- எட்டாம் பேறு
நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். பரலோகராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள் பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.” மத்.5:10-12.
கிறிஸ்தவ வாழ்க்கையானது விசித்திரமான முரண்படு மெய்நிகழ்ச்சிகளால் நிறைந்துள்ளது. அவைகளை நம்முடைய மனித அறிவினால் தீர்ப்பதென்பது அரிதானது. ஆயினும் அவைகளை ஆவிக்குரிய உள்ளங்களோ எளிதில் புரிந்துகொள்ளுகின்றன. தேவனுடைய பரிசுத்தவான்கள் சொல்லிமுடியாத மகிழ்ச்சியினால் களிகூருகிறார்கள், ஆயினும் புலம்பலோடு துக்கப்படுகின்றனர். அது உலக மக்களுக்கு புதுமையாய் தோன்றுகின்றது. கிறிஸ்துவுக்குள் வாழ்கிற விசுவாசியானவன் தன்னுடைய எல்லா வாஞ்சைகளையும் பெற்று அனுபவிக்கும் அளவுக்கு உயிர் நிலையான மன நிறைவுக்குரிய முழு முதலுடன் தொடர்புகொண்டு இருப்பினும், மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல் அவன் தேவனை நோக்கி வாஞ்சித்துக் கதறுகிறான் (சங்.42:1). அவன் தன் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடிக் கீர்த்தனம்பண்ணுகிறான், அதேவேளையில் ஆழ்ந்த பெரும்மூச்சுடன் வேண்டுதல் செய்கிறான். அடிக்கடி அவனுடைய அனுபவமானது வேதனையும் தடுமாற்றமும் நிறைந்து காணப்படினும், இவ்வுலகத்தின் பொன்னையெல்லாம் கொட்டிக்கொடுத்தாலும், அவனோ அந்த அனுபவத்தை கைவிடவோ, அதனை விட்டுப் பிரியவோ மாட்டான். அவன் தேவனால் மெய்யாகவே ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறானென்பதற்குள்ள சாட்சியங்களுக்குள், அவன் பெற்றுள்ள இந்தப் புரியாத புதிராயிருக்கிற முரண்படுமெய் நிகழ்ச்சிகளும் அடங்கும். இத்தகைய சிந்தனைகளே இப்பொழுது நமக்குரிய வேதப்பாட வாக்கியத்தினால் எழுப்பப்படுகின்றன. நிந்திக்கப்படுகிறவர்களும், துன்புறுத்தப்படுகிறவர்களும், பொய்யாய்க் குற்றஞ்சாட்டப்படுகிறவர்களுமாகிய மக்கள் பாக்கியவான்களாய் இருக்கிறார்கள் என்பதனை வெறும் அறிவினால் யார் தான் முடிவுசெய்ய முடியும்?
மக்களுடைய சாபங்களும் கிறிஸ்துவின் நல்வாழ்த்துக்களும் ஒரே மக்களையே சென்று சேர்கின்றன என்பதானது வன்மையான மெய்ச்சான்றாய் இருக்கிறது. நீதியின் நிமித்தமாக ஒரு மனிதன், நிந்திக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, பொய்யாய்க் குற்றஞ்சாட்டப்படுகிறான் என்று யார் தான் நினைத்திருக்கக்கூடும். அக்கிரமக்காரர்கள் மெய்யாகவே நீதியை வெறுத்துத், தம்முடைய அயலகத்தாரை வஞ்சித்துத் தீமை செய்கிறவர்களை நேசிக்கிறார்களா? தேவனையும் சமயத்தையும் மதிக்கிறவர்களே அவர்களுடைய வெறுப்புக்கும் பகைமைக்கும் உள்ளாகிறார்கள்.
கிறிஸ்தவர்கள் நீதியைச் செய்து, இரக்கத்தைச் சிநேகித்து (மீகா 6:8). அவைகளில் திருப்தியடைந்து, தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதைக் கைவிடுவார்களாயின் அவர்கள் இவ்வுலகத்தில்தானே சமாதானத்தோடு மட்டுமின்றி, பாராட்டுதலோடும் வாழ்வர். ஆயினும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ பக்கதியாய் நடக்க மனதாயிருக்கிறவனோ துன்பப்படுவான் (1.தீமோ.3:12). இத்தகைய தேவபக்தியுள்ள வாழ்க்கையானது பொதுவான மக்களுடைய அவபக்தியைக் கண்டித்துணர்த்துகிறது, இவ்விதமாக அவர்களுடைய கோபத்தையும் கிளறிவிடுகிறது.
