- மதிகேடனான ஐசுவரியவான்
லூக்கா 12:15-21
பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே, நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையம் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது, நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.
ஓருவனது சொத்தை அடிப்படையாக வைத்து அவனது வெற்றியைக் கணக்கிடுவோர் அநேகருண்டு. ஆனால் தேவன் நாம் பரலோகத்தில் சேர்த்து வைத்துள்ள பொக்கிஷத்தின் அடிப்படையில் நமது வெற்றியைக் கணக்கிடுகிறார், மத் 6:19-21. பூலோக செல்வம் கடந்து சென்றுவிடும். புரலோக செல்வமோ நிலைத்து இருக்கும்.
- நிலையற்ற செல்வம்: வசனம் 12:15
(அ) எச்சரிப்பு: வசனம் 15 – பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். இச்சியாதிருப்பாயாக என்பது பத்து கற்கனைகளில் ஒன்று என்பதை மறவாதீர்கள். யாத்.20:17.
(ஆ) தவறு: வசனம் 15 – ஒருவனுடைய சொத்தை வைத்து அவனை எடைபோடுவது தவறு. ஏனெனில், இந்த உலகில் நாம் கொண்டுவந்தது ஒன்றுமில்லை. கொண்டுபோவதும் ஒன்றுமில்லை. 1.தீமோ 6:7, வெளி 3:17, இவ்வசனங்களைப் படியுங்கள்.
- மதிகேடு: வசனம் 12:16-19
(அ) செழிப்பு: வசனம் 16 – அவனது நிலம் நன்றாய் விளைந்தது. அவனது முன்யோசனைக்காக அவனைப் போற்ற வேண்டியதுண்டு. கிறிஸ்தவர்களுக்கு முன்யோசனை அவசியமே. ஆனால் இவனது முன்யோசனை போலிருக்கக்கூடாது. புpர.9:10, ரோம12:11.
(ஆ) கலக்கமடைதல்: வசனம் 17 – தனது தானியங்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே என்று கலங்கினான். தனது தானியங்களைப் பிறருக்கும் கொடுத்து உதவ வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு சிறிதேனும் இல்லை. சுயநலமே மேலோங்கி நின்றது. 1.யோவான் 3:17.
(இ) சுயநலம்: வசனம் 18 – களஞ்சியங்களை இடித்துப் பெரிதாகக் கட்டத் திட்டமிட்டான். தனது செழிப்பில் தேவனது சித்தம் என்ன என்பதை அவன் அறிந்திட ஆசிக்கவில்லை. யாக்.4:15.
(ஈ) திருப்தி: வசனம் 19 – அதிக விளைச்சலால் திருப்தியடைந்தான். சந்தோஷமாயிருக்க விரும்பினான். அவன் உலகத்தை ஆதாயம் செய்தான். தனது ஆத்துமாவின் அழிவைக் காணாதிருந்தான். மாற்.8:36.
- இறுதி பலன்கள்: வசனம் 12:20-21
(அ) மரணம்: வசனம் 20 – தேவன் அவனை மதிகேடனே என்று அழைத்தார்.
தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன் – நீதி.28:26
மூடர் பாவத்தைக் குறித்துப் பரியாசம் பண்ணுகிறார்கள் – நீதி.14:9
அவன் மரணம் நேரிடும் என்பதை நினைக்கவே இல்லை. மரணத்தைச் சந்திக்க அவன் ஆயத்தமாகவுமில்லை. மரணம் எவ்வேளையிலும்வரலாம் என்பதை அறிந்து கொள்ள அவனால் முடியவில்லை – நீதி.27:1.
(ஆ) மோசம் போகுதல்: வசனம் 21 – தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல் தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கிறவன் மோசம் போகிறான். உலகசெல்வம் பரலோகத்தில் வீட்டைச் சம்பாதிக்காது.
பணஆசை தேவனுக்கும் மனிதனுக்குமிடையே நின்று தொடர்பைத் துண்டிக்கிறது. ஒரு மனிதனின் வீட்டைப்பற்றிய, வேலையைப்பற்றிய, காரைப்பற்றிய, பணத்தைப்பற்றிய ஆசை தேவனிடமிருந்து அவனைப் பிரித்து விடுகிறது. மத்.6:25-34.
செய்யவேண்டியதென்ன? முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கொடுக்கப்படும் – மத்.6:33.









