- சீஷத்துவமும் திருமணமும்
பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு. இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார் (மத்.19:12).
ஓவ்வொரு சீஷனும் சந்திக்கவேண்டிய ஒரு பெரிய கேள்வி திருமணத்தைப்பற்றியது. தேவன் தன்னை இல்லற வாழ்க்கைக்கா, அல்லது திருமணமாகாத நிலைக்கா எதற்காக அழைத்திருக்கிறார் என்ற கேள்விக்கு அவன் விடை காணவேண்டும். இது கர்த்தரிடத்திலிருந்து தனிப்பட்ட விதத்தில் அடையப் பெறும் வழிநடத்துதலைப் பொறுத்தது. இதுபற்றி ஒருவர் மற்றொருவருக்குச் சட்டம் வகுக்க முடியாது. இந்த மிக முக்கியக் காரியத்தில் ஆலோசனைகூற உரிமையோடு அழைப்பே இன்றித் தலையிடுவது ஆபத்தானது.
பல நோக்கங்கள் நிறைவேறும்படி மனித இனத்திற்காகத் தேவன் திருமணத்தை ஏற்படுத்தினார் என்பது தேவனுடைய வார்த்தையின் பொதுவான போதனை.
- நட்பிற்காகவும் இன்பத்திற்காகவும் அது ஏற்றடுத்தப்பட்டது. மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல (ஆதி.2:28) என்று தேவன் கண்டார்.
- மனுக்குலம் பெருகுவதற்காக அது திட்டமிடப்பட்டது. நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்புங்கள் (ஆதி. 2:28) என்ற கர்த்தருடைய கட்டளையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
- குடும்பத்திலும் சமுதாயத்திலும் தூய்மையைக் காக்கும்படி இந்த ஒழுங்கு ஏற்பட்டது. வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியை…… உடையவனாயிருக்கக்கடவன் (1கொரி. 7:2).
தூய வாழ்க்கைக்கும், கிறிஸ்துவிடம் காட்டும் பக்தி, அவருக்குச் செய்யும் ஊழியம் இவற்றிற்கும் திருமணம் ஏற்றதல்ல என்று தேவனுடைய வார்த்தை போதிப்பதில்லை. ஆனால் விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாக மஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக (எபி. 13:4) என்ற வார்த்தை உறுதியாய் நிற்கின்றது. ஒண்டியாய் இருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம் என்ற பிரசங்கியின் கூற்றைத் திருமணத்தைக் குறிக்கும் ஒன்றாகக் கொள்ளலாம் (பிர.4:9). சிறப்பாக அவர்கள் இருவரும் கர்த்தருக்காகச் செய்யப்படும் ஊழியத்தில் இணைக்கப்பட்டால் இவ்வசனம் மிகப் பொருத்தமாக இருக்கும். ஐக்கியமாகச் செய்யப்படும் செயலில் அதிக வலிமை விளங்குகிறது என்பதை உபா.32:30 குறிப்பிடுகிறது. ஓருவன் ஆயிரம் பேரைத் துரத்துகிறான். இருவர் பதினாயிரம் பேரை ஓட்டுகின்றனர்.
எனினும், திருமணம் மனுக்குலத்திற்கான தேவசித்தமாக இருந்தாலும் அது ஒவ்வொரு ஆளுக்கும் அவருடைய சித்தமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. மாற்றமுடியாத ஓர் உரிமையாக அது கருதப்படினும், கர்த்தராகிய இயேசுவின் சீஷன் அவருடைய சேவையில் கவனம் சிதறாமல் ஈடுபடத்தக்கதாக அந்த உரிமையைத் துறந்து விடுவதைத் தெரிந்துகொள்ளலாம்.
தமக்காக அண்ணர்களைப்போல ஆகிவிட்டவர்கள் தம்;முடைய இராஜ்யத்தில் இருப்பார்கள் என்பதைக் கர்த்தராகிய இயேசு குறிப்பிட்டார்.
தாயின் வயிற்றிலிருந்து அண்ணர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு. மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு. பரலோக இராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு. இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன், என்றார் (மத்.19:12).
கீழ்க்கண்ட இரண்டு உண்மைகளின் விளைவாக ஒருவர் தன் விருப்பப்படி செய்துகொள்ளும் பொருந்தனையே இது.
- திருமணம் செய்துகொள்ளாமலிருக்க தேவனுடைய வழிநடத்தலின் உணர்வு.
- குடும்ப வாழ்க்கையின் பொறுப்புகள் இல்லாமல் தன்னை முற்றிலும் கர்த்தருடைய ஊழியத்திற்குப் படைக்க வேண்டுமென்ற வாஞ்சை.
