (யோவான்.2:17) என மொழிந்தவரைப் பின்பற்றுவோர்தானே கிறிஸ்தவர்கள். இறைவனையும் அவரது காரியங்களையும் பற்றிய வாஞ்சையினால் எரிக்கப் பெற்றவர் அவர்கள் இரட்சகர். அவர் பின்னே நடப்போரின் வரிசையில் அரைகுறை மனமுள்ளோருக்கு இடமில்லை.
கர்த்தராகிய இயேசு ஒரு நெருக்கப்பட்ட ஆவிக்குரிய நிலைக்கு ஆளாகி இருந்தார். லூக்கா.12:50 இல் நான் முழுக வேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன் என்று அவர் கூறியது இதனை உணர்த்தும். பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும, ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது, என்று அவர் கூறிய மறக்கமுடியாத சொற்களாலும் இதை அறியலாம் (யோவான். 9:4).
யோவான் ஸ்நானகனின் பக்தி வைராக்கியத்தைக் குறித்து அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான் (யோவான். 5:35) என்று கூறி நமது கர்த்தர் சான்று பகர்ந்தார்.
அப்போஸ்தலனாகிய பவுல் பக்தி வைராக்கியம் மிக்க ஒருவர். அவரது தீவிர ஊக்கத்தைக் கீழ்க்கண்டவாறு விபரிக்க ஒருவர் முற்படுகிறார்.
நண்பர்கள் வேண்டும் என்ற கவலையே இல்லாத மனிதன் அவர். உலகச் செல்வத்தை அடையும் நம்பிக்கையோ, அவற்றின்பால் பற்றுதலோ இல்லாதவர். உலகத்துக்கடுத்த நஷ்டத்தைப் பற்றிய அச்சமோ, வாழ்க்கையின் கவலையோ, மரண பயமோ அவருக்குக் கிடையாது. அவருக்கு அந்தஸ்து, நாடு, நிலைமை ஆகியவை இல்லை. கிறிஸ்துவின் சுவிசேஷம் என்ற ஒரே எண்ணத்தால் ஆட்சி கொள்ளப்பட்டிருந்த ஒரு மனிதன் தேவனுடைய மகிமை என்ற நோக்கத்தினால் நிறையப் பெற்றிருந்தான். ஒரு அறிவீனன். கிறிஸ்துவினிமித்தம் அறிவீனனாகக் கருதப்படுவதில் மன நிறைவு கொண்டவர். அவர் ஒரு தீவிரவாதி என்றோ அல்லது வைராக்கியம் கொண்டவர் என்றோ அல்லது ஒரு வாயாடி என்றோ அல்லது விளக்கம் கூற முடியாத வினோதமான ஏதோ ஒரு கூட்டத்தில் உலகம் அவரைச் சேர்த்துப் பேசுமானால் அப்பெயராலே அவர் அழைக்கப்படட்டும். ஆனால் இன்;;;னும் அவர் விளக்கப்படமுடியாத வினோதமான ஒரு மனிதன்தான்…… அவர் பேசவேண்டும், அல்லது சாகவேண்டும். இறக்க நேரிடும் அவர் பேசத்தான் செய்வார். அவருக்கு ஓய்வே கிடையாது. நிலத்திலும், நீரிலும், காடுமேடுகளிலும் பாதையற்ற பாலைவனங்களிலும் அவர் துரிதமாகப் பயணம் செய்து கொண்டே இருக்கிறார். விடாமல் உரக்கச் சத்தமிடுகிறார். அவரை யாரும் தடுக்க முடியாது. சிறைகளிலும் அவர் சத்தம் கேட்கிறது. கடலில் எழும்புகிற கடும் புயல்களிலும் அவர் அமைதியாயிருப்பதில்லை பயங்கர சங்கங்கள் முன்பும், அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர்கள் முன்;;பும் சத்தியத்தைக் குறித்து அவர் சாட்சி பகருகிறார். சாவேயன்றி வேறொன்றும் அவரது சத்தத்தை அடக்கமுடியாது. மரணத்திற்கு நியதிக்கப்பட்டுவிட்ட போதிலும் உடலிலிருந்து தலை துண்டிக்கப்படும் வரைக்கும் அவர் பேசுகிறார். பிரார்த்தனை செய்கிறார், சாட்சி சொல்லுகிறார், அறிக்கையிடுகிறார், வேண்டிக்கொள்ளுகிறார், போரிடுகிறார், முடிவில் கொடிய மக்களை ஆசீர்வதிக்கிறார். தேவனைப் பிரியப்படுத்த இதேபோன்ற கொழுந்து விட்டெரியும் வாஞ்சையை வெளிப்படுத்திய பிற மனிதரும் உளர்.
