- கிறிஸ்தவனும் சிலுவையும்
தியான வாசிப்பு: யோசுவா 4:1-24
பழைய ஏற்பாட்டிலுள்ள யோசுவாவின் ஆகமத்திற்கும் புதிய ஏற்பாட்டிலுள்ள எபேசியர் நிருபத்திற்கும் அதிக ஒற்றுமை உண்டு. தெய்வமக்கள் வெற்றியுள்ள வாழ்க்கை எவ்வாறு நடத்தவேண்டும் என்பது இந்த யோசுவாவின் புத்தகத்தில் சொல்வோவியமாகச் சிறப்புடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. முதல் நான்கு அதிகாரங்களில் இஸ்ரவேல் புத்திரர் யோர்தான் நதியை அடைந்த விதத்தையும், அதனை அற்புதமாகக் கடந்த முறையையும் அதிவிவரமாகக் காணலாம். கர்த்தரின் கிருபையால் யோர்தான் நதியை அதிசயமாய்க் கடந்தார்கள். பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தில் கால் வைத்தார்கள். அவர்கள் அவ்வாறு யோர்தானுக்கு அக்கரையில் பெருமிதத்துடன் பாளயம் இறங்கின முதல் இடம் கில்கால் ஆகும். இந்தக் கில்கால் அவர்களுக்கு மாபெரும் முக்கிய அதிஉன்னதமான பாளயம் ஆயிற்று. அவர்கள் சரித்திர ஏட்டில் பெருமையுடன் குறிப்பிடத்தக்க புனிதமான இடம் கில்கால். கானான் வாசிகளான பண்டைக் குடிமக்களோடு போரிடுவதற்கு இந்தக் கில்கால் ஒரு சிறந்த தளமாகப் பயன்படுத்தப்பட்டது. அவர்கள் வெற்றிமேல் வெற்றி கண்ட காலத்திலும், தோல்வி கண்ட வேளைகளிலும் மீண்டும் மீண்டும் இளைப்பாறுதலுக்காக வந்து, தங்கின இடம் கில்கால்.
கில்கால்தான் அவர்கள் அடிக்கடி போய் வந்து தங்கி, பதிவிருந்து, ஆலோசித்து, இளைப்பாறி, திட்டமிட்டு, சத்துருக்களை மடங்கடிக்க பயன்பட்ட கேந்திர ஸ்தானமாகும். போர்க்களத்திற்குச் செய்தி அனுப்ப உதவும் மாபெரும் போக்குவரவு தலைமைக் காரியாலயமாகத் திகழ்ந்தது.
அவர்களுக்கு முன்னால் எரிகோவும் இதர நாடுகளும் இருந்தன, கானானில் வாழ்ந்த பூர்வீக பகை அரசுகளையெல்லாம் அவர்கள் வெல்லவேண்டும். பகைவரை வென்றால்தான் அவர்கள் நாட்டைச் சுதந்தரித்துக் கொள்ள முடியும். ஆகவே, கானான் சுதந்திரத்திற்கு முன்னால் பெரும்போர் நிகழ்த்தியே தீரவேண்டும். பேரின்ப வாழ்வு பெற போர் வாழ்வு அத்தியாவசியம். இவ்விதி கிறிஸ்தவ வாழ்க்கைக்குப் பொருந்தும். வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வு நடத்த விரும்புகிறவன் போர் வாழ்வு நடத்தித்தான் ஆகவேண்டும். போர் இன்றேல் வெற்றி இல்லை. போரும் வெற்றியும் இணைந்த வாழ்வே கிறிஸ்தவ வாழ்வு. பெரும் வெற்றியடைய, பெரும் போர் புரிந்தே ஆகவேண்டும். ஆனால் போருக்குப் புறப்படுமுன், எரிகோவைத் தாக்க தீவிரமாகச் சாடுமுன், இஸ்ரவேலர்கள் கில்காலில் காத்திருந்து கர்த்தரிடமிருந்து பெறவேண்டிய ஆற்றலும் யோசனையும் பல உண்டு. கர்த்தருக்கு காத்திருத்தலே பெரிய காரியம். கர்த்தரோடு ஜெபத்தில் தனித்திருந்து அவரிடமிருந்து சக்தியைப் பெறாவிட்டால் போரில் தோல்வியுறுவது திண்ணம்.