தெய்வீக அழைப்பின் திட நம்பிக்கை வேண்டும் (1கொரி. 7:7). தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்வதற்கான கிருபையை கர்த்தர் தந்தருளுவார் என்று சீஷன் உறுதியாயிருக்க இந்த அழைப்பின் நிச்சயம் வேண்டும்.
இரண்டாவது, இது தன் விருப்பப்படி தீர்மானிக்கிற ஒன்றாக இருக்கவேண்டும். திருமணம் செய்யக்கூடாதென்பது எங்கே சபையின் கட்டுப்பாடாக இருக்கிறதோ அங்கே தூய்மையின்மையும், தீய ஓழுக்கமும் அதிகம் காணப்படக்கூடும்.
திருமணமாகாத ஒருவர் இராஜாவின் வேலைக்குத் தன்னை முற்றிலும் காணிக்கையாக்க முடியும் என்ற உண்மையைப் பவுல் வலியுறுத்தினார்.
நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். விவாகம் பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான் (1கொரி. 7:32,33).
இக்காரணத்தினால்தான் அவர் திருமணமாகாதவர்களும், விதவைகளும் தாம் இருந்தபடியே (மணமாகாமல்) இருந்துவிடுவது நலம் என்ற தம் விரும்பத்தைத் தெரிவித்தார் (1கொரி. 7:7-8)
ஏற்கனெவே திருமணமானவர்களும் காலம் குறுகினதானபடியால் கிறிஸ்துவை அறிவிக்கும் வேலைக்கு அனைத்தையும் கீழ்ப்படுத்தவேண்டுமென்று அப்போஸ்தலன் வற்புறுத்தினார்.
மேலும் சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், இனிவரும் காலம் குறுகினதானபடியினால், மனைவிகள் உள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள் போலவும், அழுகிறவர்கள் அழாதவர்கள் போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள் போலவும், கொள்ளுகிறவர்கள் கொள்ளாதவர்கள் போலவும,; இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாத விதமாய் அனுபவியாதவர்கள் போலவும் இருக்கவேண்டும்: இவ்வுலகத்தின் வேஷம் கடந்து போகிறதே (1கொரி. 8:29-31).
ஓருவன் தன் குடும்பப் பொறுப்புகளைத் துறந்து மனைவி மக்களைக் கைவிட்டுவிட்டுத் தீடீரென ஒரு மிஷனெரியாகச் சென்றுவிடவேண்டும் என்று இதன் பொருளல்ல. ஆனால் ஒருவன் இல்லற இன்பங்களுக்காகவும் குடும்பம் தரும் மன நிறைவுக்காகவும் வாழக்கூடாது என்பது இதன் பொருள். கிறிஸ்துவுக்கு இரண்டாம் இடத்தைக் கொடுப்பதற்கு தன் மனைவி மக்களைக் காட்டி போக்குச்சொல்லக்கூடாது.
சுp.டி.ஸ்டட் என்பவர் தான் மணக்க நிச்சயித்திருந்த பெண் தன்னைப் பற்றியே அதிகமாக நினைத்துக்கொண்டிருந்து கர்த்தரராகிய இயேசுவுக்கு தன் வாழ்க்கையில் முதல் இடம் கொடுக்கத் தவறிவிடுவாறோ என்று அஞ்சினார். எனவே, அவள் நாள்தோறும் சொல்லிப் பார்த்துக்கொள்ளத்தக்கதாக ஒரு சிறு செய்யுளை இயற்றிக்கொடுத்தார். தன்னைக்காட்டிலும் இயேசு அவளுக்கு அருமையானவர் என்ற பொருள்கொண்ட செய்யுள் அது.
மனுக்குலத்தை தங்கள் கொள்கைக்கு அடிப்படுத்தும் ஓரே பெரியவேலைக்குத் தங்கள் குடும்பக் காரியங்களையும் கீழ்ப்படுத்துகின்றனர் பொதுவுடைமைக் கட்சியினர். கார்டன் ஆர்னால்டு லான்ஸ்டேல் என்பவர் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. ரஷ்ய நாட்டின் ஒற்றன் என்ற இங்கிலாந்தில் இம்மனிதன் கைது செய்யப்பட்டார். அவர் மனைவி அவருக்கு எழுதிய ஒரு கடிதமும், அவளுக்கு அவர் எழுதிய ஆறு பக்கம் கொண்ட பதிலும் போலீசார் கையில் கிடைத்தன. அவர் மனைவி இவ்வாறு எழுதியிருந்தாள். வாழ்க்கை எவ்வளவு அநீதி உள்ளதாய்க் காணப்படுகிறது. நீங்கள் வேலை செய்துகொண்டிருப்பதையும் அது உங்கள் கடமை என்பதையும் நான் நன்கு அறிந்திருக்கிறேன். உங்கள் வேலையில் உங்களுக்குப் பற்று உண்டு என்பதும் அதை முழுமனத்தோடும் நிறைவேற்ற முயலுகிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆயினும் என் விவாதம் பெண்ணின் முறைப்படி குறுகிய மனங் கொண்டதாக இருக்கிறது. நான் அதிகமாக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என்னை எப்படி நேசிக்கிறீர்கள் என்பதுபற்றி எனக்கு எழுதுங்கள். ஒரு வேளை அது எனக்கு ஆறதலளிக்கும்.
