- வாழ்க்கையில் பெருகுதல்
தியான வாசிப்பு: யோசுவா 17:14-19
யோசேப்பின் வம்சத்தாராகிய எப்பிராயீமியரும் மனாசேயரும் மிக்க ஜனம் பெருத்தவர்கள். மகா பராக்கிரமம் படைத்தவர்கள். ஆகையால், தங்களுக்கு மற்றக் கோத்திரத்தாரைப்போல் ஒரு பங்கு சுதந்திரம் மாத்திரம் போதாது என்று அதிருப்தி கொண்டார்கள். ஆகவே, அவர்கள் யோசுவாவை நோக்கி: கர்த்தர் எங்களை இது வரைக்கும் ஆசீர்வதித்து வந்ததினால், நாங்கள் ஜனம் பெருத்தவர்களாய் இருக்கிறோம். நீர் எங்களுக்குச் சுதந்திரமாக ஒரே பங்கையும், ஒரே வீதத்தையும் கொடுத்தது என்ன என்று முறையிட்டார்கள். அவர்களுடைய அதிருப்தியான முறையீட்டைக் கேட்ட யோசுவா, அப்படி நீங்கள் அதிக ஜனம் பெருத்தவர்களாயும், எப்பிராயீம் மலைகள் உங்களுக்கு நெருக்கமாயுமிருந்தால், பெரிசியர், ரெப்பாயீமியர் குடியிருக்கிற காட்டுத்தேசத்துக்குப் போய் உங்களுக்கு இடம் உண்டாக்கிக்கொள்ளுங்கள் என்றான். அக்காட்டுப் பிரதேசத்திலுள்ள மரங்களையெல்லாம் வெட்டித்திருத்துங்கள். அப்பொழுது அதன் கடையாந்திரம் மட்டும் உங்களுடையதாய் இருக்கும். நீங்கள் ஜனம் பெருத்தவர்களாயும் பராக்கிரமம் மிகுந்தவர்களாயும் இருக்கிறபடியால், அதிகக் காட்டு மரங்களை வெட்டி, நாட்டுப் பிரதேசமாக அதைத் திருத்திக்கொள்ளலாமே என்றான்.
அதற்கு யோசேப்பின் புத்திரர். மலைகள் எங்களுக்குப் போதாது. பள்ளத்தாக்குப் பிரதேசமும் எங்களுக்கு வேண்டும். ஆனால், அடுத்துள்ள பள்ளத்தாக்கு நாட்டிலிருக்கிற பெத்செயானிலும், அதன் ஊர்களிலும் யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலும், குடியிருக்கிற எல்லாக் கானானியரிடத்திலும் இருப்பு ரதங்கள் உண்டு என்றார்கள். அதற்கு யோசுவா பிரதியுத்தரமாக , பள்ளத்தாக்கில் குடியிருக்கிற கானானியர்க்கு இருப்பு ரதங்கள் இருந்தாலும், அவர்கள் பலத்தவர்களாய் இருந்தாலும் நீங்கள் அவர்களைத் துரத்திவிடுவீர்கள். நீங்கள்தான் ஜனம் பெருத்தவர்களாயும் பராக்கிரமம் மிக்கவர்களாயும் இருக்கிறோம் என்று சொன்னீர்களே என்றான். ஆகவே, உங்களுக்கு காட்டு மரங்களை வெட்டி நாடாகத் திருத்துவதற்கும், கானானியருடைய இருப்பு ரதங்களை வெல்வதற்கும் எளிது என்றான். ஆம், அதிகச் சுதந்திரம் வேண்டுமானால், அதிகம் உழைக்கவேண்டும். அதிகம் போரிட்டுத்தான் ஆகவேண்டும். காட்டுமரங்களையெல்லாம் அறவே வெட்டித்தான் ஆகவேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு மரங்களை வெட்டி, காட்டைத் திருத்துகிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு குடியிருப்பதற்குப் போதிய நிலம் விலாசமாகிக்கொண்டே போகும். எவ்வளவு நிலத்தைப் போராடிப் பெற்றுக்கொள்கிறோமோ அவ்வளவு அதிகமாய் சுதந்திரப்பூமி விருத்தியாகிக்கொண்டே போகும். வெற்றி கொள்ளும் அளவுக்கு வாழ்வதற்குரிய நிலம் விரிவாகும். கொள்ளும் அளவுக்குத் தக்கதுதான் வாழ்வு அளவாகும் அன்றோ!