சி.டி.ஸ்டட் என்பவர் ஒரு முறை இவ்வாறு எழுதினார்:
ஆலைய மணியின் அண்மையிலே
அசையாது வாழ்வோர் பலர் ஆவார்,
நரகத்தின் வாசலில் நிலையமொன்றை
நிறுவி விடுவித்தல் என் ஆவல்.
நாத்திகன் ஒருவன் எழுதிய ஓர் உரையே ஸ்டட் தம்மை முற்றும் கிறிஸ்துவுக்குப் படைக்கக் காரணமாயிற்று. அந்த உரை கீழே தரப்பபடுகிறது. இவ்வுலகத்தில் இருக்கும்போது கடவுள் பக்தியை அறிந்து அதில் ஈடுபடுவதில் இன்னொரு உலகத்தில் நாம் அடையும் நிலையைப் பாதிக்கிறதென்பதைக் கோடிக்கணக்கான மக்கள் நம்புகின்றனர். அதை உறுதியாக நானும் நம்பினால் கடவுள் பக்தியே எனக்கு எல்லாமாய் இருக்கும். உலக சிற்றின்பங்களைக் குப்பை எனத் தள்ளுவேன். உலகக் கவலையும் அறிவீனம் என்று அகற்றுவேன். உலக எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் மாயை என விலக்குவேன். தூக்கம் நீங்கி விழிக்கையில் என் முதல் நினைவு கடவுள் பக்திக்கடுத்ததாகவே இருக்கும். உறக்கம் உணர்வின்மைக்குள் என்னைக் கொண்டுசெல்லும்முன் நான் காணும் கடைசிக்காட்சி இறை உணர்வாகவே இருக்கும். பக்திக்கடுத்தவற்றிற்காக மட்டுமே நான் பாடுபடுவேன். நித்தியத்தின் நாளைக்காகவே நான் கவலைப்படுவேன். பரலோகத்திற்காக ஆதாயப்படுத்தப்படும் ஓர் ஆத்துமா பாடுகள் நிறைந்த ஒரு வாழ்க்கையின் மதிப்பிற்கு ஈடாகும் என்று கருதுவேன். பூமிக்குரிய பலன் என் கையைத் தடுக்கவோ, என் உதடுகளை அடைக்கவோ முடியாது. பூமி – அதன் மகிழ்ச்சிகளும் துக்கங்களும் – என் சிந்தனையில் ஒரு நொடி கூட இடம் பெறாது. நித்தியத்தின் பேரில் மட்டுமே என் பார்வையைச் செலுத்துவேன். என்னைச் சூழந்து நிற்கும் – முடிவற்ற மகிழ்ச்சியை அல்லது முடிவற்ற துன்பத்தை விரைவில் அடையப்போகும் – அழிவற்ற ஆத்துமாக்களே என் கவனத்தைப் பெறுவர். உலகத்தினுள் சென்று சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் அதைப்பிரசங்கிப்பேன். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? என்பதே என் பிரசங்க வசனமாயிருக்கும்.
ஜான் வெஸ்லி ஒரு வைராக்கிய மாந்தன். தங்கள் முழு இருதயத்தோடும் இறைவனில் அன்பு கூர்ந்து, பாவத்தைத்தவிர வேறொன்றிற்கும் அஞ்சாத நூறு மனிதர் எனக்குக் கிடைத்தால் உலகத்தை அசைத்துவிடுவேன் என்று அவர் கூறினார்.