நம்மில் அநேகர் கிறிஸ்துவின் சிலுவைப் புண்ணியத்தால் பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை, அதாவது யோர்தானைக் கடந்து நித்திய ஜீவகரை ஏறியிருக்கலாம். கானானில் கால்மதித்து, கில்காலில் பாளயம் இறங்கியிருக்கலாம். விசுவாசப் பெருக்கால் பொங்கியெழுந்து, எரிகோ என்னும் பகை அரண்களைத் தகர்த்தெறிய பாய்ந்து சாடத் துடிக்கலாம். எதிரே இருக்கும் சாத்தானின் கோட்டைகளை நொறுக்கித் தூளாக்க விறுவிறுப்புக் கொள்ளலாம். ஆனால் போருக்கு பொங்கியெழுமுன், கில்காலி;ல் தங்கியிருக்கவேண்டும். கர்த்தருடைய பாதத்தில் பக்தி விநயமாய்க் காத்திருக்கவேண்டும். அவர் கூறுவதைக் கூர்ந்து கவனிக்கவேண்டும். அவர் சொல்லுகிறபடி நடக்க வேண்டும்.
கில்காலி;ல் ஒவ்வொரு கிறிஸ்தவனும் கற்க வேண்டிய ஆறு அதிமுக்கியமான பாடங்கள் உள்ளன. அவைகளுள் மிகமிக முக்கியமான இரண்டு பாடங்களைப் பற்றி இந்த அதிகாரத்தில் ஆராயலாம். வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வு நடத்த விரும்புகிற அனைவருக்கும் இந்த இருவிதிகளும், இரு கண்கள் போன்றவையாகும். ஒவ்வொரு கிறிஸ்தவனும் இந்நெறியில் சென்றுதான் ஆகவேண்டும். இதைத் தவிர்த்து வேறொரு நெறியில்லை என்றே திட்டவட்டமாக அறைகூவுகிறேன். நாம் எல்லாரும் செல்லவேண்டிய வழி ஒன்றுதான். அவ்வழி கிறிஸ்துவே. நானே வழியென்று அவர் பறைசாற்றவில்லையா!
(1) முதலாவது கில்கால் ஒரு நினைவுப் பாளையமாகத் திகழ்ந்தது
கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீங்கள் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஜனங்களுக்குள் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, இங்கே யோர்தானின் நடுவிலே ஆசாரியர்களின் கால்கள் நிலையாய் நின்ற இடத்திலே பன்னிரண்டு கற்களை எடுத்து, அவைகளை உங்களோடே அக்கரைக்குக் கொண்டுபோய், நீங்கள் இன்று இரவில் தங்கும் ஸ்தானத்தில் அவைகளை வையுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிடுங்கள் என்றார். அப்பொழுது யோசுவா இஸ்ரவேல் புத்திரரில் ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொருவராக ஆயத்தப்படுத்தியிருந்த பன்னிரண்டு பேரை அழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் யோர்தானின் மத்தியில் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெட்டிக்கு முன்பாக கடந்துபோய், உங்களுக்குள்ளே ஓர் அடையாளமாய் இருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாக, உங்களில் ஒவ்வொருவன் ஒவ்வொரு கல்லைத் தன் தோளின் மேல் எடுத்துக்கொண்டு போங்கள்.
நாளை இந்தக் கற்கள் ஏதென்று உங்கள் பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது, நீங்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்து போனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது. யோர்தான் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோயிற்று. ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான். யோசுவா கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, கர்த்தர் யோசுவாவோடே சொன்னபடியே இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாகப் பன்னிரண்டு கற்களை யோர்தானின் நடுவில் எடுத்து, அவைகளைத் தங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், தாங்கள் தங்கின இடத்திலே வைத்தார்கள். யோர்தானின் நடுவிலும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியரின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா பன்னிரண்டு கற்களை நாட்டினான்.
