- போராட்டம்
கிறிஸ்துவானவர் பூமியில் நிறைவேற்றும் செயலை விளக்கப் போராட்டம் என்ற உருவகம் அடிக்கடி புதிய ஏற்பாட்டில் உபயோகிக்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டைக் கருத்தூன்றிப் படிக்காதவர்கள்கூட இதைக் கவனிக்காமலிருக்க முடியாது. உண்மைக் கிறிஸ்தவ உல்லாச வாழ்க்கை நடத்தும் இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தினின்று முற்றிலும் வேறுபட்டது. இன்று பெருவாரியாகக் காணப்படுகிற ஆடம்பர வாழ்க்கையோடும், சிற்றின்ப நாட்டத்தோடும் மெய்க்கிறிஸ்தவத்தை இணைத்து நோக்கக்கூடாது. சரியாகச் சொன்னால் மெய்கிறிஸ்தவம் மரணம்வரை நடக்கும் ஒரு போராட்டம். நரகத்தின் சேனைகளோடு ஓய்வின்றி நடக்கும் யுத்தம். போர் நடக்கிறது. பின்வாங்குதல் இல்லை என்று உணராத சீஷன் எவ்வித மதிப்பும் உடையவன் அல்ல.
போர் புரிவதில் ஐக்கியம் அவசியம். சச்சரவுகளுக்கும் கட்சிப் பிரிவினைகளுக்கும் உண்மையின்மைக்கும் அது நேரமில்லை. தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்த வீடும் நிலைநிற்காது. எனவே, கிறிஸ்துவின் வீரர்கள் ஒன்றுபட்டுநிற்றல் வேண்டும். மனத்தாழ்மையின் மூலம் ஐக்கியத்திற்கு வழி உண்டாகும். புpலிப்பியர் 2 அதிகாரத்தில் இது தெளிவாகக் கற்பிக்கப்பட்டுள்ளது. உண்மையாகவே மனத்தாழ்மையுள்ள மனிதனிடம் சண்டை சச்சரவுகளுக்கு இடமிராது. சண்டையிட இருவர் வேண்டும். பெருமையினாலே சண்டை வருகிறது. எங்கே பெருமையில்லையோ அங்கே சண்டைக்கு இடமில்லை.
போரில் ஈடுபட கடினமான தியாக வாழ்க்கை வேண்டும். எந்த யுத்தத்திலும் தவறாமல் பங்கீடு முறை கையாளப்படுகிறது. நாம் போரில் ஈடுபட்டிருக்கிறோம். எனவே, செலவுகளை மிகவும் குறைத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு மிகப்படுத்திப் போராட்டத்திற்கு உதவ வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் உணரவேண்டிய வேளையாயிற்று.
இளைஞனான ஒரு சீஷன் இதைத் தெளிவாகக் கண்டுகொண்டான். அவனைப்போல எல்லாரும் இதைக் கண்டு கொள்வதில்லை. அமெரிக்காவிலுள்ள கிறிஸ்தவ பள்ளியொன்றில் ஒரு வகுப்பின் மாணவத் தலைவனாக அவன் இருந்தான். அவனுடைய பதவிக்காலத்தில் வழக்கமாக வகுப்பு விருந்துக்களுக்கும், சட்டைகளுக்கும், அன்பளிப்புக்கும் பணம் செலவிடப்பட வேண்டுமென்று விருப்பம் தெரிவிக்கப்பட்டது. சுவிசேஷத்தைப் பரவச் செய்யும் நேரடியான முயற்சிகளுக்குப் பயன்படாத அத்தகைய செலவுகளை ஒப்புக்கொள்ள மறுத்த அந்த இளைஞன் தன் பதவியை விட்டுவிட்டான். அவன் பதவிவிட்டு விலகிய செய்தி அறிவிக்கப்பட்ட நாளிலே கீழ்க்கண்ட கடிதம் அவ்வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது:
அன்பார்ந்த உடன் மாணவர்களே, வகுப்பு விருந்துகள், சட்டைகள், அன்பளிப்பு இவை பற்றியபேச்சு வகுப்பு மந்திரிசபைமுன் கொண்டுவரப்பட்டதிலிருந்தே வகுப்புத் தலைவனான நான் இவை பற்றிய கிறிஸ்தவ மனப்பான்மைபற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்திருக்கிறேன்.
