9 உலக ஆளுகை
தேவன் நம்மை உலக ஆளுகைக்கு அழைத்திருக்கிறார். நிலையற்ற முயற்சிகளில் சிறு ஊழியராக நாம் நமது வாழ்க்கையைச் செலவிடுவது அவருடைய நோக்கமாக இருந்ததில்லை.
கர்த்தர் மனிதனைப் படைத்தபோது பூமியின்மேல் அவனுக்கு ஆளுகை கொடுத்தார். மகிமையினாலும் மதிப்பினாலும் அவனை முடிசூட்டி எல்லாவற்றையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினார். கனமும் ஆளும் அதிகாரமும் மனிதனுக்கு அணிவிக்கப்பட்டன. ஆனால் தேவதூதரைக் காட்டிலும் சற்று சிறியவனாக மனிதன் இருந்தான்.
ஆண்டவரது ஆணையால் தான் பெற்றிருந்த ஆளுகையின் பெரும் பகுதியை ஆதாம் பாவம் செய்தபோது இழந்துவிட்டான். வாதாடுவார் இன்றி ஆளுகை செலுத்துவதற்குப் பதிலாக நிச்சயமற்ற ஓர் இராச்சியத்தை உறுதியற்றவிதத்தில் அவன் ஆண்டான்.
ஆளுகையை மீண்டும் கைப்பற்றுதல் பற்றி சுவிசேஷம் பேசுகிறது. ஆனால் இப்போது உறுமும் நாய்களையும், நச்சுப்பாம்புகளையும் அடக்கியாளுவதல்ல, கிறிஸ்துவை அறியாதோரை நம்முடைய சுதந்திரமாகவும், பூமியின் எல்லைகளை நம்முடைய உடமைகளாகவும் ஆக்கிக்கொள்ளுதலே. சன்மார்க்கத்தாலும் ஆவிக்குரிய அதிகாரத்தாலும் ஆட்சிசெலுத்துதல். தூய்மையான பரிசுத்தமாக்கப்பட்ட ஒரு வாழ்க்கையின் கவர்ச்சியால் இழுத்து ஆளுதல். இதுவே உண்மையான ஏகாதிபதியம், என்றார் ஜே.எச். ஜோவெட்.
இந்தக்கிறிஸ்தவ அழைப்பின் சிறப்பு ஆதாம் அறியாத ஒன்று. உலக மீட்பின்தேவனோடு பங்குகொண்டவர்கள் நாம். மனிதர் ராஜ வாழ்வைப் பெற, சுயத்தை ஆளும் சர்வதிகாரத்தையடைய, இராஜ்யத்திற்காக உழைக்க அவர்களை அபிஷேகம் பண்ண நாம் அனுப்பப்பட்டிருக்கிறோம் என்று கூறுகிறார் டின்ஸ்டேல் யங் என்பார்.
நமக்கு அருளப்பட்ட உயர்ந்த அழைப்பை நன்கு மதிக்கத் தவறுவதே இன்று பெரும்பாலோரின் வாழ்க்கையில் நிகழுட் சோக சம்பவம். தாழ்ந்ததைத் தழுவுவதிலும் அற்பமானவற்றிற்குப் அதிக கவனம் அளித்தலிலுமே நாம் காலத்தைச் செலவிடுவது நமக்கு மனநிறைவைத் தருகிறது. விண்ணில் பறப்பதற்குப் பதிலாக மண்ணில் ஊர்கிறோம். நாம் அரசராக அல்ல அடிமைகளாக இருக்கிறோம். நாடுகளைக் கிறிஸ்துவுக்காகப் பிடிக்கும் சாட்சியைச் சிலரே பெற்றுள்ளனர்.
ஸ்பர்ஜன் என்பவர் ஒரு விதிவிலக்கு. கீழ்க்கண்ட ஆற்றல் மிக்க செய்தியை அவர் தம் மகனுக்கு எழுதியனுப்பினார்.
நீ ஒரு கிறிஸ்தவ ஊழியனாக இருக்கவேண்டுமென்று தேவன் தீர்மானித்திருப்பாரானால் நீ ஓர் இலட்சாதிபதியாக மரிப்பதை நான் விரும்பமாட்டேன்.
தொலைநாடுகளில் கிறிஸ்துவுக்கு ஊழியம்செய்யும் தகுதி உனக்கு இருந்தால் நீ அரச பதவியை அடைவதை நான் விரும்பமாட்டேன்.
கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தும் மேன்மையோடு, பிறருடைய அஸ்திபாரத்தின்மீது கட்டாமல் தொலைவிலுள்ள நாடுகளில் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்து அவருக்காகக் கட்டி எழுப்பும் வேலையின் சிறப்பை மதிப்போடு ஒப்பிட்டடால் உங்கள் வேந்தர்கள், பிரபுக்கள், மணி முடிகள் இவை எல்லாம் என்ன?
நன்கு அறியப்பெற்ற கிறிஸ்தவ ஊழியனும் அரசியல் நிபுணனுமான ஜாண் மோட் என்பவர் இன்னொரு விதிவிலக்கு. ஜப்பானுக்குத் தூதுவராச் செல்லும்படி ஜனாதிபதி கூலிட்ஜ் அவரைக் கேட்டபோது அவர் கூறியது: ஜனாதிபதி அவர்களே! தேவன் தமக்குத் தூதுவராக இருக்கும்படி என்னை அழைத்ததிலிருந்து பிற அழைப்புகளுக்கெல்லாம் என் செவிகள் செவிடாகிவிட்டன.
விதிவிலக்காக விளங்கிய வேறொருவரைப்பற்றி பில்லி கிரஹாம் கூறுகிறார். ஸ்டாண்டர்டு எண்ணெய்க் கம்பெனியார் தூரக் கிழக்கு நாடுகளில் தங்கள் பிரதிநிதியாயிருக்கும்படி ஒரு மிஷனரியைத் தெரிந்து கொண்டனர். அவருக்குத் தொகை பத்தாயிரம் தருவதாக் சொன்னார்கள். அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இருபதாயிரம் கொடுப்பதாகச் சொன்னார்கள். அதற்கும் அவர் சம்மதிக்கவில்லை. ஐம்பதாயிரத்தையும்கூட பெற அவர் மறுத்துவிட்டார். ஏன்? என்று அவர்கள் கேட்டார்கள். அவர் கூறினார், உங்கள் சம்பளம் சரிதான். ஆனால் உங்கள் வேலை மிகவும் சிறியது. ஓரு மிஷனெறியாக இருக்கும்படி தேவன் என்னை அழைத்திருக்கிறார்.
கிறிஸ்துவின் அழைப்புத்தான் மிக உயர்ந்தது. இதை நாம் உணர்ந்தால் நமது வாழ்க்கை ஒரு புதிய மேன்பாட்டினை எய்தும் இந்தத் தொழிலுக்கு அல்லது அந்த வேலைக்கு அழைக்கப்பட்டவன் என்று நம்மைக் குறித்துச் சொல்லாமல் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவன் என நம்மைக் காண்போம். பிற தொழில்கள் எல்லாம் பிழைப்புக்கடுத்தவைகளேயன்றி வேறல்ல.
சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க சகல ஜாதிகளையும் சீஷராக்கி, உலகத்திற்குக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்பட்டவர்களாக நாம்மைக் காண்போம்.
அப்படியானால் நமது தலைமுறையில் கிறிஸ்துவுக்காக உலகம் எவ்வாறு அணுகப்படப்போகிறது? முழு இருதயத்தோடு இறைவனில் அன்புகூர்ந்து, தங்களில் அன்பு கொள்ளவதுபோலப் பிறரிலும் அன்பு கூறுவோரால் மட்டுமே உலகம் கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத்தப்பட முடியும். மாளாத அன்பினின்று தோன்றும் பக்தியும் அர்ப்பணிப்புமே இவ்வேலையை நிறைவேற்றி முடிக்க முடியும்.
கிறிஸ்துவின் அன்பால் நெருக்கி ஏவப்படுவோர் அவருக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயங்கமாட்டார்கள். உலகப் பொருட்களுக்காகத் தாங்கள் செய்ய முன்வராத எதையும் அவர்மீது கொள்ளும் அன்பின் காரணமாக அவர்கள் செய்வர். தங்கள் உயிரையும் அருமையான ஒன்றாக எண்ணமாட்டார்கள். சுவிசேஷத்தைப்பெறாமல் மக்கள் அழியாதபடி செலவு பண்ணவும் செலவு பண்ணப்படவும் தயங்கமாட்டார்கள்.