மோசே யோசுவாவுக்கு கட்டளையிட்டிருந்த எல்லாவற்றின்படியும் ஜனங்களுக்குச் சொல்லும்படி, கர்த்தர் யோசுவாவுக்கு கட்டளையிட்டவையெல்லாம் செய்து முடியுமட்டும், பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தானின் நடுவே நின்றார்கள். ஜனங்கள் தீவிரித்துக் கடந்து போனார்கள். ஜனமெல்லாம் கடந்து போன பின்பு, கர்த்தருடைய பெட்டியும் கடந்தது. ஆசாரியர் ஜனத்துக்கு முன்பாகப் போனார்கள்.
இந்தப் பிரகாரமாக முதல் மாதம் பத்தாம் தேதியிலே ஜனங்கள் யோர்தானிலிருந்து கரையேறி, எரிகோவுக்கு கீழெல்லையான கில்காலிலே பாளயமிறங்கினார்கள். அவர்கள் யோர்தானில் எடுத்தக்கொண்டு வந்த அந்தப் பன்னிரண்டு கற்களையும் யோசுவா கில்காலிலே நாட்டி, இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நாளை உங்கள் பிள்ளைகள் இந்தக் கற்கள் ஏதென்று தங்கள் பிதாக்களைக் கேட்கும்போது, நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலர் வெட்டாந்தரை வழியாய் இந்த யோர்தானைக் கடந்து வந்தார்கள். பூமியின் சகல ஜனங்களும் கர்த்தருடைய கரம் பலத்ததென்று அறியும்படிக்கு, நீங்கள் சகல நாளும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படும்படிக்கு, உங்கள் தேவனாகிய கர்த்தர் யோர்தானின் தண்ணீருக்கும் செய்து, அதை உங்களுக்கு முன்பாக நீங்கள் கடந்து தீருமளவும் வற்றிப்போகப்பண்ணினார் என்று அறிவிக்கக்கடவீர்கள் என்றான்.
ஆம் ஐயா, இதெல்லாம் பழைய ஏற்பாட்டிலுள்ள பழங்கதை. இந்தப் பண்டைக் காலத்து வரலாற்றால் என்ன பயன்? இந்த இஸ்ரவேலருடைய வாழ்க்கை வரலாற்றுக்கும் என்னுடைய தற்கால கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்? என்று ஒருவர் வினவலாம்.
இஸ்ரவேலரின் வாழ்க்கை ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கைப் போக்கைச் சித்தரித்துக் காட்டுகிறது. புதிய ஏற்பாட்டு வரலாற்றிற்கும் பழைய ஏற்பாடு வித்திடுகிறது. பரிசுத்த வேதாகமம் பழைய ஏற்பாட்டில் துளிர்த்து, புதிய ஏற்பாட்டில் கனிந்து முற்றுகிறது. பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் சேர்ந்தே பரிசுத்த வேதாகமமாக பூரணப்படுகிறது. பரிசுத்த வேதாகமத்தைச் சரிவர கற்பதற்கு உதவும் மாசிறந்த வியாக்கியானப் புத்தகம் பரிசுத்த வேதாகமம்தான். புதிய ஏற்பாட்டில் பொங்கி எழும் ஒளிச் சுடரைப் பழைய ஏற்பாட்டில் வீசி மிளிரச்செய்தால், வேதாகமத்தின் திரண்ட கருத்து பழைய எற்பாட்டிலும் புதைந்து கிடப்பதைக் கண்டுணரலாம். இயேசு சுவாமியின் சிலுவை மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பழைய ஏற்பாட்டுக் கண்ணாடிக்குள் கண்டு களிக்கலாம். கல்வாரிச் சிலுவையில் தொங்கி இயேசு நாதர் மரித்தார். பிதாவாகிய தேவன் தமக்கு நியமித்த ஓட்டத்தை இயேசுநாதர் வெற்றியுடன் ஓடி முடித்தார். மனுக்குல இரட்சிப்புக்காகச் செய்யவேண்டியது எல்லாம் தனது அவதார காலத்தில் செய்துமுடித்துவிட்டேன் என்பதற்கு அறிகுறியாக முடிந்தது என்று சொல்லி, வீரவெற்றி முரசுகொட்டினார். பாவ இரட்சிப்பின் பூரண வெற்றி சிலுவையில் நிறைவேறிவிட்டது. பாவத்தின் கூர் ஒடிந்தது. மரணத்தை இயேசுநாதர் ஜெயமாக்கினார். மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது. பாதாளத்தின்மீது வெற்றிகொண்டார் இயேசுநாதர். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
