- விசுவாசம்
ஜீவனுள்ள தேவனில் ஆழ்ந்த, கேள்வி கேட்காத விசுவாசம் வைக்காவிட்டால் உண்மையான சீஷத்துவம் இருக்க முடியாது. தேவனுக்காக பலத்த செயல்களை நிறைவேற்ற விரும்புவோன் முதலாவது அவரைத் கேள்வி கேட்காமல் முழு மனதோடும் நம்பவேண்டும். தேவனுடைய பலத்த மனிதர் யாவரும் பலவீன மாந்தரே. அவர்கள் தேவனுக்காகப் பலத்த செயல்களை நிறைவேற்றினார்கள். ஏனெனில் தேவன் தங்களோடு இருக்கிறார் என்பது அவர்கள் எண்ணமாயிருந்தது, என்று ஹட்சன் டெய்லர் கூறியுள்ளார்.
உண்மையான விசுவாசம் எப்போதும் தேவனுடைய உறுதிமொழி ஒன்றை, அல்லது அவருடைய வசனத்தின் ஒரு பகுதியைச் சார்ந்திருக்கும். இது முக்கியமானது. கர்த்தருடைய வாக்குறுதி ஒன்றை ஒரு விசுவாசி முதலில் வாசிக்கின்றான், அல்லது கேட்கின்றான். மிகத் தனிப்பட்ட ஒரு விதத்தில் அந்த உறுதிமொழியை பரிசுத்த ஆவியானவர் அவன் இருதயத்திலும் மனசாட்சியிலும் பதிய வைக்கிறார். தேவன் தன்னோடு நேரடியாகப் பேசியிருக்கிறார் என்பதை அவன் அறிந்துகொள்ளுகிறான். மனிதருக்கடுத்த நிலையில் அது நடக்க முடியாத ஒரு காரியமாக இருக்கலாம். ஆயினும் வாக்குக் கொடுத்தவர் நம்பப்படத்தக்கவர். அவரில் வைக்கும் முழு நம்பிக்கையோடு அந்த கிறிஸ்தவன் தனக்குச் சொல்லப்பட்டதை ஏற்கெனவே நிறைவேற்றிவிட்ட ஒன்றைப் போல் அவ்வளவு உறுதியாக எடுத்துக்கொள்ளுகிறான்.
அல்லது அது ஒர் உறுதிமொழியாயிராமல் ஒரு கட்டளையாக இருக்கலாம். விசுவாகம் இதில் வேறுபாடு காண்பதில்லை. தேவன் கட்டளை கொடுத்தால் அதை நிறைவேற்ற ஆற்றலும் அருளுவார். நீரின்மேல் நடக்க அவர் பேதுருவுக்குக் கட்டளையிட்டால் அதற்குத் தேவையான பெலன் தனக்கருளப்படும் என்று பேதுரு நிச்சயமாய் நம்பக்கூடும் (மத். 14:28). எல்லா சிருஷ்டிக்கும் கிறிஸ்துவின் நற்செய்தி சொல்ல அவர் நமக்குக் கட்டளையிட்டால் அதற்கு அவசியமான கிருபை நமக்கு அருளப்படும் என்று நாம் உறுதியாய் நம்பலாம் (மாற்.16:15).
மனிதனால் முடியாத என்ற இடத்தில் விசுவாசம் செயலாற்றுவதில்லை. மனிதனால் செய்து முடிக்கக் கூடியவற்றால் தேவனுக்கு மகிமையில்லை. மனிதனின் சக்தி முடிவுபெறும் இடத்தில்தான் விசுவாசம் தொடங்குகிறது என்று கூறுகிறார் ஜியார்ஜ் முல்லர்.
இயலாது என்பதுதான் ஒரே இடர்ப்பாடாக இருக்குமானால் அதைச் செய்து முடிக்க முடியும்! என்று விசுவாசம் கூறுகிறது.