மத்.5:10-12 ஒன்றாய் இணைந்து, இந்த அருட்பேறுகளின் வருசையில் எட்டாவதும் இறுதியுமான அருட்பேறாக அமைகிறது. இவ்வாறு இவ்வருட்பேறானது இரட்டிப்பானமுறையில் நோக்கப்படுதல் வேண்டுமெனவும் உடனடியாக நமக்கு அறிவுறுத்துகிறது. இந்த அருட்பேறுகளின் முழுமையான தொகுப்புக்கும் 10ம் வசனமானது, ஒரு பிற்சேர்க்கையைப்போல் அமைந்து, முந்தின வேத வாக்கியங்களில், கிறிஸ்துவானவர் விளக்கி உரைத்துள்ள நல்லொழுக்கத்தினைக் கைக்கொண்டு ஒழுகுவோர் அடையப்போகிற அனுபவத்தை விளக்குகின்றது.
மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை (ரோ.8:7). தேவனுடைய மக்கள் எவ்வளவாக அவருடைய சாயலுக்கு ஒப்பாக வாழும் வாழ்க்கையை கைக்கொள்ளுகிறார்களோ அவ்வளவுக்கதிகமாக அவர்கள் தேவனைப் பகைக்கிற அவர்களுடைய பகைவர்களின் சீற்றத்திற்கு ஆளாகின்றனர், நீதியின் நிமித்தம் துன்பப்படுதல் என்றால் என்ன? நேர்மையாய் வாழ்வாங்கு வாழ்வதென் காரணமாக எதிர்ப்பினைத் தேடிக்கொள்வது என்பதுதான் அதன் பொருளாகும். தங்களுடைய கிறிஸ்தவக் கடமைகளை நிறைவேற்றுவோர், தங்களையே பிரியப்படுத்தி வாழும் தன்நலமான வாழ்க்கையுடைய மக்களைக் கண்டித்துணர்த்தி, அதன்வாயிலாக அவர்களுடைய பகைமையையும்; வெறுப்பையும் கிளறிவிடுகின்றனர். அதன் விளைவாக ஏற்படுகிற துன்புறுத்தப்படுதலானது நச்சரிப்பு, பழித்துரைத்தல் ஆகியவைகளுடன் தொடங்கி, அடக்குமுறை, வதைத்து வேதனைப்படுத்துதல் முதலான பல்வேறு கொடுமைகளாகக் காட்சியளிக்கின்றன.
மத்.5:10-12 ஆம் வசனங்கள், ஏழாவது அருட்பேற்றிற்குத் துணைநின்று வளமூட்டுகிற ஒரு சொல்லைத் தன்னகத்தே கொண்டுள்ளன. சமாதானம்பண்ணுகிறவர்களாயிருக்கம்படி கிறிஸ்தவர்கள் மேற்கொள்ளுகிற முயற்சிகள் சாத்தானுடைய கோபத்தை எழுப்பி, அவனுடைய பிள்ளைகளைப் பெரிதும் கலக்குகின்றுன. சிலவேளைகளில் கலவரங்களையும் போராட்டங்களையும் உண்டாக்குகிற வாய்ப்பினை அறிமுகப்படுத்தி, நம்முடைய சமாதானமும் குலைக்கப்படுமளவுக்கு, கிறிஸ்துவையும் அவருடைய சுவிசேஷத்தையும் பற்றிய விசுவாசத்தின் பற்றுறுதியானது நம்மை நடத்துக்கூடும். அதனை எப்பொழுதும் நாம் எதிர்பார்க்க வேண்டுமென்பதற்காகவே நம்முடைய கர்த்தர் இங்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறார். இதற்குச் சான்றுகள் உண்டோவென்றால், ‘உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்புறுத்தினார்கள்” என்று நம்முடைய கர்த்தர்தாமே சொல்லுகிறார். தேவனுக்காகச் செய்யப்டும் ஊழியங்கள் மகா பயங்கரமான எதிர்புகளை வெளிக்கொணர்கின்றன. மெய்யாகவே அப்படித்தான்! கிறிஸ்துவானவரைப் பகைக்கிற உலகத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அவருடைய சிலுவையானது அதனை ஒரே தடவையில் எல்லாக் காலங்களுக்கும் கண் கூடாகவே வெளிப்படுத்திக் காட்டிவிட்டது.