இஸ்ரவேலர் யோர்தானைக் கடந்த நிகழ்ச்சி கிறிஸ்தவர்கள் பாவ மரணத்தைக் கடக்கவேண்டிய நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டி நிற்கிறது. ஆசாரியர் மாத்திரமன்று, இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் யோர்தானைக் கடந்தார்கள். ஆசாரியர் முன் சென்றார்கள். இஸ்ரவேலர் பின் சென்றார்கள். நமது பிரதான ஆசாரியராகிய இயேசுநாதர் முன் சென்ற வழியே நாமும் பின்செல்லவேண்டும். இயேசுநாதர் மரணத்தைக் கடந்தார். அவருடைய அடியார்களும் மரணத்தைக் கடந்தே தீரவேண்டும். இயேசுநாதர் எனக்காகச் சிலுவையில் மரித்தார் என்றால் நானும் அவரோடு கூடச் சிலுவையில் மரித்துவிட்டேன் என்பதுதான் அதன் உட்பொருள். இயேசுநாதர் என் பாவத்திற்காக மரித்தார். நானும் பாவத்துக்காக மரிக்காவிட்டால், ஒருக்காலும் வெற்றியுள்ள பரிசுத்த வாழ்க்கை நடத்த முடியாது.
பரிசுத்த பவுல் அப்போஸ்தலன் கலாத்தியருக்கு எழுதின நிருபம் இரண்டாம் அதிகாரம் இருபதாம் வசனத்தில் கூறுவதைக் கேளுங்கள். கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையில் அறையப்பட்டேன். ஆயினும், பிழைத்திருக்கிறேன். இனி நான் அல்ல, கிறிஸ்துவே என்னுள் பிழைத்திருக்கிறார். நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். நான் தேவனுடைய கிருபையை விருதாக்குகிறதில்லை. மீண்டும் பரிசுத்த பவுல் 2 கொரிந்தியர் 5ம் அதிகாரம் 14ம் வசனத்தில் செப்புவதைக் கேளுங்கள். கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது. ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும், (2.கொரி.5:14). மேலும் பரிசுத்த பவுல் ரோமர் 6ம் அதிகாரம் 4ம் வசனத்தில் இவ்வாறு இயம்புகிறார். மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம் (ரோ.6:4). இவ்வசனங்களில் கண்டுள்ளபடி நாம் கிறிஸ்துவுடனேகூடக் கிறிஸ்துவுக்குள் மரித்துவிட்டோம் என்ற உண்மையான விசுவாசம்தான் வெற்றியின் ஆதாரமாகும். ஆசாரியர் மாத்திரம் யோர்தானைக் கடக்கவில்லை. ஆசாரியரோடுகூட இஸ்ரவேல் புத்திரரும் யோர்தானைக் கடந்தார்கள். அதுபோல் இயேசுநாதர் மட்டும் தன்னந்தனியாராய் சிலுவையில் மரிக்கவில்லை. அவரோடுகூட அவருக்குள் அவருடைய மக்கள் அனைவரும் சிலுவையில் மரித்துவிட்டார்கள். அடக்கம் பண்ணப்பட்டார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்திலுள்ள கெஸ்விக் மாநகரில் கிறிஸ்தவத் திருத்தொண்டர் மாநாடு ஒன்று நடைபெற்றது. சீனா நாட்டில் கிறிஸ்தவ சேவை செய்துவிட்டுத் தாயகம் திரும்பியுள்ள ஒரு மாது சிரோமணி தனது அனுபவ சாட்சியை அம்மாநாட்டில் கூறினாள். சீனா தேசத்திற்கு அந்த அம்மையார் மிஷனறியாகச் செல்லும் முன் அவருடைய நண்பர்களில் ஒருவர் அவரைப் பார்த்து: என்ன, நீ உன்னைச் சீனாவில் உயிரோடு புதைத்துக்கொள்ள செல்கிறாயோ? சீனா நாட்டின் கொடிய வெப்பத்தை நீ தாங்க முடியாது. ஆறு மாதத்திற்குள் நீ சாவது திண்ணம் என்று இடித்துரைத்தார். அந்த அதைரிய வார்த்தைகளைக் கேட்ட மிஷனறி பெண்மணி அளித்த மாறுத்தரம் பின்வருமாறு:
என் அருமை நண்பரே, நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே செத்துவிட்டேன் என்பது உமக்குத் தெரியாதா? இப்பொழுது நான் கிறிஸ்துவுக்குள் பிழைத்திருப்பது சீனாவில் கிறிஸ்துவுக்காக திருத்தொண்டாற்றுவதற்காகத்தான். அப்பெண்மணி பாவத்திற்குச் செத்தாள் கிறிஸ்துவுக்காக உயிர்த்தாள். தன் வாழ்நாளின் கடைசி மூச்சுவரை கிறிஸ்துவுக்காகவே வாழ்ந்தாள்.
சிலுவையின் இரகசியமும் இதுதான். சிலுவையில் கிறிஸ்து மாத்திரமன்று, நாமும் மரித்துவிட்டோம்.
ஆத்தும ஆதயாம் செய்வதற்கு நாம் அருமையான திட்டங்கள் பல தீட்டியுள்ளோம். அது நல்லதுதான். ஆனால் அதற்கு முன்னர் நீர் சிலுவையில் கிறிஸ்துவுடனே கூடச் செத்துவிட்டீரா என்பதுதான் மாபெரும் கேள்வி. நீர் கிறிஸ்துவுக்குள் சாகாவிட்டால், கிறிஸ்துவுக்குள் உயிரோடு வாழமுடியாது. நித்திய ஜீவனாகிய கிறிஸ்து உமக்குள் வாழாவிட்டால், நீர் எந்த நல்ல காரியத்தையும் அவருக்கு மகிமையாகச் செய்யமுடியாது. என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது என்று இயேசுநாதர் அழுத்தம் திருத்தமாக அறைகூவியுள்ளாரே. நீர் கிறிஸ்துவுக்காக ஏதேனும் நல்ல காரியத்தைச் செய்யவிரும்புவீரானால், நீர் முதலாவது கிறிஸ்துவுக்குள் மரித்துவிட்டீரா என்பதைச் சிந்தித்துப் பாரும். மெய்யாகவே, மெய்யாகவே, இயேசுவாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். கோதுமைமணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும். செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும். தன் ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான். இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவன் எவனோ அவனே அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்வான். ஒருவன் எனக்கு ஊழியம் செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன். நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான். ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால், அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார் (யோ.12:24-26).
பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது உன் அருகில் நிற்கிறார். உன்னைப் பார்த்து இக் கேள்வியைக் கேட்கிறார். நீ கிறிஸ்துவுடனேகூட மரித்துவிட்டாயா? நீ உனது பாவத்துக்குச் செத்துவிட்டாயா? நீ இப்பொல்லாத உலகத்துக்கு மரித்துவிட்டாயா? நீ பாவமாம்சத்திற்கு செத்துவிட்டாயா? நீ தன்னலத்திற்கும் தற்புகழ்ச்சிக்கும் வீண் பெருமைக்கும் உலக ஆதாயத்திற்கும் செத்துவிட்டாயா?