உம் உள்ளம் போன்ற உள்ளம் வேண்டும்
உம்மோடு நெருங்கிய உறவும் வேண்டும்
உம்மையறியா மாந்தர் பால் அன்பும் வேண்டும்
உம்மை அறிவிக்கக் கல்வாரிப் பாசம் வேண்டும்
- ஜேம்ஸ் எ. ஸ்டீவார்ட்
அன்பைக்காரணமாகக் கொண்டு தோன்றாத செயல்கள் எல்லாம் ஒன்றுக்கும் உதவாதவை. அவை பயனற்றவை. அன்பில்லாத ஊழியம் சத்தமிடும் வெண்கலமாகவும் ஓசையிடுகிற கைத்தாளமாகவும் ஆகிவிடுகிறது. ஆனால் அன்பே வழிகாட்டம் விண்மீனாக விளங்குமானால், கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள பற்றினால் எரிக்கப்பெற்று மனிதர் உழைக்கச் சென்றால், பாய்ந்து பரவும் சுவிசேஷத்தின் போக்கை உலகின் எந்த ஆற்றலும் தடைசெய்ய முடியாது.
அப்படியானால் உங்கள் மனதில் படமாகத் தோன்றட்டும் ஒரு சீஷர் குழு. இயேசு கிறிஸ்துவுக்கு முற்றிலும் அடிமைப்பட்டுள்ள, கிறிஸ்துவின் அன்பினால் விரட்டப்படுகிற, ஒரு மகிமையான செய்தியின் தூதுவராக நிலத்தையும் நீரையும் கடந்து செல்லுகிற, களைப்படையாமல் புது இடங்களுக்குள் நுழைகிற, சந்திக்கிற ஒவ்வொருவரையும் கிறிஸ்துவானவர் ஜீவனைவிட்டு அன்புகூர்ந்த ஒரு ஆத்துமாவாகக் காணுகிற, இரட்சகரை நித்தியமெல்லாம் தொழுகின்றவர்களாக ஒவ்வொருவரும் இருக்கவேண்டுமென்று நாடுகிற சீஷர் குழு. கிறிஸ்துவை அறிவிக்க அடுத்த உலக நாட்டங்கொண்டுள்ள இம்மனிதர் கையாளும் முறை யாது?.
உலகிற்கு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கப் புதிய ஏற்பாடு இரு முக்கிய முறைகளைக் காட்டுவதாகத் தோன்றுகிறது. ஒன்று வெளியரங்கமாகப் பிரசங்கித்தல், மற்றது தனித்தனியாக சீஷராக்குதல்.
கர்த்தராகிய இயேசுவும் அவர்தம் சீஷரும் முதல் முறையாகப் பொதுவாகப் பயன்படுத்தினர். எங்கெல்லாம் மக்கள் கூடியிருந்தனரோ அங்கெல்லாம் நற்செய்தியைப் பிரசங்கிக்க வாய்ப்பு இருந்தது. சந்தை கூடும் இடங்கள், சிறைச்சாலைகள், ஜெப ஆலயங்கள், கடற்கரைகள், நதியோரங்கள் இவற்றிலெல்லாம் நற்செய்திக்கூட்டங்கள் நடைபெற்றதைக் காண்கிறோம். செய்தியின் மேம்பாடு, அது அவசரமாக அறிவிக்கப்படவேண்டிய அவசியம், இவை காரணமாக வழக்கமாகக் கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் மட்டுமல்லாமல் எல்லா இடங்களிலும் அது அறிவிக்கப்படவேண்டியதாயிற்று.
தனி ஆள்களை ஆதாயப்படுத்திச் சீஷராக்குவது கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்பும் இரண்டாவது முறை. பன்னிருவரையும் பயிற்றுவிக்கக் கர்த்தராகிய இயேசு கையாண்ட முறையிதுவே. அச்சிறு குழுவினர் தம்மோடு கூட இருக்கவும், தாம் அவர்களை ஊழியம் செய்ய அனுப்பவும் அவர் அவர்களை அழைத்தார். கடவுளின் சத்தியத்தைத் தொடர்ந்து அவர்களுக்குப் போதித்தார். அவர்கள் நிறைவேற்றப்பட வேண்டிய ஊழியம் அவர்கள் முன் வைக்கப்பட்டது. அவர்கள் சந்திக்கப்போகும் இன்னல்கள், ஆபத்துக்கள் இவைபற்றி விரிவாகப்பேசி அவர்களை முன்னதாகவே எச்சரித்தார். இறைவனின் இரகசிய ஆலோசனைக்குள் அவர்களை நடத்தி, மகிமையான ஆனால் கடினமான தெய்வீகத் திட்டத்தில் தம்மோடு அவர்களையும் பங்காளிகளாக்கினார். பின்பு ஓநாய்களுக்குள் ஆடுகளை அனுப்புவதுபோல அவர்களை அனுப்பினார். பரிசுத்த ஆவியானவரால் வலிமையடைந்தவர்களாக அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். உயிர்த்தெழுந்து விண்ணுக்கெழுந்தருளி மகிமைபெற்ற இரட்சகரை உலகிற்கு அறிவிக்க யூதாஸ் என்ற துரோகி விலகிய பின்னர் பதினொருவராகக் குறைந்துவிட்ட அச்சீஷர் குழு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்காக உலகத்தைத் தலைகீழாகப் புரட்டிவிட்டதில் இம்முறையின் வலிமை விளங்குகிறது.