நம்மையும், நம் பணத்தையும், நம் நேரத்தையும் முற்றிலுமாகக் கிறிஸ்துவுக்கும் பிறருக்காகவும் கொடுப்பதில் நாம் மிகச் சிறந்த களிப்பெய்துவோம் என்று நான் கருதுகிறேன். இவ்வாறு செய்தால், என்னிமித்தம் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் காண்பான், என்ற அவர் கூற்றின் உண்மையைக் கண்டுகொள்ளலாம்.
அவிசுவாசிக்குத் திட்டமான சாட்சி சொல்ல, அல்லது தேவனுடைய பிள்ளைகள் அவரில் வளருவதற்கு துணைபுரிய பயன்படாதவற்றிற்காகக் கிறிஸ்தவர்கள் தங்கள் பணத்தையும் நேரத்தையும் செலவிடுவது, மனிதனின் ஒரே நம்பிக்கையைப்பற்றி பாதி உலகத்திற்கு மேல் கேள்விப்பட்டதே இல்லை என்ற உண்மைக்கு முரணானதாகக் காணப்படும்.
நாம் ஒரு சிறு கூட்டமாகக் கூடிவந்து, நம்முடைய உல்லாசத்திற்காகவே பணத்தையும் நேரத்தையும் செலவு செய்வதைக் காட்டிலும் இயேசுக்கிறிஸ்துவைப்பற்றிக் கேட்டறியாத மற்ற 60 சதவீதம் மக்களுக்கு அல்லது நம் அருகே உள்ள மக்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்க உதவி செய்வோமானால் தேவனுக்கு எவ்வளவு அதிக மகிமையைக் கொடுக்க முடியும்.
இயேசுக்கிறிஸ்துவின் மகிமைக்காகவும், இங்கேயும் பிற இடங்களிலும் உள்ள என் அயலானுக்கு உதவி செய்யவும் பணத்தைப் பயன்படுத்துவதற்கேற்ற குறிப்பிட்ட தேவைகளும் வாய்ப்புகளும் உள்ளன என்பதை நான் அறிந்திருக்கிறேன். எனவே, வகுப்புப் பணத்தை அவசியமில்லாமல் நமக்காகவே செலவு செய்ய என்னால் அனுமதிக்க முடியவில்லை. பெரிய தேவைகள் உள்ளவர்களாகப் பலர் இருப்பதை நான் அறிந்திருக்கிறேன். அவர்களில் ஒருவனாக நான் இருந்தால் எனக்குச் சுவிசேஷத்தையும் பிற பொருள் உதவிகளையும் அளிக்க வசதியுள்ளவர்கள் தங்களால் ஆனவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்று விரும்புவேன்.
மனுஷன் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்கு குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக் கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?
ஆகவே கர்த்தராகிய இயேசு தம்முடைய எல்லாவற்றையும் கொடுப்பதை (2கொரி.8:9) நீங்கள் காணவேண்டும் என்ற அன்போடும் ஜெபத்தோடும், 1963ம் ஆண்டின் வகுப்புத் தலைவனின் பதவியைவிட்டு விலகிக் கொள்ளுகிறேன்.
உங்களோடு அவருக்குள்
ஆர்.எம்
போரில் ஈடுபட்டால் பாடுபடவேண்டும். தங்கள் நாட்டிற்காக உயிர் துறக்க வாலிபர் இன்று முன்வருகின்றனர். அப்படியானால் கிறிஸ்துவின் நிமித்தமும், சுவிசேஷத்தின் நிமித்தமும் உயிரை இழக்க கிறிஸ்தவர்கள் எவ்வளவு அதிகமாக முன்வரவேண்டும். எதையும் இழக்க மனமற்றிருக்கிற விசுவாசத்திற்கு எந்த மதிப்பும் கிடையாது. ஆண்டவராகிய இயேசுவுக்கு நான் அளிக்கும் மதிப்பு முழு மதிப்பாகவே இருக்கவேண்டும். நமக்குப் பாதுகாப்புவேண்டும், நாம் துன்பப்படக்கூடாது என்ற எண்ணங்கள் அவருக்கு ஊழியம் செய்யாதபடி நம்மைத் தடுக்கக் கூடாது.