தம்முடைய சீடர்கள் தங்களுடைய கடமைகளை நிறைவேற்றும் பணியில் சகித்துக்கொள்ளும்படியாக அவர்கள் எதிர்பார்க்க வேண்டிய மூன்று வகையான பாடுகளை நம்முடைய கர்த்தர் மத்.5:11 ஆம் வசனங்களில் குறிப்பிடுகிறார். முதலாவது பாடு நிந்தனைகளாகும். அதாவது தூற்றித்திரிதல், பழிப்புரை, வசவுகள், ஏசிப் பேசுதல் முதலியனவாகும். இரண்டாவதாக பாடு துன்புறுத்தலாகும். இச்சொற்பொருளை உணர்த்துகிற கிரேக்கு மொழிச்சொல்லானது ‘பின்தொடர்ந்து வேட்டையாடுதல்” என்னும் பொருளில் வந்துளது. அதாவது தொல்லையளித்தலும் தொந்தரவு கொடுத்தலுமாம் (உடலையும் உள்ளத்தையும் வருத்துமாறு வில்லம்பு சொல்லம்புகளைப் பயன்படுத்துவது இதனுள் அடங்கும்). கிறிஸ்துவானவரால் பிடிபடுமுன்னர், தர்சுப்பட்டணத்தானாகிய சவுல் கிறிஸ்துவின் சபையை அடக்கி ஒடுக்கும்படி கையாண்ட துன்புறுத்தலும் வேட்டையாடுதலும் இதனைச் சாரும். (அப்.9ம் அதிகாரம்). மூன்றாவது வகையான பாடுகளைக் குறித்துக் கிறிஸ்துவானவர், ‘பலவிதமான தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்” என்று சொல்லுகிறார். இவ்வாறு தம்முடைய பரிசுத்தவான்களின் நல்லொழுக்கத்திற்கு மாசு கற்பித்து அவர்கள் அவமானத்திற்குள்ளாக்கும் நிலைமையைக் குறித்து அவர் ஈண்டு விளக்குகிறார்.
இறுதியாய்க் குறிப்பிடப்பட்டுள்ள இப்பாடுகள் எளிதில் புண்படக்கூடிய உடல் உள்ளங்களைப் பெரியும் பாதித்து இரட்த்தனையான வேதனையை உண்டாக்குகின்றன. இவ்வாறு தேவனுடைய பிள்ளைகளின் பாடுகளைத் தீவிரப்படுத்தும்பொருட்டு பிசாசானவன் எண்ணிறந்த பொய்க் குற்றச்சாட்டுக்களைக் கண்டுபிடிப்பதில் ஓய்வடைவதேயில்லை. நம்முடைய தவறான நடத்தை அல்லது அறிவிலாச் செயலினிமித்தமாக இல்லாமல், நம்முடைய கிறிஸ்துவின் பின்னடியார்களாயிருக்கிற ஒரே காரணத்தினிமித்தமே நமக்கு இத்துணை எதிர்ப்புகளும் வெறுப்புகளும் வருகின்றன. இதனைக் காணுமாறுதான், ‘நீதியினிமித்தம், என்னிமித்தம்” என்றும் சொற்றொடர்கள் நம்மை எச்சரித்துக் கொண்டிருக்கிறன்றன (1.பேதுரு 2:19-25 வசனங்களைப் படித்துப் பார்க்க)
உபத்திரவங்கள் எப்பொழுதும் தேவனுடைய பிள்ளைகளின் பங்காய் இருக்கின்றன. காயீன் ஆபேலைக் கொலை செய்தான். அவன் ‘எதினிமித்தம் ஆபேலைக் கொலை செய்தான்? தன்னுடைய கிரியைகள் பொல்லாதவைகளும் தன்னுடைய சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளுவைகளுமாயிருந்ததினிமித்தமே” (1.யோவான் 3:12). யோசேப்பு தன் சகோதரர்களால் துன்பப்படுத்தப்பட்டான். எகிப்து நாட்டில் அவன் நீதியினிமித்தம் சிறையில் தள்ளப்பட்டான் (ஆதி. 37,39 அதிகாரங்கள்). மோசே மேலும் மேலும் நிந்திக்கப்பட்டான் (யாத்.5:21,14:11, 16:2, 17:2) முதலிய வசனங்களைப பார்க்க. சாமுவேல் தள்ளப்பட்டான் (1.சாமு.8:5). எலியா அவமதிக்கப்பட்டான் (1.இராஜா.18:17). துன்புறுத்தவும்பட்டான். (1.இராஜா.19:2): மீகாயா பகைக்கப்பட்டான் (1.இராஜா.22:8). நெகேமியா ஒடுக்கப்பட்டவனும் அவமதிக்கப்பட்டவனுமாயிருந்தான் (நெகே. 4ம் அதிகாரம்).