ஈ க்குவடார் பகுதியில் இரத்த சாட்சியாக உயிர்நீத்த ஜிம் எலியட் என்பவர் இயேசு கிறிஸ்துவுக்காக எரிந்து பிரகாசித்த ஒரு தீபமாயிருந்தார். தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜூவாலைகளாகவும் செய்கிறார் என்று எபிரெயர் 1:7ல் சொல்லப்பட்டிருப்பதை ஒரு நாள் தியானித்துக்கொண்டிருந்தபோது தம் நாட்குறிப்புப் புத்தகத்தில் அவர் எழுதியதாவது:
நான் கொளுத்தப்படக்கூடியவனா? நான் எரியாதபடி தடுக்கும் மற்றவைகள் என்ற கல்நாரினின்று கடவுள் என்னை விடுவிப்பாரா? நான் தீச்சுடராயிருக்கும்படி ஆவியின் எண்ணெயால் நான் முற்றிலும் நனைக்கப்படட்டும். ஆனால் அக்கினிச் சுவாலை தோன்றி துரிதமாக மறைந்து போகக் கூடியது. என் ஆத்துமாவே, இதை நீ சகிக்க முடியுமா – குறுகிய ஆயுள்? தேவனுடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியத்தால் எரிக்கப் பெற்ற, குறுகிய ஆயுள் கொண்ட அந்த மிகப்பெரியவரின் ஆவி என்னில் வசிக்கிறார். உமக்கு என்னை இரையாக்கும் தெய்வத் திருச்சுடரே.
இவ்வுரையின் கடைசி வரி ஏமி கார்மைக்கல் அம்மையார் எழுதிய ஆர்வம் மிக்க ஒரு செய்யுளிலிருந்து எடுக்கப்பெற்றது. ஆவியின் ஏவுதலை இப்பாடலின் மூலம் ஜிம் எலியட் பெற்றதில் அதிக வியப்பொன்றுமில்லை.
உம்மேலே மோதுகின்ற வெம்புயலை என்னை விட்டகற்றுமென்ற
விண்ணப்பத்தை என்னைவிட்டகற்றி எந்தன் அச்சம் நீக்கி
உயர்ந்தவற்றை வாஞ்சித்து விழாமல் மேலே செல்ல
எனக்குதவி என் தலைவா விடுவிப்பீர் சொகுசான சுயத்தினின்று
சொகுசான வாழ்க்கை நாடும் வஞ்சக விழைவினின்றும்
கல்வாரிக் காட்சியைத் தடுத்து நிற்கும் அனைத்தினின்றும்
அடியேனை விடுவிக்க வேண்டுகிறேன். ஏன் என்றால்
என் தலைவன் நீர் சென்ற வழி அஃது அல்லவே.
வழி காட்டும் அன்பும் அச்சமுறா விசுவாசமும்
தளராத நம்பிக்கையும் எரிந்து நிற்கும் வாஞ்சையையும்
குறைவின்றித் தந்தருளும். உமக்கு என்னை இரையாக்கும்
தெய்வத் திருச்சுடரே எரிந்தென்னைச் சாம்பலாக்கும்.
இன்றைய கிறிஸ்தவர்களைக் காட்டிலும் பொதுவுடைமைக் கட்சியினரும், தப்புக் கொள்கையினரும் அதிக வைராக்கியம் காட்டுகின்றனர். இது இருபதாம் நூற்றாண்டுக் கிறிஸ்தவ சபையின்மேல் சுமந்துள்ள நிந்தை.