விசுவாசம் தேவனை நிகழ்ச்சிக்குள் கொண்டு வருகிறது. ஆகவே அதற்குக் கஷ்டங்களே கிடையாது. ஆம், இயலாது என்ற கருதப்படுகிறவைகளைப் பார்த்து அது நகைக்கிறது. தேவனே ஒவ்வொரு கேள்விக்கும் உயர்ந்த விடை என்பது விசுவாசத்தின் தீர்ப்பு. ஒவ்வொரு கஷ்டத்திற்கும் விடை அவரே. விசுவாசம் எல்லாவற்றையும் அவரிடம் கொண்டுவருகிறது. எனவே, ஆறு இலட்சமாக இருந்தாலும், அறுபது கோடியாக இருந்தாலும் விசுவாசம் சிறிதும் கவலைப்படுவதில்லை. தேவன் முற்றிலும் போதுமானவர் என்பது அதற்குத் தெரியும். தனக்குத் தேவையான எல்லாவற்றையும் அது கண்டடைகிறது. ஆனால் அவ்விசுவாசம் அது எப்படி நடக்கும்? என்று கேட்கிறது. எப்படி, எப்படி என்பதே அதன் கேள்வி. ஆனால் எப்படி என்று பதினாயிரம் தடவை கேட்கப்பட்டாலும் விசுவாசம் ஒரே ஒரு விடையைச் சொல்லுகிறது. அந்த விடை தேவன் என்பதே என்று சி. எச். மக்கின்றோஷ் என்பவர் கூறுகிறார்.
மனிதருக்கடுத்தபடி ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் குழந்தை பிறப்பது முற்றிலும் முடியாத ஒரு காரியமாயிருந்தது. ஆனால் தேவன் உறுதி கூறியிருந்தார். அவர் பொய் சொல்லுவது கூடாத காரியம் என்பது ஆபிரகாமுக்கு தெரியும். உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்று ஏதுவில்லாதிருந்தும் , அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான். அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை. அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும் போது, தன் சரீரம் செத்துப் போனதையும் சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான். தேவனுடைய வாக்குத்தத்தத்தை குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான் (ரோம. 4:18-21).
தேவனை மட்டும் பார்க்கும்
வல்ல விசுவாசம்.
முடியாதென்றால் நகைக்கும்
முடியுமென்றிடும்.
முடியாதவை என்று கருதப்படும் காரியங்களில் நமது தேவன் சிறப்புக் கவனம் செலுத்துகிறார் (லூக். 1:37). அவரால் ஆகாதது ஒன்றுமில்லை (ஆதி. 18:14). மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் (லூக்.18:27).
விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் (மாற்கு 9:23) என்ற வாக்குத்தத்தம் நிறைவேறுவதை விசுவாசம் உரிமை பாராட்டிக் கேட்பதோடு, என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு (பிலி. 4:13) என்று பவுலோடு சேர்ந்து பெருமகிழ்ச்சியடைகிறது.
அவிசுவாசம் காண்கிறது வழி மறிக்கும் தடைகளை
விசுவாசம் பார்க்கிறது திறந்து நிற்கும் நல்வழியை
அவிசுவாசம் காண்கிறது இடர்மிக்க காரிருளை
விசுவாசம் பார்க்கிறது ஒளிமிக்க நண்பகலை
அவிசுவாசம் அஞ்சி நிற்கும் அடியெடுத்து முன் செல்ல
விசுவாசம் பறந்து செல்லும் உயர்வடைந்து மேன்மையுற
அவிசுவாசம் கேட்கிறது நம்புவோன் யார் என்று
விசுவாசம் சொல்கிறது துணிவுடனே நான் என்று.
விசுவாசம் இயற்கைக்கு மேலான தெய்வீகக் காரியங்களோடு தொடர்பு கொள்வதால் அது விவேகம் உள்ளதாக எப்போதும் காணப்படுவதில்லை. ஆபிரகாம் கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து தான் போகுமிடம் இன்னதென்று தெரியாமல் புறப்பட்டுச் சென்றான் என்றால் அது பொது அறிவைப் பயன்படுத்தியதாகாது (எபி. 11:8). கொடிய ஆயுதங்களைக் கையாடாமல் யோசுவா எரிகோவைத் தாக்கியது. கூரிய மதியுடைமையைக் காட்டுவதல்ல (யோசுவா. 6:1-20). உலக மனிதர் இத்தகைய பைத்தியக்காரத்தனத்தைப் பரியாசம் பண்ணுவார்கள். ஆனால் அது வெற்றியைக் கொடுத்தது.