நான் செத்து விட்டேனா? நான் கிறிஸ்துவுனே கூட மரித்துவிட்டேனா? கில்கால் ஒரு நினைவுப்பாளயம் இஸ்ரவேலர் தங்கள் ஆசாரியருக்குப் பின்னால் யோர்தானில் இறங்கியதுபோல நான் கிறிஸ்துவுக்குச் சிலுவை மரணத்தில் இறங்கியுள்ளேனா?
(2) இரண்டாவது, கில்கால் ஓர் உயிர்த்தெழுதலின் நினைவுப் பாளயம்
இஸ்ரவேல் புத்திரர் யோர்தான் நதியில் இறங்கினார்கள். ஆனால் அவர்கள் யோர்தானில் மூழ்கிவிடவில்லை. யோர்தானால் இழுத்துச் செல்லப்படவில்லை. அவர்கள் யோர்தானைக் கடந்தார்கள். வெற்றிக் கெம்பீரத்துடன் யோர்தானைக் கடந்து, கானான் கரை சேர்ந்தார்கள். யோர்தான்மேல் வெற்றிகொண்டார்கள். முதல் மாதம் பத்தாம் தேதியிலே இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தானிலிருந்து கரையேறி, கானானிலுள்ள எரிகோவுக்குக் கிழெல்லையான கில்காலிலே பாளயம் இறங்கினார்கள் (யோசு.4:19). அவர்கள் எகிப்தை விட்டு சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் மாதம் பத்தாம் தேதியிலே எகிப்தை விட்டுப் புறப்பட்டார்கள்.
பஸ்கா ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டது. அதன் இரத்தம் தெளிக்கப்பட்டு எகிப்தின் அடிமைத்தனத்தினின்றும் விடுதலை பெற்றார்கள். கானான் நாட்டைச் சுதந்தரிப்பதற்காக வழிநடந்தார்கள். ஆனால் அவர்களுடைய கீழ்ப்படியாமை, அவிசுவாசம், முரட்டாட்டம் சுயஇச்சைகளால் இழுப்புண்டு, 40 ஆண்டுகளாக வனாந்தரத்தில் சுற்றித்திரிந்தார்கள். இப்பொழுது அவர்கள் யோர்தானைக் கடந்து பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்திற்குள் காலெடுத்து வைத்து, கில்காலில் பாளயம் இறங்கினார்கள்.
கில்கால் என்ற பதத்தின் பொருள் உங்களுக்குத் தெரியுமா? கில்கால் என்றால் இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப் போட்டேன் என்பதுதான் அதன் பொருளாகும். கில்காலில் எகிப்தின் நிந்தை புரட்டிப் போடப்பட்டது. கீழ்ப்படியாமை, அவிசுவாசம், மாம்ச இச்சை, தோல்வி, பாவ வாழ்க்கைபோன்ற வனாந்தரத்தில் இணைந்து திரியும் ஆணோ, பெண்ணோ, சிறுவனோ, சிறுமியோ, யாரானாலும் சரி, அவர்கள் அனைவரும் கிறிஸ்துவுக்கு நிந்தையாகவே இருக்கிறார்கள். நாம் கிறிஸ்துவுடனே கூட பாவ வாழ்க்கைக்கு யோர்தான் மரணத்தில் மரித்து, கில்கால் எனும் உயிர்த்தெழுதல் கரைசேர வேண்டும். கில்கால் உயிர்த்தெழுதலின் நினைவுப் பாளயம் ஆகுமன்றோ?
