- சீடர்களின் பரிசு
தியான வாசிப்பு: யோசுவா 14:6-15
யோசுவா 14ம் அதிகாரம், கர்த்தரின் உத்தமத்தாசனாகிய காலேபின் விசுவாப் பரிசுதனை விளக்கமாக விவரிக்கிறது. காலேப் ஒரு பலத்த விசுவாசி. கர்த்தரிடத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை உடையவன். கர்த்தர்தாம் அவனுக்கு உயிர். கர்த்தரது திருவாக்குத்தான் அவனுக்கு தேவவாக்கு. அரவது கட்டளையென்றால் அதை நிறைவேற்றுவதையே தனக்கு இன்பமாகக் கொண்டவன். கர்த்தரின் சித்தமே அவனது பெரும் பாக்கியம். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்தில் பூரண அன்பு படைத்தவன். கர்த்தருக்குக் கீழ்ப்படிதல் எனும் பண்பு அவனுக்குக் கீரிடம்போல் கௌரவம் அளித்தது. தனது புத்தியைச் சார்ந்ததல்ல, கர்த்தரின் ஆலோசனையைச் சார்ந்ததே எதையும் செய்பவன். பிரமாண்டமான இராட்சதர்களையும், பயங்கரமான அரக்கர்களையும் கண்டு அவன் பயப்படுகிறவன் அல்ல. அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்தில் மாத்திரம் பயபக்தி கொண்டவன். பிறிது யாருக்கும் அஞ்சாத வீர நெஞ்சம் கொண்டவன்.
கர்த்தர் தன்னோடு இருக்குங்கால், தனக்கு எதிராக நிற்கக்கூடியவன். இவ்வையகந்தனில் எங்ஙணும் யாருமே இல்லை என்ற உறுதியான விசுவாசம் படைத்தவன். கர்த்தர் ஒன்றைச் சொன்னால், அதைத் திட்டமாய் நிறைவேற்றுவான். கர்த்தருடைய திட்டத்தை அபத்தமாக்கக் கூடிய சக்தி அகில உலகமெங்ஙணும் எதுவுமேயில்லை என்ற தூய்மையான நம்பிக்கைக் கொண்டவன். பாலையும், தேனையும் கண்டு, மயங்குகிறவன் அல்ல அவன். கர்த்தரின் ஒரு வாக்கையே பெரிதாக மதித்து நடப்பவன். அரணிப்பான கோட்டை கொத்தளங்களையும், வானளாவும் மலைகளையும் கண்டு அவன் தலைகுனிபவன் அன்று. கர்த்தர் ஒருவருக்கே அவன் தலை வணங்குவான். அவர் சொல் ஒன்றையே பொன்னாகக் கொள்பவன். அவர் சமுகத்தையே பேரின்மாகக் கொள்பவன். அவர் நடத்துதலையே எப்பொழுதும் சிரமேற்கொண்டு நடப்பவன். பெருவாரியான மக்கள் இப்பெருந் தெய்வத்தைவிட்டுப் பிரிந்து சென்றாலும், தான் மட்டும் தனியாக நின்று கர்த்தரைச் சேவிக்கும் அவ்வளவு அசைக்கமுடியாத தேவபக்தி மிக்கவன். நாற்பத்தைந்தாண்டுகளுக்கு முன்னர், கானான் தேசத்தை வேவு பார்க்கச் சென்ற பன்னிரு கோத்திரப் பிரதிநிதிகளுள் இக் காலேபும் யோசுவாவும் தவிர, மற்றப் பேர்கள் எல்லாரும் நம்பிக்கையற்றவர்களாய் அதைரிய மொழிகளைப் பகர்ந்தார்கள்.