குறுகிய மனம்படைத்த வக்கணைக்காரர் அப்போஸ்தலனாகிய பவுலைத் தாக்கினார். தம்முடைய அப்போஸ்தலர் அதிகாரத்தை அவர்களுக்கு நிரூபிக்க அவர் முயன்றபோது தாம் தோன்றிய குடும்பச் சிறப்பையோ, தாம் பெற்ற கல்வியையோ, தம் உலக அறிவாற்றலையோ அவர் சுட்டிக்காட்டவில்லை. கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவினிமித்தம் தாம் அடைந்த பாடுகளையே அவர் சுட்டிக்காட்டினார். அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம். புத்தியீனமாய்ப் பேசுகிறேன். நான் அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகதரம் மரண அவதியில் அகப்பட்டவன், யூதர்களால் ஒன்று குறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன், மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஓருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற் சேதத்தில் இருந்தேன். கடலில் ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன், அநேக தரம் பிரயாணம் பண்ணினேன், ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், பிரயாணத்திலும், வருத்தத்திலும், அநேக முறை கண்விழிப்புக்களிலும், பசியிலும் தாகத்திலும், அநேக முறை உபவாசத்திலும், குளிரிலும் நிர்வாணத்திலும் இருந்தேன். இவைமுதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக் குறித்து உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது என்றார் (2கொரி.11:23-28).
மகன் திமோத்தேயுவுக்கு அவர் விடுத்த உயர்ந்த அறைகூவலில் நீயும் இயேசுக் கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச் சேவகனாய்த் தீங்கனுபவி (திமோ.2:3) என்று கூறினார்.
போரில் ஈடுபட்டால் கேள்வி கேட்காமல் முற்றும் கீழ்படியவேண்டும். உண்மையான போர் வீரன் கேள்விகள் கேட்காமலும், கால தாமதம் பண்ணாமலும் தன் தலைவனின் ஆணைப்படி நடப்பான். இதற்குக் குறைவான ஒன்று கிறிஸ்துவைத் திருப்திபடுத்தும் என்று நினைப்பது அறிவீனம். போரில் ஈடுபடத் தம்மைப் பின்பற்றுவோர் கட்டளைகளுக்கு உடனடியாக முழுவதும் கீழ்படியவேண்டும் என்று எதிர்பார்க்கும் உரிமை சிருஷ்டிகரும் மீட்பருமாகிய அவருக்கு உண்டு.
போரில் ஈடுபடுவோர் போர் ஆயுதங்களைப் பயன்படுத்தத் திறமை பெற்றிருக்கவேண்டும். ஜெபமும் வேத வசனமும் கிறிஸ்துவின் ஆயுதங்கள். அவன் விசுவாசத்தோடும் விடா முயற்சியோடும் ஊக்கமாக ஜெபத்தில் தரித்திருக்கவேண்டும். பகைவனின் அரண்களைத் தகர்க்க இதுதான் வழி. தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தைக் கையாளுவதிலும் அவன் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். அவனை ஏமாற்ற எதிரி தன்னால் ஆன எல்லாவற்றையும் செய்வான். வேதாகமம் தேவ ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பெற்றது என்ற உண்மையை சந்தேகிக்கச் செய்வான். முரண்பாடுகள் என்று சொல்லப்படுகிறவற்றைச் சுட்டிக்காட்டுவான். விஞ்ஞானம், தத்துவம், மனிதபாரம்பரியம் என்பனவற்றிலிருந்து எதிர்த்துப்பேசும் தர்க்கங்களைக் கொண்டுவருவான். ஆனால் கிறிஸ்துவின் போர் வீரன் சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் நிரூபித்துத் தன் நிலையிலே நிற்கவேண்டும்.