ஆனால், யோசேப்பின் புத்திரரோ தாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களானபடியினாலும், பராக்கிரமம் மிக்கவர்களானபடியினாலும் தங்களுக்குச் சுதந்திர வீதம் ஒரு பங்கு அதிகமாய் வேண்டும் என்று முறையிட்டார்கள். தங்களது தற்காலத் தலைவனான யோசுவா, யோசேப்பின் வம்சத்தராகிய எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவன். ஆகவே, அவர்கள் தங்களை ஆசீர்வதிக்கப்பட்ட கோத்திரம் என்றும், மற்றவர்களைவிட தங்களுக்கு அதிகச் சுதந்திரம்வேண்டுமென்றும் வாதாடினார்கள். யோசுவாவோ ஆசீர்வதிக்கப்பட்ட அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவனாய் இருந்தபொழுதிலும் கர்த்தருடைய கட்டளையை ஒருக்காலும் மீறி நடக்க சம்மதியான். தன் கோத்திரம் என்பதால், கர்த்தரைக் கேளாது எதையும் செய்ய அவன் துணியான். மேலும் கர்த்தருடைய பிள்ளைகளுக்குக் கர்த்தர் வகுத்துள்ள வாழ்க்கை நெறியை மீறி நடக்க அவன் ஒருபொழுதும் இசையான். அவன் தன் கோத்திரத்தை மாத்திரம் கண்சாடையாய் விடுத்தவன் அல்ல.
வாழ்க்கை நெறி என்றால் கர்த்தருடைய பிள்ளைகள் எல்லாருக்குமே ஒரே நெறிதான். கர்த்தர் ஒருவரே, கர்த்தரைக் கண்டடையும் நெறியும் ஒன்றே, வழியும் ஒன்றே. அந்த ஒரே ஒப்பற்ற வழியைவிட்டு வேறெந்த வழியிலும் நாம் ஆசீர்வாதத்தைப் பெருக்கிக்கொள்ள முடியாது.
நாம் ஒப்பற்ற அதி உன்னத தலைசிறந்த குடும்பத்தில் பிறந்திருக்கலாம். உயர் ஜாதியில் உதித்திருக்கலாம். முதல்தர கோயிலில் அங்கத்தினராய் இருக்கலாம். நமது குடும்பத்தில் அல்லது திருச்சபையில் பிரபலமான மகான்கள், தலைவர்கள், உத்தமர்கள், பரிசுத்தர்கள் தோன்றியிருக்கலாம். நாம் பிறந்த குடும்பம் மாத்திரமன்று, சேர்ந்திருக்கிற திருச்சபை மாத்திரமன்று, நாம் பழகுகிற மக்களும் கீர்த்தியைப் பெற்றவர்களாய் இருக்கலாம். யோசுவா போன்ற தனிப் பெரும் தலைவர்கள் போன்றவர்களோடு நாம் உறவு கொண்டாடலாம், நட்புரிமையைக் கொண்டாடலாம். அதினால் நாம் ஆண்டவருடைய ஆசீர்வாதத்திற்கு உரியவர்கள் , இன்னும் அதிகச் சுதந்திரம் வேண்டும் என்று உரிமை கொண்டாட முடியாது. நமது மரபுரிமையும் சூழ்நிலையும், பழக்க வழக்கங்களையும் நமக்குப் பெரும் பெரும் ஆசீர்வாதங்களையும் கொண்டுவரவேண்டும்மென்று எதிர்பார்க்கமுடியாது. ஆசீர்வாதம் ஒன்றுதான். ஆசீர்வாதத்தை அடையக்கூடிய வழியும் ஒன்றுதான். தேவாசீர்வாதம் இயேசு கிறிஸ்துவே! ஒரு மனிதன் விசுவாசத்தோடு அவரை எவ்வளவுக்கெவ்வளவு ஏற்றுக்கொள்கிறானோ, அவ்வளவுக்கவ்வளவு அவனுக்கு அதிக ஆசீர்வாதம் கிட்டும். அவனது விசுவாசம் வளர வளர ஆசீர்வாதத்தைக் கொள்ளும் அளவும் வளரும். கொள்ளும் அளவுக்குத் தக்கதே வாழ்வு அளவாகும் அல்லவா!