1903ம் ஆண்டில் ஒரு மனிதன் தன்னைப் பின்பற்றும் பதினேழு பேரோடுகூட உலகத்தைத் தாக்கத் தொடங்கினான். அவன் பெயர் லெனின். 1918ம் ஆண்டிற்குள் அவர்கள் தொகை நாற்பதாயிரம் ஆயிற்று. அந்த நாற்பதாயிரம் பேரைக் கொண்டு அவன் ரஷ்யா நாட்டின் பதினாறு கோடி மக்களைத் தன் ஆளுகைக்குட்படுத்தினான். அந்த இயக்கம் தொடர்ந்து செயலாற்றி வருகிறது. இன்று உலகத்தின் மக்கள் தொகையில் முன்றில் ஒரு பங்கை அது கட்டுப்படுத்தி நடத்தி வருகிறது. அவர்களுடைய கொள்கைகளை எவ்வளவுதான் வெறுத்தாலும் அவர்கள் வைராக்கியத்தை வியந்து பாராட்டாமலிருக்க முடியவில்லை.
பின்வரும் கடிதம் அமெரிக்க நாட்டுக் கல்லூரி மாணவன் ஒருவனால் எழுதப்பெற்றது. மெக்ஸிக்கோ நாட்டில் அவன் பொதுவுடைமைக் கட்சியைத் தழுவினான். அவன் தான் மணந்துகொள்ள நிச்சயித்திருந்த பெண்ணுடன் கொண்டிருந்த உறவை முறிக்கவேண்டியதாயிற்று. அதன் காரணத்தை அவளுக்குத் தெரிவுக்கவே இக்கடிதத்தை அவன் எழுதினான். இதை முதல் தடவையாக பில்லி கிரஹாம் வாசித்துக் காட்டியபோது பல கிறிஸ்தவர்கள் கண்டித்து உணர்த்தப்பட்டனர்.
பொதுவுடைமைக் கட்சியினராகிய எங்களுக்குள் விபத்துவிகிதம் அதிகம். சுட்டுக் கொல்லப்படுகிறவர்களும், தூக்கிலிடப்படுகிறவர்களும், விசாரணையின்றிக் கொல்லப்படுகிறவர்களும் நாங்கள்தான். எங்களைத்தான் சிறையிலடைத்து, அவதூறாகப்பேசி நிந்திக்கிறார்கள். வேலையினின்று நீக்கிவிடுகிறார்கள். இன்னும் பல விதங்களில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு துன்பப்படுத்துகின்றனர். எங்களில் ஒரு குறிப்பிட்ட சத வீதத்தினர் கொல்லப்படுகின்றனர் அல்லது காவலில் வைக்கப்படுகின்றனர். உண்மையாகவே நாங்கள் வறுமையில் வாழ்கிறோம். நாங்கள் உயிர்வாழ மிக அவசியமாகத் தேவையான தொகைக்கு மிஞ்சி நாங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு காசையும் எங்கள் கட்சிக்குக் கொடுத்துவிடுகிறோம். கம்யூனிஸ்டுகளாகிய எங்களுக்கு பல படக்காட்சிகளுக்கோ சங்கீதக் கச்சேரிகளுக்கோ செல்ல நேரமோ பணமோ கிடையாது. அழகான வீடுகளோ புதிய கார்களோ எங்களுக்கு இல்லை. எங்களை வெறியர் என்கிறார்கள். நாங்கள் வெறியர்தான். உலகப் பொதுவுடைமைக்காக போராட்டம் என்ற ஓரே பெரிய ஆர்வத்தால் எங்கள் வாழ்க்கை ஆளப்படுகிறது.