ஆனால், யோசுவாவும் காலேபும் மாத்திரம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்தில் பலத்த விசுவாசம் கொண்டவர்களாய், அவர் நாமத்தின்மேல் நம்பிக்கையான மொழிகளை நல்கினார்கள். கானான் நாட்டு இராட்சதர்களைப் பெரிதாகக் கருதி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஈடு இணையில்லா வல்லமையை மறந்துபோன அவிசுவாச இஸ்ரவேலர் எல்லாம் வனாந்தரத்தில் மாண்டு ஒழிந்து போனார்கள். கர்த்தரை நம்பாத அவர்களுக்குக் கானான் வாழ்வேது? கானான் நாட்டைக் கொடுப்பவர் கர்த்தர். இப்பராக்கிரம கர்த்தரிடத்தில் விசுவாசம் இல்லாமல் போய்விட்டால், பின்னை எப்படிக் கானான் வாழ்வு கிட்டும்? கர்த்தரை அசட்டை செய்தால் கானான் பரிசும் கைநழுவிவிடும். கர்த்தரிடத்தில் உறுதியான நம்பிக்கை கொண்ட உத்தமர்களான யோசுவாவுக்கும் காலேபுக்கும் கானான் வாழ்வு கிடைத்தது. கர்த்தரை நம்பினவர்கள் யார்தான் வெட்கப்பட்டுப் போனார்கள்? தம்மையே தெய்வமாகக் கொண்ட இக்காலேபைக் கர்த்தர் மறந்துவிடுவாரோ? தம்மையே வாழ்க்கை முழுவதும் சேவித்த இக்காலேபைக் கடவுள் ஆசீர்வதி;க்காது விடுவாரோ? தம்மையே பின்பற்றின உண்மையுள்ள சீடனாகிய காலேபுக்குக் கானான் தேசத்தில் தக்கதொரு பரிசு கிடைத்தது. சிறந்த சுதந்திரம் கொடுக்கப்பட்டது. யோசுவா காலேபை ஆசீர்வதித்து எபிரோனை அவனுக்கு சுதந்தரமாகக் கொடுத்தான்.
ஆ! எபிரோன் எவ்வளவு மகிமையான சுதந்திரம்! அப்படி என்ன மகிமை இந்த எபிரோனில் இருக்கிறது? ஆ! அநேக ஆண்டுகளுக்கு முன்னர் இந்த எபிரோனில் ஆபிரகாம் கூடாரமடித்து இருக்குங்கால், கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி, அவனோடு முகமுகமாய்ப் பேசி, அவனை ஆசீர்வதித்து, அவனுடைய பிற்சந்ததியாருக்கு ஆபிரகாம் இப்பொழுது கால் மிதித்துள்ள எபிரோன் உள்ளடங்கிய பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசம் முழுவதையும் கொடுப்பதாக ஆணையிட்டார். விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாம் எந்த இடத்தில் கானான் தேசத்திருவாக்கைப் பெற்றானோ, அதே இடத்தை அசைக்கமுடியாத திடமான விசுவாச மகனாகிய காலேப் சுதந்திரமாகப் பெற்றான். ஆ, கர்த்தர் எவ்வளவு சிறப்பான ஆசீர்வாதச் சுதந்திரம் பெற்றனுபவிக்கிறார்கள். விசுவாசத்தந்தையிடம் வாக்களிக்கப்பட்ட பூமி, விசுவாச மகனாகிய காலேபுக்குக் கிடைத்தது. ஆ, கர்த்தர் விசுவாசத்தை எவ்வளவாய்க் கௌரவிக்கிறார். கிறிஸ்துவைப் பற்றிய விசுவாசத்திற்கு எவ்வளவு பரிசு கிட்டுகிறது. விசுவாசித்தவனே, பாக்கியவான், இயேசுவை விசுவாசிக்கிறவளே பாக்கியவதி. கிறிஸ்துவின்மேல் கொண்ட விசுவாசம் ஒருவனுக்கு இரட்சிப்பைத் தரும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.
45 ஆண்டுகளுக்குமுன் வனாந்தரத்திலுள்ள காதேஸ்பர்னெயாவில் இஸ்ரவேலர் பாளயம் இறங்கியிருந்தார்கள். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான் தேசத்தைச் சுற்றி வேவு பார்க்கிறதற்கு இஸ்ரவேல் புத்திரரின் பன்னிரு பிரதிநிதிகளை அனுப்புவாயாக என்றார். அப்படியே மோசே அவர்களைக் கானான் தேசத்தைச் சுற்றிப் பார்க்கும்படி அனுப்புகையில், அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி, கானான் தேசம் எப்படிப்பட்டதென்றும், அங்கே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ, பலவீனர்களோ, கொஞ்சம் பேரோ, அநேகம் பேரோ என்றும், அவர்கள் குடியிருக்கிற தேசம் நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ, அல்லது கோட்டையில் குடியிருக்கிறவர்களோ என்றும், நிலம் எப்படிப்பட்டது, அது வளப்பமானதோ அல்லது இளப்பமானதோ என்றும், அதில் விருட்சங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள். தைரியம் கொண்டு, தேசத்தின் கனிகளில் சிலவற்றைக் கொண்டு வாருங்கள் என்றார்.