அப்போஸ்தலனாகிய பவுல் தாமே இம்முறையைக் கையாண்டபோது அவ்வாறு செய்யும்படி தீமோத்தேயுவைத் தூண்டினார். அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத் தக்க உண்மையுள்ள மனுஷனிடத்தில் ஒப்புவி (2தீமோ.2:2). உண்மையுள்ள மனுஷனை கவனமாக ஜெபத்தோடு தெரிந்துகொள்வதே முதலாவது செய்ய வேண்டியது. அவர்களை மகிமையான சாட்சியைப் பெறும்படி செய்வது இரண்டாவது. பிறரைச் சீஷராக்கும்படி அவர்களை அனுப்புவது மூன்றாவது.
எண்ணிக்கையில் விருப்பம்கொண்டு பெருங் கூட்டங்களில் நாட்டங்கொள்வோர்க்கு இம்முறை கவர்ச்சியற்றதாக, களைப்புறச் செய்வதாகக் காணப்படும். ஆனால் தாம் செய்வதை இன்னதென்பதைத் தேவன் அறிந்திருக்கிறார். அவர் முறைகள்தான் சிறந்தவை. சுயதிருப்பதியடைந்துள்ள சமயத் தொண்டர்களைக் காட்டிலும் தங்களைக் காணிக்கையாக அர்ப்பணித்துள்ள சில சீஷர்கள் தேவனுக்காக அதிகம் செய்ய முடியும்.
கிறிஸ்துவின் நாமத்தில் இந்தச் சீஷர்கள் புறப்பட்டுச் செல்கையில் தேவனுடைய வார்த்தையில் கூறப்பட்டுள்ள சில குறிப்பிட்ட அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றுகிறன்றனர். முதலாவது, அவர்கள் பாம்பைப்போல வினாவுள்ளவர்களாகவும், புறாவைப்போலக் கபடற்றவர்களாகவும் இருக்கிறார்கள். தாங்கள் செல்லும் கடினமான பாதையில் தங்களுக்கு வேண்டிய ஞானத்தைக் கடவுளிடமிருந்தே அவர்கள் பெற்றுக்கொள்ளுகின்றனர். அதே சமயத்தில், மக்களோடு பழகும்போது சாந்தமாகவும் மனத்தாழ்மையுடனும் நடந்துகொள்கின்றனர். சண்டைக்கு வந்துவிடுவார்கள் என்று யாரும் அவர்களைப்பற்றிப் பயப்படவேண்டியதில்லை. அவர்களுடைய ஜெபங்களுக்கும், அவிக்க முடியாத சாட்சிக்குமே மக்கள் பயப்படவேண்டும்.
இவ்வுலகத்தின் அரசியலினின்று இந்தச் சீஷர்கள் விலகிநிற்கின்றனர். எந்தவிதமான அரசாங்கத்தையோ அரசியல் கருத்தையோ எதிர்த்துப் போராடத் தாங்கள் அழைக்கப்படடதாக அவர்கள் கருதுவதில்லை. அவர்கள் எந்தவித அரசாங்கத்தின் கீழும் செயலாற்ற முடியும். அந்த அரசாங்கத்துக்கு உண்மையுள்ளவர்களாகவும் இருக்க முடியும். தங்கள் ஆண்டவரை மறுதலிக்கவோ, தங்கள் சாட்சியை விட்டுக்கொடுக்கவோ கேட்கப்படாதிருக்கும் வரையில் அவ்வாறு செய்ய வற்புறுத்தப்பட்டால் அவர்கள் அத்தகைய ஆணைக்குக் கீழ்படிய மறுத்து, என்ன நேர்ந்தாலும் ஏற்கத் துணிவர். ஆனால் ஓர் அரசாங்கத்தைக் கவிழ்க்க சதித்திட்டங்களிலோ, புரட்சி நடவடிக்கைகளிலோ அவர்கள் ஈடுபடுவதில்லை. என் இராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால்……… என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே, என்று கர்த்தர் சொல்லவில்லையா? விண்ணுலகின் தூதுவராகிய இம்மனிதர் அந்நியராகவும் பரதேசிகளாகவும் இந்த உலகத்தைக் கடந்து செல்லுகின்றனர்.