எவ்வளவு பெரிய தொகையாலும் விலைக்கு வாங்க முடியாத ஒரு வாழ்க்கைத் தத்தவத்தைக் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் உடையவர்கள். போரிடுவதற்காக ஒரு காரணம் எங்களுக்கு உண்டு. வாழ்க்கையில் திட்டமான நோக்கமும் எங்களுக்கு உண்டு. எங்களுடைய சிறிய தனிப்பட்ட சுயத்தை மனித இனத்தின் மாபெரும் இயக்கம் ஒன்றிற்கு அடக்கிக் கட்டுப்படுத்துகிறோம். எங்கள் சொந்த வாழ்க்கை கடினமானதாகக் காணப்பட்டால், அல்லது எங்கள் கட்சிக்கு அடங்கி நடப்பதன் மூலம் எங்கள் சுயம் பாடுபடுவதாகத் தோன்றினால், நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் சிறுசிறு வழிகளில் மனுக்குலத்திற்கு முன்னேற்றத்தைத் தரும் புதிய, உண்மையான ஒன்றிற்காகப் பாடுபடுகிறோம் என்ற எண்ணம் எங்களுக்குப்போதிய பலனளிப்பதாக உள்ளது. நான் மிக்க ஊக்கம் கொள்ளும் ஒன்று உண்டு. அது பொதுவுடமைக் கட்சியினிமித்தம் நடைபெறும் செயல். அதுவே என் உயிர், என் தொழில், என் மதம், என் பொழுதுபோக்கு, என் காதலி, என் மனைவி, என் உணவு, பகலில் அது என் வேலை, இரவில் அதுவே என் கனவு, அது என்பேரில் கொண்டுள்ள பிடி. நாள் ஆக ஆக இறுகுகிறதேயன்றித் தளருவதில்லை. எனவே, என் வாழ்க்கையைத் தூண்டி வழிகாட்டி நடத்துகிற இந்தச் சக்கியோடு இணைக்காமல் ஒரு நட்பில், காதலில், ஒரு உரையாடலில்கூட தொடர்ந்து ஈடுபட்டிருக்க என்னால் முடியாது. மக்கள், நூல்கள், எண்ணங்கள், செயல்கள் ஆகியவற்றை அவை எவ்வாறு பொதுவுடைமைக் கட்சியின் நோக்கத்தைப் பாதிக்கின்றன, அதனிடம் எவ்வாறு நடந்துகொள்ளுகின்றன என்பதைக் கொண்டே நான் மதிப்பிடுகிறேன். நான் சிறைவாசம் செய்திருக்கிறேன். அவசியமானால் துப்பாக்கிக்கு இரையாகவும் ஆயத்தமாயிருக்கிறேன்.
பொதுவுடைமைக் கட்சியினர் இவ்வாறு தங்கள் கட்சிக்குத் தங்களை அர்ப்பணிப்பார்களானால், கிறிஸ்தவர்கள் தங்கள் மகிமையான ஆண்டவருக்காக எவ்வளவு அதிக அன்புடனும் மகிழ்ச்சியுடனும் தங்களைச் சமர்ப்பிக்கவேண்டும்! கர்த்தராகிய இயேசு ஒரு சிலவற்றை மட்டுமல்ல எல்லாவற்றையும் சமர்ப்பணமாகப் பெறத் தகுதியுடையவர். கிறிஸ்தவ விசுவாசம் நம்பத் தகுந்ததாக இருக்குமானால் அதை வீரத்தோடும் துணிவோடும் நம்பலாம், என்று ஃபிண்ட்லே என்பார் கூறினார்.
ஜேம்ஸ் டென்னி என்பவர் இவ்வாறு கூறுகிறார்: கடவுள் உலகத்தின் இரட்சிப்புக்கான ஒன்றை மெய்யாகவே கிறிஸ்துவுக்குள் நிறைவேற்றி அதை அறிவித்திருப்பாரானால், அதை அசட்டை செய்து, அதை மறுத்து ஏதோ ஒரு பொருளைக்கூறி அதைத் தள்ளிவிடுகிற எதையும் கிறிஸ்தவன் சகிக்கமாட்டான். அது அவன் கடமை.
பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குத் தங்களை முற்றிலும் ஒப்புவித்திருப்போரே தேவனுக்கு வேண்டும். மது உண்டு வெறித்தவர்கள்போல இவர்கள் பிறர்க்கும் காணப்படுவர். ஆனால் நன்கு அறிந்தவர்கள் தேவன் மேல் ஆளமான, அளவிடப்படமுடியாத, தொடர்ச்சியான, ஒரு போதும் நிறைவாக்கப்படமுடியாத தாகம் கொண்ட மாந்தர் இவர்கள் என்று உணர்ந்துகொள்வார்கள்.