இந்தப் பிரகாரமாக முதல் மாதம் 10ம் தேதியிலே ஜனங்கள் யோர்தானைக் கடந்து கரையேறி, கில்காலிலே தங்கினார்கள். ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்து கரையேறிவிட்டார்கள். ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்கள் அதே யோர்தானை மீண்ம் கடந்து செல்ல துணிந்து நின்றால், அவர்கள் மறுகரையிலுள்ள வனாந்தரம் சென்று அழிவது நிச்சயம். கிறிஸ்துவுடன் உயிர்த்தெழுதல் அனுபவத்தைப் பெற்ற பின்னர், பாவ வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்லும் எந்த ஆத்துமாவும் பாழான பாலைவனத்தில் மாள்வது திண்ணம். கலப்பையின்மேல் தன்னுடைய கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கிற எவனும் தேவனுடைய இராஜ்யத்திற்குத் தகுதியுள்ளவன் அல்லன் என்று இயேசுநாதர் பகரவில்லையோ? மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன் என்று பவுல் அப்போஸ்தலன் முழங்குகிறார் (1.கொரி.9:27).
கில்கால் வரலாறு நமக்குக் கற்பிக்கும் பாடம் எது? இதுதான்: அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக , கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடே கூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார் (எபேசி.2:5-7). இந்த மகத்தான வசனம் என் மனதை எவ்வளவு பரவசப்படுத்துகிறது. ஆ, கிறிஸ்துவுக்குள் வாழ்வு நடத்தும் ஒரு கிறிஸ்தவனின் மாட்சிதான் என்னே! என்னே! கிறிஸ்துவின் அன்பை அளக்க யாரால் முடியும்? வெற்றியுள்ள வாழ்க்கை ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் உரித்தானதன்றோ.
ஒரு கிறிஸ்தவனின் மகிமையைச் சிந்தித்துப் பாருங்கள். ஆ, அவன் இயேசுவின் தயவால் எவ்வளவு மேன்மையைப் பெற்றிருக்கிறான்! எவ்வளவு மகத்தான பாக்கியம். எத்துணை சிறந்த சிலாக்கியம்! ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையில் அறையப்பட்டுள்ளான். அவரோடு கல்லறைக்குள் அடக்கம்பண்ணப்பட்டுள்ளான். அவரோடுகூடப் பரத்துக்கேறி உன்னதங்களில் வீற்றிருக்கிறான். ஆ! கிறிஸ்தவனின் சிறப்பைச் சிந்திக்கச் சிந்திக்க சிந்தை குளிர்கிறது. எண்ண எண்ண எண்ணம் இனிக்கிறது. எண்ண எண்ண உள்ளம் உருகுகிறது.
இவ்வாறு இன்பத் தியானத்தில் ஆழ்ந்திருக்குங்கால், ஒருவர் உன்னைத் தட்டி எழுப்பி, நீ உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன் என்று உன் உள்ளத்தில் எண்ணுகிறாய். ஆனால் நீ இவ்வுலகத்தில்தான் இன்னும் உட்கார்ந்துகொண்டிருக்கிறாய் என்பதை மறந்துவிட்டாயோ? என வினவலாம்.
நான் அதைத் தெளிவாகக் கூறவேண்டுமா? பவுல் அடியார் அக்கருத்தை இவ்வாறு தெளிவுபடுத்துகிறார். நாம் சரீர மீட்பைப்பெற்று உன்னதங்களில் வாசமாயிருப்போம். ஆனால் அதற்குச் சற்றுக் காத்திருக்கவேண்டும். அதற்குக் காத்திருந்து நமக்குள் தவிக்கிறோம்.
ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திர சுவீகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள் தவிக்கிறோம். அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல. ஒருவன் தான் காண்கிறதை நம்ப வேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம் (ரோ.8:23-25).
இயேசுநாதர் சிலுவையில் மரித்தபோது அவரது சரீரம் மரித்தது. அவர் கல்லறையினி;ன்று உயிர்த்தபோது மகத்தான சரீரத்தோடு எழுந்தார். இந்த நுண்ணிய ஆன்ம சரீரத்தோடு பரலோகத்துக்கு எழுந்தருளினார். அவர் இந்த மகிமையடைந்த விண்ணுலக சரீரத்தோடு உன்னதங்களில் வீற்றிருக்கிறார். தமது மகிமையின் ஆவியைத் தமது விசுவாசிகளாகிய இதயத்தில் வீற்றிருக்கச் சித்தங்கொண்டார்.