உண்மையில் விசுவாசம் மிக விவேகமானது. படைக்கப்பட்ட ஒன்று தன்னைப் படைத்தவரை நம்புவதைப் பார்க்கிலும் அதிக விவேகமானது எது? பொய் சொல்லக் கூடாது, ஏமாற்றக் கூடாது, தவறு செய்யக் கூடாது ஒருவரை நம்புவது பைத்தியக்காரத்தனமா? தேவனில் நம்பிக்கை வைப்பதுதான் ஒரு மனிதன் செய்யக்கூடிய பகுத்தறிவுள்ள, விவேகமான செயல். இருளுக்குள் குதிக்கிற ஒன்றல்ல அது. உறுதியான சாட்சி வேண்டுமென்று விசுவாசம் கேட்கிறது. தேவனுடைய தவறான வார்த்தையில் அதைக் கண்டுபிடிக்கிறது. ஓருவரும் அவரில் வீணில் நம்பிக்கை வைத்ததில்லை: இனியும் வைக்கமாட்டார்கள். கர்த்தரில் விசுவாசம் வைத்தல் ஆபத்தானதே அல்ல.
விசுவாசம் உண்மையாகவே தேவனை மகிமைப்படுத்துகிறது. அவர் முற்றிலும் நம்பப்படத்தக்கவர் என்று சொல்லி அவருக்குரிய சரியான இடத்தை அது அவருக்குத் தருகிறது. ஆனால் அவிசுவாசம் தேவனைக் கனவீனப்படுத்துகிறது. அவரைப் பொய்யராக்குகிறது. (1யோவான்.5:10). இஸ்ரவேலரின் பரிசுத்தரை அது மட்டுப்படுத்துகிறது சங். 78:41.
விசுவாசம் மனிதனுக்கும் அவனுக்குரிய இடத்தைக் கொடுக்கிறது. அவன் தாழ்ந்து மன்றாடுகிறவன். எல்லாவற்றையும் ஆளும் கர்த்தருக்கு முன் தரையில் விழுந்து பணிந்துகொள்ளுகிறவன்.
விசுவாசம கண்ணால் கண்டு நடப்பதற்கு விரோதமானது. நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம் (1.கொரி.5:6) என்று பவுல் நமக்கு நினைவூட்டினார். தரிசித்து நடத்தல் என்பது வாழ்வதற்கான வெளிப்படையான ஆதாரமாக, வருங்காலத்திற்காக வைக்கப்பட்டுள்ள பொருள். இப்போது பார்க்க முடியாத ஆனால் எப்போதாவது நேரிடக்கூடிய ஆபத்துக்களுக்கு எதிராக மனித அறிவைப் பயன்படுத்தி சேர்க்கும் ஆயுள் காப்பு நிதி இவைகளைப் பெற்றிருத்தல். இதற்கு முற்றிலும் மாறானது விசுவாசித்து நடத்தல். அதாவது தேவனை மட்டுமே நொடிதோறும் சார்ந்திருத்தல். கண்ணுக்குத் தெரியாத கடவுளை முழுவதும் சார்ந்திருக்கும் நிலையினின்று மாம்சம் பின்வாங்குகிறது. தான் போகும் இடத்தை அது காணமுடியாவிட்டால் முழு நரம்புத்தளர்ச்சியை அடைந்துவிடும். ஆனால் விசுவாசம் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து முன் நோக்கிச் சொல்லுகிறது. சமய சந்தர்ப்பங்களுக்கு மேலே எழுகிறது. எல்லாத் தேவைகளும் நிறைவாக்கப்பட கர்த்தரை நம்புகிறது. விசுவாசித்து நடக்கத் தீர்மானித்து எந்தச் சீஷனும் தன் விசுவாசம் சோதிக்கப்படும் என்பதை நிச்சயமாய் அறிந்துகொள்ளலாம். அவன் பெற்றிருக்கும் மனித ஆதாரம் அகற்றப்படும். வேறு வழியில்லாத நிலைமையில் பிறரிடம் உதவி கேட்குமாறு அவன் சோதிக்கப்படுகிறான். அவன் உண்மையில் கர்த்தரை நம்பியிருந்தால் தேவனை நோக்கி மட்டுமே தன் கண்களை ஏறெடுப்பான். என்னுடைய தேவைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு மனிதனுக்குத் தெரிவிப்பது விசுவாச வாழ்கையினின்று விலகுதலும், திட்டமாகத் தேவனைக் கனவீனம் பண்ணுதலும் ஆகும். உண்மையாகவே அது அவரைக் காட்டிக்கொடுப்பதாகும். கடவுள் என்னைக் கைவிட்டுவிட்டார். மனிதன் தான் எனக்கு உதவ வேண்டுமென்று சொல்லுவது அது சமமாகும். அது ஜீவ நீரூற்றினை விட்டுவிட்டு உடைந்துபோன தொட்டிகளை அணுகுவதாகும். என் ஆத்துமாவுக்கும் தேவனுக்கும் இடையே படைக்கப்பட்ட ஒன்றை நிறுத்தி என் ஆத்துமாவுக்குக் கிடைக்கக்கூடிய மிக்க ஆசீர்வாதத்தை அது அடையாதபடி தடுப்பதோடு தேவனுக்குரிய மகிமையையும் அவருக்குப் படைக்கப்படாதபடி தடுப்பதாகும் என்று சி. எச். மக்கின்றோஷ் கூறுகிறார்.