யோப்பின் புத்திரர் அதிகச் சுதந்திரம் பெறவேண்டுமாயின் அவர்கள் இதுகாறும் ஆசீர்வதிக்கப்பட்ட வம்சத்தாராய் இருந்தால் மாத்திரம் போதாது. அவர்கள் பராக்கிரமம் பெருத்தவர்களாய் இருந்தால் மாத்திரம் போதாது. அவர்கள் கோத்திரத்தில் யோசுவா பிறந்திருப்பது மட்டும் போதாது. அவர்கள் அதிகச் சுதந்திரத்திற்காக முறையிடுவது மாத்திரம் போதாது. அவர்களுக்கு அதிகச் சுதந்திரம் வேண்டுமாயின் அவர்கள் முதலாவது காட்டுமரங்களையெல்லாம் வெட்டியாகவேண்டும். அவர்கள் எவ்வளவுக்கதிமாய்க் காட்டுமரங்களை வெட்டி ஒழிக்கிறார்களோ அவ்வளவுக்கதிகமாய்ச் சுதந்திரப் பூமி விசலமாகிக்கொண்டே போகும். ஆசீர்வாதம் அதிகரித்துக்கொண்டே போகும். கொள்ளளவுக்குத்தக்கதுதான் வாழ்வு அளவு அன்றோ!
ஆம், நமக்கு இன்று அதிக ஆசீர்வாதம், அதிகச் சுதந்திரம், அதிக பாக்கியங்கள் வேண்டும் என்று ஆசீத்தால், நாம் முதலாவது செய்யவேண்டிய வேலை நமது வாழ்க்கையிலுள்ள காட்டுமரங்களையெல்லாம் ஒன்றுகூட மீதியில்லாமல் அத்தனையையும் அறவே வெட்டி அழித்துவிடுவதே ஆகும். நமது வாழ்விலுள்ள பாதகங்களே அக்காட்டு மரங்கள். நமது இளம் வயதிலிருந்து இதுகாறும் நமது வாழ்வில் வேர்விட்டு, துளிர்த்து, பூத்துக் காய்த்து, கசப்பான பாவக்கனி தரும் நச்சு மரங்களையெல்லாம் வெட்டி வீழ்த்தவேண்டும். ஓர் இரகசியப் பாவ மரமும் இல்லாது, முழுவதுமாய் வெட்டிவிடவேண்டும். ஒரு பாவப் பழக்கமும் இல்லாது முற்றிலும் ஒழித்துவிடவேண்டும். வேரோடு வெட்டி எறியவேண்டும். அது இருந்த இடத்தையும் இனி அது அறியாதபடி அதை அறவே சங்காரம் செய்யவேண்டும். கிறிஸ்துவின் இரத்தத்தால் நம்முடைய சகல பாவங்கள் நீங்க, முற்றிலும் கழுவிச் சுத்திகரிக்கப்படவேண்டும். செக்கச் சேவேர் என்றிருந்த பாவங்கள் கிறிஸ்துவின் இரத்தத்தால் பூரணமாய்க் கழுவப்பட்டு உறைந்த மழையைபபோல வெண்மையாகவேண்டும். இரத்தாம்பரச் சிவப்பாய் இருந்த பாவங்கள் கிறிஸ்துவின் இரத்தத்தால் பஞ்சைப்போல வெண்மையாகவேண்டும். கறை திரைக்கும், மாசு மறுவுக்கும், இனி நம் இருதயத்தில் இடமிருக்கக்கூடாது. எல்லாப் பாவ பழக்க வழக்கங்களாகிய மரங்கள் கொப்புக் கிளைகளோடு மாத்திரமல்ல, வேரோடு வெட்டி வீழ்த்தப்படவேண்டும், பூண்டோடு அவைகள் நெருப்புக்கு இரையாக வேண்டும். காட்டுமரங்களெல்லாம் அழிக்கப்பட்டு, கரடுமுரடான நிலங்கள் திருத்தப்படவேண்டும். காடு நாடாக வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு மரத்தை வெட்டி காட்டை திருத்திக் கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு மட்டுமே வாழ்க்கைக்குப் பயன்படும் நிலம் கிட்டும்.