அந்தக் கிறிஸ்துவின் ஆவியையுடையவனே உண்மைக் கிறிஸ்தவன் ஆவான். கிறிஸ்து எங்கு இருக்கிறாரோ, கிறிஸ்தவனும் அங்கு இருக்கிறான். நான் மாம்சப் பிரகாரமாக இம்மண்ணுலகில் வாசம்பண்ணினாலும், ஆத்துமப் பிரகாரமாக நான் கிறிஸ்துவின் ஆவியோடேகூட விண்ணுலகில் உன்னதங்களில் வாசம்பண்ணுகிறேன். மாம்சத்தின்படி என் ஆத்தும நேசராகிய இயேசுநாதருக்கு கீழ்ப்பட்டிருக்கிறேன். எது என்னை ஆளப்போகிறது? என் மாம்சமா? அல்லது என் ஆன்மாவா? எது என் வாழ்வில் அதிகாரம் செலுத்தப்போகிறது. என் மாம்சமும், இவ்வுலகமும், பிசாசுமா? அல்லது இயேசுநாதரா? நான் என் மாம்சத்தைச் சேவிக்க போகிறேனா? அல்லது என் ஆன்மாவை சேவிக்கப்போகிறேனா? இரண்டில் ஒன்றைத் தெரிந்துகொள்ள நமக்கு உரிமை உண்டு. சற்று நில். எண்ணிப் பார். நீ உண்iயாகவே யாரைச் சேவிக்கிறாய்? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்று யோசுவா முழங்கினதுபோல நாமும் முழங்கக்கூடுமோ? அப்படியானால், இப்பொழுதே, அப்பாலே போ சாத்தானே. எனக்கு உன்னிடத்தில் ஒரு பங்கும் இல்லை, என்று வீரமுழக்கம் செய்வோமாக. அசுத்த ஆவியல்ல, பரிசுத்த ஆவியானவர்தாமே நம்மை ஆட்கொண்டு நடத்துவாராக. கிறிஸ்துவின் ஆவி இல்லாதவன் அவருடையவன் அல்ல.
விசுவாசக் கரம் நீட்டி, கிறிஸ்துவின் ஆவியானவரை இன்றே, உடனே பெற்றுக்கொள்வோமாக. சாத்தான் சந்தேக இருளை எழுப்பலாம். அவிசுவாசக் குகைக்குள் நம்மை அடக்கி ஒடுக்கப் பார்க்கலாம். ஆனால் நாம் விசுவாசத்தோடு, கிறிஸ்து என் சகாயர். அவரே என் இரட்சகர். அவர்தாம் என் தெய்வம். அவரே என் விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார். அவர் கிருபை எனக்குப் போதும். அவர் சிலுவைப் புண்ணியம் எனக்குப் போதும். அவர் என்னோடு இருக்குங்கால், என்னை எதிர்ப்பவர் யார்? அவர் உலகத்தை ஜெயித்தார். அவரைப் பற்றிய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் என்று முழங்குவோமாக.
வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையாற்ற, வெற்றிவேந்தரான கிறிஸ்து தேவை. அவர் உயிரோடு இருக்கிறார். அவர் ஒரதரம் மரித்தார். ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறார். அவரை நம்பிப் பின்பற்றுகிறவர்களும் உயிரோடு இருக்கிறார்கள். கில்கால் உயிர்த்தெழுதலின் பாளயம் அன்றோ. கிறிஸ்துவுடன் உயிர்த்தெழுந்த நாம் கிறிஸ்துவுக்காக மாத்திரம் பிழைப்போமாக. கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் என்ற சத்தியத்தைக் கில்கால் சுட்டிக்காட்டுகிறதல்லவா!