அக்காலம் திராட்சைச்செடி முதற் பழம் பழுக்கிற காலமாய் இருந்தது. அவர்கள் போய் தேசத்தை சுற்றிப் பார்த்து, தெற்கேயும் சென்று எபிரோன் மட்டும் போனார்கள். அங்கே இராட்சதர்களை கண்டார்கள். பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கு மட்டும்போய், அங்கே ஒரே குலையுள்ள ஒரு திராட்சைக் கொடியை அறுத்தார்கள். அதை ஒரு தடியிலே கட்டி, இரண்டு பேர் தூக்கிக்கொண்டு வந்தார்கள். அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பது நாள் சென்றபின்பு, பாரான் வனாந்தரத்திலிருக்கிற காதேசுக்கு வந்து, மோசேயிடமும் இஸ்ரவேல் புத்திரரிடமும் கானான் தேசத்து சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளையும் அவர்களுக்குக் காண்பித்தார்கள்.
அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசம் பாலும் தேனும் ஓடுகிற தேசம்தான். இதோ, இது அதனுடைய கனி. ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் மிகப் பலவான்கள். பட்டணங்கள் அரணிப்பானவைகளும், மிகவும் பெரியவைகளுமாய் இருக்கின்றன. எபிரோனிலே ஏனாக்கின் குமாரராகிய இராட்சதர்களைக் கண்டோம். அவர்களுக்கு முன் நாம் எம்மாத்திரம் என்றார்கள்.
அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய், கானான் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வோம். நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான். அவனோடுங்கூட எதிர்த்துநிற்க நம்மாலே கூடாது. அவர்கள் நம்மைப் பட்சித்துப்போடும், அங்கே குடியிருக்கிற ஜனங்கள் மிகப் பெரிய ஆட்கள். நாங்கள் அவர்களுக்கு முன் வெட்டுக்கிளிகளைப்போலச் சின்னவர்களாய் இருந்தோம் என்று சொல்லி, கானான் தேசத்தைப்பற்றிய துர்ச்செய்தியைப் பாளயம் எங்கும் பரவச்செய்தார்கள்.
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள். அவர்கள் அன்று இரா முழுவதும் அழுதுகொண்டிருந்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள். நாங்கள் எகிப்து தேசத்திலே செத்துப்போனால் நலமாயிருக்குமே அல்லது இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம். ஆனால், கானான் தேசத்து இராட்சதரின் பட்டயத்தால் மடியும்படிக்கும், எங்கள் பெண்சாதிகளும் பிள்ளைகளும் கொள்ளையாகும்படிக்கும், கர்த்தர் எங்களை இந்தத் தேசத்துக்குக் கொண்டுவந்தது என்ன? எகிப்த்துக்குத் திரும்பிப் போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ என்றார்கள். அவர்கள்: நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு, எகிப்துக்குத் திரும்பிப்போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டார்கள். அப்பொழுது மோசே: இஸ்ரவேல் மக்கள் முன்பாக முகங்குப்புற விழுந்தான்.
தேசத்தைச் சுற்றிப் பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இஸ்ரவேலரை நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துச் சோதித்த தேசம் மகா நல்ல தேசம். கர்த்தர் நம்மேல் பிரியமாய் இருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். கர்த்தருக்கு விரோதமாக மாத்திரம் கலகம்பண்ணாதிருங்கள். அந்தத் தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை. அவர்கள் நமக்கு இரையாவார்கள். அவர்களைக் காத்த நிழல் அவர்களைவிட்டு விலகிப்போயிற்று. கர்த்தர் நம்மோடே இருக்கிறார். ஆகவே, நாம் அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள். அப்பொழுது இஸ்ரவேலர் யோசுவாமீதும் காலேப் மீதும் கல்லெறிய வேண்டும் என்று சொன்னார்கள். உடனே, கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக் கூடாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லாருக்கும் முன்பாகக் காணப்பட்டபடியால் யோசுவாவும் காலேபும் உயிர் தப்பினார்கள்.