தன் விசுவாசம் பெருகவேண்டும் என்று விரும்புவதே ஒரு சீஷனின் சரியான மனநிலை (லூக்கா. 17:5). இரட்சிப்புக்காக அவன் ஏற்கனவே கிறிஸ்துவை நம்பியிருக்கிறான். இப்போது ஆண்டவருடைய ஆளுகைக்கு அர்ப்பணிக்கப்பட்ட பகுதிகளை அதிகப்படுத்த அவன் அவாவுகிறான். அவன் நோய்வாய்ப்படும்போது, பாடுகளால் பாரப்படும்போதும், சோக நிகழ்ச்சியைச் சந்திக்கும்போதும், யாரையோ மரணத்தின்மூலம் இழந்து விடும்போதும் ஒரு புதிய, அதிக நெருங்கிய விதத்தில் தேவனை அறிந்துகொள்ளுகிறான். அவன் விசுவாசமும் உறுதிப்படுகிறது. கர்த்தரை அறிந்துகொள்ள நாம் தொடர்ந்து சென்றால் நாம் அறிந்துகொள்வோம் (ஓசியா. 6:3) என்ற உறுதிமொழியின் உண்மையை அவன் நிரூபிக்கிறான். தேவன் நம்பப்படத்தக்கவர் என்பதை அறிய பெரிய காரியங்களுக்காக அவரில் நம்பிக்கை வைக்க அவன் விழைகிறான்.
விசுவாசம் கேட்பதால் வருகிறது. கேட்பது தேவனுடைய வார்த்தையால் வருகிறது. எனவே சீஷன் திருமறையில் மூழ்கிக் கிடக்க, அதை வாசிக்க, கற்றறிய மனப்பாடம் செய்ய, இரவும்பகலும் அதில் தியானமாயிருக்க வேண்டும். அதுவே அவனுக்குத் திசைகாட்டி, வழி காட்டி, ஆறுதல், விளக்கு, வெளிச்சம் எல்லாம்.
வுpசுவாச வாழ்க்கையில் எப்போதும் முன்னேற இடமுண்டு. விசுவாசத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டிருப்பவற்றைப்பற்றி வாசிக்கையில், நாம் எல்லையற்ற பெருங்கடலின் ஓரத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறு பிள்ளைகளைப்போல இருப்பதாக உணர்கிறோம். விசுவாசத்தின் வீரச் செயல்கள் எபிரேயருக்கு எழுதப் பெற்ற கடிதத்தில் 11ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. இவ்வதிகாரத்தில் 32 முதல் 40 வரையுள்ள வசனங்களில் கீழ்க்கண்டவாறு வாசிக்கிறோம்.
பின்னும் நான் என்னசொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையும் குறித்து நான் விபரஞ்சொல்லவேண்டுமானால் காலம் போதாது. விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள். வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினியின் உக்கிரகத்தை அவித்தார்கள், பட்டயக் கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலங்கொண்டார்கள், யுத்தத்தில் வல்லவர்களானார்கள். அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள். ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள், வேறு சிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு விடுதலை பெறச் சம்மதியாமல் வாதிக்கப்பட்டார்கள், வேறு சிலர் நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும் காவலையும் அனுபவித்தார்கள். கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சை பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அனுபவித்தார்கள். உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை. அவர்கள் வனாந்திரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும், பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள். இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சி பெற்றும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷத்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.
முடிவாக ஒரு சொல்! விசுவாசித்து நடக்கிற ஒரு சீஷனை சொப்பனக்காரன் அல்லது வெறியன் என்று உலக மனிதரும் பிற கிறிஸ்தவர்களும்கூட கருதுவர் என்பது உறுதி. ஆனால் ஒருவன் தேவனோடு நடக்க உதவி செய்யும் விசுவாசம் மனிதருடைய எண்ணங்களுக்கு அவற்றிற்கேற்ற மதிப்பைக் கொடுக்கவும் துணை புரிகிறது என்று சி.எச். மக்கின்றோஷ் கூறியுள்ளதை நினைவிற்கொள்ளுதல் நல்லது.










