- நல்ல சமாரியன்
லூக்கா 10:25-37
அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவihச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார். அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான். அவர் அவனை நோக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய், அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார். அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான். இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான், அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள். அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான். இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார். அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றான்.
உதவி தேவைப்படுகிறவர்களுக்கு கிறிஸ்தவர்கள் உதவி செய்யவேண்டும். இரட்சண்யம் நற்கிரியைகளால் கிடைப்பதில்லை. எனினும் இரட்சண்யம் நற்கிரியைகளைப் பிறப்பிக்கும் (எபே 2:8-9). தங்கள் காரியங்களில் அதிக கரிசனை கொண்டுள்ளனர். பிறருக்கான காரியங்களில் ஈடுபட அவர்களுக்கு சமயம் கிடைப்பதில்லை. அநேக கிறிஸ்தவர்கள் பெற்றுக்கொள்வதில் உற்சாகம் காட்டுகின்றனர். கொடுப்பதில் உற்சாகம் காட்டுவதில்லை. உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்க வேண்டுமானால் கொடுக்கப் பழக வேண்டும். உதவி செய்யப் பழக வேண்டும்.
- தேடுகிறவன்: வசனம் 10:25-29
(அ) வாஞ்சை – வசனம் 25. நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று வாஞ்சையோடு ஒருவன் கிறிஸ்துவைத் தேடி வந்தான். அநேகர் சத்தியத்தை அறிய வாஞ்சிப்பதுண்டு.
(ஆ) நிறைவேற்ற வேண்டியவை – வசனம் 26-27. இயேசு கூறியவை.
- முழு இருதயத்தோடு உன் தேவனில் அன்பு கூருவாயாக. நமது உணர்வு முழுவதும்.
- முழு ஆத்துமாவோடு தேவனில் அன்பு கூரவேண்டும் – ஆவிக்குரிய வாழ்வு முழுவதுமாய்.
- முழு பெலத்தோடும் தேவனில் அன்புகூர வேண்டும் – சரீர பெலன் முழுவதும்.
- முழுச்சிந்தையோடும் தேவனில் அன்புகூர வேண்டும் – மனது முழுவதும்.
(இ) நோக்கம் – வசனம் 28. முற்கூறியவற்றை நிறைவேற்றும்போது பத்துகற்பனைகள் நிறைவேற்றப்படுகிறது. யாத் 20:1-16.
- உவமை: வசனம் 10:30-35
(அ) வசனம் 30 – ஒரு பிரயாணி கொள்ளையடிக்கப்பட்டுக் காயப்படுத்தப்பட்டு வழியருகே குற்றுயிராக்கப்பட்டு கிடந்தான்.
(ஆ) அங்கு வந்தவர்கள் – வசனம் 31-33. அவ்வழியே வந்தவர்களைச் சற்று கவனிப்போம்.
- ஆசாரியன் (யூதன்) – அவன் சமயச்சார்புடைய (மதச் சார்பான) உலகத்தைப் பிரதிபலிக்கிறான். அவன் யாதொரு உதவியும் செய்யவில்லை.
லேவியன் – அவன் சபை உலகை பிரதிபலிக்கிறான். அவனும் உதவிசெய்யாது கடந்து சென்றான்.
சமாரியன் – அவன் கிறிஸ்தவ உலகைப் பிரதிபலிக்கிறான். சமாரியர்களும் யூதர்களும் விரோதிகளாயிருந்தாலும் இச் சமாரியன் உதவிசெய்ய முன் வந்தான்.
இ. அவனில் காணப்பட்ட மனதுருக்கம்.
- தெய்வீக அன்பு அவனிலிருந்து வெளிப்பட்டது – அனுதாபம் கொண்டான்.
- செயல் முறை அன்பு அவனிலிருந்து வெளிப்பட்டது – காயங்களைக் கட்டினான்.
- இரக்கமுள்ள அன்பு அவனிலிருந்து வெளிப்பட்டது – சத்திரத்திற்கு அழைத்துச்சென்று பாதுகாப்பு அளித்தான்.
- சுயநலமற்ற அன்பு அவனிடமிருந்து வெளிப்பட்டது – கைம்மாறு கருதாது அவனுக்காக செலவு செய்தான்.
- இரக்கச் செயல்: வசனம் 10:36-37
(அ) பிறன் யார்? உலகம் இன்று காயப்பட்டுக் கிடக்கிறது. நீ உதவி செய்ய முன் வருவாயா? பதில்: வசனம் 37.
(ஆ) செயல்ப்படுத்துதல்: வசனம் 36. நீயும் போய் அந்தப்படியே செய். அது இயேசு வார்த்தைகள். அன்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தால் போதாது. அன்பை செயல்மூலம் வெளிப்படுத்து. கிறிஸ்தவன் ஒருவனுக்குச் செல்வமிருந்தும் தன் சகோதரனில் தரித்திர நிலையில் அவனுக்கு உதவி செய்யாவிடில் தேவன் அவனை எவ்விதம் நேசிக்க முடியும்? 1.யோவான் 3:17.
- மற்றவர்களின் தேவைகளைப்பற்றியும், பிரச்சனைகளைப்பற்றியும் சிந்தியுங்கள்.
- தேவனுக்கு உங்களை நீங்கள் கொடுக்கும்போது மற்றவர்களுக்கு நீங்கள் உதவியாயிருப்பீர்கள்.
- மற்றவர்களின் நிலைமையில் உங்களை வைத்து சிந்தித்துப் பாருங்கள்.
- கிறிஸ்துவைப்போன்று இரக்கமும் மனதுருக்குமும் உள்ளவர்களாயிருங்கள்.











