- இரக்கமற்ற ஊழியக்காரன்
மத்தேயு 18:23-35
எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப் பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான். அப்பொழுது, அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து, வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான். அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைபண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான். அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன் பட்டிருந்தவனாகிய தன் உடன்வேலைக்காரரில் ஒருவனைக் கண்டு, அவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான். அப்பொழுது அவனுடைய உடன் வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான். அவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான். நடந்ததை அவனுடைய உடன் வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள். அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.
கர்த்தரின் பெரிதான இரக்கம் தமது குமாரனை நமக்காக ஒப்புக்கொடுக்கத் துணிந்ததில் வெளிப்படுகிறது. நாம் பாவத்தில் பிறந்ததால் நாம் பாவத்திý;ல் சாக வேண்டியது ஒரு மாற்றமுடியாத நியமனம். ரோமர் 3:23, 6:23. ஆனால் நாம் மனந்திரும்பினால் அவர் நித்தியவாழ்வை அருளுகிறார். நித்தியஜீவன் அவர் தரும் ஈவு. இவ்வாறு நம்மேல் இரக்கம் பாராட்டியிருக்கும்போது நாம் பிறரிடம் இரக்கம் பாராட்டாமலிருக்கலாமா?
- உருவப்படல்: வசனம் 18:23-27
(அ) உவமை: வசனம் 23 – பரலோக இராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப் பார்க்க வேண்டுமென்றிருக்கிற ஓர் இராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.
(ஆ) நிலைமை: வசனம் 24 – ஒரு மனிதன் பதினாயிரம் தாலந்து கடன்பட்டிருந்தான் (இப்போதையக் கணக்குப்படி அது 1 கோடி டாலர்).
(இ) தண்டனை: வசனம் 25 – அவனால் கடனைத் தீர்க்க வகை இல்லை. அவனையும் அவன் மனைவி பிள்ளைகளையும்; விற்று கடனைத்தீர்க்கக் கட்டளையிடப்பட்டது. அவர்கள் அனைவரும் அடிமைகளானார்கள். பாவத்திற்கு அடிமையாயிருப்பவர்கள் இதன் மூலம் சுட்டிக்காட்டப்படுகின்றனர். யோவான் 8:34.
(ஈ) வேண்டுதல்: வசனம் 26 – கடன்பட்டவன் இரக்கம் காட்டுமாறு வேண்டினான். கிறிஸ்தவர்கள் இரக்கம் பாராட்டுகிறவர்களாகவும், மன்னிக்கிறவர்களாயுமிருக்க வேண்டும். எபேசி.4:32.
(உ) மன்னித்தல்: வசனம் 27 – எஜமான் கடனிலிருந்து கடனாளியை மன்னித்தான். தேவன் நமது பாவங்களிலிருந்து நம்மை மன்னிக்கிறார். சங்.103:3, 1.யோவான் 1:7,9.
- சம்பவம்: வசனம் 18:28-30
(அ) கடன் மன்னிக்கப்பட்ட ஊழியக்காரன்: வசனம் 28 – அந்த ஊழியக்காரன் தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்ட உடன் வேலைக்காரனைப் பிடித்து தொண்டையை நெரித்து பட்ட கடனை திருப்பிக்கேட்டான் (2000டாலர்). அவன் தனக்கு மன்னிக்கப்பட்ட ஒரு கோடி டாலரையும் மறந்துவிட்டான்.
(ஆ) வேண்டுதல்: வசனம் 29 – கடன்பட்டவன் காலில் விழுந்து மன்னிக்குமாறு வேண்டினான்.
(இ) சம்பவம்: வசனம் 30 – அவனுக்கு இரக்கம் காண்பிக்கப்படவில்லை. தமக்கு மன்னிக்கப்பட்டதை இலகுவில் மறந்துவிட்டான்.
நாம் தேவனிடத்தில் பெற்ற நன்மைகளை மறந்து விடாதிருப்போமாக. சங்.103:2.
தேவன் நமது பாவங்களையும், மீறுதலையும் மன்னிக்கிறார். நாம் மற்றவர்களின் மீறுதல்களையும் தவறுகளையும் மன்னித்து மறப்போமாக.
- பலன்: வசனம் 18:31-35
(அ) துக்கம்: வசனம் 31 – நடந்ததை உடன் வேலைக்காரர் கண்டு மிகவும் துக்கப்பட்டு ஆண்டவனிடத்தில் கூறினார்கள். 1.தீமோ.4:12.
(ஆ) வெட்கம்: வசனம் 32-34 – அவன் பட்ட கடனைத் தீர்க்கும்வரை உபாத்திக்கிறவர்களிடம் ஒப்புக்கொடுத்தான்.
(1) எஜமான் இரக்கம் பாராட்டினான் – ஊழியக்காரன் கடினமாயிருந்தான்.
(2) ஊழியக்காரன் தண்டனையடைந்து வெட்கத்துக்குள்ளானான்.
(இ) இரட்சிப்பு: வசனம் 35 – நாம் மன்னித்தால் தேவனும் நமக்கு மன்னிக்கிறார். கர்த்தரின் ஜெபத்தைக் கருத்துடன் படியுங்கள். மத்.6:12. கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தில் பவுல் (கலா.6:1-2) ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்குமாறும், ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால் அவன் சீர்பொருந்த புத்திசொல்லுமாறும் பவுல் கூறிகிறார். இரக்கமும் மன்னிக்கும் தன்மையும் இல்லாத வாழ்வு தேவன் இல்லாத வாழ்வையே குறிக்கிறது.