லான்ஸ்டேல் எழுதிய பதிலின் ஒரு பாகம்: எனக்கு ஒரே ஒரு வாழ்கைதான் இருக்கிறது. அது எளிதான ஒன்றல்ல. திரும்பிப்பார்க்கும்போது வெட்கப்படக்கூடிய ஒன்றும் இல்லாதபடி என்வாழ்க்கையைச் செலவிடுவதே நான் விரும்புவதெல்லாம்……. சீக்கிரத்தில் எனக்கு வயது 39 ஆகிவிடும். இன்னும் என்ன அதிகமாக மீதியிருக்கிறது? என்பதே.
இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள் போலவும்…….. இருக்கவேண்டும் என்று எழுதினார் பவுல். அவசரமாக அல்லது தவறாக வழிகாட்டப்பட்டு திருமணத்தில் ஈடுபடுதல் இளம் சீஷன் ஒருவனைக் கர்த்தருக்கு மிக அதிகமாகப் பயன்படக்கூடிய பாதையினின்று பிரிக்கப் பிசாசு கையாளும் கருவியாகிவிடுகிறது. பிறர் செல்லா இடங்களுக்குச்சென்று வழிகாட்ட நாட்டங்கொண்டிருந்த சிலர் கிறிஸ்துவைமட்டும் சேவிக்கும் ஊழியங்களைத் திருமண நாளில் இழந்துவிட்டனர்.
கிறிஸ்துவைப்பற்றி அனைவரும் கேள்விப்பட வேண்டும் என்ற அவர் சித்தத்தை நிறைவேற்றும்படி தடுக்கும் பகைவன்…….. திருமணம். திருமணம் தேவனால் அருளப்பட்டதுதான். ஆனால் கடவுளுடைய சித்தத்திற்கு அது தடையாக அமைந்துவிடும்போது இது தவறாக கையாளப்படுகிறது. வேற்று நாடுகளுக்குச் செல்லத் திட்டமாக அழைக்கப்பெற்றும் தங்களோடு பிணைக்கப்பட்டோரால் தடுக்கப்பட்டு அந்த அழைப்புக்கு இணங்காமல்போன பலரை- ஆண்களையும், பெண்களையும்- நாம் சுட்டிக்காட்டமுடியும். ஒன்றும்- வாழ்க்கைத் துணையாக தேவன் அருளும் ஆசீர்வாதமும் கூட- ஒருவரது வாழ்க்கையைப்பற்றித் தேவன் கொண்டுள்ள நோக்கத்தையும் தடுக்கக்கூடாது. இன்று கிறிஸ்துவை அறியாமல் ஆத்துமாக்கள் அழிகின்றனர். ஏனெனில் தேவனுடைய சித்தத்திற்கு மேலாக அன்புக்குரியவர்கள் முதல் இடம் பெற்றுவிட்டனர். (வெஸ்லி எல் கஸ்ற்றாஃப்சன்).
திருமணம் செய்யாதிருப்பது விரும்ப்படத்தக்கது என்பது வேறொருவரும் சென்றறியாத புது இடங்களுக்குச் செல்லுவோரைப் பொருத்த அளவில் சிறப்பாக உண்மையானது. முன்னணியிற் செல்லும் ஆண்களும் பெண்களும், தாங்கள் நியாயமாய் அநுபவிக்கக்கூடிய இன்பங்களை மட்டுமல்ல, வாழ்வதற்கு தேவையானவைகளையும்கூட வெறுக்கவேண்டியதாயிருக்கலாம். கஷ்ரங்கள் சகிப்பதும், நல்ல போர் வீரராயிருப்பதும், இவ்வுலகக் காரியங்களில் சிக்கிக் கொள்ளாதிருத்தலும், எவ்வித பாரத்தாலும் தடைபடாமல் பந்தயத்தில் ஓடுகிறவர்களாயிருப்பதும் அவர்களது கடமை. அது ஒர் உத்தியோகம், ஒரு தொழில், சிறப்பான சேவைக்கு அபிஷேகம்.
இந்த அழைப்பைப் கேட்டு இணங்குவோருக்கு உறுதி கூறப்பட்டுள்ள பலன் உண்டு. இயேசு சொன்னார்: மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்… என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது , சகோதரரையாவது, சகோதரியையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்வான் (மத். 19:28-29).











