- செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும்
மத்தேயு 25:31-46
அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமத மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள், தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள், அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள், வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள், வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள், காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார். அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங் கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை: தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை, அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை, வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை, வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார். அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவிசெய்யாதிருந்தோம் என்பார்கள். அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
கிறிஸ்துவை உடையவர்களுக்குரிய நியாயத்தீர்ப்பைச் சந்திக்க வேண்டுமென்பதைப்பற்றி அநேகர் நினைப்பதில்லை. இங்கு கூறப்பட்டுள்ளது, வெளிப்படுத்தின விசேஷம் 20:11-15ல் கூறப்பட்டுள்ள பாவிகளின் நியாயத்தீர்ப்பிற்கு வித்தியாசமானது கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ளவற்றினை அசட்டை செய்யின் கிறிஸ்தவன் நியாயம் தீர்க்கப்படுவதுண்டு.
- அவனது சமயம் – சங்.90:12
- அவனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தாலந்துகள் – மத்.25:14-30
- அவனது நாவு (பேச்சு) – மத்.12:36
- அவனது எண்ணங்கள் – வெளி 23:7
- அவனது கிரியை – பிர.12:14
- அவனது பணிவிடை – 1.கொரி.3:8
- கனிகள் – மத்.3:8-10
- இரட்சகர்: வசனம் 25:31-33
(அ) குமாரன்: வசனம் 31 – மனுஷகுமாரன் என்பது மாம்சத்திலிருந்த இயேசுகிறிஸ்துவைக் குறிப்பதாகும். வார்த்தை மாம்சமானது. யோவான் 1:14 – அவர் மனிதனுக்காக மனிதனானார்.
(ஆ) பிரித்தல்: வசனம் 32-33 – இரண்டு வகை ஆடுகள் இரண்டு வகை ஜனங்களைக் குறிக்கும். நீதிமான்கள் – பாவிகள். கிறிஸ்து இரண்டு வகையாருக்குமுள்ள வித்தியாசத்தைக் குறிப்பிடுகிறார். நரகத்திற்குப் போவோர் யார்? வெளி 21:8.
கடைசிக்காலச் சம்பவங்களைச் சற்று நினைத்துப் பாருங்கள். கிறிஸ்து எந்நேரத்திலும் வரக்கூடும். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர், பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவர். பாவிகள் ஏழு ஆண்டுகள் உபத்திரவம் அனுபவிப்பர். பின்னர் கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு அரசாட்சி ஏற்படும். பின் நியாயத்தீர்ப்பு தொடர்ந்து நடைபெறும், வெளி 20:11-15. புதிய வானம் புதிய பூமி ஏற்படும்.
- பங்கு கொள்ளுதல்
(அ) பிரதிபலன்: வசனம் 34 – வலது பக்கத்தல் நிற்பவர்கள் ஆயத்தம் பண்ணப்பட்ட இராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வர். தேவனுடைய செல்வமெல்லாம் அவர்களுடையதாகும்.
(ஆ) பிரதிபலன் பெற்றிட அவர்கள் செய்ததென்ன? வசனம் 35-36.
- பசியாயிருந்தபோது ஆகாரம் கொடுத்து உதவினர் – வசனம்35-36 (1.யோவான் 3:17: யாக்கோபு 1:27). கிறிஸ்தவர்கள் அவ்விதமிருக்கவேண்டும்.
- கிறிஸ்தவர்களின் கரிசனை – வசனம் 37-39.
- சிறியர்க்கிரங்கும் கிறிஸ்துவைப்போன்ற தன்மை – வசனம் 40. சிறியவர்க்கு நன்மை செய்தல் – இது கிறிஸ்துவின் தன்மை.
- பாடனுபவித்தல்: வசனம் 25:41-46
(அ) பிரித்தல்: வசனம் 41 – நித்திய அக்கினி (நரகம்) பிசாசுக்காகவும் அவனது தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறது. அதுவே இடது பக்கத்தில் நிற்பவர்களின் பங்கும்கூட.
(ஆ) விசாரம்: வசனம் 42-43 – அநேகருக்கு இயேசுவிடம் வருவதற்கு நேரமில்லை. இது விசாரம் மிகுந்த காரியம். நற்கிரியை மீட்பைத் தராது. ஆனால் மீட்பு நற்கிரியையை ஏற்படுத்தும்.
(இ) பாவம்: வசனம் 44-45 – சரி எது என்றும் நலமானது எது என்றும் முதலில் அறிந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை நிறைவேற்றுங்கள். யாக்.4:17. நன்மை எதுவென்று அறிந்தும் அதனைச் செய்யாதிருந்தால் பாவமே.
(ஈ) தீர்ப்பு: வசனம் 46 – இருவித தீர்ப்பு. ஒன்று நீதிமான்களுக்கு (கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களுக்கு) உள்ள தீர்ப்பு. இன்னொன்று, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கான தீர்ப்பு.
கிறிஸ்தவனாக இருப்பதும் கிறிஸ்தவனாக வாழ்வதும் ஒரு கடமையோ வேலையோ அல்ல. அது கிடைத்தற்கரிய ஒரு சிலாக்கியமாகும். எனவே காலத்தைப் பயன்படுத்துதல் அதிக முக்கியம்.