தேவனுடைய உண்மையுள்ள சாட்சியாகிய இரட்சகரும் தாம் எந்த மக்களுக்காக ஊழியஞ் செய்தாரோ அந்த மக்களால்தானே கொல்லப்பட்டார். கல்லெறியுண்டு ஸ்தேவான் கொல்லப்பட்டான். பேதுருவும் யோவானும் காவலில் வைக்கப்பட்டார்கள். யாக்கோபு சிரச்சேதம் பண்ணப்பட்டான். பவுலின் கிறிஸ்தவ வாழக்கையும் ஊழியமும் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வந்து கசப்பும் கடுமையுமான உபத்திரவங்களின் நீள்பெரும் தொகுப்பாயிருந்தது.
முந்திய காலங்களின் உபத்திரவங்களின் கடுமையைப் போல், பரிசுத்தவான்களுடைய இந்நாள்களின் உபத்திரவங்கள் அத்துணைக் கடுமையானவையன்று என்பது உண்மைதான். ஆயினும் அவைகள் மெய்யானவை. தேவனுடைய தயவினால் சட்டப்படியான உபத்திரவங்களினின்றும் நாம் நீண்ட காலமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறோம். ஆயினும் உபத்திரவப்படுகிற கிறிஸ்தவன் எப்பொழுதம் நினைவிற்கொள்ளவேண்டிய வசனம் இதுவே, ‘ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது” (பிலி.1:29). மேலும் யோவான் 15:19-20 வசனங்களிலுள்ள கிறிஸ்துவின் திருவாய்மொழியானது ஒருபோதும் தள்ளும்படி செய்யப்படமுடியாது.
‘நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையசை; சிநேகித்திருக்கும். நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்ளைப் பகைக்கிறது. ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள். அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்”.
உலகத்தின் பகையானது ஏளனம், பழிப்புரை, பொய்க் குற்றுச்சாட்டு, மக்கள் சமுதாயத்தினின்றும் புறம்பாக்குதல் முதலிய பல்வேறு தோற்றங்களில் தன்னை வெளிப்படுத்துகிறது. ஆயினும் ‘நீங்கள் நன்மை செய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்” (1.பேதுரு 2:20) என்னும் வசனத்திற்குச் செவி கொடுத்துக் கேட்கும்படி தேவகிருபை நம்மைப் பலப்படுத்துவதாக.
தமக்காகப் பக்தி விநயத்துடன் ஆற்றிவரும் ஊழியத்தினிமித்தம் பாடுபடும்படி அழைக்கப்பட்ட மக்களையே நற்பேறு பெற்றவர்களென்று நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இங்கு அறிவிக்கிறார். இரட்சகருடைய பாடுகளின் ஐக்கியத்தைப் பெற்று அனுபவிக்கிற மகாமேன்மையான சிறப்புரிமைக்கு அவர்கள் தகுதியுடைவர்களாயிருக்கிறார்கள். ஆகையால் அவர்கள் நற்பேறுபெற்றவர்கள். ‘உபததிரவம் பொறுமையையும், பெறுமை நல்லொழுக்கத்தையும் , நல்லொழுக்கம் நம்பிக்கையையும் உண்டாக்குகிறது………” (ரோமர் 5:3-5) ஆகையால், அவர்கள் நற்பேறுபெற்றவர்கள். இனிவரவிருக்கிற அந்தப் பெரிய நாளில்தானே அவர்கள் தேவனிடமிருந்து முழுமையான பலனைப் பெற்றுக்கொள்ளுவார்களாகையால் அவர்கள் நற்பேறுபெற்றவர்கள். மெய்யாகவே இங்கும் மிகவும் பெரிதான ஆறுதல் அவர்களுக்கு உண்டு.
ஆகையால், பொல்லாங்கன் எய்கிற தீக்கணைகளினிமித்தமாக சிலுவையின் வீரர்கள் கலக்கமடைய வேண்டாம். அதற்குமாறாக அவர்கள் தேவனுடைய சர்வாயுதவர்க்கங்களையும் உறுதியாய்த் தரித்துக்கொள்வார்களாக. கிறிஸ்துவானவரைப் பிரியப்படுத்தும்படியாக அவர்கள் ஆற்றிவருகிற பக்திமேன்பாட்டிற்குரிய செயல்களைக்குறித்து, தாங்களே கிறிஸ்தவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற மக்கள் குறைகூறுவர்களாயின், அதற்காகவும் அவர்கள் அதைரியப்படவேண்டாம். கடுமையான சோதனையைச் சந்திக்கும்போது தேவன் தங்களுடைய ஊழியத்திற்கு ஒப்புறுதி வழங்கவில்லையோவென்று ஐயுறவுகொள்ளவும் வேண்டாம்.