காட்டு மரங்களை அழிக்காது நாட்டு நிலம் அதிகம் வேண்டும் என்று கூச்சலிடுவதால் பயனில்லை. பாவப் பழக்க வழக்கங்களை அழித்தொழிக்கவேண்டும் என்று உரக்கக் கத்துவதில் பொருளேதுமில்லை. யோசேப்பின் புத்திரரைப்போல நாங்கள் யோசுவா பிறந்துள்ள ஆசீர்வாதமான குடும்பத்தில் பிறந்துள்ளோம். எங்களுக்கு ஐனப்பெருக்கமும், பாராக்கிரமத் திரட்சியும், இயற்கைத் திறனும், சாமர்த்திய வன்மையும் அதிகம். இத்தகைய வரம் படைத்த உமக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலையோ சிறிது. பதவியோ அற்பமானது என்று அதிருப்தி கொண்டிருக்கலாம். ஆண்டவர் கொடுத்துள்ள தொழிலில் முறுமுறுப்புக்கொண்டிருக்கலாம். இவ்வித அதிருப்தி ஒருநாளும் ஆசீர்வாதத்தைக் கொணராது. நாம் இன்னும் வளராததற்குக் காரணம் பெருகாததற்குக் காரணம் இப்பொழுது ஆண்டவர் வைத்திருக்கிற இடத்திலுள்ள காட்டு மரங்களை நாம் இன்னும் சரியாக வெட்டாததே.
பாவ மரங்களை வெட்ட வெட்ட திட்டமாக இடமும், வாய்ப்பும் ஆசீர்வாதமம் பதவியும் பெருகிக்கொண்டே போகும். பதவி என்றால் பொறுப்பும் ஆங்கே உண்டு. பொறுப்பை ஏற்காவிடில், பெருக்கம் ஏற்படாது. அது சின்ன வேலையாய் இருந்தாலும் அதற்குரிய பொறுப்பு உண்டு. நாம் கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தால் அநேகத்திற்கு அதிகாரியாய் உயர்த்தப்படுவோம். இப்பொழுது இருக்கிற தனது கொஞ்சத்தை அசட்டைபண்ணுகிறவன் ஒருநாளும் பெரும்பாக்கியத்தை பெறான். தான் நாட்டப்பட்டுள்ள சிறிய தோட்டத்தில் இருந்துகொண்டதானே அதற்குத் தக்க கனி கொடுக்க அறியாதவன் எவ்வாறு பெரிய தோட்டத்தில் பெரும் கனியைக் கொடுப்பான். ஆகவே, ஆண்டவர் வைத்துள்ள இடத்தில் உன் வாழ்வில் இருக்கும் கெட்ட காட்டு மரங்களை எல்லாம் முதலில் நீ வெட்டி எரிங்குங்கால், உனக்குத் தராளமான இட விசாலம் ஏற்பட்டு விடும். ஆண்டவர் இப்பொழுது உன்னை வைத்துள்ள நிலையில் நீ முற்றிலும் வெற்றியுள்ள புனித வாழ்க்கை ஆற்றுங்கால், அதுவே உன் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அடிகோலிவிடும்.