சீஷர் ஆக ஆசைப்படும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் வைராக்கியம் இடம் பெற வேண்டுவது எவ்வளவு அவசியம் என்பதை உணர்வார்களாக. கீழே தரப்பட்டுள்ள அத்தியட்சர் ரைல் அவர்களின் வருணனையை நிறைவேற்ற அவர்கள் நாடுவார்களாக.
தேவ பக்தியில் ஆர்வம் உள்ள மனிதன் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரே நோக்கம் கொண்டுள்ள மனிதன். அவன் ஆர்வமுள்ளவன், மனப்பூர்வமாக காரியத்தில் ஈடுபடுகிறவன், விட்டுக்கொடாதவன், காரியங்களை முற்றும் நிறைவேற்றுகிறவன், முழுமனதோடு செயலாற்றுகிறவன், ஆவியில் அனலுள்ளவன் என்று சொன்னால் மட்டும் போதாது. அவன் ஒன்றை மட்டுமே பார்க்கிறான். ஓன்றைக் குறித்தே கவலைப்படுகின்றான். ஒன்றிலேயே மூழ்கிக் கிடக்கிறான். அந்த ஒன்று கடவுளைப் பிரியப்படுத்துவதுதான். அவன் பிழைத்தாலும் மரித்தாலும் அவன் சுகமாயிருந்தாலும் நோயுற்றாலும் அவன் செல்வந்தனாயினும் வறியவனாயினும் அவன் மனிதனைப் பிரியப்படுத்தினாலும் பிரியப்படுத்தப்படாவிட்டாலும் – அவன் அறிவுள்ளவன் என்று கருதப்பட்டாலும் – அவன் அறிவற்றவன் என்று எண்ணப்பட்டாலும் – அவன் நிந்திக்கப்பட்டாலும் புகழ்பெற்றாலும் – அவன் கனமடைந்தாலும் அவமதிப்படைந்தாலும் – இவை ஒன்றைப் பற்றியும் வைராக்கியம் மிக்க மனிதன் கவலைப்படுவதே இல்லை. ஒன்றிற்காகவே அவன் நெருப்பாய் எரிகிறான். அந்த ஒன்று தேவனைப் பிரியப்படுத்தி அவரது மகிமையைப் பெருக்குவதே. எரிவதில் அவன் சாம்பலாய் போனாலும் அதைப் பற்றி அவன் கவலைப்படான் – மனநிறைவடைகிறான். ஓரு விளக்கைப்போல எரியவேதான் உண்டாக்கப்பட்டவன் என்பதை அவன் உணருகிறான். எரிந்து சாம்பலாகி விட்டாலும் அவன் முடிப்பது தேவன் அவனுக்கு நியமித்த வேலையையே. அத்ததைகய மனிதன் தன் வைராக்கியத்தை வெளிப்படுத்தும் இடத்தை எப்போதும் பெறுவான். பிரசங்கிக்கவோ, வேலை செய்யவோ, பணம் கொடுக்கவோ முடியாவிட்டால் அவன் அழுவான், பெருமூச்செறிவான், விண்ணப்பம் செய்வான். ஆம், அவன் பரம ஏழையாயிருந்தாலும், நீங்காத நோய் கொண்டு படுக்கையிலே கிடந்தாலும், பாவத்திற்கு விரோதமாகத் தொடர்ந்து மன்றாடி தன்னைசூழக் காணப்படும் பாவத்தின் வேகத்தைக் குறைத்துவிடுவான். யோசுவாவோடு சேர்ந்து பள்ளத்தாக்கில் போரிட அவனால் முடியாவிட்டாலும் மலைமேலே மோசே, ஆரோன், ஊர் இவர்கள் செய்த வேலையைச் செய்வான் (யாத். 17:9-13) தான் வேலைசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டாலும், வேறு இடத்திலிருந்து உதவி அனுப்பப்பட்டு வேலை முடியும் வரை அவன் கர்த்தரை விடமாட்டான். கடவுள் பக்தியில் – சமய உணர்வில் – வைராக்கியம் என்ற நான் குறிப்பிடுவது இதைத்தான்.