அப்பொழுது, கர்த்தர் என் மகிமையையும், நான் எகிப்திலுள்ள வனாந்தரத்திலும் செய்த என் அதிசய அடையாளங்களையும் இவர்கள் கண்டிருந்தும், என் சத்தத்திற்குச் செவிகொடாமல், இதனோடே பத்துமுறை என்னைப் பரீட்சை பார்த்த மனிதரில் ஒருவரும், அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத் தேசத்தைக் காணமாட்டார்கள். எனக்குக் கோபம் உண்டாக்கியவர்களில் ஒருவரும் கானானைக் காணமாட்டார்கள். ஆனால், என்னுடைய தாசனாகிய காலேப் சுத்த ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றி வந்தபடியினாலும், அவன் போய் வந்த கானான் தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன். அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். ஆனால், எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத இஸ்ரவேலரில் இருபது வயதிற்கு மேற்பட்டவர்களுடைய பிரேதங்கள் இந்த வனாந்தரத்தில் விழும். ஆனால், கானானியரால் கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளோ கானான் தேசத்தைக் கண்டடைவார்கள். நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பது நாள் இலக்கத்தின்படியே ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக நீங்கள் நாற்பது வருஷம் வனாந்தரத்திலே திரிந்து, நீங்கள் செய்த பாதகத்தைச் சுமந்து அழிவீர்கள் என்றார். அந்தத் துர்ச்செய்தியைச் சொல்லி, இஸ்ரவேலரை முறுமுறுக்கும்படி செய்த பத்தும் பேரும் கர்த்தருடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள்.
அந்நாளிலே, மோசே காலேபை நோக்கி: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பன்பற்றின தாசனானபடியால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும், உன் பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்திரமாய் இருக்கக்கடவது என்று சொல்லி, ஆணையிட்டான். கர்த்தர் சொன்னபடியே, காலேப் உயிரோடே காக்கப்பட்டான். இது நடந்து நாற்பத்தைந்து வருடங்கள் ஆயிற்று. இப்பொழுது காலேபுக்கு எண்பத்தைந்து வயது. மோசே காலேபை வேவுபார்க்க கானான் நாட்டுக்கு அனுப்பின நாளில் காலேபுக்கு இருந்த அந்தப் பலம் இந்நாள் வரைக்கும் அவனுக்கு இருந்தது. ஆகையால், எபிரோனிலுள்ள இராட்சதரை அவனால் கர்த்தரின் சகாயத்தால் கொன்றொழிக்க முடிந்தது. எபிரோனைச் சுற்றிலும் உள்ள பராக்கிரமம் படைத்த இராட்சதரை எல்லாம் காலேப் முற்றிலும் மடங்கடித்தான். இவ்வாறு சுதந்தரம் எல்லாம் பிரித்துக் கொடுக்கப்பட்ட பின்பு, தனது சுதந்தரப் பாகத்திலுள்ள விரோதிகளையெல்லாம் சர்வ சங்காரம் செய்த ஒரே மனிதன் காலேப் மட்டுமே. காரணம், கர்த்தர் அவனோடு இருந்தார். அவன் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவன். அவன் கர்த்தரைப் பரிபூரணமாய் நம்பினவன். அவன் கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றின தாசன். ஆகவே, ஆபிரகாம் தேவதரிசனம் கண்டு, திருவாக்குப் பெற்ற இடமாகிய எபிரோன் தேவதரிசன ஸ்தலம். எபிரோன் தேவஐக்கிய தலம். பரிசுத்த உடன்படிக்கை தலம். எபிரோன் அந்நியோந்நிய உறவுச் சின்னம். எபிரோன் தேவ காட்சி கிட்டும் திருத்தலம். இம்மேன்மையான எபிரோன் கர்த்தரை உத்தமமாய்ச் சேவித்த விசுவாசத் தாசனாகிய காலேபுக்குச் சுதந்தரமாகக் கிடைத்தது. காலேபின் விசுவாசத்திற்கு இச்சிறந்த பரிசு தகும். சீடனுக்கேற்ற சீரிய பரிசு இதுவன்றோ!
காலேபின் தெய்வம் நம் தெய்வம்! காலேபின் விசுவாசம்போல் அசைக்கமுடியாத அதிவுன்னாத விசுவாசம் நமக்குள் பண்ணப்படட்டும். காலேபின் விசுவாசத்திற்கு ஏற்றதோர் பரிசு அவனுக்குக் கிட்டியது. அத்தகைய எபிரோன் நமக்குச் சுதந்தரம் ஆகட்டுமே. எபிரோனில் ஆபிரகாமோடு முகமுகமாய்ப் பேசின தெய்வம் நம்மோடும் பேசட்டும். தேவதரிசனம் நமக்குக் கிடைக்கட்டும். தேவாசீர்வாதம் நமக்கும் வாய்க்கட்டும். உத்தமத் தேவதாசன் என்ற புனைப்பெயர் நமக்கும் கிட்டட்டும். நமது விசுவாசம் மென்மேலும் வளரட்டும் அவ்விசுவாசத்தின் பரிசாகக் கிறிஸ்துவே நம் சுதந்திரம் ஆகட்டும்.