நீ இப்பொழுது இருக்கிற வீட்டில் பாவப் பழக்கங்களாகிய காட்டு மரங்கள் உண்டா? நீ இப்பொழுது பணியாற்றுகிற அலுவலகத்திலே தீய காட்டு மரங்கள் உண்டா? நீ வாழ்கிற துறையிலே பாவமரங்கள் வளர்ந்துள்ளனவா? நீ நடமாடுகிற வழியிலே கெட்டமரங்கள் வளர்ந்து, உனது வாழ்க்கை மேம்பாட்டிற்கு முட்டுக்கட்டை போட்டு நிற்கின்றனவா? நீ வாழ்வில் வெற்றி வீரனாக முன்னேறிச் செல்லாதபடி தடுத்து நிற்பது கர்த்தர் அல்ல. உனது சொந்தப் பாவங்களேயாகும். ஆகவே, இதனை நீ அறியாது இவ்வளவு திறம் படைத்த உனக்கு வாழ்க்கையில் ஈடேற்றம் இல்லையே, என்று ஏங்கிக்கொண்டிருக்கும். நண்பனே, உனது தாழ்ச்சிக்கு காரணம் உனது பாவமே என்றறிவாயாக. உன் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் நீ முன்னேறிச் செல்லாதபடி குறுக்கிட்டு நிற்பது உன் பாவ மரமேயாகும். உனது வாழ்க்கை சுபீட்சப் பாதையை அடைந்து நிற்க, அப்பாவ மரத்தை உடனே தறித்து எரித்து விடு. ஆதை வேரோடு வெட்டி நெருப்பிலிட்டுக் கொளுத்திவிடு. மரம் ஒழிந்தபின், முன்னால் அடைக்கப்பட்டிருந்த ஆசீர்வாதப் பூமி உடனே திறக்கப்பட்டுவிடும். கொள்ளளவே ஆகுமாம் வாழ்வு அளவு.
யோசேப்பின் வம்சத்தாருக்கு பிரதேசம் வேண்டுமாயின், அவர்கள் அங்குள்ள கானானியரின் இருப்பு ரதங்களை முறியடித்தாக வேண்டும். அவர்கள் தாம் பராக்கிரமச்சாலிகள் என்று சொன்னார்களே. ஜனப்பெருக்கம் உள்ளவர்கள் என்று கூறினார்களே. அப்படியானால், அவர்கள் ஏன் இந்தக் கானானியரின் இருப்பு ரதங்களைக் கைப்பற்றி அவர்கள் வாழும் வளம் படைத்த இந்தப் பள்ளத்தாக்கை பிடித்துக்கொள்ளக்கூடாது? மேலும், இடம் வேண்டுமானால், மேலும் போர்புரிந்துதான் ஆகவேண்டும். அதுவும் வளமான இடம் வேண்டுமானால், வன்மை படைத்த விரோதிகளை வென்றுதான் ஆகவேண்டும். பாலும் தேனும் ஓடும் பள்ளத்தாக்கு வேண்டுமாயின், அங்குள்ள இருப்புரதங்களை நொறுக்கித்தான் ஆகவேண்டும். அதிகச் சுதந்திரத்துக்கு ஆசைப்பட்டால், அதிக உக்கிரமாய் யுத்தம் செய்துதான் தீரவேண்டும். வெறும் முறுமுறுப்பால் ஆசீர்வாதம் கிட்டிவிடாது. வெறும் முறையீட்டால் சுதந்திரம் பெருகிவிடாது. இருப்பு ரதங்களை உடைத்தெறிந்தால் மட்டுமே செழிப்பான பள்ளத்தாக்கு கிடைக்கும். கொள்ளளவே வாழ்க்கையளவு.