கிறிஸ்தவப் போராட்டத்தின் போர்க்கருவிகள் உலக மனிதனுக்கு நகைக்கப்படத்தக்கவைகளாகக் காணப்படும். எரிக்கோவின் மேல் வெற்றி தந்த திட்டம் இன்றைய இராணுவத் தலைவர்களால் பரியாசம் பண்ணப்படும். கிதியோனின் அற்பமான இராணுவம்; கேலி பண்ணப்படும். தாவீதின் கவண், சமகாரின் தாற்றுக்கோல், தேவனுக்காகப் பலநூற்றாண்டுகளாகப் போராடி வந்திருக்கிற அறிவீனர்களாலான அற்ப சேனை இவற்றைப்பற்றி என்ன சொல்லுவோம்? தேவன் பெரும் சேனைகளின் பக்கத்தில் இருக்கிறவர் அல்ல, பலவீனமானவற்றையும் எளியவற்றையும் தள்ளப்பட்டவற்றையும் எடுத்து அவற்றின்மூலம் தம்மை மகிமைப்படுத்தவே அவர் விரும்புகிறார் என்பதை ஆவிக்குரிய மனம் அறிந்து கொள்ளுகிறது…
போரில் ஈடுபடுவோர் பகைவனைப்பற்றியும் அவனது போர்த்தந்திரத்தைப்பற்றியும் அறிந்து கொள்ளவேண்டும். கிறிஸ்தவப்போராட்டத்திலும் அப்படியே. ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதியோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப்போராட்டமுண்டு (எபேசியர்.6:12). சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்;துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக் கொண்டால் அது ஆச்சரியமல்லவே. அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத் தக்கதாயிருக்கும் (2கொரி.11:14-15).
பயிற்சி பெற்ற கிறிஸ்தவ ஊழியன் தன்னைச் சந்திக்கும் கசப்பான எதிர்ப்பு குடிகாரனிடமிருந்தோ, திருடனிடமிருந்தோ, வேசியிடமிருந்தோ வராமல் சமயத் தலைவரிடமிருந்தே வருகிறது என்று அறிந்திருக்கிறான். கடவுளுடைய கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்தவர்கள் சமயத் தலைவர்களே. ஆதிச்சபையைத் துன்புறுத்தியவர்கள் சமயத் தலைவர்களே. தங்களைக் கடவுளின் தொண்டர்கள் என்று கூறிக்கொண்டவர்கள்தான் பவுலை மிருகத்தனமாகத் தாக்கினார்கள். எல்லாக் காலங்களிலும் இப்படியே இருந்திருக்கிறது. சாத்தானின் வேலையாட்கள் நீதியின் ஊழியரைப்போல தோற்றமளிக்கின்றனர். அவர்கள் பேசுவது சமய மொழி. அவர்கள் அணிவது சமய ஆடை. அவர்களிடம் காணப்படுவது நடித்துக்காட்டப்படும் பக்தி. ஆனால் அவர்கள் உள்ளமோ கிறிஸ்துவையும் அவருடைய சுவிசேஷத்தையும் வெறுக்கும் வெறுப்பால் நிறைந்திருக்கிறது.
போரில் பங்குகொள்வோம் தங்கள் கவனத்தை சிதறவிடக்கூடாது. தண்டில் சேவகம் பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.(தீமோ.2:4) தன் ஆன்மாவுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் கொள்ளும் பூரணபக்திக்கும் இடையே வந்து நிற்கும் எதையும் சகிக்காதிருக்கக் கிறிஸ்துவின் சீஷன் கற்றுக்கொள்கிறான். அவன் இரக்கமற்றவன், ஆனால் கோபமூட்டமாட்டான். அவன் உறுதியானவன், ஆனால் மரியாதையற்றவன் அல்ல. ஒரே ஒரு தீவிர உணர்ச்சி அவனைப் பற்றியிருக்கிறது. மற்றவை அனைத்தம் சிறைப்படுத்தப்படவேண்டும்.
போருக்குச் சொல்வோர் ஆபத்தில் தைரியம் காட்ட வேண்டும். ஆகையால், தீங்கு நாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். ……………… நில்லுங்கள் (எபே.6:13-16). ஏபேசியர் 6-ஆம் அதிகாரம் 13முதல் 17 வரையுள்ள வசனங்களில் கூறப்பட்டுள்ள கிறிஸ்தவனின் போர்க் கவசத்தில், முதுகைப் பாதுகாக்கும் ஒன்றும் கூறப்படவில்லை என்பது அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே முதுகுகாட்டி ஓட வாய்ப்பே இல்லை. ஏன் முதுகு காட்டவேண்டும்? நாம் நம்மில் அன்பு கூறுகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களால் இருந்தால், தேவன் நம்பக்கத்தில் இருப்பதால் நம்மை எதிர்த்து வெற்றிகாண எவராலும் முடியாதிருந்தால், போரிடத் தொடங்கு முன்னமேயே வெற்றி நமக்கே என்னும் உறுதியளிக்கப்பட்டிருந்தால், பின்வாங்குதலைப் பற்றி எப்படித்தான் சிந்திக்க முடியும்??