‘மகிழ்ந்து களிகூருங்கள்” கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினிமித்தம் வருகிற உபத்திரங்களைப் பொறுமையுடன் சகித்துக்கொள்ள வேண்டுவதோடமையாது, அவைகளை நாம் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். நாம் உபத்திரவங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்குரிய காரணங்கள் மூன்று.
ஒன்று: இந்த உபத்திரவங்கள் கிறிஸ்துவினிமித்ததே நமக்கு வருகின்றன. அவர் மீட்டுக்கொள்ளும்படி இத்துணைப்பாடுபட்டபடியால், அவருக்காக சிறிதளவாயினும் பாடுபடும்படி நாம் அழைக்கப்படும்பொழுது, நாம் பெரிதும் மகிழ்ந்து களிகூரவேண்டுமல்லவா?
இரண்டு: இந்தச் சோதனைகளும் துன்பங்களும் கிறிஸ்துவுக்காக இரத்தச்சாட்சிகளாய் மரித்த பரிசுத்தவான்களுடைய கூட்டுறவில் அவர்களோடுள்ள ஐக்கியத்திற்குள் நம்மைக் கொண்டுவருகின்றன. கிறிஸ்துவுக்குள் நாம் பாடுபடுகிற உபத்திரவங்களும் வருத்தங்களும் நம்மைப் பரிசுத்தமான தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள் ஆகியவர்களுடன் இணைக்கின்றன. அத்தகைய கூட்டுறவில் நமக்கு எதிராகச் சாட்டப்படுகிற பொய்யான குற்றச்சாட்டுகள் புகழ்ச்சியாகின்றன. நிந்தனைகளும் அவமானங்களும் மகிமையாய் மாறுகின்றன.
மூன்று: கிறிஸ்துவினிமித்தம் படுகிற பாடுகளுக்குப் பரலோகத்தில் நமக்கு மிகுந்த பலனுண்டென்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது. ஆகையால், இக்காலத்துப் பாடுகள் எவ்வளவு பயங்கரமாயிருப்பினும் நாம் மகிழ்ந்து களிகூரலாம். ‘அநித்தியமான பாவ சந்தோஷங்களை அனுபவிப்பதைப் பார்க்கிலும் கிறிஸ்துவோடேகூட துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்ட ” நாம் (எபி.11:25) அவருடைய நிச்சயமான வாக்குத்தத்தத்தின்படி அவரோடேகூட ஆளுகையும் செய்வோம் (ரோமர் 8:17). கிறிஸ்துவின் நாமத்திற்காக தாங்கள் அவமானமடைவதற்கும் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால் சந்தோஷமாய் ஆலோசனை சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போன பேதுருவையும் யோவானையும் நினைத்துக்கொள்ளுங்கள் (அப்.5:41). அவ்வணமே கடுமையாக அடித்துக் காயப்படுத்தப்பட்டு, பிலிப்பு பட்டணத்தில் தொழுமரத்தில் மாட்டிவைக்கப்பட்டிருந்தபோது, பவுலும் சீலாவும் நடு இரவு வேளையில் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள் (அப்.16:25). பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்தரம் அவர்களுக்கு உண்டென்று அறிந்து யூதேயா நாட்டிலுள்ள ஆதி அப்போஸ்தல சபையிலுள்ள விசுவாசிகள் தங்களுடைய ஆஸ்திகளையும் சந்தோஷமாய்க் கொள்ளையிடக் கொடுத்தார்கள் (எபி.10:34) என்று நாம் வாசிக்கிறோம்.
ஆகையால், கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இந்த திருவாய்மொழியினின்றும் தேவையான எல்லா ஆறுதல்களையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளும்படி இழித்துப் பழித்துத் கூறப்பட்டும், தவறாக எண்ணப்பட்டும், ஒடுக்கப்பட்டுமிருக்கிற தேவனுடைய பரிசுத்தவான்கள் அனைவரையும் தேவ கிருபையானது பலப்படுத்துவதாக!