நமது கிறிஸ்த வாழ்வில் பேரின்பம் பொங்கும் பள்ளத்தாக்குகளைச் சுதந்தரிக்கவேண்டுமாயின், அங்குள்ள பெயல்செபூலின் இருப்புரதங்களாம் பலத்த சோதனைகளை எதிர்த்து வெல்லவேண்டும். இயேசுநாதர் தமது அவதார வாழ்க்கைக் காலத்தில் எத்தனையோ பிரமாண்டமான இருப்புரதங்களை எதிர்த்து அவற்றை எல்லாம் சுக்குநூறாகத் தகர்த்தெறிந்துவிட்டார். அவருக்கு நாற்பது நாள் மாத்திரம் அன்று. அவதார வாழ்க்கை முழுவதுமே சாத்தானின் பயங்கரமான இருப்புரதங்களைத் தாக்கி தகடு பொடியாக்க வேண்டியிருந்தது. இருள் வேந்தனின் இருப்புரதங்களை எல்லாம் இயேசுநாதர் எதிர்த்து தூள் தூளாக்கி, எரித்து சம்பலாக்கி விட்டார். அந்தகாரலோகாதிபதியின் இருப்புரதங்களை எல்லாம் அழித்துவிட்டேன் என்பதற்கு அறிகுறியாகச் சிலுவையில் முடிந்தது என வெற்றி முழக்கம் செய்தார். அவர் வென்றதுபோல நாமும் வெல்லவேண்டும். அவர் வெற்றி நம் வெற்றி என்றால் நாமும் எவ்வளவு கொடுத்து வைத்த பாக்கியவான்கள்.
கிறிஸ்துவின் வெற்றியை விசுவாசத்தின்மூலம் நம் வெற்றியாக்கிக்கொள்ளவேண்டும் எவ்வளவுக்கெவ்வளவு நமதாக்கிக் கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவுதான் நம்முடைய புனித வெற்றி வாழ்வு பெரிதாகி வளருகிறது. கொள்ளளவுக்குத்தக்கதுதானே வாழ்வு அளவு இருக்கும். எவ்வளவுக்கதிகமாய் கிறிஸ்துவின் பரிசுத்தாவியைப் பெற்றுக்கொள்கிறோமோ அவ்வளவுக்கதிகமாய் பரிசுத்த வாழ்வில் முன்னேறுவோம். எவவளவுக்கதிகமாய் கிறிஸ்துவைப் பற்றிய விசுவாசத்தில் வளர்கிறோமோ அவ்வளவுக்கதிகமாய் ஆசீர்வாதவாழ்க்கையில் மேம்படுவோம். எவ்வளவுக்கதிகமாய் கிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறோமோ அவ்வளவுக்கதிகமாய்த் தூய ஜெய ஜீவியம் விருத்தியாகும். எவ்வளவுக்கதிகம் உனக்கு ஆசீர்வாதச் சுதந்திரம் வேண்டுமோ அவ்வளவுக்கவ்வளவு கரிசனையோடு உனது பாவ நச்சுமரங்களை எல்லாம் வெட்டி எறிந்துவிடவேண்டும். வெறும் இலைகளோடும் கொப்புக் கிளைகளோடும் மாத்திரமல்ல, வேரோடு அவை வெட்டி எரித்துச் சாம்பலாக்கிவிடவேண்டும். முட்டுக்கட்டை போடும் கெட்ட காட்டு மரங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அழிக்கப்படுகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு பேரின்ப இடவசதி ஏற்படும். எவ்வளவுக்கெவ்வளவு இடவசதி ஏற்படுகின்றதோ, அவ்வளவு தூரம் இயேசு கிறிஸ்து உன்னை நிரப்பி எவ்வளவு ஆண்டு கொள்கிறாரோ அவ்வளவு பரிசுத்த வெற்றி வாழ்க்கை வாய்க்கும். அவர் உன்னில் பெருகவே உன் வாழ்வும் பெருகும். அதற்கு உன் விசுவாசம் பெருகவேண்டும். ஒப்படைத்தல் பெருகவேண்டும். அவரையே நம்பி வாழ்தல் பெருகவேண்டும். அவராலே அல்லாமல் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. ஆகவே, அவரைக் கொள்ளும் அளவு நம் வாழ்வு அளவாகும். இயேசு என்னில் பெருகவே, நான் வாழ்வில் பெருகுகிறேன்.