தங்கள் நடத்தையில் அவர்கள் முற்றிலும் உண்மையுள்ளவர்கள். எந்தவித தந்திரத்திற்கும் அவர்கள் இடங்கொடுப்பதில்லை. அவர்கள் ஆம் என்றால் ஆம்தான். இல்லை என்றால் இல்லைதான். எந்தவித முறைகளைக் கையாண்டாலும் முடிவு நல்லதாக இருந்தால் சரி என்ற அங்கிகாரம் பெற்ற பொய்யை அவர்கள் கடைப்பிடிக்க மறுக்கின்றனர். நன்மை விளையும்படி தீமையை அவர்கள் ஒருபோதும் செய்யமாட்டார்கள். பாவம் செய்வதைக் காட்டிலும் சாவைத்தெரிந்துகொள்ளும் அவர்கள் ஒவ்வொருவரும் மனச்சான்றின் உருவமாகவே திகழ்கின்றனர்.
இந்த மனிதர் தங்கள் ஊழியத்தை உள்ளுர்ச் சபையோடு இணைத்துக்கொள்ளுகின்றனர். இது அவர்கள் ஒழுங்காகப் பின்பற்றும் மற்றொரு நெறி. கர்த்தராகிய இயேசுவுக்காக மக்களை ஆதாயப்படுத்த அவர்கள் செல்லுகின்றனர். அவ்வாறு ஆதாயப்படுத்தப்பட்டவர்கள் பலப்பட்டு, தங்கள் மகா பரிசுத்த விசுவாசத்தில் கட்டப்படும்படி அவர்களை ஓர் உள்ளுர்ச் சபையின் ஐக்கியத்துக்குள் நடத்துகின்றனர். விசுவாசத்தைப் பரப்ப தேவன் உள்ளுர்ச் சபையைப் பயன்படுத்துகிறார் என்று உண்மைச் சீஷர் உணருகின்றனர்.
சிக்கல்களில் அகப்படுத்தும் எல்லாவித உடன்பாட்டையும் சீஷர்கள் ஞானமாகத் தவிர்க்கின்றனர். மக்கள் நிறுவிய ஸ்தானம் ஒன்றால் தாங்கள் நடத்தப்படுவதை அவர்கள் உறுதியாய் எதிர்க்கின்றனர். விண்ணுலகிலுள்ள தலைமை நிலையத்தினின்றே தாங்கள் செயற்கடுதற்கான உத்தரவுகளை அவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். தங்கள் ஊர் சபையின் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையையும் நற்சாட்சியையும் பெறாமல் செயலாற்றுகின்றனர் என்பது இதன் பொருளல்ல. இதற்கு மாறாக, அத்தகைய நற்சாட்சியை ஊழியத்திற்கான தேவ அழைப்பின் உறுதிப்பாடாக அவர்கள் காண்கின்றனர். ஆனால் கிறிஸ்துவின் வார்த்தைக்கும் வழிநடத்தலுக்கும் கீழ்படிந்து அவருக்குப் பணிவிடை செய்தலின் அவசியத்தை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
முடிவாக, இந்தச் சீஷர்கள் விளம்பரத்தை விரும்பாது விலக்குகின்றனர். மறைந்திருக்கவே அவர்கள் முயல்கின்றனர். கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதும் அவரை அறிவிப்பதுமே அவர்கள் நோக்கம். தங்களுக்காக பெரிய காரியங்களை அவர்கள் தேடுவதில்லை. தங்கள் போர்முறைகளைப் பகைவனுக்கு வெளிப்படுத்தவும் அவர்கள் விரும்புவதில்லை. எனவே, அமைதியாக, ஆடம்பரமில்லாமல், மனிதர் புகழ்வதையும் இகழ்வதையும் கவனிக்காமல் அவர்கள் வேலைசெய்கின்றனர். தங்கள் உழைப்பின் பலனை அறிந்துகொள்வதற்கு பரலோகம்தான் தகுந்த இடம் என்பதை அவர்கள் அறிந்துள்ளனர்.











