- நடு இரவில் சிநேகிதன்
லூக்கா 11:5-8
பின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே, என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். வீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்தரமாக: என்னைத் தொந்தரவுசெய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடேகூடப் படுத்திருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று சொன்னான். பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யாவருக்கும் தேவைகள் உள்ளன. எல்லா தேவைகளையும் பூர்த்திசெய்யவே தேவன் விரும்புகிறார். அநேக தேவைகளைத் தமது பிள்ளைகள் மூலம் பூர்த்தி செய்கிறார். இந்த உவமையில் ஒருவன் தேவை சந்திக்கப்படுவதைக் காண்கிறோம். அவன் தேவை சந்திக்கப்படும்வரை அவன் கேட்டான்.
நாமும் தேவைகள் சந்திக்கப்பட தொடர்பாய் தேவசித்தப்படி (1.யோவான் 5:14) தேவனிடம் கேட்போம். விண்ணப்பத்தை நிறுத்திவிடக்கூடாது. அப்பொழுது பலன் கிடைக்கும். பதில் கிடைக்கும். ஆனால் பதில் நாம் எதிர்பார்த்தமுறையில் இல்லாதிருக்கலாம். ஆனால் தேவ சித்தத்திற்கிசைய கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
- தேவையைக் காணுதல்: வசனம் 11:5-6
(அ) இப்போதைய தேவை: வசனம் 5 – ஆகாரம், தேவன் நம் தேவைகளைப் பூர்த்திசெய்ய ஆவலுள்ளவராயிருக்கிறார் – பிலி.4:19.
(ஆ) அத்தியாவசியத் தேவை: வசனம் 6 – அந்த நண்பன் என்னிடம் ஒன்றுமில்லை என்கிறான். கிறிஸ்தவர்களாகிய நாம் மற்றவர்களின் தேவையை உணரவேண்டும். பூர்த்தி செய்ய முன் வரவேண்டும்.
பிறர்தேவையில் உதவி செய்வதெப்படி?
(1) அன்பு காட்டுதல்- யோவான் 3:17. அன்பின் குணம் கொடுக்கும் குணம்.
(2) அன்பைப் பகிர்ந்து கொள்ளுதல்: லூக்கா6:38. மற்றவர்களுக்கு நாம் கொடுக்கும் போது தேவன் நமக்குத் தருகிறார்.
(3) ஆவிக்குரிய அன்பு: நீதி 25:21. எதிரியையும் போஷிக்கும் அன்பு அவசியம்.
(4) அர்ப்பணிக்கும் அன்பு: லூக்கா 10:34. நல்ல சமாரியன் போன்று பிறருக்கு உதவ வேண்டும்.
நம்மைச் சுற்றுpயுள்ளவர்கள் தேவையுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் நமது உதவியை நாடுகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய முன்வருகிறீர்களா?
- சுயநலமும் தேவையும்: வசனம் 7
வீட்டிலிருந்த சிநேகிதனுக்கு உதவிசெய்ய முதலில் மனமில்லை.
(அ) சுயநல எண்ணம்: நல்ல சமாரியன் உவமையில் ஆசாரியனுக்கும், லேவியனுக்கும் உதவியளித்திட முதலிடம் இல்லை. அதுவே காரணம் – மத் 6:33. அவர்கள் அவனுக்கு உதவினால் சமயம் வீணாகும் என்று எண்ணினர்.
(ஆ) சுயநல நோக்கம்: லூக்கா 12:16-20. செல்வந்தனான விவசாயி சுயநலமுடையவனாயருந்தான். பிறரைப்பற்றி எண்ணவில்லை. அவனைத் தேவன் முட்டாள் என்று அழைத்தார்.
பிள்ளைகளோடு படுத்திருந்தவன் தன்னைப்பற்றியே எண்ணினான். பிறரைப்பற்றி எண்ணவில்லை.
(இ) சுயநல பாசம்: மத்.22:37 – இரவில் எழும்பிச் செல்வது பிள்ளைகளைப் பாதிக்கும் என்ற சுயநல பாசம் அவனில் இருந்தது.
தேவனை நேசிப்போர் அவ்விதமாயிருப்பதில்லை. மத்.22:39
- தேவையில் உதவுதல்: வசனம் 8
தொடர்ந்து கேட்டதினால் தேவையைச் சந்திக்க எழும்பினான்.
(அ) தினசரி ஜெபம்: தினமும் ஜெபத்தில் கேட்கவேண்டும். தாவீது தினமும் மூன்று முறை ஜெபித்தான். யாக்.5:16. சங் 55:17. தினசரி ஜெபத்தின் மூலம் நன்மை பெறலாம்.
(ஆ) திடமான ஜெபம்: யாக்.5:17-18. அவன் திரும்பவும் வேண்டினான். வேண்டியதைப் பெற்றுக்கொள்ளாது திரும்பிச்செல்லவில்லை.
(இ) திருச்சித்தத்திற்கிசைந்த ஜெபம்: தேவவார்த்தையின்படி கேட்டால் பெற்றுக்கொள்ளுவதில் ஐயமில்லை. யோவான் 15:17, சங் 37:4-5.
கிறிஸ்தவர்கள் பிறரது தேவைகளைத் கண்டு கொண்டால் மட்டும்போதாது. தேவைகளில் உதவவேண்டும். கர்த்தரை நேசிப்போர் நிச்சயமாய் உதவுவர்.
தொடர்ந்து கேட்டான் அவன் பெற்றுக்கொண்டான். நாமும் அவரிடம் தொடர்ந்துகேட்டால் பெற்றுக்கொள்வோம்.










